Published:Updated:

சலூன் கடை டு ரோல்ஸ்ராய்ஸ்; `பில்லியனர் பார்பர்’ ரமேஷ் பாபுவின் கதை! #BusinessMasters - 15

Ramesh Babu
Ramesh Babu ( Photo: Facebook/ Ramesh Babu )

ஒருநாள் காலை, கடையைத் திறந்து வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார் ரமேஷ் பாபு. அவருடைய வேலையாட்கள் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனால், ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார்.

ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார், பி.எம்.டயிள்யூ, ஆடி... போன்ற கார்கள் வைத்திருப்பது பல பணக்காரர்களுக்கு அந்தஸ்தின், கௌரவத்தின் அடையாளம். ஒரு சாதாரண முடி திருத்தும் கலைஞர் இவற்றையெல்லாம் சொந்தமாக வைத்திருப்பது அவருடைய உழைப்பின், விடாமுயற்சியின், தன் திறமையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம்! அப்படி ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் `பில்லியனர் பார்பர்’ என அழைக்கப்படும், பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் பாபு.

மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ரமேஷ் பாபு. அவருடைய அப்பா ஒருவரின் வருமானத்தில்தான் அம்மா, சகோதரி, சகோதரன் அடங்கிய ஐவர் குடும்பம் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. ரமேஷ் பாபுவின் அப்பா, பெங்களூர் பிரிகேடு ரோட்டில் சின்னதாக ஒரு சலூன்கடை வைத்திருந்தார். சேமிப்பு என்று ஏதும் இல்லையென்றாலும் கஷ்டத்தோடு கஷ்டமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் ஒருநாள் இடி விழுந்தது. அப்போது ரமேஷ் பாபுவுக்கு 7 வயது. இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அன்றைக்கு ஏதோ ஒரு தேர்வு நடந்துகொண்டிருந்தது. நடுவே யாரோ வந்து அவரை அழைத்துப்போனார்கள். அவருடைய தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று வழியில் அவருக்கு சொல்லப்பட்டது. வீட்டில் அம்மாவும் சகோதரியும் அப்பாவின் உடலருகே கதறிக்கொண்டிருந்தார்கள். ஏதும் அறியாத வயது. அம்மாவை ஒட்டி அமர்ந்துகொண்டு அப்பாவின் உடலையே பார்த்துக்கொண்டிருந்தார் ரமேஷ் பாபு.

ரமேஷ் பாபு
ரமேஷ் பாபு

அதன் பிறகு, அவருடைய குடும்ப வாழ்க்கை அவ்வளவு சீராக இல்லை. குடும்பத்தின் வயிற்றுப் பாட்டுக்காக அம்மா வீட்டு வேலைக்குப் போனார். மாதம் 40-லிருந்து 50 ரூபாய் கிடைத்துக்கொண்டிருந்தது. அதில்தான் குழந்தைகளின் கல்விக்கட்டணம், துணிமணிகள், அன்றாடச் செலவு அத்தனையையும் பார்த்தாக வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என்பதே அந்தக் குடும்பத்துக்குப் பெரும்பாடாக இருந்தது. சலூன் கடையை நடத்த வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு வயதில்லை. எனவே ரமேஷின் அம்மா, சலூனை உறவினர் ஒருவருக்கு வாடகைக்குக் கொடுத்தார். வாடகையாக ஒரு நாளைக்கு 5 ரூபாய் கிடைத்தது.

நல்ல துணிமணி இல்லை; உணவில்லை; பண்டிகை தினங்களில் மட்டுமே ருசியான, முழுமையான சாப்பாடு. ரமேஷ் பாபுவின் டிரவுசர் கிழிந்திருக்கிறது என்பதற்காக பள்ளி பி.டி மாஸ்டர் அவரை வீட்டுக்கு அனுப்பிய சம்பவமெல்லாம் நடந்தது. வீட்டின் வறுமைச் சூழல் காரணமாக, 13 வயதில் படித்துக்கொண்டே பகுதி நேர வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார் ரமேஷ் பாபு. கிடைக்கிற வேலைகளையெல்லாம் பார்த்தார். வீடு வீடாக பேப்பர் போடுவது, பால் பாட்டில்களை சப்ளை செய்வது என்று சின்னச் சின்ன வேலைகள். கொஞ்சம் வருமானமும் வந்தது.

ஒருவழியாக 10-ம் வகுப்பை முடித்திருந்தார் ரமேஷ் பாபு. `அடுத்து என்ன செய்யலாம்... படிப்பை விட்டுவிடலாமா, மேற்கொண்டு தொடரலாமா?’ குழப்பம் மனதை அரித்தது. அப்பாவின் சலூன் இன்னும் வாடகைக்குத்தான் ஓடிக்கொண்டிருந்தது. முதலில் அதைக் கையகப்படுத்துவது என்று முடிவெடுத்தார். ஏற்கெனவே ஒருவர் நடத்திவந்த கடையை அப்படியே புதிதாக ஒருவர் தொடர்ந்தால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்; நம்பிக்கை பிறக்காது. கடையைப் புதுப்பித்தார். அதற்காக, வீட்டில் மிச்ச சொச்சமிருந்த பணத்தையெல்லாம் போட்டார். முடி திருத்தும் இரண்டு கலைஞர்களை வேலைக்கு அமர்த்தினார். ஆனால், அவர்களைச் சரியான நேரத்துக்குக் கடைக்கு வரவைப்பது கடினமாக இருந்தது. சலூன் வேலை பிறரைச் சார்ந்திருந்தால் எவ்வளவு கஷ்டம் என்பதை ரமேஷ் பாபு உணர்ந்த தருணம் அது.

Saloon (Representational Image)
Saloon (Representational Image)
Image by Rudy and Peter Skitterians from Pixabay

ஒருநாள் காலை, கடையைத் திறந்து வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார் ரமேஷ் பாபு. அவருடைய வேலையாட்கள் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனால், ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார். நேர்த்தியான தோற்றம். அமைதி தவழும் முகம். அதிர்ந்து வெளிவராத வார்த்தைகள். `தம்பி... இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கறது... நீயே முடிவெட்டி விடேன்...’ என்றார். `இல்லை... அது வந்து...’ என்று ரமேஷ் இழுக்க, `என்ன... புதுசா... அப்போ ரொம்பச் சரி... முடிவெட்ட முயற்சி பண்ணிப் பாரேன்...’ என்றார். களத்தில் இறங்கினார் ரமேஷ் பாபு. அன்றைக்கு ஒரு கட்டிங்குக்கு எவ்வளவு கிடைக்குமோ, அதைவிட இரு மடங்கு தொகையை அந்த வாடிக்கையாளர் அவருக்குக் கொடுத்துவிட்டுப் போனார். அவ்வளவு திருப்தி அவருக்கு. `இனி முடிதிருத்தும் வேலையை நாமே செய்துவிட வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கு வந்தார் ரமேஷ் பாபு.

ரமேஷ் பாபு படிப்பை விட்டுவிடத் தயாரானாலும், மேற்கொண்டு படிக்க வற்புத்தினார் அவருடைய அம்மா. டிப்ளோமா எலெக்ட்ரானிக்ஸ் கோர்ஸில் சேர்ந்தார். அதற்காகத் தொழிலையும் விட்டுவிடவில்லை. அதிகாலையில் எழுந்துவிடுவார் ரமேஷ் பாபு. 6 மணிக்கெல்லாம் கடையைத் திறந்துவிடுவார். 10 மணிக்குக் கல்லூரிக்குப் போக வேண்டும். அதற்கான நேரம் வரும்வரை கடையைத் திறந்து வைத்திருப்பார். பிறகு கிளம்பிவிடுவார். கல்லூரிவிட்டு மாலையில் நேரே வீட்டுக்கு வராமல் கடைக்கு ஓடுவார். அது இரவு 12 மணியோ 1 மணியோ வாடிக்கையாளர்கள் இருக்கும்வரை கடையைத் திறந்து வைத்திருப்பார். அந்த அனுபவத்தில் அவருக்குப் பல்வேறு வகையான வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்... ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள்... என விதவிதமான மனிதர்கள் அவருடைய கடையைத் தேடி வந்தார்கள். தொழில் கொஞ்சம் சூடுபிடித்தது. குடும்பச் சூழலும் நிம்மதிக்குத் திரும்பியிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சொந்தமாக ஒரு கார் வைத்துக்கொள்ள வேண்டும்.’

இந்த ஆசை நீண்டகாலமாகவே அவருக்கு இருந்தது. 1993-ம் ஆண்டு, ஒரு மாருதி (ஆம்னி காரை வாங்கினார். அதையும் மொத்தமாக ரொக்கம் கொடுத்து வாங்க அவரால் முடியவில்லை. அதுவரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்திருந்த சேமிப்பைக் கொடுத்தார்; அவருடைய தாத்தா பாரம்பர்யமான அவருடைய வீட்டை கார் லோனுக்காக அடகுவைக்க வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் இப்போது இருப்பதுபோல் தனியார் வங்கிகள் இல்லை. கர்நாடகா ஸ்டேட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்கிற வங்கிதான் இருந்தது. அதுவும் ஒரு காரை வாங்கிய பிறகுதான் கடன் கொடுக்கும். ரமேஷ் பாபு காரை வாங்கிவிட்டாரே தவிர அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. சொந்த உபயோகம் தவிர, பெரும்பாலான நாள்கள் சும்மாவே நின்றிருந்தது அந்த மாருதி. ஆனால், மாதம்தோறும் வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணையோ அவரை மிரட்டியது... 6,800 ரூபாய். ஒரு முடிதிருத்தும் கலைஞரால் மாதத்துக்கு 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் வரை சம்பாதிக்க இயலும். ஆனால், ஒரு கார் வாங்கியதற்கான தவணையே 6,800 ரூபாய் என்கிறபோது என்ன செய்வது? அதற்கான தீர்வைத் தேடிக்கொண்டே இருந்தார். தீர்வும் கிடைத்தது.

`இவர் கதை `ஸ்லம்டாக் மில்லியனர்’க்கும் மேல!' - தடைகள் தகர்த்து சாதித்த கல்பனா சரோஜ் #BusinessMasters

ரமேஷ் பாபுவின் அம்மா வேலை பார்த்த ஒரு வீட்டின் உரிமையாளர் நந்தினி. `அக்கா’ என்றுதான் அவரை அழைப்பார் ரமேஷ் பாபு. அவர்தான் அந்த யோசனையைச் சொன்னார். `உன் மாருதி வேன் சும்மாதானே கிடக்குது... அதை ஏன் எங்க கம்பெனிக்கு வாடகைக்கு விடக் கூடாது?’ அவர் வேலை பார்த்த நிறுவனம் இன்டெல் கார்ப்பரேஷன். அந்த யோசனை ரமேஷ் பாபுவைக் கவர்ந்தது. மாருதி வேனை இன்டெலுக்கு வாடகைக்கு விட்டார். இப்படி கார்களை வாடகைக்கு விடலாம் என்று அவருக்குக் கற்றுத் தந்தவரே நந்தினி என்கிற அந்தப் பெண்மணிதான்.

2004-ம் ஆண்டு, மேலும் சில கார்களை வாங்கினார் ரமேஷ் பாபு. அத்தனையையும் பெரிய நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டார். தொழிலாளர்கள், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை தேவையான இடங்களுக்கு இட்டுச் சென்று திரும்பக் கொண்டுவிடும் வேலை. அந்த பிசினஸ் அமர்க்களமாக முன்னேறியது. `ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’ என்ற பெயரில் அவருடைய கார்கள் வாடகைக்குப் பறந்தன. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, அவர்களின் தகுதிக்கேற்ற கார்களையும் தான் வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார் ரமேஷ் பாபு. 2004-ம் ஆண்டு விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கினார். அந்த நேரத்தில் அதன் விலை 42 லட்சம். ஆனால், அதையும் வாடகைக்கு விட முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால் ரிஸ்க் எடுக்க அவர் தயங்கவில்லை.

இடையில் சிங்கப்பூருக்குப் போய், ஒரு பிரபல நிறுவனத்தில் ஹேர் ஸ்டைலிங் கோர்ஸில் சேர்ந்து அதையும் கற்றுக் கொண்டார். திரும்பி வந்தார். தொழிலில் கவனம் செலுத்தினார். 2011-ம் ஆண்டு, வங்கிக் கடன் உதவியுடன் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கினார். உடனிருந்தவர்களெல்லாம் `இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா?’ என்று கேட்டபோது ரமேஷ் பாபு சொன்னார்... `நீங்கள் பிசினஸ் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா... அப்படியென்றால் அதற்கான ரிஸ்கையும் நீங்கள் எடுத்துதான் ஆக வேண்டும்.’

Ramesh babu
Ramesh babu
Photo: Facebook/ Ramesh Babu
வாழ்க்கையை மாற்றிய வாஷிங் பவுடர் `நிர்மா’ - கர்சன்பாய் படேலின் வெற்றிக் கதை! #BusinessMasters - 14

இன்றைக்கு ரமேஷ் பாபுவிடம் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபிள்யூ, மெர்சிடிஸ், ஜாகுவார், ஆடி... என அத்தனை லேட்டஸ்ட் மாடல்களும் அவரிடம் உண்டு. சுஸுகி இன்ட்ரூடர் என்கிற 16 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள பைக்கையும் வைத்திருக்கிறார். அவர் புரிந்த சாதனைக்காக எத்தனையோ விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுவிட்டார். ஆனாலும் அவர் தன் ஆதாரத் தொழிலை விடவில்லை. இன்றைக்கும் வார இறுதி நாள்களில் தன் சலூனில் இருக்கிறார். ஒரு கட்டிங்குக்கு 150 ரூபாய் பணம் பெறுகிறார். அவர் மட்டுமல்ல... தன் மகனுக்கும் மகள்களுக்கும்கூட முடிதிருத்தும் கலையைக் கற்றுத் தந்திருக்கிறார். மெர்சிடிஸ் மேபேச் 600 எஸ்600 காரையுமே வைத்திருந்தாலும்கூட, இன்றைக்கும் அவர் முதன்முதலில் வாங்கிய மாருதி (ஆம்னி) வேனை பத்திரமாக வைத்திருக்கிறார். பெங்களூரிலும் டெல்லியிலும் வெற்றிகரமாக அவருடைய கார் ரென்ட்டால் பிசினஸ் நடந்துகொண்டிருக்கிறது. வெற்றியை அடைய ஒரு வழியை மட்டுமல்ல; மாற்று வழியையும் முயலலாம் என்பதற்கு உதாரணம் ரமேஷ் பாபு.

- நிறைவுற்றது.
அடுத்த கட்டுரைக்கு