Published:Updated:

அதிகரித்த அந்நியச் செலாவணி கையிருப்பு..! - 500 பில்லியன் டாலரைத் தாண்டிய அற்புதம்!

அந்நியச் செலாவணி
பிரீமியம் ஸ்டோரி
அந்நியச் செலாவணி

நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்பட்சத்தில், முதலீட்டுக்குத் தகுதியில்லாத தரவரிசைக்கு நம் நாடு தள்ளப்படும் அபாயம் உள்ளது!

அதிகரித்த அந்நியச் செலாவணி கையிருப்பு..! - 500 பில்லியன் டாலரைத் தாண்டிய அற்புதம்!

நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்பட்சத்தில், முதலீட்டுக்குத் தகுதியில்லாத தரவரிசைக்கு நம் நாடு தள்ளப்படும் அபாயம் உள்ளது!

Published:Updated:
அந்நியச் செலாவணி
பிரீமியம் ஸ்டோரி
அந்நியச் செலாவணி
சுதந்திர இந்தியாவில் இதுவரை கண்டிராத அளவிலான பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்புகள், மூடீஸின் தரமிறக்க நடவடிக்கை எனப் பலதரப்பட்ட எதிர்மறைச் செய்திகள் அடுத்தடுத்து வந்து நம்மைத் தாக்கிவரும் இந்த நேரத்தில், நமக்குச் சற்று ஆறுதல் தரும் நல்ல தகவலும் ஒன்று உண்டு.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னர், சில வார இறக்குமதித் தேவைகளுக்கு மட்டுமே அந்நியச் செலாவணிக் கையிருப்பைக்கொண்டிருந்த நாம், தற்போது ஒரு வருட இறக்குமதித் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கான அந்நியச் செலாவணிக் கையிருப்பை அடைந்திருக்கிறோம் என்பதே அந்த நல்ல செய்தி. ஆம், கடந்த 12.06.2020 அன்று, ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 501 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயமே.

அதிகரித்த அந்நியச் செலாவணி கையிருப்பு..! - 500 பில்லியன் டாலரைத் தாண்டிய அற்புதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வர்த்தகப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் டாலர் கையிருப்பு..!

பொதுவாகவே, இந்தியா இறக்குமதி சார்ந்த நாடு. குறிப்பாக, கச்சா எண்ணெய்த் தேவைக்கு நாம் அந்நிய நாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம். சமீபகாலமாக, கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்துவருவது இந்தியாவுக்குச் சாதகமான அம்சமாக அமைந்தாலும், மறுபக்கம் அதிகரித்துவரும் மின்னணுச் சாதனங்கள் பயன்பாட்டால், நமது இறக்குமதி பளுவின் மீதான அழுத்தம் தொடர்ந்தே வருகிறது.

அரசியல் மற்றும் பொருளாதாரரீதியாக சிக்கலான நேரங்களில், ஒரு நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை கடும் நெருக்கடியை உண்டாக்கி விடுகிறது. உதாரணமாக, கடந்த 1990-91-ம் ஆண்டில் நிகழ்ந்த வளைகுடாப் போரைத் தொடர்ந்து உருவான கச்சா எண்ணெய்ச் சிக்கலின் காரணமாக, கடும் வர்த்தகப் பற்றாக்குறை நெருக்கடியைச் சந்தித்த நாம், கஷ்டப்பட்டுச் சேர்த்துவைத்திருந்த தங்கத்தை பேங்க் ஆஃப் இங்கிலாந்திடம் அடமானம் வைத்து இறக்குமதிக்குத் தேவையான டாலர்களைப் பெற வேண்டியதாயிற்று. அணு ஆயுதப் பரிசோதனைகளை அடுத்து நம் நாட்டின் மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளின் போதும் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையின் மீதான கவனம் அதிகரித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிகரித்துவரும் அந்நிய முதலீடுகள்..!

இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு என்பதால், உலக முதலீட்டாளர்களின் பார்வையில் தொடர்ந்து இருந்து வருகிறது. அண்மைக்கால உதாரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 13 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்குள் வந்துள்ளன. கோட்டக் வங்கியிலும் சுமார் 1 டாலர் பில்லியன் அளவுக்கு அந்நிய முதலீடு வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 15 பில்லியன் டாலர் உயர்ந்திருக்கிறது.

அந்நியச் செலாவணி
அந்நியச் செலாவணி

சர்வதேச பணப் பரிமாற்றங்கள்..!

வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக, மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ஏராளமான பணவரவு வருகிறது. உலகிலேயே அதிக அளவு அந்நியச் செலாவணியை வெளிநாடுவாழ் தொழிலாளிகள் மூலம் ஈட்டும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. ஆனால், கொரோனா நெருக்கடியின் நீட்சியான சமீபத்திய வேலை இழப்புகள் இத்தகைய வருவாயை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஒரு காலத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் பணம் வெளியே செல்வது அபூர்வமான ஒன்றாக இருந்தது. ஆனால், தாராளமய மாக்கப்பட்ட பணப் பரிமாற்றமும் (Liberalised Remittance Scheme) பன்னாட்டு மயமாக்கலும் நம் நாட்டினரைப் பெரிய அளவில் அந்நியச் செலாவணியைச் செலழிப்பவர் களாகவும் மாற்றியிருக்கிறது. ஆனால், கொரோனாவால் வெளிநாட்டுப் பயணங்கள் குறைந்து, இந்தியாவிலிருந்து பணம் வெளியேறுவது தற்போது குறைந்திருக்கிறது.

அந்நியச் செலாவணிக் கையிருப்பின் அத்தியாவசியம்..!

அமெரிக்கா போன்ற உலகெங்கும் தங்களது சொந்தச் செலாவணியே செல்லுபடியாகும் செல்வாக்கு கொண்ட நாடுகள் தனியே இருப்பு ஏதும் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களது அவசரகாலத் தேவைக்காக அந்நியச் செலாவணியைக் குறிப்பிட்ட அளவு கையிருப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. உதாரணமாக, வல்லரசுகளின் வர்த்தகத் தடை, அந்நிய முதலீடுகளின் வெளியேற்றம், போர், ரேட்டிங் குறைப்பு, நம்பகத்தன்மை குறைபாடு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் அந்நியச் செலாவணி கையிருப்பில் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அந்நியச் செலாவணி
அந்நியச் செலாவணி

`உலகிலேயே அதிக அளவில் அந்நியச் செலாவணிக் கையிருப்பைக் கொண்டிருக்கும் ஐந்தாவது பெரிய மத்திய வங்கி’ என்ற பெருமையை நமது இந்திய ரிசர்வ் வங்கி தற்போது பெற்றிருக்கிறது. தற்போதைய கையிருப்பு இந்தியாவின் ஒரு வருடத்துக்கான இறக்குமதித் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பது மிகுந்த தைரியம் தரும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

அந்நியச் செலாவணி எங்கே முதலீடு செய்யப்படுகிறது...?

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு டாலராகவே பராமரிக்கப்படுகிறது. இந்தத் தொகை, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு அரசுகளின் கடன் பத்திரங்கள், தங்கம், பன்னாட்டு நிதி அமைப்பு வெளியிடும் பத்திரங்கள், பன்னாட்டு வங்கிகளில் இருப்பு மற்றும் மற்ற நாடுகளின் மத்திய வங்கியில் இருப்பு எனப் பல வகைகளிலும் முதலீடு செய்யப்படுகிறது. மார்ச் 2020 இறுதியில், நமது மொத்தக் கையிருப்பில் பாதிக்கும் மேலான தொகை (263 பில்லியன் டாலர்) கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட் டிருப்பதாகவும், 147 பில்லியன் டாலர் அளவுக்கான தொகையை மற்ற மத்திய வங்கிகளில் இருப்பாக வைத்திருப்பதாகவும் ஆர்.பி.ஐ சொல்லியிருக்கிறது. அதேபோல, தங்கத்தின் இருப்பு 30 பில்லியன் டாலர் அளவுக்குக் கைவசம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மிகக் குறைந்த அளவிலான வட்டியுடன் கூடிய முதலீடுகள் அந்நிய நாட்டுக் கடன் பத்திரங்களில் செய்வதைத் தவிர்த்துவிட்டு, இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சித் திட்டங்களில் அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற குரல்கள் அவ்வப்போது எழுவதுண்டு. டிசம்பர் 2019-ம் ஆண்டுடன் முடிந்த அரையாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி நிலுவைத் தொகை 1,123 பில்லியன் டாலர். ஆனால், நமக்கு வெளியிலிருந்து வரவேண்டிய தொகையோ 697 பில்லியன் டாலர் மட்டும்தான். எனவே, திடீர் நெருக்கடிகளைத் தவிர்க்க வேண்டுமெனில், ரிசர்வ் வங்கியின் கையிருப்பை அந்நியச் செலாவணியிலேயே வைத்திருப்பது அவசியமாகிறது.

ரிசர்வ் வங்கியின் சந்தைக் குறுக்கீடு!

பொதுவாக, உலகெங்கிலும் பெருமளவு வர்த்தகமாகும் பன்னாட்டு நாணயங்களான யூரோ, டாலர் வர்த்தகத்தில் அந்த நாட்டு மத்திய வங்கிகளின் தலையீடு இருப்பதில்லை. சந்தை வர்த்தகத்தின் அளவு மிகப்பெரிய அளவில் இருப்பதால், அவற்றின் ஏற்றத்தாழ்வு பெரும்பாலும் சந்தையின் போக்கை ஒட்டியே அமைந்திருக்கும். ஆனால், இந்திய ரூபாய் போன்று ஒப்பீட்டளவில் அதிக வர்த்தகம் ஏற்படாத நாணயத்தின் சந்தை வர்த்தகத்தில் அவ்வப்போது மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அத்தகைய நாணய ஏற்றத்தாழ்வுகள், வளரும் நாடான இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் அபாயங்களைத் தவிர்க்கவே மத்திய வங்கி சந்தையில் மறைமுகமாகக் குறுக்கிடுகிறது.

அந்நியச் செலாவணி
அந்நியச் செலாவணி

அமெரிக்கா போன்ற வல்லரசுகள், `உள்நாட்டு நாணய வர்த்தகத்தில் மத்திய வங்கியின் தலையீடு தவறானது’ என்று குற்றம் சாட்டுகின்றன. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதத்துக்குமேல் ஒரு மத்திய வங்கி (நிகர அளவில்) வாங்கினால், அந்த நாடு நாணயச் சூழ்ச்சியில் ஈடுபடுவதாக (Currency Manipulator) அமெரிக்க நிதி அமைச்சகத்தால் குற்றம் சாட்டப்படும். சமீபத்தில்தான் சீன மத்திய வங்கி இந்தக் குற்றச்சாட்டிலிருந்து மீண்டது.

சமீபத்திய கொரோனா பொருளாதார நெருக்கடியின்போது, உலகச் சந்தைகளில் டாலரின் மதிப்பு சரிந்துவரும் அதே வேளையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்துவருவது வியப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, `ரிலையன்ஸ் முதலீடுகள் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையின் வீழ்ச்சி ஆகிய முக்கிய காரணங்களுக்கு இடையேயும் டாலர் தொடர்ந்து வலுவடைந்துவருவது ரிசர்வ் வங்கியின் தலையீட்டால்தான்’ என்று சொல்லப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே மத்திய வங்கியின் கையிருப்பு 16 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருப்பது இத்தகைய ஊகங்களுக்கு வலுசேர்க்கிறது.

அந்நியச் செலாவணி
அந்நியச் செலாவணி

ஆர்.பி.ஐ தலையீட்டின் பின்னணி என்ன..?

நமது மத்திய வங்கியான ஆர்.பி.ஐ தொடர்ச்சியாக டாலரைச் சந்தையிலிருந்து வாங்கிவருவதற்கு அதிகாரபூர்வமான காரணங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. என்றாலும், சந்தையில் பல்வேறு வகையான ஊகங்கள் நிலவிவருகின்றன. கொரோனா பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, நம் நாடு சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்களின் பார்வையில் பதிந்துள்ளது. மூடீஸ் நிறுவனம் இந்தியா மீதான தனது ரேட்டிங்கை ஏற்கெனவே குறைத்ததைத் தொடர்ந்து எஸ்&பி நிறுவனமும் எச்சரிக்கைக் குரல் எழுப்பியுள்ளது. முதலீட்டுக்குத் தகுதியான தர வரிசையில் கடைசி இடத்திலுள்ள இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், முதலீட்டுக்குத் தகுதியில்லாத தரவரிசைக்கு நம் நாடு தள்ளப்படும் அபாயம் உள்ளது. எனவேதான், முன்னெச்சரிக்கையாக, தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணியைத் திரட்டி வருகிறது என்ற ஊகம் பரவலாக உள்ளது.

ஒவ்வொரு வருட இறுதியிலும் ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பை மதிப்பீடு செய்வதுண்டு. பெரும்பாலான கையிருப்பு டாலரிலேயே இருப்பதால், அதிகப்படியான டாலர் மதிப்பீடு, மத்திய அரசுக்கு அதிகப்படியான டிவிடெண்ட் வழங்க உதவும் என்ற ஊகமும் உலவிவருகிறது. இருப்பினும், தற்போதைய நெருக்கடியான நிலையில், 500 பில்லியன் டாலர் கையிருப்பு என்பது நம் நாட்டுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தரும் என்பதில் சந்தேகமில்லை!

(இங்கே சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!)