Published:Updated:

மார்ட்டின் லூயிஸ்... பத்திரிகையாளர் பெரும் பணக்காரர் ஆனது எப்படி? #BusinessMasters - 8

Martin Lewis
Martin Lewis ( Photo: Twitter / MartinSLewis )

நாம் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதன் அடியாழம் வரை போய் சிரத்தையோடு செயலாற்றினால் அதற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு வாழும் உதாரணம் மார்ட்டின் லூயிஸ்!

அவர் ஒரு பத்திரிகையாளர். அவர் எழுதும் பத்தி எழுத்துக்கும், கட்டுரைகளுக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள். அவர் எழுதுவதின் அடிப்படை ஒன்றுதான். சேமிப்பு. `எப்படிச் சேமிப்பது?’ என்கிற இந்த ஒரேயோர் அடிநாதம்தான். இதை வைத்துக்கொண்டு அவர் சாதித்ததும் சம்பாதித்ததும் ஏராளம்.

கட்டுரைகள் எழுதுவார்; தொலைக்காட்சிகளில் தோன்றி ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வார்; அவருடைய பிரத்யேக இணயதளத்துக்கு வரும் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் தருவார்... அவ்வளவுதான்.

இன்றைக்கு அவர் ஒரு தொழில்முனைவோர்; கோடீஸ்வரர். ஒரு பத்திரிகையாளரால்கூட பணக்காரர் ஆகமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அவர், மார்ட்டின் லூயிஸ் (Martin Lewis).

Money (Representational Image)
Money (Representational Image)
Photo by Karolina Grabowska from Pexels

நாம் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதன் அடியாழம் வரை போய் சிரத்தையோடு செயலாற்றினால் அதற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு வாழும் உதாரணம் மார்ட்டின் லூயிஸ். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவும் கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள், இமெயிலில் வரும் அந்த நியூஸ் லெட்டருக்காகக் காத்திருக்கிறார்கள். அதாவது 1.3 கோடிப் பேர்.

அந்த நியூஸ் லெட்டரை அனுப்புபவர் மார்டின் லூயிஸ். அதன் பெயர் `மணி சேவிங் எக்ஸ்பர்ட்’ஸ் மணி டிப்ஸ்.’ ஆரம்பத்தில் பர்சனல் ஃபைனான்ஸ் ஜர்னலிஸ்ட்டான லூயிஸ், தன் நண்பர்களுக்கும் விரும்பிக் கேட்பவர்களுக்கும் மட்டுமே நிதி குறித்த ஆலோசனைகளை இமெயிலில் அனுப்பிக் கொண்டிருந்தார். விளம்பரங்களோ, படங்களோ இருக்காது; வெறும் வார்த்தைகள்; சில ஆயிரம் வார்த்தைகளில் நியூஸ் லெட்டர் எழுதப்பட்டிருக்கும். இன்றைக்கும் அதே நியூஸ் லெட்டர்தான்.

2003-ம் ஆண்டு `மணி சேவிங் எக்ஸ்பர்ட் டாட் காம்’ என்ற அந்த இணையதளத்தை வெறும் 100 யூரோவுக்கு வடிவமைத்தார் லூயிஸ். 2012-ம் ஆண்டு மணி சூப்பர்மார்க்கெட் டாட் காம் என்ற நிறுவனத்துக்கு அந்த இணையதளத்தை அவர் விற்றபோது அதன் மதிப்பு 87 மில்லியன் யூரோ. அதனால்தான் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை அவரைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டது... `இதுவரை உலகம் பார்த்திராத வெற்றிகரமான பத்திரிகையாளர்.’

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் 1972-ம் ஆண்டு பிறந்தார் லூயிஸ். மிக எளிமையான, அழகான குடும்பம். அப்பா, ஓர் ஆசிரியர். வடமேற்கு இங்கிலாந்திலுள்ள செஷையர் என்ற இடத்திலுள்ள யூதக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியின் தலைமையாசிரியராக அவர் நியமிக்கப்பட, லூயிஸின் குடும்பம் அங்கே இடம்பெயர்ந்தது. குழந்தைப் பருவத்திலேயே ஒரு கார் விபத்தில் தன் தாயைப் பறிகொடுத்தார் லூயிஸ். அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தார். பின்னாளில் குழந்தைகளுக்கான அறக்கட்டளையை ஆரம்பித்து நடத்த, இளமைப்பருவ வாழ்க்கைதான் அவருக்கு உந்துதலாக இருந்தது.

Investment
Investment

பள்ளிப்படிப்பை முடித்தவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில், சட்டம் பயின்றார். பிறகு, கார்டிஃப் பல்கலைக் கழகத்தில் இதழியல் (Journalism) படிப்பில் சேர்ந்தார். சக மாணவர்களெல்லாம் அரசியல், குற்றம், புலனாய்வு என்று எது எதன் பின்னாலோ ஓடிக்கொண்டிருக்க, லூயிஸுக்கு நிதி, பணம் இவற்றில்தான் ஆர்வம் மிகுதியாக இருந்தது. படிக்கும் காலத்திலேயே பிரபல நிதி வல்லுநர்கள் எழுதிய கட்டுரைகளைத் தேடித் தேடிப் படித்தார். தன் முழு கவனத்தையும் அதில் செலுத்தினார்.

கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் பிராட்காஸ்ட் ஜர்னலிசத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்ததும், `பிபிசி ரேடியோ ஃபைவ்’-ல் பிசினஸ் நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்பாளர் ஆனார். அவருக்குப் பிடித்த நிதி சார்ந்த வேலை என்றாலும் அவரால் நீண்ட காலத்துக்கு அதனோடு ஒட்ட முடியவில்லை. பிறகு `பிபிசி ரேடியோ 4’-ல் எடிட்டராகக் கொஞ்ச நாள் வேலை. இது போதாது; இது நமக்கான இடம் இல்லை என்பது திரும்பத் திரும்ப மனதுக்குள் வந்துகொண்டேயிருக்க, அங்கிருந்தும் இடம் மாறினார்.

அடுத்து அவர் போய்ச் சேர்ந்த இடம் `சிம்ப்ளி மணி’ என்கிற சாட்டிலைட் சேனல். வேலை பிடித்திருந்தது; அங்கேதான் அவருக்கு `மணி சேவிங் எக்ஸ்பர்ட் டாட் காமு’க்கான விதையும் விழுந்தது. ஆனால், அந்த இடமும் அவருக்கு ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அந்த சேனலைப் பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவர, ஒருகட்டத்தில் சேனல் இழுத்து மூடப்பட்டு, லூயிஸையும் சேர்த்து 51 பணியாளர்கள் வேலை இழந்தார்கள்.

Martin Lewis
Martin Lewis
Photo: Twitter / MartinSLewis
670 ரூபாய் சம்பளம் டு கம்பெனிக்கே CEO... L&T நாயக்கின் வெற்றிக்கதை! #BusinessMasters - 4

வித்தை தெரிந்தவனுக்கு உலகின் எந்த மூலையிலும் வாய்ப்பு காத்திருக்கும். அது லூயிஸ் விஷயத்தில் மிகச் சரியாக நடந்தது. அவர் போன இடங்களிலெல்லாம் வரவேற்பு. `சண்டே எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் சேமிப்பு, பணம் தொடர்பான டிப்ஸ்களை வழங்கும் `டீல் ஆஃப் தி வீக்’ என்ற பத்தியை எழுதத் தொடங்கினார். சேனல் 5 தொலைக்காட்சியில், தினமும் `மணி சேவிங் எக்ஸ்பர்ட்’ என்ற பெயரில் ஸ்லாட் பிடித்து நிதி ஆலோசனை வழங்க ஆரம்பித்தார். மறுபடியும் பிபிசியில் வேலை, ஐ.டிவி-யில் `மேக் மி ரிச்’ (என்னை பணக்காரனாக்குங்கள்) புரோக்ராம் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் சேனல் 5 தொலைக் காட்சியில் அவர் வழங்கிய புரோக்ராமைப் பணம் கட்டித்தான் பார்க்க வேண்டும் என்கிற அளவுக்கு அந்த நிகழ்ச்சி உச்சத்தில் இருந்தது. பணம் செலுத்திப் பார்ப்பதற்கும் அவருடைய ரசிகர்கள் தயாராக இருந்தார்கள்.

5 நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றிய லாரா லெவிங்க்டன் என்பவரை மணந்துகொண்டார் லூயிஸ். இந்தத் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இன்றைக்கும் பிபிசி ரேடியோ, ஐ.டிவி-யிலும் நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருக்கிறார். எல்லா சந்தர்ப்பங்களிலும் லூயிஸ் ஒன்றை கறாராகக் கடைப்பிடித்தார். அது எல்லாத் தரப்பு மக்களுக்குமான பணம், சேமிப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது. அத்துடன், கொஞ்சம்கூட தொய்வில்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது.

உலகில் எல்லோருக்குமே பணத் தேவை இருக்கிறது. பலரிடம் பணம் இருந்தாலும் அதைப் பெருக்குவதற்கான வழி தெரியாமல் இருக்கிறார்கள்; சிலர், கை நிறைய சம்பாதித்தாலும் அதில் கொஞ்சத்தைக்கூட சேர்த்து வைக்கும் வழிமுறை தெரியாமல் இருக்கிறார்கள்; சிலருக்கு எப்படிப் பணம் சம்பாதிப்பதென்பதே தெரியவில்லை. அனைவருக்குமான வழிகாட்டியாக இருக்கிறார் மார்ட்டின் லூயிஸ். அண்மையில், இந்த லாக்டௌன் காலத்தில், வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு எப்படி வரிச்சலுகை பெறலாம் என்பது போன்ற ஆலோசனையை எல்லாம் தந்துகொண்டிருக்கிறார். 2015-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனின் ஒரு கணக்கெடுப்புபடி, 71% பேர் அவரை முழுமையாக நம்புகிறார்கள்; அவர் ஆலோசனையைக் கடைப்பிடிக்கிறார்கள். லூயிஸ் அடைந்திருக்கும் வெற்றி ஒரு வழக்கமான பத்திரிகையாளர் அடையும் வெற்றியைவிட கூடுதலானது; அபாரமானது.

Investment
Investment
Image by Charles Thompson from Pixabay
₹2000 கோடி டேர்ன் ஓவர்; விதை போட்ட மேப்... VKC சாம்ராஜ்யம் வளர்ந்தது எப்படி? #BusinessMasters - 6

எதற்கும் உத்தரவாதமே இல்லாத காலத்தில் வாழ்ந்துவரும் நமக்கு ஒரு குறைந்தபட்ச, நிலையான எதிர்காலத்துக்கு அவருடைய நிதி தொடர்பான ஆலோசனைகள் வழிகாட்டுகின்றன. பணத்தைச் சேமிப்பது யாருக்கும் புதிதல்ல. ஆனால், இன்றைய சூழலில் அது அவசரத் தேவை. இன்றைக்கும் பல பத்திரிகைகளில் சேமிப்பது தொடர்பான பத்திகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறர். லூயிஸ் தோன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 40 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அவருடைய `மணி மேக்கிங் எக்ஸ்பர்ட் டாட் காம்’ இணையதளத்தை மணி சூப்பர் மார்க்கெட் டாக் காமு-க்கு விற்றுவிட்டாலும், இன்றைக்கும் லூயிஸ்தான் அதன் பொறுப்பாசிரியர். அவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகையைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்துவிடுகிறார்.

பத்திரிகையாளரும் தன் திறமையால் தொழில்முனைவோர் ஆக முடியும், தான் சார்ந்த துறையில் கணிசமாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கிறார் மார்ட்டின் லூயிஸ். இன்றைக்கு அவருடைய சொத்து மதிப்பு 128 மில்லியன் யூரோவுக்கும் மேல் என்கிறது ஒரு புள்ளிவிவரம்!

- (பாடம் எடுப்பார்கள்)
அடுத்த கட்டுரைக்கு