Published:Updated:

வருகிறது ஆன்லைன் சேலின் `பாகுபலி'... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

Flipkart and Amazon
Flipkart and Amazon

ஷாப்பிங் சீஸன்களின் `பாகுபலி' என்றால், அது வரும் பண்டிகைக்கால சீஸன்தான். 16-ம் தேதி தொடங்குகிறது ஃப்ளிப்கார்ட் சேல். 17-ம் தேதி தொடங்குகிறது அமேசான் சேல். இந்த ஆன்லைன் ஷாப்பிங் சேலில் எதையேனும் வாங்க நினைத்திருந்தால் உங்களுக்காக சில டிப்ஸ்.

கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளில் ஒன்று `பிக் பில்லியன் டே' மற்றும் `கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்'. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நடத்தும் இந்த அதிரடி தள்ளுபடி சேல்கள் ஒவ்வோர் ஆண்டும் மெகா ஹிட்தான். இந்தியாவின் 99% போஸ்டல் கோட்களிலிருந்தும் சென்ற ஆண்டு ஆர்டர்கள் வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 19,000 கோடி ரூபாய்க்கு இரண்டு நிறுவனங்களும் வர்த்தகம் செய்திருந்தன. இந்த முறை கொரோனாவால் ஆஃப்லைன் வியாபாரம் சோர்ந்திருப்பதால், ஆன்லைன் சேல் இன்னும் பெரிய அளவில் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 16-ம் தேதி தொடங்குகிறது ஃப்ளிப்கார்ட் சேல். அமேசான் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஷாப்பிங் சேலில் நீங்களும் எதையேனும் வாங்க நினைத்திருந்தால் உங்களுக்காக சில டிப்ஸ்.

Amazon great indian festival
Amazon great indian festival
amazon.com

1. ஆன்லைன் ஷாப்பிங்குக்கு கொஞ்சம் ஹோம் வொர்க் தேவை. முதலில் நீங்கள் கட்டாயம் வாங்க வேண்டியிருக்கும் அவசியமான பொருள்கள் பட்டியல் தயார் செய்யுங்கள். முடிந்தால் இப்போதே அந்த பொருள்களை பிரவுஸ் செய்து, அதன் ஸ்பெக்ஸ் மற்றும் தேவையான தகவல்களைப் பார்த்துவிடவும். ஆன்லைன் சேல் தொடங்கியதும் ஆஃபர் ஸோனில் அந்தப் பொருள்கள் இருக்கிறதா எனப் பார்த்து வாங்கலாம்.

2. ஒவ்வொரு பொருளுக்கான பக்கத்திலும் ஏற்கெனவே அதை வாங்கியவர்கள் தரும் ரிவ்யூக்களைப் படித்துப் பாருங்கள். பிராடக்ட் பக்கத்திலிருக்கும் படங்களைவிட, ரிவ்யூக்களில் வரும் படங்கள்தான் முக்கியம். அவைதான் உண்மையான படங்கள். போலவே, அந்தப் பக்கத்திலிருக்கும் கேள்வி பதில்களையும் வாசியுங்கள். நிறைய சந்தேகங்களுக்கு அங்கே பதிலிருக்கும்.

3. சில பொருள்கள் உடனே தேவையில்லை என்றாலும் விலை குறைந்தால் வாங்கலாம். ஆனால், அந்தப் பொருள்களின் முந்தைய விலை தெரிந்தால்தான் அந்த முடிவை எடுக்க முடியும். சில நேரம் சில செல்லர், விலை குறைத்துக் காட்டினாலும் உண்மையான விலை அதைவிட குறைவாக இருக்கக்கூடும். விலையை ஏற்றி பின் குறைத்துக் காட்டும் அதே பழைய டெக்னிக்தான். இதற்கு ஆன்லனில் ஒரு தீர்வு இருக்கிறது. அந்தப் பொருளின் கடந்தகால விலை என்ன, எப்படியெல்லாம் அதன் விலை மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல பல இணையதளங்கள் உள்ளன. அதன் மூலம் உண்மையிலே விலை குறைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு பின் வாங்கலாம். மேலும் எந்தத் தளத்தில் அந்தப் பொருளின் விலை குறைவாக இருக்கிறது என்பதையும் பார்க்கலாம். உதாரணத்துக்கு:

https://www.compareraja.in/

https://www.smartprix.com/

flipkart
flipkart

4. பெரும்பாலான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்ட உடனே சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடும். முன்னர் மொபைல்களுக்குத்தான் இந்த `வாம்மா மின்னல்' ரக பிரச்னை இருந்தது. இப்போது பெரும்பாலான ஆஃபர் பொருள்களுக்கும் இந்த அவசரம் இருக்கிறது. எனவே, நீங்கள் வாங்க நினைக்கும் முக்கியமான பொருள்களை ஷாப்பிங் கார்ட்டில் இப்போதே சேர்த்து வைக்கலாம். ஆஃபர் அறிவிக்கப்பட்டதும் உடனே வாங்க இது உதவக்கூடும்.

5. சிலர், ஆஃபர் சமயம் என்பதால் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பொருள்கள் வாங்கித் தர விரும்புவார்கள். ஆனால், அவர்களின் முகவரியை ஆன்லைன் தளங்களில் சேர்த்திருக்க மாட்டார்கள். அவசரமாக ஆர்டர் செய்ய வேண்டி வரும்போது இது நேரத்தைக் காலி செய்யும். எனவே, யாருக்காவது பொருள்கள் வாங்கித் தர வேண்டியிருந்தால் முன்னதாகவே அவர்கள் முகவரியையும் சேர்த்து வைக்கவும். போலவே, ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் சரியான முகவரியைத்தான் தேர்வு செய்திருக்கிறோமா என்பதை உறுதி செய்யவும்.

கவனம்
பொருளின் விலையைத் தாண்டி நாம் கட்டும் எந்தப் பணமும் வட்டி போலத்தான்!

6. சிலர் கிரெடிட் கார்டில் வாங்குவார்கள். சிலர் டெபிட் கார்டு அல்லது கேஷ் ஆன் டெலிவரி. எதுவாக இருந்தாலும் அந்த பேமென்ட் முறையையும் முதலிலே பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் கேஷ்பேக் போன்ற சலுகைகள் தருவதால் அந்த கிரெடிட் கார்டு உங்களிடமிருந்தால் அதையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

7. இ.எம்.ஐ ஆஃபர்களும் நிறைய வரும். ஆனால், அதற்கு பிராசஸிங் சார்ஜ் போல வேறு ஏதேனும் கட்டணம் இருக்கலாம். பொருளின் விலையைத் தாண்டி நாம் கட்டும் எந்தப் பணமும் வட்டி போலத்தான். எனவே, மறைமுகக் கட்டணம் பற்றி முன்பே படித்து வைத்துக்கொள்ளுங்கள். அதனடிப்படையில் எப்படி வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.

8. வழக்கமாக நடப்பதைப் போல பல ஆயிரம் மடங்கு அதிக விற்பனை ஆகுமென்பதால் டெலிவரியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் தாமதமாகலாம். எனவே, பொருள் நிச்சயம் நம் கைக்கு ஓரிரு நாளில் வந்துவிடும் என நினைத்து எதையும் திட்டமிட வேண்டாம். ஒருவேளை தாமதம் ஆனால், அது உங்கள் மகிழ்ச்சியையே கெடுத்துவிடும்.

9. எந்தப் பொருளை வாங்கினாலும் அதை அன்பாக்ஸிங் செய்யும்போது வீடியோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பொருள்கள் சேதமடைந்திருந்தாலோ, மாறி வந்திருந்தாலோ அதைப் பற்றி புகார் தெரிவிக்க இந்த வீடியோ உதவக்கூடும்.

10. முக்கியமாக, இந்த சேலில் எவ்வளவு ரூபாய்க்கு ஷாப்பிங் செய்யலாம் என நீங்களே ஒரு லிமிட் வைத்துக் கொள்ளுங்கள். அதைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது பாக்கெட்டுக்கும் எதிர்காலத்துக்கும் நல்லது.

ஹேப்பி ஷாப்பிங்!

அடுத்த கட்டுரைக்கு