Published:Updated:

``பெட்டிக்கடையா ஆரம்பிச்சது; இப்போ 7 கிளைகளா விரிஞ்சிருக்கு!" - அறந்தாங்கி சுந்தரம் பேக்கரியின் கதை

சுந்தரம் பேக்கரி வீரமணிகண்டன்
சுந்தரம் பேக்கரி வீரமணிகண்டன் ( ம.அரவிந்த் )

பெரிய தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லாத இந்த சுற்றுவட்டாரப் பகுதியில், இந்த பேக்கரி கிளைகள், 500-க்கும் மேற்பட்ட கிராமத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிக்கடை போல ஆரம்பிக்கப்பட்ட சுந்தரம் பேக்கரி, இன்று அதே பெயரில் அறந்தாங்கிக்குள் ஏழு கிளைகளாகப் பரந்துவிரிந்து பேக்கரித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறது. மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த சகோதரர்கள் நான்கு பேரும் ஒன்றாக இணைந்து இந்த பேக்கரிகளை நிர்வகிக்கின்றனர். நான்காவது தலைமுறையினரும் இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டனர்.

பெரிய தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லாத இந்த சுற்றுவட்டாரப் பகுதியில், இந்த பேக்கரி கிளைகள் 500-க்கும் மேற்பட்ட கிராமத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து வருகின்றன. இந்த பேக்கரியின் உரிமையாளர்களில் ஒருவரான வீரமணிகண்டனுடன் பேசினோம்.

சுந்தரம் பேக்கரி
சுந்தரம் பேக்கரி
படம்: ம.அரவிந்த் / விகடன்

``எங்களுக்கு பூர்வீகம் எல்லாம் அறந்தாங்கி பக்கதுல இருக்க பஞ்சாத்திங்கிற கிராமம்தான். எங்க தாத்தா விஸ்வநாதன் செட்டியார். இந்தியன் ஆர்மியில இருந்தவரு. ஆர்மியிலயிருந்து ஒய்வு பெற்றதற்குப் பிறகு ஊருக்கு வந்தவரு, ஏதாவது ஒரு தொழில் செய்யணும்னு சொல்லி, 1954-ல் பெரிய கடை வீதியில் சர்பத், பெட்டிக்கடை ஆரம்பிச்சாரு. கொஞ்ச நாளுக்குப் பிறகு சின்னதா குடில் போட்டு ரொட்டி தயாரிச்சு மிட்டாய் கடைகளுக்கு கொடுக்க ஆரம்பிச்சாரு. அடுத்த கொஞ்ச நாள்லயே பெரிய கடை வீதி பெட்டிக்கடையைப் பேக்கரி ஆக்கி சுந்தரம் பேக்கரின்னு பெயர் வச்சு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சாரு.

தாத்தாவுக்கு குகராமன், சுபாஷ் சந்திரன், அட்லிமுத்து, ஜவகர் சுந்தரம்னு மொத்தம் நான்கு பையன்கள். ஆரம்பத்துலயே பெரியப்பா குகராமன் தனியா பிரிஞ்சு போய் பேராவூரணியில விஸ்வம் பேக்கரின்னு கடையை ஆரம்பிச்சிட்டாரு. தாத்தா ஆரம்பிச்ச சுந்தரம் பேக்கரியை, தாத்தா, அப்பா சுபாஷ் சந்திரனோட ரெண்டு சித்தப்பாக்களும் சேர்ந்து பார்த்துக் கிட்டாங்க.

எங்கக் குடும்பத்தைப் பொறுத்தவரை, சின்னப் பிள்ளையாக இருக்கும்போதே பள்ளிக்கூட நேரம் போக மத்த நேரம் கடைக்கு வந்திடணுங்கிறது எழுதப்படாத விதி. அப்பா காலத்துலயும் சரி, எங்க காலத்திலயும் சரி, எங்க பிள்ளைங்க காலத்துலயும் சரி, அது தொடர்ந்துகிட்டு வருது.

அப்பாவோட ஒன்னா நின்ன சித்தப்பாக்கள் ஒரு கட்டத்துல பிரிஞ்சு தனியா பேக்கரியை ஏற்படுத்திக்கிட்டாங்க. அதற்கப்புறம் அப்பாவோட முழு நேரமா நாங்க கடைக்கு வர ஆரம்பிச்சோம். அப்பாவுக்கும் பக்கபலமா இருந்தோம். தாத்தா மாதிரி எங்க அப்பாவுக்கும் நான்கு பையன்கள். மூத்தவரு முத்துக்குமார்; நான் ரெண்டாவது பையன்; மூணாவது, விஸ்வநாதன், நாளாவது விஸ்வமூர்த்தி.

சுந்தரம் பேக்கரி கேக்
சுந்தரம் பேக்கரி கேக்
படம்: ம.அரவிந்த் / விகடன்

எங்க நாளு பேர்ல என்னைய மட்டும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படிக்க வச்சாரு அப்பா. 1984-ல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிட்டு புதுமையான தொழில்நுட்ப விஷயங்களைத் தொழிலுக்குள்ள கொண்டுவந்தேன். தொழில் நல்லா போயிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் முன்னேற்றம் அடஞ்சோம். 2001-ல் அப்பா திடீர்ன்னு மாரடைப்பு வந்து இறந்து போயிட்டாரு. அப்பாவோட இறப்பு எங்களை நிலைகுலைய வச்சிருச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பா இறக்கும்போது சுந்தரம் பேக்கரி மூன்று கிளைகளாக இருந்துச்சு. அப்போ நல்ல கட்டமைப்பை ஏற்படுத்தி வச்சிட்டுப் போயிட்டாரு. அப்போ பொருளாதார நெருக்கடி இல்லைன்னாலும், கடையை நேரடியாக நிர்வகிக்கிற பெரிய பொறுப்பு எங்ககிட்ட வந்துச்சு. நான்கு பேருமே தொடர்ந்து ஒற்றுமையோட நீடிப்போமாங்கிற ஒருவித பயம் மனசுக்குள்ள இருக்கத்தான் செஞ்சது. ஆனா, நாங்க நான்கு பேருமே தாத்தா ஆரம்பிச்ச இந்த பேக்கரியை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோகணும்னு ஒரே கொள்கையில இருந்ததால, 20 வருஷத்துக்கும் மேலாக ஒற்றுமையாக இருந்து, கடையை நடத்திக்கிட்டு இருக்கோம்.

வீரமணிகண்டன்
வீரமணிகண்டன்
படம்: ம.அரவிந்த் / விகடன்

அப்பாவுக்கு அப்புறம் பேக்கரியில சில புதுமையான விஷயங்களைக் கொண்டுவந்தோம். குறிப்பா, மக்களுக்கு எது தேவையின்னு தெரிஞ்சிக்கிட்டோம். படிச்ச படிப்பு அந்த நேரத்துல உபயோக இருந்துச்சு. காசு இருந்தாலும் தேவையில்லாத மெஷின்களை எல்லாம் வாங்கணும்னு நாங்க நினைக்கலை. ரொம்ப அவசியமா தேவைப்படுகிற மெஷின்களை மட்டும்தான் வாங்கினோம். மற்றபடி, எல்லாம் கையாலதான் செஞ்சோம். சாதா ரஸ்க், நெய் ரஸ்க்னு ரெண்டு புது ரொட்டிகளைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினோம். நெய் ரஸ்க்கு மக்களுக்கு கட்டுபடியாகிற விலைக்குள்ள கொடுத்ததால நல்ல வரவேற்பு கிடச்சது. நெய் ரஸ்க் எங்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோச்சுன்னுகூட சொல்லலாம்.

அடுத்து, காரம், ஸ்வீட்ன்னு ஏகப்பட்ட ரகங்களை அறிமுகப்படுத்தினோம். மிக்சர், காராசேவுகளில் பல வெரைட்டிகளையும் தயாரிக்க ஆரம்பிச்சோம். ஸ்வீட், நெய் ஸ்வீட்ன்னு பிரிச்சு அதுலயும் பல வெரைட்டிகளைக் கொடுத்தோம். ஸ்வீட்லயே எங்ககிட்ட 50-க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் இருக்கு. எல்லா வகையான பப்ஸ் வெரைட்டிகளையும் தயார் செஞ்சோம்.

பொதுவா, அறந்தாங்கியை வளர்ந்த கிராமம்னுதான் சொல்லணும். கடைக்கு வர்றவங்க பலரும் கூலி வேலை செய்றாங்க. அவங்களுக்குக் கட்டுபடி ஆகுற விலைக்குத்தான் கொடுக்கணும். குறைவான லாபத்தை முன்வைத்து விற்பனை செஞ்சோம். இப்பவும் அதே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறோம்.

லாபம் எங்களுக்குக் குறைவுன்னு, எந்த வகையிலும் தரத்தைக் குறைக்க மாட்டோம். தமிழகத்துல இருக்கிற பல முன்னணி பேக்கரிகளின் உணவுப் பொருள்களின் தரத்துக்கேற்ப நாங்களும் எல்லா உணவுப் பொருள்களையும் தரமாகவே கொடுக்கிறோம். ஆயில் தொடங்கி கோதுமை, மைதா என மூலப்பொருள்கள் ஒவ்வொண்ணும் அது தயாரிக்கப்படுற இடங்களுக்கு நேரடியாகப் போய் மொத்தமாக வாங்கிக்கிட்டு வர்றோம்.

சுந்தரம் பேக்கரி கார வகைகள்
சுந்தரம் பேக்கரி கார வகைகள்
படம்: ம.அரவிந்த் / விகடன்
உள்ளே நுழைந்ததும் சாம்பிள்கள்; அடுத்து `சைலன்ட்' ஷாப்பிங்; கலக்கும் கும்பகோணம் மளிகைக்கடை!

தரமான பொருள், எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் வைத்து நாங்க விக்கிறதால, எங்க பேக்கரியில தயாராகிற ஸ்வீட், காரம் வகைகளை வாங்க சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்கள்ல இருந்தும் வாடிக்கையாளர்கள் தேடி வர்றாங்க. மொத்த ஆர்டர்கள் எங்களுக்கு வந்து குவியுது. கேக் அயிட்டத்துலயும் பல வெரைட்டி தயாரிக்கிறதால, மாவட்டத்துல பெரும்பாலும் கேக் ஆர்டர்கள் எங்களுக்குத்தான் வரும்.

`ஒவ்வொரு படியாய் ஏறுனாதான் மாடியை அடைய முடியும், அகலக்கால் வச்சு ஏறுனா அடிபட்டு விழுந்திடுவோம்’னு எங்க அப்பா சொல்லித் தந்த பிசினஸ் ஃபார்முலா எங்க மனசுல ஆழமா பதிந்திருக்கு. அந்த பார்முலாவைத்தான் இப்பவும் பின்பற்றிக்கிட்டு இருக்கோம்.

இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய ரிஸ்கே, அன்றைக்குத் தயாராகும் உணவுப் பொருள்களை அன்றைக்கே விற்றுவிட வேண்டும் என்பதுதான். ஒரு நாள்ல விற்க முடியாட்டியும் கண்டிப்பாக, உணவுப்பொருள் காலாவதி ஆகுறதுக்கு முன்னாலயே அத பேக்கரியை விட்டே அகற்றிவிடுவது ரொம்ப முக்கியம்.

எங்களுக்கு இப்ப ஏழு கிளைகள் இருக்குது. இத்தனை வருஷ காலத்துல மக்களோட தேவை என்னென்னு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கோம். தேவையறிஞ்சுதான் உணவுப் பொருள்களைத் தயாரிப்போம். அதனாலயே எங்களுக்கு இதுவரை உணவுப் பொருள்கள் பெரியளவில் தேக்கமடையலை. அதனால நஷ்டமும் ஏற்படலை. எங்களைப் பொறுத்தவரை, லாபம் முக்கியமில்ல, வாடிக்கையாளர்களோட திருப்திதான் முக்கியம்.

எங்க வாடிக்கையாளர்களோட கனிவா பேசி, நிறைகுறைகளை தெரிஞ்சிக்கணும்ங்கிறதால அப்பப்ப நாங்க விற்பனையாளராகவும் மாறிடுவோம். முக்கியமா, எங்க பேக்கரியில மாஸ்டர், விற்பனையாளர்னு பிரிச்சு பேச மாட்டோம். நான் தொடங்கி எல்லாரும் எல்லா வேலையும் பார்ப்போம். காலையில நான் கேக் தயாரிக்கிற வேலைக்குப் போயிடுவேன். மதியம் நிர்வாகத்தைப் பார்த்துப்பேன். எங்க சகோதரர்களும் அப்படித்தான் எல்லா வேலையையும் ஒவ்வொருத்தரும் பிரிச்சிக்குவோம்.

சுந்தரம் பேக்கரி
சுந்தரம் பேக்கரி
படம்: ம.அரவிந்த் / விகடன்
`ஒருநாள் என் பெயரை எல்லோரும் உச்சரிப்பாங்க!' - கூலி வேலை டு செல்போன் ஷோரூம்; சாதித்த தொழிலதிபர்

``நல்லா பேக்கரி நடத்துறீங்க. சென்னை, கோவை மாதிரி ஊர்கள்ல பேக்கரி ஆரம்புச்சு கலக்கலாமே!’’ன்னு சில பேரு கேப்பாங்க. அறந்தாங்கியில இருக்க எல்லா கிளைகளும் எங்க குடும்ப உறுப்பினர்களோட நேரடிக் கண்காணிப்புல இருக்கு. அதுதான் முக்கியம்னு நாங்க நினைக்கிறோம். அதனால, இப்போதைக்கு மற்ற இடங்கள்ல கிளைகள் ஆரம்பிக்கும் ஐடியா இல்லை. இனிவரும் காலத்துல எங்களால நேரடியா கண்காணிக்க முடிகிற நிலை வந்தா, நிச்சயமா ஆரம்பிப்போம். தாத்தா ஆரம்பிச்ச இந்த நிறுவனத்தை எங்க எள்ளுப் பேரன்கள் கொண்டுபோகணுங்கிறதுதான் எங்க லட்சியம்’’ என்று பேசி முடித்தார் வீரமணிகண்டன்.

தலைமுறைகளைத் தாண்டி இந்த நிறுவனம் சிறக்கட்டும்!

அடுத்த கட்டுரைக்கு