Published:Updated:

தங்க நகைக்கடன் வாங்கும் முன் இந்த 8 விஷயங்களைக் கவனிங்க! #GoldLoan

தங்கம்
தங்கம்

அவசரத் தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, கடன் கிடைத்தால் போதும் என்று மட்டுமே மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நகைக்கடன் பெறும்போது சில விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும்.

ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பச் செலவுகளைத் தவிர்க்க பெரும்பாலானோர், தற்போது நகைக்கடன் கேட்டு வங்கிகளை மொய்க்க ஆரம்பித்துள்ளனர். இது வழக்கத்தைவிட 30% அதிகம் எனச் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படி வருபவர்களில் பெரும்பாலானோர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என வங்கித்துறைச் சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கவனிக்க வேண்டியவை:

அவசரத் தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, கடன் கிடைத்தால் போதும் என்று மட்டுமே மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நகைக்கடன் பெறும்போது சில விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75% மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த சதவிகிதம், வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறலாம். எனவே, உங்களுக்கு அவசியம் தேவை எனில், அதிகமாகக் கடன் தரும் வங்கிகளையோ, நிதி நிறுவனங்களையோ நீங்கள் அணுகலாம். அதிகமான பணத்தை அளிக்கும் நிறுவனங்கள் அதிகமான வட்டியையும் உங்களிடம் கேட்கலாம். எனவே, வட்டியும் பிற கடன் வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, குறைவாக இருக்கிறதா என்பதைப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

2 கடன் தொகையை மட்டுமோ, சமமாக்கப்பட்ட மாதாந்தர தவணையை மட்டுமோ கருத்தில் கொள்ளாதீர்கள். மற்ற கட்டணங்களையும் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். கடனின் மொத்த கட்டணங்கள் என்ன என்று ஒப்பிட்டு சிறந்த கடனைத் தேர்வு செய்யவும்.

தங்க நகை
தங்க நகை

3. பெரும்பாலான நிறுவனங்களில் தங்கநகைக் கடன் வழங்க செயல்முறைக் கட்டணம் எதையும் வசூலிக்க மாட்டார்கள். ஆனால், மதிப்பீட்டுக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணம் அதிகமாக இருந்தால் நீங்கள் வேறு நிறுவனங்களை நாடலாம். எனவே, ஒன்றுக்கு இரண்டு நிறுவனங்களிடம் விசாரித்து முடிவெடுங்கள்.

4. நீங்கள் அடகு வைக்கப்போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். சில நிறுவனங்களில் நீங்கள் அடகு வைக்கும் தங்க நகைகளைப் பத்திரமாக வைத்திருக்கும் வசதிகள் இருக்காது. எனவே, நீங்கள் கடன் தொகையைச் செலுத்திய பிறகு உங்கள் நகைகள் மீண்டும் உங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5. தங்க நகைக்கான சமமாக்கப்பட்ட மாதாந்தரத் தவணையைக் கட்ட மறக்காதீர்கள். பணத்தைத் திரும்பச் செலுத்த மறக்காதீர்கள். ஏனெனில், இதனால் உங்கள் தங்கத்தை இழக்கக்கூடும். அதே போல, எளிதாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காகத் தேவைக்கு அதிகமான கடனுக்கு விண்ணப்பிக்காதீர்கள். உங்களால் கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை என்றால் நீங்கள் அதை இழக்க நேரிடும்.

இன்றைய தங்கம் விலையைத் தெரிந்துகொள்ள: Gold Rate Today

இன்றைய வெள்ளி விலையைத் தெரிந்துகொள்ள: Silver Rate Today

வட்டி எவ்வளவு?

6. தமிழகத்தில் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என்று 10,000-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் பெரும்பாலான வங்கிகளில் தங்க நகைக்கு அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படுகிறது.

தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் துறை வங்கிகள் 8.5% முதல் 12% வரையிலான ஆண்டு வட்டியில் தங்க நகை அடமானக் கடன் வழங்குகின்றன. ஆனால், தனியார் நிதி நிறுவனங்கள் 12 சதவிகிதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கின்றன.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் டி.என்.எஸ்.சி என்னும் மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் 9% வட்டியிலும், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் 11% வட்டியிலும் நகைக்கடன் வழங்குகின்றன.

Gold
Gold

தேவைப்படும் ஆவணங்கள்:

7. தங்கக் கடன் பெறுவதற்கு உங்களது அடையாளச் சான்றுகளை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஆதார் அட்டை ஆகியவற்றைச் சான்றாகச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

உங்களிடம் பான் அட்டை இல்லை என்றால், படிவம் 60-ஐ நீங்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். விலாசச் சான்றுக்காக உங்களது மின்சார கட்டணத்தின் ரசீது, ரேஷன் அட்டை அல்லது தொலைபேசி கட்டண ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

மேலும், உங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம். கடன் அளிப்பவர்களில் சிலர் உங்களது வருமானச் சான்றையும் கேட்பார்கள்.

வங்கியா, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களா?

8. வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகிய இரண்டிலும் நீங்கள் நகைக்கடன் பெறலாம். எல்லாவற்றிலும் மேலே குறிப்பிட்ட நகையின் மொத்த மதிப்பில் 75% தொகையைக் கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களைவிட பொதுத்துறை வங்கிகள் குறைவான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் தொகை கையில் கிடைக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். அலைச்சலும் இருக்காது என்றாலும் அதிக வட்டி மற்றும் மறைமுகக் கட்டணங்கள் இருக்க வாய்ப்புண்டு.

ஆக, இனி தங்க நகைக்கடன் வாங்கப் போகும்போது, மேலே சொன்ன விஷயங்களைக் கருத்தில் கொண்டு கடன் வாங்குங்கள்!

அடுத்த கட்டுரைக்கு