Published:Updated:

டீம் ப்ளேயர் டு டீம் லீடர்... தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 7 தலைமைப் பண்புகள்!

MS Dhoni
MS Dhoni ( AP Photo / Aijaz Rahi )

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள், எப்போதும் கேப்டனாக இருக்க முடியாது. ஏனெனில், வெற்றியைவிட தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. ஆனால், நல்ல தலைமைப் பண்பு கொண்ட எந்தத் தலைவனுக்கும் ஓய்வு என்பதே கிடையாது. தோனிக்கும் அப்படித்தான். சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் அவர் இனி விளையாட மாட்டார் என்றாலும், இன்னும் சில தலைமுறைகளுக்கு அவரின் தாக்கம் நிச்சயம் இருக்கும். அப்படி அவரிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஏழு மேனேஜ்மென்ட் பண்புகள் இங்கே...

1. தெளிவான திட்டமிடல்!

``தோனியின் முடிவுகள் குறித்து எப்போதும் கேள்வி எழுப்பியதில்லை. ஏனெனில், அவர் ஒவ்வொரு முறையும் தெளிவான திட்டத்துடன்தான் களத்தில் இறங்குவார்" என்று சொல்கிறார் சி.எஸ்.கே-வின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்

தலைமைப் பண்புகளில் மிகவும் முக்கியமானது தெளிவான திட்டமிடல். கேப்டனாக சரியாகத் திட்டமிடுவதில் தோனி கில்லிதான். திட்டமிட்டு விளையாடினால்தான் வெற்றி காண முடியும் என்பதை, தோனி பலமுறை நிரூபித்தும் காட்டியிருக்கிறார். திட்டமிடலில் தெளிவு என்பது கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்ல, ஒரு நிறுவனத்தின் கேப்டனாக இருக்கும் அனைவருக்குமே முக்கியம். திட்டமிட்டுச் செய்யும்போது 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள புராஜெக்ட்டைகூட எந்தத் தவறும் இல்லாமல் சரியாகச் செய்து முடிக்க முடியும். தோல்வியைச் சந்திக்கும்போதுகூட, ஒரு கேப்டனாக அவர் செய்யும் அனைத்து விஷயங்களும் காரண காரியங்களுடன் அமைவதை, நம்மால் பார்க்க முடிகிறது. ஏனெனில், அவருடைய கேப்டன்ஷிப் அப்படி.

ஒரு நல்ல அணியில் இருக்கிறோம் என்பதைவிட, அந்த அணியின் வெற்றிக்கு எப்படி உதவுகிறோம் என்பதில்தான் நம் திறமை அடங்கியிருக்கிறது. ஒரு டீம் ப்ளேயரை, ஒரு டீம் லீடராக உயர்த்தும் இடம் இதுதான். இப்படிப்பட்ட விடாமுயற்சியும், தெளிவான திட்டமிடலும்தான் உங்களை எங்கெங்கும் உயர்த்தும்.

2. குழு உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்குவது!

தோனியைப் பொறுத்தவரை, தலைமை தாங்கும் அணி உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை முன்னிறுத்துவதை வாடிக்கையாக வைத்திருப்பார். இதற்குக் காரணம், தனது குழு உறுப்பினர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. ஒரு நிறுவனத்தின் கேப்டன் அல்லது குழுவின் தலைவர் என யாராக இருந்தாலும், தனக்குக் கீழ் பணியாற்றும் உறுப்பினர்களுக்கு வாய்ப்பை வழங்குவதில் தயக்கம் காட்டவே கூடாது. `பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் மிளிரும்' என்பதுபோல, வாய்ப்புகளை வழங்க வழங்கத்தான் செய்யும் பணிகளில் பணியாளர்களுக்கு அனுபவம் கூடும்.

MS Dhoni
MS Dhoni
AP Photo / Bikas Das
3. விடா முயற்சி!

`விடா முயற்சி... விஸ்வரூப வெற்றி' என்பார்கள். இது தோனிக்கு கச்சிதமாகப் பொருந்தும். ஆட்டத்தின் போக்கைப் பார்த்து, இனி இந்த மேட்ச்சில் இந்திய அணியால் ஜெயிக்க முடியாது என்ற மனநிலைக்கு எல்லோரும் வந்துவிடுவார்கள். ஆனால், தனது விடாமுயற்சியால் ஆட்டத்தின் போக்கையே பலமுறை மாற்றிக் காட்டியிருக்கிறார் தோனி. முடியாது எனத் தெரிந்தும் முயற்சி செய்யாமல் இருப்பதைவிட, கடைசி வரை அந்த முயற்சியைக் கைவிடாமல் இருப்பது தோனி ஸ்டைல். தலைமைப் பொறுப்பில் இருக்கும் யாராக இருந்தாலும், ஒரு செயலில் இறங்கிவிட்டால் அதில் கடைசி வரை விடாமுயற்சியுடன் போராடி வெற்றி காண்பதில் குறியாக இருக்க வேண்டும். முடியாது என நினைத்து, இடையில் கைவிடுவது குழு உறுப்பினர்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும்.

4. வெற்றி தோல்வியை, சரிசமமாகப் பார்ப்பது!

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள், எப்போதும் கேப்டனாக இருக்க முடியாது. ஏனெனில், வெற்றியைவிட தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இதை ஒவ்வொரு மேட்ச்சிலும் புரிந்து செயல்படுகிறார் தோனி. அன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியைச் சந்தித்தாலும் சரி ஆடிய ஆட்டத்தை மனநிறைவுடன்தான் முடிப்பார். அதேபோல, தோல்விக்குரிய காரணத்தைக் கண்டுபிடித்து, அதை அடுத்தடுத்த ஆட்டங்களில் சரிசெய்வதிலும் தோனி கெட்டிக்காரர். இந்தப் பண்பு, கேப்டனாக இருக்கும் அனைவருக்கும் அவசியம் இருக்க வேண்டும்.

5. நிதானத்தைக் கடைப்பிடித்தல்!

`நிதானமே பிரதானம்' என்பார்கள். தோனியின் ஆட்டம் எப்போதும் அதிரடியாகவே இருக்கும். அதேசமயம், நிதானத்தைக் கடைப்பிடிப்பதிலும் அவர் கவனமாக இருப்பார். நின்று நிதானமாக விளையாடும்போது, ஆடுகளத்தின் அனைத்து திசைகளிலும் தெளிவு கிடைக்கும். அப்போதுதான் எதிர்நோக்கி வீசப்படும் பந்துகளையும் எளிதாகக் கையாள முடியும். அதேபோல, பணியிடத்தில் `பாஸ்' என்பவர் நிதானமாகச் செயல்படுவது முக்கியம். அவசரப்படுவதால் ஆகிவிடப்போவது ஒன்றுமில்லை என்பதை மனதில் நிறுத்த வேண்டும். வேலைகளை நிதானப்படுத்தும்போது, அதைக் கையாள்வது எளிதாக இருக்கும். அப்போதுதான் பணியாளர்களால், தவறுகள் ஏதுமில்லாத வேலையைக் குறித்த நேரத்துக்கு முன்பாகவே முடிக்க முடியும்.

6. விவேகத்துடன்கூடிய வேகம்!

எந்த நேரத்தில் நின்று நிதானமாக விளையாட வேண்டும், எந்த நேரத்தில் ஆட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என்ற சூட்சுமத்தை தோனி எப்போதும் அறிந்திருப்பார். அவருடைய வேகத்திலும் ஒரு விவேகம் இருக்கும். பல மேட்சுகளில் ஆரம்பத்தில் அவருடைய ஆட்டம் சைலென்ட்டாக இருந்தாலும், இறுதிக்கட்ட ஓவர்களில் ஒவ்வொரு பந்தும் சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும்தான் பறந்துகொண்டிருக்கும். நிலை அறிந்து சரியாக முடிவெடுக்கும் தன்மை, தலைமையிடத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். அப்போதுதான், நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களை முன்னதாகவே தடுக்க முடியும்.

MS Dhoni
MS Dhoni
AP Photo / Tsering Topgyal
``பெருந்தன்மை சிறந்த தலைவனின் அடையாளம்!'' - தோனி குறித்து வியக்கும் `இன்ஃபோசிஸ்' நாராயணமூர்த்தி
7. கலந்தாலோசித்து முடிவெடுப்பது!

ஆட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முடிவுகளை குழுவில் இருக்கும் எல்லோருடனும் கலந்தாலோசிக்க தோனி என்றைக்குமே தவறியதில்லை. அப்படி கலந்தாலோசிப்பதால் ஏற்படும் நன்மைகளை அறிந்தவராகவே அவர் செயல்பட்டிருக்கிறார். அதேபோலத்தான் தலைமையிடத்தில் இருப்பவர்களும், பணிசார்ந்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தனது குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் நிறை-குறைகள் விவாதிக்கப்பட்டு, சரியான முடிவை எடுக்க முடியும்.

அடுத்த கட்டுரைக்கு