Published:Updated:

ஆன்லைன் ரம்மி விளையாடப் போறீங்களா? உங்க கவனத்துக்கு சில `சம்பவங்கள்'

சிறு வயதில் குடும்பமாக ஆடிய ரம்மி விளையாட்டில் அனைவரையும் தோற்கடித்த பெருமை நினைவுக்கு வர, ``ஆடித்தான் பார்ப்போமே; நம்மை மீறி என்ன நடந்துவிடும்? வேலை நேரம் போக மற்ற நேரத்திலும் சம்பாதிக்க இயன்றால் நல்லதுதானே” என்று எண்ணி உள்ளே நுழைவோரின் கவனத்திற்கு...

புலிகள் நிறைந்த காட்டில் பயணம்,

சுறா மீன்கள் சுற்றி வரும் கடலில் நீச்சல்,

கொசுத் தொல்லை நிரம்பிய வீடு = இவற்றில் அதிக ஆபத்து நிரம்பியது... காடா, கடலா அல்லது என்று கேட்டால், கண்டிப்பாக வீடுதான். ஏனெனில், ஒரு வருடத்தில் புலிக்கு இரையாவது 10 பேர்; சுறா மீனுக்கு இரையாவது 100 பேர்; ஆனால், கொசு ஏற்படுத்தும் வியாதிக்கு பலியாவது 7,25,000 பேர்.

சூதாட்டம்
சூதாட்டம்
Representational Image

சூதாட்டத்துக்குத் தள்ளிய கொரோனா...

இன்று கொசு போல அங்கும் இங்கும் தட்டுப்படும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தையும், வாழ்க்கையையும், சில சமயம் உயிரையும்கூட இழக்கும் இந்தியர்கள் பல கோடிப் பேர்.

சமீப காலங்களில் எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், இமெயில் மற்றும் பல்வேறான வலைதளங்களில் ரம்மி ஆடுவதற்கு அழைக்கும் விளம்பரங்கள் கண்ணில் தென்பட்டுக்கொண்டே இருக்கின்றன. பொழுதுபோகாமல் வலையில் மேயும் வசதியான இளைஞர்கள், கோவிட் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டு, மேல் வருமானம் தேடும் ஊழியர்கள், வேலை கிடைக்காமல், குடும்பத்தைக் காப்பாற்றத் திண்டாடும் சராசரி மக்கள் - இப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இந்த விளம்பரங்கள் இந்த விளையாட்டை, ``அதிர்ஷ்டம் சார்ந்ததல்ல; திறமை சார்ந்தது” என்று சாதிக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, 2015-ல் வந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் அதை ஆமோதிக்கிறது.

சில தளங்கள், `இது ஒரு போட்டி; சவால்களும், பரபரப்பும் நிறைந்த ஆடுகளம்’ என்று கூறி இளைஞர்களை இழுக்கின்றன; இன்னும் சில, ``வாழ்வில் ஏற்படும் சலிப்பை மாற்ற, மன அழுத்தத்தைப் போக்க இந்த விளையாட்டுகளே உதவும்” என்பதாகக் காட்டி நடுத்தர வயதினரை வளைக்கின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர் மட்டுமே வரலாம்; அதை நிரூபிக்க ஐடி வேண்டும் என்று தளங்கள் கூறினாலும், அதையெல்லாம் சரிக்கட்டி இதில் இறங்கும் பதின்ம வயதுச் சிறுவர்களும் உண்டு.

கேசினோ (சூதாட்ட விடுதி)
கேசினோ (சூதாட்ட விடுதி)

முதலைக் கண்ணீர் வடிக்கும் தளங்கள்

உள்ளே நுழைந்ததுமே ரூ.2,500 போனஸ்; லட்சக்கணக்கான ரூபாய் பெறுமான டூர்னிகள்; வி.ஐ.பி.க்களுக்குத் தனித்தளம்; ஐந்தாறு வகையான ரம்மி விளையாட்டுகள் என்று கவர்ச்சி அம்சங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. பணம் செலுத்த டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு, நெட் பேங்க்கிங் வசதிகள் என்று அனைத்தும் பக்காவாக உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அச்சச்சோ! அதிக நஷ்டம் ஏற்பட்டுவிட்டதா? பட்ஜெட்டை சரிசெய்யுங்கள்; அல்லது ஒரு பிரேக் எடுங்களேன். இல்லாவிட்டால் ஒரு பேட்டர்ன் டெஸ்ட் எடுத்து உங்கள் ஸ்டைலை இம்ப்ரூவ் செய்யுங்கள்; எல்லாவற்றுக்கும் எங்கள் கஸ்டமர் கேர் ஏஜண்ட் உங்களுக்கு உதவுவார்” என்று பணத்தை சுளையாக இழக்கும்போதெல்லாம் முதலைக் கண்ணீரும் வடிக்கத் தயங்குவதில்லை இந்தத் தளங்கள்.

ரூ.2,000 கோடி ரூ.4,000 கோடி...

இந்தியாவில் சுமார் 15 ரம்மி விளையாட்டுத் தளங்கள் உள்ளன. கொரோனா உலாவந்த இந்த ஏழு மாதங்களில் அவை 21% வளர்ச்சியைக் கண்டுள்ளன. 2000 கோடி ரூபாய்கள் புழங்கும் இந்தச் சந்தையில், இனி 4500 கோடி ரூபாய்கள் புழங்கும் வாய்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, `போக்கர்ஸ்டார்ஸ்’ எனப்படும் உலகளாவிய நிறுவனம் இந்திய சூதாட்டத்தளங்களில் கால்பதிக்க முனைந்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இது போன்ற காரணங்களால் இந்த சூதாட்டத் தளங்கள் விளம்பரத்திற்கு அதிக செலவு செய்து இன்னும் பலரை வளைக்க முற்படுகின்றன.

சிறு வயதில் குடும்பமாக ஆடிய ரம்மி விளையாட்டில் அனைவரையும் தோற்கடித்த பெருமை நினைவுக்கு வர, ``ஆடித்தான் பார்ப்போமே; நம்மை மீறி என்ன நடந்துவிடும்? வேலை நேரம் போக மற்ற நேரத்திலும் சம்பாதிக்க இயன்றால் நல்லதுதானே” என்று எண்ணி உள்ளே நுழைவோரின் கவனத்திற்கு...

திருடனாக்கும் சூதாட்டம்!

1. ஆந்திரப்பிரதேசத்தில் ஒரு வங்கி ஊழியர் இந்த விளையாட்டிற்காக 1.50 கோடி ரூபாய் கையாடல் செய்து ஜெயிலில் இருக்கிறார்.

2. 26 வயது போலீஸ் ஊழியர் ரூ.43,000/- கடன் வாங்கி விளையாடிய பணத்தை திரும்பக் கட்ட இயலாமல் தவிக்கிறார்.

3. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ரூ.20,000 திருடி விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறான்.

4. 12 வயதுச் சிறுவன் பெற்றோரின் ஐடியையும், கிரெடிட் கார்டையும் பயன்படுத்தி விளையாடி, ரூ.90,000 கோட்டை விட்டிருக்கிறான்.

5. சமீபத்தில் ஆறு பேர் இந்த விளையாட்டிற்கு அடிமையானதை சரிக்கட்ட இயலாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.

6. இந்த விளையாட்டைத் தடை செய்யக்கோரி மெட்ராஸ் ஹை கோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

7. ஆந்திரப்பிரதேசத்தில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுவிட்டது.

8. கர்நாடகாவிலும் தடை செய்யும் கோரிக்கை எழுந்துள்ளது.

Cards
Cards
Photo by Jarosław Kwoczała on Unsplash

பொழுதுபோக்கல்ல...

இது போன்ற செய்திகள் சரமாரியாக வரும்போதுதான், ``ஆஹா! இது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டல்ல; போதை விளைவிக்கக்கூடிய ஆபத்து” என்று நமக்கு உறைக்க ஆரம்பிக்கிறது. ``உலகெங்கும் நடக்கும் விஷயம்தானே; இதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லையே; போதை என்றால் அரசுகள் அனுமதிக்குமா” என்ற கேள்விகள் நம்முள் எழுவது இயல்புதான். இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் ஆன்லைன் சூதாட்டங்கள் ஒரு போதை என்பதை உணர்ந்து பலவித சட்டதிட்டங்கள் நிறைவேற்றி உள்ளன. லைசென்ஸ் இன்றி இது போன்ற தளங்கள் செயல்பட முடியாது.

அள்ளித் தரும் சூதாட்டம்

இந்தியாவில் சூதாட்டம் பற்றிய சட்டதிட்டங்கள் தெளிவின்றி உள்ளன. முடிவெடுக்கும் பொறுப்பு மாநில அரசுகள் கையில்தான். 13 மாநிலங்களில் இன்னும் லாட்டரிகூட தடை செய்யப்படவில்லை. கோவா, சிக்கிம், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் லைசென்சுடன் சூதாட்டக் களங்கள் செயல்பட அனுமதிக்கின்றன. சென்னை ஹைகோர்ட்டில் செயல்படும் மதுரை பென்ச்சும் கடந்த ஜூலை 24-ம் தேதி இதுபோன்ற சூதாட்டங்களைக் கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. எல்லாவற்றிற்கும் அரசையும், ஆணைகளையும் எதிர்பார்த்து காத்திருக்காமல் நம் பணத்தையும், அடுத்து வரக்கூடிய இளைய தலைமுறையையும் காப்பது நம் பொறுப்பு. அள்ளித் தருமா ஆன்லைன் சூதாட்டம்?

ஆம், நிச்சயமாக அள்ளித் தரும், லாபத்தை அல்ல, வேதனைகளை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு