Published:Updated:

இத்தாலியில் கிடைத்த ஐடியா, சின்ன வயது பாடம்... `ஸ்டார்பக்ஸ்’ ஹோவர்ட் ஷுல்ட்ஸ் சாதித்தது எப்படி? - 9

ஹோவர்ட் ஷுல்ட்ஸ்
ஹோவர்ட் ஷுல்ட்ஸ்

பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை அவர்களின் இளமைக்காலம்தான் புடம்போட்டிருக்கிறது. அதற்கு `ஸ்டார்பக்ஸ்' ஹோவர்ட் ஷுல்ட்ஸும் விதிவிலக்கல்ல! #BusinessMasters

எதையுமே பாசிட்டிவாக அணுகும் ஒருவர் ஒரு தொழிலை முன்னெடுக்கும்போது, இரண்டு விஷயங்களில் அவர் மனப்பான்மை இப்படி இருக்கும்... ஒன்று, ரிஸ்க் எடுக்கத் தயங்க மாட்டார். இரண்டு, `இது இப்படித்தான்; அது அப்படித்தான்’ என்று எந்தச் சமாதானத்தையும் தனக்குள் சொல்லிக்கொள்ளாமல், புதிய பிசினஸில் ஏற்படக்கூடிய அத்தனை ரிஸ்க்குகளையும் நிதானமாக அலசி ஆராய்வார். அதனாலேயே அவர் தொழில் நிலைத்து நிற்கும். புகழையும் செல்வத்தையும் வாரிக்கொடுக்கும். அந்த மனப்பான்மை ஹோவர்ட் ஷுல்ட்ஸ்-க்கு (Howard Schultz) இருந்தது. அதுதான் `ஸ்டார்பக்ஸ்’ (Starbucks) நிறுவனம் உலகப் புகழ் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது.

Starbucks Cups
Starbucks Cups
Image by Eak K. from Pixabay

பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை அவர்களின் இளமைக்காலம்தான் புடம்போட்டிருக்கிறது. அதற்கு ஹோவர்ட் ஷுல்ட்ஸும் விதிவிலக்கல்ல. நியூயார்க்கிலுள்ள புரூக்ளினில் 1953-ம் ஆண்டு ஒரு யூதத் தம்பதிக்குப் பிறந்தார். பிழைப்புக்காக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர்கள் அவரின் முன்னோர். 1892-ம் ஆண்டு அவருடைய தந்தைவழி கொள்ளுத் தாத்தா கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தபோது அவர் கைவசம் இருந்தது வெறும் 10 டாலர்.

நியூயார்க் நகரத்தின் கடைக்கோடியில் இருக்கும் கனார்சி (Canarsie) பகுதியில் இருந்தது ஹோவர்ட் ஷுல்ட்ஸின் வீடு. அதை வீடு என்றுகூடச் சொல்ல முடியாது. மிகவும் நெரிசலான பகுதியில் அரசுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு சின்ன அபார்ட்மென்ட். அவரோடு உடன்பிறந்தவர்கள் இருவர். அப்பாவும் அம்மாவும் பள்ளிப் படிப்பைக்கூட முழுவதும் முடித்திருக்காதவர்கள்.

அப்பா ஃபிரெட் ஷுல்ட்ஸ் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவர். போர் முடிந்து திரும்பியதும் சில காலம் ட்ரக் டிரைவராக வேலை பார்த்தார்; கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்தார்; பெரும்பாலும் கூலி வேலை. குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது. ஷுல்ட்ஸுக்கு, அவர் அப்பாவைப் பிடிக்கும்.

அது ஒரு பனிக்காலம். ஹோவர்ட் ஷுல்ட்ஸுக்கு ஏழு வயது. அப்பா ஃபிரெட் அப்போது டயப்பர் உட்பட சில துணிமணிகளை டெலிவரி செய்யும் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள் ஒரு பனிக்கட்டியின் மேல் தடுக்கி விழுந்து இடுப்பிலும், கணுக்காலிலும் பலத்த அடி. எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. பிறகென்ன... ஷூல்ட்ஸின் அப்பாவுக்கு வேலை போய்விட்டது. ஹெல்த் இன்ஷூரன்ஸ், பணி இழப்பீடு... ஒன்றும் கிடையாது. அதுமட்டுமல்ல, அந்தக் குடும்பத்தில் சேமிப்பு என்று ஒரு நயா பைசா கிடையாது. இடிந்துபோனது குடும்பம்.

அம்மா மட்டும்தான் ஷுல்ட்ஸுக்கு ஆறுதலாக இருந்தார். `கவலைப்படாதடா கண்ணு. நீ உன் சொந்தக் கால்ல நிப்பே... உன் வாழ்க்கையை நல்லா அமைச்சுக்குவே...’ என்று அடிக்கடி சொல்வார். ஏழாவது தளத்திலிருந்த அவர் வீடு நரகமாயிருந்தது. வாடகை, எலெட்ரிசிட்டி பில், மளிகைச் சாமான்கள் அத்தனைக்கும் பற்றாக்குறை. இதனால் குடும்பத்தில் எப்போதும் கோபம், சண்டை. அதனாலேயே பெரும்பாலும் வீட்டிலேயே இருக்க மாட்டார் ஷுல்ட்ஸ். மாடிப்படியில் வந்து அமர்ந்துகொள்வார். டீன்ஏஜ் பருவத்தில் விளையாட்டில் கவனம் சென்றது. பெரும்பாலான நேரத்தில் கிரவுண்டிலேயே பழியாகக் கிடந்தார். பேஸ்கட்பால், ஃபுட்பால் என்று ஆடித் தீர்த்தார்.

Starbucks
Starbucks
Image by oberaichwald from Pixabay

கனார்சியில் பள்ளிப் படிப்பு முடிந்தது. அடுத்து என்ன செய்வது? நார்த்தர்ன் மிச்சிகன் யுனிவர்சிட்டியில் பி.ஏ கம்யூனிகேஷன்ஸ் படிக்க விண்ணப்பம் போட்டார். அவர் விளையாட்டு வீரர் அல்லவா? எப்படியும் ஃபுட்பால் ஸ்காலர்ஷிப் கிடைத்துவிடும். அதைக்கொண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிடலாம் என்பது ஷுல்ட்ஸின் எண்ணம். இடம் கிடைத்தது. ஆனால், ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. வீட்டிலிருந்து அவர் படிப்புக்கு யாராலும் உதவ முடியாத நிலை. ஆனாலும் படிப்பைவிட ஷுல்ட்ஸுக்கு மனமில்லை. கல்விக்கடன், பகுதி நேர வேலை என என்னென்னவோ செய்து சம்பாதித்து படித்தார்.

1975-ம் ஆண்டு பட்டம் பெற்றார். அவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி! அவர் பட்டம் வாங்கியபோது அவருடைய பெற்றோரால் கூட அந்த நிகழ்வுக்கு வர முடியவில்லை. பட்டம் பெற்றாகி விட்டது... வேலை? அமெரிக்காவில் வேலை கிடைப்பது மிக அரிதாக இருந்த காலம் அது. எப்படியோ அலைந்து திரிந்ததில் ஒரு வேலை கிடைத்தது. சேல்ஸ்மேன் வேலை. அலுவலக உபகரணங்களை ஒவ்வோர் அலுவலகமாகச் சென்று பேசி, விற்கும் வேலை. ஷூல்ட்ஸுக்கு இயல்பாகவே ஒரு பழக்கம் உண்டு. எந்த வேலையாக இருந்தாலும் விரும்பிச் செய்வார். எதையும் நேர்த்தியாக, தெளிவாக, உரிய முறையில் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்த்தால் அவர்கள் வாங்கிக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை அவருக்கு அந்த வயதிலேயே வந்துவிட்டிருந்தது. அதோடு மனிதர்களோடு பேசுவது அவருக்குப் பிடிக்கும். அதனால்தான் அந்தக் கடினமான வேலையில்கூட அவரால் நிலைத்திருக்க முடிந்தது. கிடைக்கும் சம்பளத்தில் பாதிப் பணத்தை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். அந்த ஒரு வேலை மட்டுமல்ல, கிடைக்கிற வேலையையெல்லாம் செய்ய ஆரம்பித்தார். ஜெராக்ஸ் சேல்ஸ்மேன், பிறகு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான பி.ஏ.ஐ பார்ட்னர்ஸில் பணி, பிறகு அதன் துணை நிறுவனமான ஹாம்மர்பிளாஸ்ட்டில் ஜெனரல் மேனேஜர் எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டும் இருந்தார்.

ஒரு மாலைப் பொழுதில், கடற்கரையில் ஷெரி (Sheri) என்பவரைச் சந்தித்தார் ஷுல்ட்ஸ். பார்த்ததுமே காதலில் விழுந்தார். ஷெரியின் அழகு, நகைச்சுவை கலந்த பேச்சு, நடை உடை பாவனை அத்தனையும் ஷுல்ட்ஸுக்குப் பிடித்துப்போனது. ஷெரிக்கும் அவரைப் பிடித்திருந்தது. ஷெரி, ஓஹியோவிலுள்ள ஒரு சிறு டவுனில் வளர்ந்தவர். எளிமையான குடும்பப் பின்னணி. 1982-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஹாம்மர்பிளாஸ்ட்டும் சமையலுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம்தான். ஷுல்ட்ஸ் அந்த நிறுவனத்தில், அமெரிக்காவிலுள்ள காபி மெஷின்களுக்கான உபரிப் பொருள்களை சப்ளை செய்யும் பொறுப்பில் இருந்தார். வாஷிங்டன்னுக்கு அருகேயுள்ள சியாட்டிலில் (Seattle) ஒரு காபி நிறுவனத்திலிருந்து ஒரு ஆர்டர். காபிகோன் ஃபில்டர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். ஆர்டர் பெரியதாக இருந்ததால், ஷுல்ட்ஸை நேரடியாகப் போய்ப் பேசச் சொல்லி அனுப்பியது நிறுவனம். அந்தப் பயணம்தான் ஷுல்ட்ஸின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Starbucks Logo
Starbucks Logo
Image by Dénnis Kendall from Pixabay

சியாட்டிலில் இருந்த அந்த நிறுவனத்தின் பெயர் `ஸ்டார்பக்ஸ்.’ அதன் நிறுவனர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஷுல்ட்ஸுக்குக் கிடைத்தது. ஷுல்ட்ஸின் பேச்சும் துறுதுறுப்பும், விற்பனைத் திறமையும் அவர்களை வியக்க வைத்தன. இரண்டு, மூன்று சந்திப்புகளுக்குப் பிறகு, அவர்கள் நேரடியாகவே கேட்டுவிட்டார்கள். `எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துகொள்கிறீர்களா?’

யோசித்தார் ஷுல்ட்ஸ். அன்றைய சூழலில் அவருக்கும் மாற்றம் தேவையாக இருந்தது. ஒப்புக்கொண்டார். ஸ்டார்பக்ஸின், ரீடெயில் ஆபரேஷன்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுக்கு டைரக்டரானார். பிறகு மனைவியை அழைத்துக்கொண்டு சியாட்டிலுக்கு இடம்பெயர்ந்தார். அன்றைக்கு சியாட்டிலுக்கு அந்தக் குடும்பம் கிளம்பியபோது அவர்களின் உடைமைகள்... ஒரு கார் கொள்ளுமளவுக்கான பொருள்கள், அவர்களுடைய செல்ல நாய் ஜோனாஸ் அவ்வளவுதான்.

எந்த வேலையையும் ரசித்துச் செய்தால் அலுப்பு தோன்றாது; வேலையையும் நேர்த்தியாகச் செய்து முடிக்க முடியும். இது ஷுல்ட்ஸுக்கு பால பாடம். ஸ்டார்பக்ஸ் வேலையைச் சிக்கெனப் பற்றிக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாகத் தன் இருப்பை நிறுவனத்தில் தக்கவைத்தார். எந்தப் புதிய ஆர்டர் என்றாலும், நிறுவனமும் அவரையே அனுப்பி வைத்தது. அப்படி ஒரு பயணம். இத்தாலிலுள்ள மிலன் நகருக்குக் கிளம்பிப் போனார் ஷுல்ட்ஸ். அங்கிருந்த காபி ஷாப்களைப் பார்த்தார். பிரமித்துப்போனார்.

சியாட்டிலில் இருந்த ஸ்டார்பக்ஸும் காபி ஷாப்தான். ஆனால், அங்கே யாருக்கும் உட்காருவதற்குக்கூட சீட் இருக்காது. காபி வாங்கிக் குடித்துவிட்டுப் போகலாம், அவ்வளவுதான். ஆனால், இத்தாலியில் ஒவ்வொரு தெருவிலும் காபி ஷாப்கள் இருந்தன. அவை வெறும் காபி அருந்தும் இடங்களாக இல்லை. பல்வேறு மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும், மணிக்கணக்கில் அமர்ந்து பேசிக்கொள்ளும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும், பிசினஸ்களைப் பேசி முடிக்கும் இடங்களாக இருந்தன.

மார்ட்டின் லூயிஸ்... பத்திரிகையாளர் பெரும் பணக்காரர் ஆனது எப்படி?  #BusinessMasters - 8

ஊர் திரும்பினார் ஷுல்ட்ஸ். ஸ்டார்பக்ஸ் நிறுவனர்களிடம் தான் பார்த்ததைச் சொன்னார். அதேபோல, ஸ்டார்பக்ஸையும் காபி ஷாப் ஆக்கலாம் என்று யோசனை சொன்னார். ஆனால், அவர்கள் அதை ஏற்கவில்லை. `அது இத்தாலிக்கு வேணா சரியா இருக்கலாம். அமெரிக்காவுல அதெல்லாம் வேலைக்கு ஆகாது’ என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்கள். பிறகு, கொஞ்ச காலம்தான்... ஸ்டார்பக்ஸிலிருந்து வெளியேறினார் ஷுல்ட்ஸ். மனது முழுக்க இத்தாலியைப் போன்ற ஒரு காபி ஷாப், அதில் எஸ்பிரஸ்ஸோ காபி, விதவிதமான பானங்கள், மனநிறைவோடு ஷாப்புக்கு வந்து போகும் வாடிக்கையாளர்கள் இப்படி ஒரு காட்சியே வந்துபோனது. ஆனால், அப்படி ஒன்றை ஆரம்பிக்க அவரிடம் பணமில்லை.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம். ஷெரியின் சம்பளப் பணத்தில்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. புதிய பிசினஸுக்கு நிதி திரட்ட அலைந்துகொண்டிருந்தார் ஷுல்ட்ஸ். 242 பேரிடம் முதலீட்டுக்கு உதவி கேட்டார். அவர்களில் 217 பேர் சொன்ன பதில் `இல்லை.’ ஆனாலும், சிலர் கைகொடுக்க முன்வந்தார்கள். ஆச்சர்யமாக ஸ்டார்பக்ஸ் நிறுவனமே 1,50,000 டாலர் முதலீடு செய்ய முன்வந்தது. அது ஷுல்ட்ஸுக்கு சவால்கள் நிறைந்த, மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்திய காலம். அன்றைய சூழலில் அமெரிக்கர்களுக்கு எஸ்பிரஸ்ஸோ காபியை அறிமுகப்படுத்தி வியாபாரம் செய்வதென்பது அதிக ரிஸ்கை ஏற்படுத்தும் ஒன்று. ஆனாலும், துணிந்து இறங்கினார் ஷுல்ட்ஸ். `ஐ.எல் ஜியோர்னேல் காபி’ (IL Geornale Coffee) என்ற பெயரில் காபி ஷாப்பைத் தொடங்கினார். வாடிக்கையாளர்கள் அமர்ந்து பேச கொஞ்சம் இருக்கைகள், காபியுடன் ஐஸ்க்ரீம், சில பானங்கள், பின்னணியில் மெல்லிய ஓபரா இசை. வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. 1987-ம் ஆண்டு அது மூன்று ஷாப்களாக விரிவடைந்தது.

Starbucks Coffee
Starbucks Coffee
Image by Lubos Houska from Pixabay

இரண்டே வருடங்கள்... அடுத்த வாய்ப்பு. ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் தங்கள் கம்பெனியை விற்றுவிட்டு வேறொரு தொழிலில் இறங்க முடிவெடுத்தது. ஸ்டார்பக்ஸின் அன்றைய மதிப்பு 3.8 மில்லியன். அதை விலைகொடுத்து வாங்கினார் ஷுல்ட்ஸ். `ஐ.எல் ஜியோர்னேல் காபி’ என்கிற தன் நிறுவனத்தின் பெயரை `ஸ்டார்பக்ஸ்’ என்று மாற்றினார். அமெரிக்கா முழுக்க அவர் காபி ஷாப் விரிவடைந்துகொண்டேபோனது. அதை அமெரிக்காவின் காபி கலாசாரத்தின் இரண்டாம் அலை என்றே சொல்லலாம். வியாபாரத்தில் சக்கைபோடு போட்டது ஸ்டார்பக்ஸ். தன் தந்தை வேலையிழந்தபோது ஒன்றுமில்லாத ஆளாக நின்றது ஷுல்ட்ஸின் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது. அப்படித் தன் தொழிலாளர்களும் நிர்கதியாகிவிடக் கூடாது என்று நினைத்தார். 1988-ம் ஆண்டு ஷுல்ட்ஸின் தந்தை காலமானார். அதே ஆண்டில், அமெரிக்காவிலுள்ள கம்பெனிகளில் தன் தொழிலாளர்களுக்கு ஹெல்த் பாலிசி எடுத்த முதல் நிறுவனம் `ஸ்டார்பக்ஸ்’ என்ற நிலையை ஏற்படுத்தினார் ஷூல்ட்ஸ். அதிலும் பகுதிநேர பணியாளர்களுக்கும் காப்பீடு என்பது அமெரிக்காவிலுள்ள சில்லறை விற்பனை நிறுவனங்கள் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. நிறுவனத்தின் பங்கிலும் தொழிலாளர்களுக்கு உரிமை கொடுத்தார். 1992-ல் பங்கு வெளியீட்டின் மூலமாக பப்ளிக் லிமிடெட் நிறுவனமாகவும் உயர்ந்தது ஸ்டார்பக்ஸ். உலகின் பல நாடுகளில் கால்பதித்தது.

₹2000 கோடி டேர்ன் ஓவர்; விதை போட்ட மேப்... VKC சாம்ராஜ்யம் வளர்ந்தது எப்படி? #BusinessMasters - 6

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை டீம்வொர்க். சில நேரங்களில் தவறான முடிவுகளால் பிரச்னைகள் ஏற்படலாம். ஸ்டார்பக்ஸில் அதுவும் நிகழ்ந்தது. 1986-ம் ஆண்டிலிருந்து 2000-ம் ஆண்டுவரை ஸ்டார்பக்ஸின் சி.இ.ஓ-வாகவும் சேர்மனாகவும் இருந்தார் ஷுல்ட்ஸ். 2,000-ல் பதவி விலகினார். 2008-ம் ஆண்டு நிறுவனத்துக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது மறுபடியும் அதன் சி.இ.ஓ ஆனார். நிறுவனத்தின் நிலைமையை மெல்ல மெல்லக் கட்டுக்குள் கொண்டு வந்தார். 2016-ம் ஆண்டு ஓய்வு பெற்று எக்ஸிகியூட்டிவ் சேர்மன் ஆனார். சியாட்டிலில் 11 காபி ஷாப்களாக இருந்த ஸ்டார்பக்ஸ், அவர் ஓய்வு பெற்றபோது 77 நாடுகளில், 28,000 கடைகள் என விரிவடைந்து நம் சென்னை வேளச்சேரி வரை வந்துவிட்டது ஸ்டார்பக்ஸ். இன்றைக்கு அவரின் சொத்து மதிப்பு 520 கோடி அமெரிக்க டாலர். அதைப் பெற்றுத் தந்தது ரசனையோடு எந்த வேலையையும் செய்ய வேண்டும் என்கிற அவருடைய மனப்பான்மை!

- பாடம் எடுப்பார்கள்
அடுத்த கட்டுரைக்கு