Published:Updated:

பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல்லில் 60,000 வி.ஆர்.எஸ் விண்ணப்பங்கள்!

வி.ஆர்.எஸ் திட்டத்துக்குத் தகுதியான ஊழியர்கள், நவம்பர் 5-ம் தேதி முதல் டிசம்பர் 3 வரை விருப்ப ஓய்வு பெறலாம்.

வி.ஆர்.எஸ்
வி.ஆர்.எஸ்

மத்திய அரசு நிறுவனமான எம்.டி.என்.எல் எனப்படும் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் டெல்லியில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் மற்ற மாநிலங்களில் தொலைத்தொடர்பு சேவையை அளித்துவருகிறது. இவ்விரு நிறுவனங்களும் 40,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. அதனால் இதில் பணிபுரியும் 50 வயதைக் கடந்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வி.ஆர்.எஸ் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், ஆண்டுக்கு சம்பள செலவில் மட்டும் 7,000 கோடி ரூபாய் மிச்சமாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அன்ஷு பிரகாஷ்

திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு சில தினங்களில், பி.எஸ்.என்.எல்லைச் சேர்ந்த 40,000 ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெற விருப்பம் தெரிவித்திருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது. ``பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களைச் சேர்ந்த 60,000 ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெற இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளனர்'' என்று தொலைத்தொடர்புத்துறைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தெரிவித்தார்.

நாடு முழுவதும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 1.5 லட்சம் பேரும் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 22,000 பேரும் பணியாற்றி வருகின்றனர். திட்டம் அறிவித்த சில தினங்களில் சுமார் 60,000 பேர் வரை வி.ஆர்.எஸ் திட்டத்துக்கு விண்ணப்பித்திருப்பது இதுவே முதல் முறை. மொத்தம் 94,000 ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெற விருப்பம் தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்ஷு பிரகாஷ்
அன்ஷு பிரகாஷ்

இந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு மத்திய அரசு 69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதன்பின் இரு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, அதன் சொத்துகளை விற்று, மூன்றாண்டுகளில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ``வி.ஆர்.எஸ் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், ஆண்டுக்கு சம்பள செலவில் மட்டும் 7,000 கோடி ரூபாய் மிச்சமாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது" என்றும் அன்ஷு பிரகாஷ் தெரிவித்தார்.