Published:Updated:

கொரோனாவுக்குப் பிறகு தவிர்க்க வேண்டிய 7 செலவுகள்!

பணம்
பணம்

உடல்நலம் பேணுவதில் பல ஒழுக்க நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதைப் போல, இனி வரும் காலங்களில் நிதி விஷயங்களிலும், குறிப்பாகச் செலவு விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

கொரோனா நம் எல்லோரையும் வீட்டுக்குள் கட்டிப் போட்டிருக்கிறது. அப்படியே வெளியில் போனாலும், மாஸ்க் போட்டுக்கொண்டுதான் போகிறோம். வீட்டுக்குள் இருந்தாலும் ஒரு நாளைக்கு நான்கு முறை கையை சுத்தமாகக் கழுவுகிறோம். வீட்டையும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கிறோம். இப்படி உடல்நலம் பேணுவதில் பல ஒழுக்க நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதைப்போல, இனி வரும் காலங்களில் நிதி விஷயங்களில், குறிப்பாகச் செலவு விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

கொரோனா காலங்களுக்குப் பிறகு தவிர்க்க வேண்டிய வீண் செலவுகள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

உல்லாச பயணம் வேண்டாம்!

Travel (Representational Image)
Travel (Representational Image)

`பயணம்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துகிறது' என்பார்கள். ஆனால், வீட்டுக்குள் அடைந்து கிடந்தாலும், மனிதன் பக்குவப்படுவான் என்பதை கொரோனா நாள்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன. அதனால் பயணமே வேண்டாம் எனச் சொல்லவில்லை. அப்படியான பயணங்களைக் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காகவேனும் தள்ளிப்போடுங்கள். ஏனெனில், கொரோனாவுக்கு முன்னர் குடும்பத்துடன் அடிக்கடி பயணப்படுவது, வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்வது போன்ற விஷயங்களில் அதிக பணத்தைச் செலவு செய்திருப்போம். இனி வரும் நாள்களில் அப்படிச் செய்யாதீர்கள். `எங்கெங்கிலும் கொரோனா' என்ற நிலையே இன்னும் சில மாதங்கள் தொடரும் என்பதால், பயணத்திற்கென தனிச் செலவுகள் இனி வேண்டாம்.

ஆடம்பரத்துக்காகச் செலவு செய்யாதீர்கள்!

Gold
Gold

அடுத்தவர் வாங்கிவிட்டார் என்பதற்காகத் தேவையற்ற பொருள்களை வீட்டுக்கு வாங்கும் பழக்கமே இங்கு பெரும்பாலானவர்களுக்கு மேலோங்கி இருக்கிறது. இனி வரும் நாள்களில், நிதி விஷயங்களை மிகக் கவனமாகக் கையாள்வது அவசியம் என்பதால், வீட்டுக்காக ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பாக ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள்.

அடிக்கடி உணவகங்களுக்குப் போக வேண்டாம்!

Restaurant (Representational Image)
Restaurant (Representational Image)

வார இறுதி நாள்களில், வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள உணவகங்களில் சாப்பிட வைக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இதனால் ஒரு வாரத்துக்குக் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் வரை செலவாகலாம். இனிமேல் அந்தப் பணத்தைச் செலவு செய்யாதீர்கள். கொரோனா நாள்கள் முடிந்துபோனாலும்கூட, சில மாதங்கள் வரை குடும்ப உறுப்பினர்களை வெளியில் அழைத்துவராமல் இருப்பதுதான் பாதுகாப்பானது.

பழைய வாகனங்களைப் பராமரிக்காதீர்கள்!

car
car

`பழைய வாகனங்களைப் பராமரிப்பதற்குப் பதில், புதிய வாகனங்களை வாங்கிவிடலாம்' என்பது சிலரின் எண்ணமாக இருக்கும். அது நல்லதுதான். ஆனால் பலர், பழுதான வாகனத்தைப் சரி செய்து, சரி செய்து தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இதனால் கணக்கில்லாமல் காசு கரியாகிக் கொண்டிருக்குமே தவிர, அந்த வாகனத்தால் பலன் இருக்காது. மேலும் அதற்காகும் எரிபொருள் செலவு, வழக்கமான வாகனங்களுக்காகும் செலவை விட அதிகமாக இருக்கும் என்பதே உண்மை. அதே போல பழைய மின்சாதங்களின் பயன்பாட்டாலும், வீண்செலவுகள் ஏற்படும். இனி வரும் நாட்களில் இதை மிக முக்கியமாகக்  கவனிக்க வேண்டும்.

பார்ட்டிக்கு இனி நோ!

Parties
Parties

சிலர் கொரோனா நாள்களுக்கு முன், நண்பர்களுடன் எதற்கு எடுத்தாலும் பார்ட்டி கொண்டாட்டங்களில் திளைத்திருப்பார்கள். ஆயிரம், இரண்டாயிரம் எனச் செலவு செய்து கிளப்பிங் போவது, கேமிங் பார்ட்டி விளையாடுவது எனக் கணக்கில்லாமல் செலவு செய்திருப்பார்கள். இனி அதற்கெல்லாம் `நோ' சொல்லிவிடுங்கள். அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலும், பெற்றோர்கள் அதற்குத் தடையிடுவது ரொம்பவே முக்கியம். இதனால் குறிப்பிட்ட தொகை மிச்சமாகும்.

தனித்தனி வாகனம் வேண்டாம்!

Cars
Cars

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனித்தனி வாகனங்களில் பயணம் செய்யலாம் என்பது நியாயமானதுதான். பைக் என்றால் பரவாயில்லை. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனி கார் என்பது, கூடுதல் செலவுகளுக்கு வழிவகுக்கும். அதனால், தனித் தனிக் கார்களைப் பயன்படுத்தியிருந்தாலும், இனி அந்தப் பழக்கத்தை குறைத்துக்கொள்வது நிதிச்சுமையைக் குறைக்கும்.

`இம்பல்ஸ் பையிங்' தவிர்க்கவும்!

Online Shopping
Online Shopping

ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்திருக்கும் காலகட்டம் இது. நாம் எல்லோரும் ஆன்லைனில்தான் அதிக நேரத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறோம். தேவையுள்ள, தேவையற்ற பொருள்களுக்கான அனைத்து விளம்பரங்களையும் இணையம் நம் கண்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது. அதனால் ஈர்க்கப்பட்டு, விலை குறைவாக இருக்கிறதே என்பதற்காகக் கூட தேவையில்லாத பொருள்களை வாங்க நேரிடலாம். இதைத்தான் `இம்பல்ஸ் பையிங்' என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். அதனால், ஆன்லைன் ஷாப்பிங் விஷயங்களில் கவனமுடன் இருங்கள். தேவையிருந்தால் மட்டுமே ஆன்லைனில் ஷாப்பிங் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு