Published:Updated:

நிதி நெருக்கடியில் ஏற்றுமதித்துறை; 20% ஆர்டர்கள் ரத்து; அச்சத்தில் ஏற்றுமதியாளர்கள்... என்ன காரணம்?

ஏற்றுமதி - இறக்குமதி
ஏற்றுமதி - இறக்குமதி

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்காசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கான தொகை நிலுவையிலேயே உள்ளது.

கொரோனா பாதிப்பால் பெரும்பாலான துறைகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்திய ஏற்றுமதித் துறையும் கொரோனாவால் பெரும் பாதிப்படைந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்காசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கான தொகை நிலுவையிலேயே உள்ளது. சுமார் 15%-20% வரையிலான ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஆர்டர்கள் ரத்து மற்றும் நிலுவையில் உள்ள வருமானம் போன்றவற்றால் மூலதனம் தேங்கி பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது இந்திய ஏற்றுமதித் துறை.

இந்நிலை சீரடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாகும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உணவு மற்றும் விவசாய உற்பத்திகள் மட்டும்தான் தற்போது ஏற்றுமதியில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. ஆனால், இந்த அத்தியாவசியப் பொருள்களின் ஏற்றுமதியும், பேக்கிங்க் பொருள்களின் தட்டுப்பாடு, அரசாங்க அனுமதி போன்ற சிக்கல்களைச் சந்தித்து வருவதால், பல வாய்ப்புகள் கை நழுவிச் சென்றுவிடுவது சற்று வேதனைக்குரியது.

கொரோனா... முடங்கிய ஏற்றுமதி! - சந்திக்க வேண்டிய சவால்கள்!

கைவினைப்பொருள்கள், ஆடை, கம்பளம் போன்ற பொருள்களுக்குக் கிடைத்த ஆர்டர்களில் பாதி ரத்தாகிக்கொண்டே வருகின்றது. பல்வேறு இன்னல்களைக் கடந்து பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு, துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் பொருள்கள் துறைமுகங்களிலேயே தேங்கி விடுகின்றன. ஆடைத்துறையில் மட்டும் சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் ரத்தாகியுள்ளன. 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திகள் தேங்கியுள்ளன.

'ஊரடங்கு ஏப்ரலில் தளர்த்தப்படவில்லை என்றால் 80% வரையிலான ஆர்டர்கள் ரத்தாகி சர்வதேச வாடிக்கையாளர்கள் மற்ற நாடுகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்' என்று ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்றுமதித் துறையைச் சரிவிலிருந்து காக்க வட்டியில்லா கடன், சிறுகுறு நிறுவனங்களுக்கு ஊக்கம், போக்குவரத்து வசதி , வராக்கடன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் போன்ற முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று ஃபிக்கி போன்ற சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆடைத்துறையில் மட்டும் சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் ரத்தாகியுள்ளன. 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திகள் தேங்கியுள்ளன.

“வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவைப்படும் நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்து, கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மட்டுமே, ஏற்றுமதியை நம்பியுள்ள நிறுவனங்களையும் ஊழியர்களையும் காக்க முடியும். ஊழியர்களிடம் பணமில்லை என்றால் ஊரடங்கைவிட வறுமை கொடியதாகி மக்களை வாட்டியெடுத்துவிடும்” என்கிறார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

“கொரோனாவால் ஏற்படுகின்ற பாதிப்புகளை மட்டுமல்லாமல், அதை நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்குச் சாதகமாக்கிக்கொண்டு, பாதிப்புகளை ஈடுசெய்ய முடியுமா என்பதைப் பற்றியும் சற்று சிந்திக்கவேண்டும். மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி, வரிச்சலுகை,உட்கட்டமைப்பு வசதி போன்றவற்றை உருவாக்கி, உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை மேம்படுத்தினால், மருந்து ஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கலாம்” என்கிறார் இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம்.

மத்திய அமைச்சர்களுடன் நடந்த சந்திப்பில், பிரதமர் மோடி ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றியும் அவற்றை சரிசெய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமாகவே ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி வரட்டும்!.

அடுத்த கட்டுரைக்கு