Published:Updated:

பண்டிகைக்கால ஆன்லைன் ஷாப்பிங்குக்கு ரெடியா? இந்த 6 விஷயங்களில் மட்டும் அலெர்ட் ப்ளீஸ்!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது உஷாராக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கான சில உஷார் டிப்ஸ்கள் இதோ...

கொரோனா காலத்தில் வரும் முதல் மிகப்பெரிய பண்டிகை தீபாவளி. இதோ... இன்னும் சில தினங்களில் தீபாவளி ஷாப்பிங் ஆரம்பித்துவிடும். ஆனால், வழக்கம் போல ரீடெய்ல் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. வழக்கத்துக்கு மாறாக, ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்கள் வேண்டுமானால் டிராஃபிக் அதிகமாகி ஸ்தம்பித்தும் போகலாம்.

ஏனெனில், லாக்டௌன் காலங்களில், கடைகள் திறக்கப்படாமல் இருந்தபோது, பெரும்பாலானவர்கள் ஆன்லைன் ஷாப்பிங்குக்கு பழக்கப்பட்டுவிட்டார்கள் என்கிறது ஆய்வு. மேலும், கொரோனா தொற்று பயத்தால், வெளியில் வராமல் இருப்பதற்காக, ஆன்லைன் ஷாப்பிங்குக்கு இனி அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

அதனால்தான், இதுவரை இந்தியாவுக்குள் ஆன்லைன் ரீடெய்ல் தளத்தை ஆரம்பிக்காத, ஆப்பிள் நிறுவனமும் செப்டம்பர் 23-ம் தேதி முதல், புதிய ஆன்லைன் ரீடெய்ல் தளத்தை ஆரம்பிக்கிறது. இது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும், ஆன்லைன் பணப்பரிமாற்றங்கள் அதிகமாகும் என்பதால், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒருசில டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது... போலிப் பொருள்களை விற்பது, போலியான ஷாப்பிங் தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதிலிருந்து தப்பிக்க, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது உஷாராக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கான சில உஷார் டிப்ஸ்கள் இதோ...

2
Online Shopping ( Photo by Morning Brew on Unsplash )

போலி பிராண்டுகள்!

பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 100 ரூபாய்க்குத் தருகிறோம் அல்லது 500 ரூபாய்க்குத் தருகிறோம் என்று அடிக்கடி மெயில் வரும். இது மாதிரியான தளங்களை ஒதுக்குவது நல்லது. இப்போதெல்லாம் பிராண்டு லோகோவில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தி, பிராண்டு பெயர்களில் எழுத்துப்பிழையை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். அதனால், நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களில் மக்களால் அதிகம் வாங்கும் பொருள்களான காஸ்மெட்டிக் பிராண்டுகள் மற்றும் கேட்ஜெட்களில்தான் இதுமாதிரியான பித்தலாட்டங்கள் அதிகம் நடைபெறுகின்றன.

3
Online Shopping

கமென்ட்ஸ் ப்ளீஸ்!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, நீங்கள் வாங்கக்கூடிய பொருள்களை அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கமென்ட்களைப் படித்த பிறகு, வாங்குவது நல்லது. பெரும்பாலானவர்கள் அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்திருப்பார்கள், அதுமாதிரியான கமென்ட்களைத் தேர்வுசெய்து படியுங்கள். ஏனெனில், பொருள்களை விற்பவர்களேகூட சில சமயம் பாசிட்டிவ் கமென்ட்களைப் பதிவிடுவார்கள்.

4
online shopping

கேஷ் ஆன் டெலிவரி!

ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை எனத் தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியை, ஷாப்பிங் செய்யும் தளம் வழங்குகிறதா என கவனித்து வாங்கவும். அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிகப் பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள். இல்லையென்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள். ஆர்டர் செய்த பிறகு உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை, பொருள் உங்கள் கைக்குக் கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.

5
Online Shopping

ஆஃபர் அவசரங்கள்!

வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒருசில டெக்னிக்கைப் பின்பற்றுகின்றன. அதாவது, `பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் இருக்கிறது. அதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்குக் கிடைக்காது' என்று அவசரப்படுத்துவார்கள். இதுமாதிரியான ஷாப்பிங்கைத் தவிர்ப்பதுதான் நல்லது.

அதேபோல, கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலமும், ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. குலுக்கல் முறையில் இலவசமாக உங்களுக்கு போன் அல்லது கம்ப்யூட்டர் கிடைத்திருக்கிறது. அதற்கு உங்களுடைய விவரங்களை அனுப்ப வேண்டும் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ் வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளக் கூடாது

6
online shopping ( Twitter )

ரிட்டர்ன் பாலிசி மோசடி!

பொருள்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளைப் பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்குத் தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருள்களை வாங்கிய பிறகு அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், `நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லியிருக்கிறோமே' என்பார்கள். பெரும்பாலும் பொருள்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.

7
ஆன்லைன் ஷாப்பிங்

வாரன்டி...கியாரன்டி!

பல இணையதளங்கள், உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty) பொருளை விற்கின்றன. குறிப்பிட்ட ஒரு பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மைக் குழப்பி ஏமாற்றிவிடும். இதிலும் ஜாக்கிரதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு