Published:Updated:

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட உணவகங்கள்; வேலை இழக்கும் அபாயத்தில் 70,000 ஊழியர்கள்! #Coronavirus

மூடப்பட்ட உணவகங்கள்
மூடப்பட்ட உணவகங்கள்

நோய் தொற்றின் காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் உணவுத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் தொடங்கி, இன்று உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பல துறைகளும் ஆட்டம் கண்டு வருகின்றன. உற்பத்தித் துறையில் தொடங்கி உணவுத்துறை வரை கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் உணவுத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த கத்தார் ஏர்வேஸ் -வேலையிழப்பு அபாயத்தில் விமானப் பணியாளர்கள்

நாடு முழுவதும் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதனால் 70,000 பேர் வேலை இழக்கும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக உணவகங்கள் அதன் வாடிக்கையாளர்களை சில தினங்களுக்கு உணவகத்துக்கு வர வேண்டாம் என்று மின்னஞ்சல் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டது போலவே உணவு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமும் ஊதியக்குறைப்பு அல்லது பணி நீக்கம் போன்றவை நிகழலாம் சிரமத்துக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான உணவக ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

உணவகங்கள்
உணவகங்கள்

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய உணவகக் கூட்டமைப்பு (NRAI), ``சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருகிறது. தற்போது உயிரிழப்புகளும் நிகழ ஆரம்பித்திருக்கின்றன. அதனால், பொது மக்களின் பாதுகாப்பைக் கருதியும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும் இந்தியா முழுவதும் எங்கள் கூட்டமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து உணவகங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத் தற்காலிகமாக மூடியுள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 7.3 மில்லியன் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அதில் 3.7 மில்லியன் பேர் பதிவு செய்யப்பட்ட உணவகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் மீதமுள்ளோர் பதிவு செய்யப்படாத உணவகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பையின் முன்னணி உணவு நிறுவனங்களில் ஒன்றான உடுப்பி கடந்த சில வாரங்களாக வாடிக்கையாளர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ஊழியர்களும் பெரும்பாலானோர் கொரோனாவுக்கு பயந்து விடுப்பு எடுத்துள்ளதால் உணவகத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'வெல்கம் டு அன்மேரிட் கப்பிள்ஸ்' - ஹோட்டல் ரூம் விளம்பரமும் சில சம்பவங்களும்!

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அந்த உணவகத்தின் மேலாளர், ``உணவகத்துக்கு வாடிக்கையாளர்களும் யாரும் வருவதில்லை, ஊழியர்களும் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துக்கொள்வதால் எங்களால் தொடர்ந்து தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நாங்கள் எங்கள் உணவகக் கிளைகளைத் தற்காலிகமாக மூடுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு, சம்பளம் குறைப்பு மற்றும் பணி நீக்கம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

அதேபோல் (NRAI) தலைவர் அனுராக் இது குறித்துப் பேசுகையில், ``இந்த உணவுத் தொழிலைப் பொறுத்தவரையில் நிலையான செலவுகள் மிக அதிகம். அதற்கேற்ற விற்பனை இருந்தால் மட்டுமே எங்களால் இந்தத் தொழிலில் லாபம் பார்க்க முடியும். இந்த கொரோனா காரணமாக உணவுத்துறை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்தச் சூழலில் நாங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது மற்றும் அவர்களுக்கு சம்பளம் குறைப்பு முதலியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் நலனுக்காக மட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் ஊழியர்களின் நலன் கருதியும்தான் மேற்கொண்டுள்ளோம். ஆனால், இந்த நடவடிக்கையால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று எங்களுக்கும் தெரியும். எனவே, நாங்கள் அது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு