முன்னணி ஊடகத்துறை சார்ந்த என்.டி டிவி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் தமது பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
என்டிடிவி நிறுவனத்தின் 29.18% பங்குகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் கையகப்படுத்தி இருந்தது. பெரும்பாலான பங்குகள் தற்போது அதானி குழுமத்திடம் சென்றுள்ளதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை என்.டி டிவி நிறுவனத்தின் இயக்குநர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

தற்போது அந்தப் பொறுப்புகளுக்கு சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகல்யா மற்றும் செந்தில் சின்னையா செங்கவராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் அதானி நிறுவனத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதியவர்களின் நியமனத்தையும் நிர்வாகக்குழு அங்கீகரித் துள்ளது. இதன் மூலம் தற்போது முழுமையாக என்.டி டிவி நிறுவனம் அதானி நிறுவனத்தின் கைவசம் சென்றுள்ளது.
என்.டி டிவி நிறுவனம் வாங்கிய 403 கோடி ரூபாய் கடனுக்காக அந்தப் பங்குகளை அடமானம் பெற்ற மற்றொரு நிறுவனம் அதானி குழுமத்திடம் அந்தப் பங்குகளை விற்றது, இதன் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு அந்த நிறுவனம் பங்குகளை விற்றது என்.டி டிவி நிறுவனத்தின் தலைவரான ராதிகா மற்றும் பிரனாய் ராய் ஆகிய இருவருக்கும் தெரிவிக்காமல் நடைபெற்றுள்ளதாக என்.டி டிவி தரப்பு தெரிவித்திருந்தது.

தற்போதும் இவர்கள் இருவர் வசம் என்.டி டிவி நிறுவனத்தின் 32.26% பங்குகள் உள்ளன. அதனால் அவர்கள் என்.டி டிவி நிறுவனத்தில் உறுப்பினர் குழுவில் தொடர்ந்து இருப்பர்.
என்.டி டிவி தொலைக்காட்சி காங்கிரஸ் மற்றும் பிஜேபி அல்லாத எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் ஊடகமாக அறியப்பட்டுள்ளது. நாம் சென்ற முறை இது பற்றிக் கட்டுரை வெளியிட்டு இருந்தபோது பி.ஜே.பி -யின் முகமாகப் பார்க்கப்படும் அதானி குழுமம் என்.டி டிவி நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பது தேர்தல் களங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போது குஜராத் தேர்தல் நடைபெறும் வேளையில் என்.டி டிவி குழுமம் முழுமையாக அதானி வசம் சென்றுவிட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் இது பிஜேபிக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் பிரபல ஊடகமான Bloomberg Quint என்ற நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கியதன் மூலம் மீடியா துறையில் வலுவான காலடியை அதானி குழுமம் பதித்தது. தற்போது என்.டி டிவி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கையகப்படுத்தி இருப்பதால் ஊடகத்துறையில் முக்கிய அங்கமாக அதானி குழுமம் மாறி இருக்கிறது.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை என்.டி டிவி நிறுவனத்தின் பங்குகள் 5% வரை உயர்ந்து வர்த்தகமாகியது. என்.டி டிவி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கையப்படுத்துவதற்கு மேலும் 26% பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்த வேண்டும். இதை சிறு மற்றும் இதர முதலீட்டாளர்களிடம் அதானி குழுமம் கையகப்படுத்த வேண்டும். அதற்கான முனைப்புகளில் அந்த நிறுவனம் தற்போது ஈடுபடத் தொடங்கியுள்ளது. அவ்வாறு நடைபெற்றால் பெரும்பாலான 55% பங்குகள் அதானி நிறுவனத்திடம் சென்றுவிடும். அவ்வாறு நடைபெறும் சூழ்நிலையில் பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் நிர்வாகக் குழுவில் இருந்து முழுமையாக நீக்கப்படுவர்.
ரிலையன்ஸ் நிறுவனம் நெட்வொர்க் 18 நிறுவனத்தை தற்போது நடத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது என்.டி டிவி குழுவில் நடைபெற்றுள்ள இந்த மாற்றம் மீடியா துறையிலும் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.