மற்ற எபிசோடுகள்
Published:Updated:

‘‘தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யக் கூடாது...’’ இதுதான் வெற்றியின் அடித்தளம்! - 4

நவீன்
பிரீமியம் ஸ்டோரி
News
நவீன்

வெற்றித் தலைமுறை - 4

சில நேரங்களில் நாம் எடுக்கும் அதிரடி முடிவுகளும் முயற்சிகளும் மிகப்பெரிய மாற்றத்துக்கு ஆரம்பமாக அமையும். இதை பிசினஸில் சாத்தியப்படுத்தி அசத்தியிருக்கிறது கட்டுமான நிறுவனமான நவீன்ஸ். தங்களுடைய தரத்தின் மூலம் 3,000-க்கும் அதிகமான குடும்பங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ள நவீன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டாம் தலைமுறையைத் தாங்கி நிற்கிறது.

சென்னை மாம்பலத்தைச் சேர்ந்தவர் குமார். 1980-களில் மெட்ராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுவில் பணியாற்றியவர் சென்னை முழுவதும் அத்துமீறியோ, சட்ட திட்டங்களை மீறியோ கட்டப்பட்டு இருக்கும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் இருந்தவர். அப்படி ஒவ்வொரு முறை நடவடிக்கை எடுக்கும்போதும், அங்கு வசித்த மக்களின் வருத்தத்தைக் கண்டு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்டடங்கள் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்பதை தன்னுடைய இலக்காகத் தீர்மானித்தார். கட்டுமான தொழிலில் கால்பதிக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஒரு கட்டத்தில் அரசாங்க வேலையை விடுத்து, நீண்ட போராட்டங்களுக்குப் பின் நவீன்ஸ் நிறுவனத்தை 1989-ல் தொடங்கியுள்ளார். சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட நவீன்ஸ் நிறுவனம் இன்று கோடிகளில் டேர்ன்ஓவர் செய்யும் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

நவீன்ஸ் நிறுவனத்தின் வெற்றிப் பயணம் குறித்து பகிர்கிறார் அந்த நிறுவனத்தின் இயக்குநர் நவீன்.

நவீன்
நவீன்

“ஒரு வீடோ, அலுவலகமோ தனி ஒரு நபரின் மிகப் பெரிய கனவு. நடுத்தர குடும்பத்தின் சில ஆண்டு வருமானம் என்றும் சொல்லலாம். அப்படியான ஒன்றில் முறைகேடு நடப்பதை அப்பா பலமுறை பார்த்திருக்கிறார். நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தில் இருந்ததால் நடவடிக்கையும் எடுத்திருக்கிறார். கட்டுமான தொழிலில் முறைகேடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அப்பா தொடங்கியதுதான் நவீன்ஸ் என்ற கட்டுமான நிறுவனம்.

அப்பாவுடன் நவீன்
அப்பாவுடன் நவீன்

அப்பாவின் நீண்ட கால கனவு என்றும் சொல்லலாம். சாதாரண குடும்பத்தில் இருப்பவர்கள் அரசாங்க வேலையை விடுத்து சுயதொழில் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், அந்த முடிவை அப்பா தீர்க்கமாக எடுத்து களத்தில் இறங்கினார். அப்படி இறங்கியவருக்கு சில ஆண்டுகளுக்கு பின்புதான் முதல் புராஜெக்ட் கைகூடியது. ஆனால், அப்பா அவர் எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை.

முதல் புராஜெக்ட் தொடங்கியதிலிருந்து இப்போது வரை தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யக் கூடாது என்பது அப்பாவின் குறிக்கோள். அதுமட்டுமல்ல சட்டரீதியான விஷயங்களில் எப்போதும் கவனமாக இருப்பார். வீடு கட்டுவது எங்களுடைய பணியாக இருந்தாலும், சிமென்ட் வாங்குவது தொடங்கி, தளவாடப் பொருள்கள் வாங்குவது வரை எல்லாவற்றையும் நேரில் சென்று தேர்வு செய்வது அப்பாவின் வழக்கம்.

ஒரு பொருளை ஆர்டர் செய்யும்முன் அது எப்படி இருக்க வேண்டும், என்ன தரம், என்ன டிசைனில் இருக்க வேண்டும் என்ற குறிப்புகளை கைப்பட எழுதுவார். அந்தக் குறிப்புகளே இரண்டு பக்கங்கள் இருக்கும். பொருள்கள் விநியோகம் ஆகும் இடத்துக்கு நேரில் சென்று பார்ப்பார். பொருள்கள் வந்த பின்பும்கூட அதன் தரத்தை முதலில் சோதிப்பார். ஆர்டர் செய்த கதவுகள் வந்த பிறகு, அந்தக் கதவுகளைப் பெரிய சுத்தியல் கொண்டு உடைத்துப் பார்த்து அதன் தரத்தை அப்பா சோதிப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போது இருந்து இப்போது வரை தரத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் தருகிறோம். ஒரு கட்டடம் கட்ட ஆரம்பிக்கும் முன் 1,300 விஷயங்கள் கொண்ட செக்லிஸ்ட் பட்டியல் எங்களிடம் இருக்கிறது. அதை சோதித்து முழுமை அடைந்த பிறகுதான் பணிகளைத் தொடங்குகிறோம். ஒரு கட்டடம் தொடங்கும் முன் நிறைய முறை சட்ட ஆலோசனை கள் செய்த பிறகு, தொடங்கு வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.

சிறுவயதிலேயே பார்த்து வளர்ந்த பிசினஸ் என்பதால் கல்லூரி படிக்கும்போதே அப்பாவின் பிசினஸில் செயல் படத் தொடங்கினேன். ஆனால், நம்முடைய நிறுவனத்தில் பணி புரிவதைவிட மற்ற நிறுவனங் களில் வேலை செய்தால் கூடுதலாகக் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்காகப் படிப்பு முடித்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வெவ்வேறு நிறுவனங் களில் வேலை பார்த்து அனுபவத்தை வளர்த்துக் கொண்டேன்.

நான் சிவில் இன்ஜினீயரிங் மற்றும் பிசினஸ் படிப்புகள் படித்திருந்தேன். சில வருடங்கள் அனுபவமும் இருந்தது. ஆனாலும், மார்க்கெட்டிங் விஷயத்தில் அப்பாதான் என்னுடைய ரோல் மாடல். ஒரு முறை எங்கள் நிறுவனம் குறித்த விளம்பரத்தை ஒரு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். அந்த விளம்பரம் வெளியான பின் நாங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் எங்களுக்குக் கிடைத்திருந்தது. ஆனால், அதில் 10 திருத்தங்களை அப்பா சுட்டிக்காட்டினார். விளம்பரத்துக்கான தகவல்கள் கொடுக்கும்போது அத்தனை நுணுக்கமான விஷயங்களைக் கையாள வேண்டும் என்பதை அப்பாதான் கற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல நம்முடைய நிறுவனத்தைப் பற்றிய எண்ணத்தை எப்படி மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற பிராண்டிங் பொஷிசனையும் அப்பாதான் கற்றுக் கொடுத்தார்.

இப்போது வரை எங்களுடைய நிறுவனத்தை நாங்கள் ‘நவீன் பில்டர்ஸ்’ என்று விளம்பரம் செய்வது கிடையாது. ‘நவீன்ஸ்’ என்றுதான் குறிப்பிடுகிறோம். அது நம் தரத்தை விளக்கும் வார்த்தை. இந்த நுணுக்கங்கள் எல்லாம் அப்பா அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்டது” என்ற நவீன் அடுத்த தலைமுறையினர் பிசினஸில் வரும்போது நிகழும் மாற்றங்களைப் பேசத் தொடங்கினார்.

“முந்தைய தலைமுறையினர் பிசினஸ் தொடங்கியிருந்தாலும், இளைய தலைமுறையினரிடம் இருந்து முந்தைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டியவையும் நிச்சயம் இருக்கும். எங்களுடைய பிசினஸில் நம்பிக்கை, தரம் இவை இரண்டையும் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்தார். 2011-ம் ஆண்டு முதல், நான் முழுவதுமாக பிசினஸில் களம் இறங்கினேன். டெக்னாலஜி சார்ந்த நிறைய அப்டேட் விஷயங்களை நடை முறைப்படுத்தினேன். நாங்கள் கட்டும் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் வைப்பது தொடங்கி ஸ்மார்ட் லாக் வைப்பது வரை புதுமையான விஷயங்களைக் கொண்டு வந்தேன். பிசினஸில் மும்மடங்கு லாபத்தை அதிகரிக்கச் செய்தேன். அதனால் அப்பாவுக்கும் என்னைப் பற்றிய புரிதலும் நம்பிக்கையும் வந்தது. பிசினஸில் அப்டேட் விஷயங்களை நான் அப்பாவுக்குக் கற்றுக் கொடுத்தேன். உலகம் முழுக்க கட்டுமானத் தொழிலில் என்ன நடக்கிறது, என்ன தேவை இருக்கிறது, அதை நம் நாட்டில் எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதையெல்லாம் நான் அப்பாவிடம் பகிர்வேன்.

ஒரு கட்டத்தில் அப்பாவுக்கும் இது பற்றிய புரிதல் வர வேண்டும் என்பதற்காக அமெரிக்கா அனுப்பி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று வருடம் பிசினஸ் கோர்ஸ்கள் படிக்க வைத்தேன். முடியாது என்று மறுக்காமல், பிசினஸ் நலன் கருதி படிக்கச் சென்றார். இப்போது அப்பா எனக்கு இணையாக டெக்னாலஜியில் செயல்படுகிறார். ஒரு கட்டடத்துக்காகத் திட்டமிடும்போது நானும் அப்பாவும் சேர்ந்து உட்கார்ந்து திட்டமிடுகிறோம். அதனால் எங்களுடைய பிசினஸைப் பொறுத்தவரை தொழிலை அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிட்டு, மூத்த தலை முறையினர் நகர்ந்துவிடுவதில்லை; சேர்ந்து பயணிப் பதைத்தான் வெற்றியாகப் பார்க்கிறோம்.

அப்பா தொடங்கிய பிசினஸ், அப்பா மட்டுமல்ல, அப்பா வேலைக்குச் சேர்த்தவர்களும் என் உடன் பயணம் செய்து அவங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து வழி நடத்துகிறார்கள். பொதுவாக, அடுத்தடுத்த தலைமுறையினர் வரும்போது, முந்தைய தலைமுறை யினரிடம் பணி செய்தவர்களைப் பணியில் வைத்துக் கொள்வதில் நிறைய சிக்கல்கள் இருக்கும். அவர்களாலும் புதிய முதலாளியை ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லை என்றால் அப்பா, தாத்தாவுக்காக ஏற்றுக்கொள்வார்கள். நான் பிசினஸுக்குள் வரும்போது இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். லீடர்ஷிப் மற்றும் டெக்னாலஜி இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்தேன். அதனால் எனக்கு முந்தைய தலைமுறையினரும் என்னுடன் சேர்ந்து ஓட ஆரம்பித்தார்கள்.

பிசினஸைப் பொறுத்தவரை நாங்கள் பெரிய ரிஸ்க்குகள் எடுப்பது கிடையாது. ஆனாலும், எல்லா பிசினஸ் போன்றும் எங்களுடைய பிசினஸிலும் ஏற்றத் தாழ்வுகள், சரிவுகள் இருந்திருக்கிறது. மார்க்கெட் சூழலையும், மதிப்புகளையும் கணக்கிட்டு மீண்டு வந்திருக்கிறோம். ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் தொடங்கிய பயணம் இப்போது விசாகப்பட்டினம், பெங்களூர் என அடுத்தடுத்த நகரங்களில் விரிவடைய தொடங்கியிருக்கிறது. நிச்சயம் இந்தியா முழுவதும் பேசப்படும் நிறுவனமாக நவீன்ஸ் மாறும்” என்றார் நம்பிக்கையுடன். வளர்ச்சி தொடரட்டும்.

(தலைமுறை தொடரும்)