Published:Updated:

₹8000 வேலை டு `வேலைவாய்ப்பு சாம்ராஜ்யம்' - நாக்ரி நிறுவன சஞ்சீவின் சாதனை கதை! #BusinessMasters - 10

இப்படியோர் இணையதளத்தை உருவாக்க சஞ்சீவ் பிக்சந்தானி செய்ததெல்லாம் ஒன்றுதான். கனவு கண்டார். சிறு வயதிலிருந்தே எதிர்காலம் குறித்த கனவிலேயே சதா சஞ்சரித்தார். இன்றைக்கு தன் கனவை நனவாக்கி சாதனை படைத்துவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலைவாய்ப்பு அருகிவரும் காலம் இது. ஆனால், கொஞ்சம் மெனக்கெட்டால் அவரவர் தகுதிக்கேற்ற வேலையைப் பெற்றுவிட முடியும். அப்படி இருக்கும் வாய்ப்புகளைப் பட்டியலிடவும் வழிகாட்டவும் இன்றைக்கு எண்ணற்ற நிறுவனங்கள் முளைத்துவிட்டன. இந்தியாவில், `இங்கே இப்படி ஒரு வேலை, இவ்வளவு சம்பளம், கல்வித்தகுதி இது...’ என்றெல்லாம் நாளிதழ்களில் ஆயிரம் விளம்பரங்கள் வந்தாலும், வேலை தொடர்பான தகவல்களுக்காக பிரத்யேகப் பத்திரிகைகள், இணையதளங்கள் பல நூறு இருந்தாலும், அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னணியில் நிற்கிறது நாக்ரி.காம். இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் தங்கள் கரியரைத் தேர்ந்தெடுக்க, அதில் மென்மேலும் வளர முதல் சாய்ஸாக நம்புவது இந்த இணையதளத்தைத்தான். நாக்ரி டாட் காமை ஒரு வெற்றி நிறுவனமாக உருவாக்கி, வளர்த்தெடுத்தவர் சஞ்சீவ் பிக்சந்தானி (Sanjeev Bikhchandani).

Naukri
Naukri

நாக்ரி.காம் இணையதளத்தைப் பார்வையிட்டவர்களுக்குத் தெரியும். அது வேலை தேடுபவர்களுக்கான தளம் மட்டுமல்ல, வேலை கொடுப்பவர்களுக்கான களமும்கூட. லாபகரமாக இயங்கும் இப்படியோர் இணையதளத்தை உருவாக்க சஞ்சீவ் பிக்சந்தானி செய்ததெல்லாம் ஒன்றுதான். கனவு கண்டார். சிறு வயதிலிருந்தே எதிர்காலம் குறித்த கனவிலேயே சதா சஞ்சரித்தார். இன்றைக்கு தன் கனவை நனவாக்கி சாதனை படைத்துவிட்டார். அந்தச் சாதனை, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையே அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

1963-ம் ஆண்டு, டெல்லியில் ஒரு சிந்திக் குடும்பத்தில் பிறந்தார் சஞ்சீவ் பிக்சந்தானி. சாதாரண நடுத்தரக் குடும்பம். அப்பா அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர். அவரின் சம்பளத்தைத் தவிர, குடும்பத்துக்கு வேறு வருமானம் இல்லை. அப்பாவின் அரசுப் பணி காரணமாக, அரசுக் குடியிருப்புகளிலேயே வளர்ந்தார் சஞ்சீவ். பாரம்பர்யமான சிந்திக் குடும்பம் என்றாலும் அவருடைய நெருங்கிய உறவினர்களில் ஒருவர்கூட வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கவில்லை.

அரசுக் குடியிருப்புகளில் வளர்ந்ததால் இயல்பாகவே படிப்பில் சஞ்சீவுக்கு நாட்டம் இருந்தது. நன்றாகப் படிக்க வேண்டும். பிறகு..? இன்னொரு கனவும் அவருக்கு இருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்ததும், சில ஆண்டுகள் எங்கேயாவது பணிபுரிய வேண்டும். பிறகு சொந்தமாகத் தொழில் எதையாவது ஆரம்பிக்க வேண்டும் என்கிற கனவு அது. என்ன தொழில், எப்படித் தொடங்குவது, எங்கே ஆரம்பிப்பது... எதுவும் தெரியாது. ஆனால், பிசினஸ் கனவு அவருக்குள் அழுத்தமாகப் பதிந்துபோயிருந்தது.

பி.ஏ பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1984-ம் ஆண்டு லோவெஸ் லின்டாஸ் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் அக்கவுன்ட்ஸ் எக்ஸிகியூட்டிவாகப் பணி. உப்புச் சப்பில்லாத வேலை. மாதம்தோறும் ஏதோ ஒரு தொகை சம்பளமாக வந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அவருக்கே அந்த வேலை அயற்சியை ஏற்படுத்த, வெளியே வந்தார். இன்னும் கொஞ்சம் படித்தால் நன்றாக இருக்கும். அதிலும் தன் எதிர்கால கனவுக்கு உதவும் படிப்பாக அது இருக்க வேண்டும் என நினைத்தார் சஞ்சீவ். ஐ.ஐ.எம் அகமதாபாத்தில், போஸ்ட் கிராஜுவேட் டிப்ளோமா இன் மேனேஜ்மென்ட் கோர்ஸில் சேர்ந்தார். அங்கேதான் உடன் படிக்க வந்து சேர்ந்தார் சுரபி. இருவருக்கும் பரஸ்பரம் பிடித்துப்போக, பின்னாளில் சுரபியையே திருமணம் செய்துகொண்டார் சஞ்சீவ். படிப்பு முடிந்தது.

1989-ல் ஹிந்துஸ்தான் மில்க்ஃபுட் மேனுஃபேக்ச்சரர்ஸ் (ஹெச்.எம்.எம்) நிறுவனத்தில் புராடக்ட் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைத்தது. தற்போது அந்த நிறுவனம் `கிளாக்ஸோ ஸ்மித் க்ளைன்’ என்று அழைக்கப்படுகிறது. சஞ்சீவுக்கு அங்கே ஹார்லிக்ஸ் பிராண்டை நிர்வகிக்கும் வேலை. தன் திறமை அனைத்தையும் கொட்டி அந்த பிராண்டைத் தனித்துவமான ஒன்றாக மாற்றினார் சஞ்சீவ். அன்றைய சூழலில் 8,000 ரூபாய் என்பது நல்ல சம்பளம். அதுவும் நிர்வாகத் தரப்பில் வேலை. இப்படிப்பட்ட வேலை யாருக்குமே கசப்புணர்வை ஏற்படுத்தாது. ஆனால், அதையும் விடுவதற்குத் தயாரானார் சஞ்சீவ். பிசினஸில் தன்னால் தனித்துவமாகச் சாதிக்க முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது.

Jobs / Representational Image
Jobs / Representational Image

ஒருநாள், சுரபியுடன் கலந்துபேசினார். ``நான் வேலையை விடப் போகிறேன். உன்னால் வீட்டைக் கவனித்துக்கொள்ள முடியுமா?’’ என்று கேட்டார். சந்தோஷமாக ஒப்புக்கொண்டார் சுரபி. அப்போது சுரபி, நெஸ்லே நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் வருமானத்தில் குடும்பம் நகரத் தொடங்கியது.

1990-ம் ஆண்டு தன் நண்பருடன் இணைந்து இரண்டு நிறுவனங்களைத் தொடங்கினார் சஞ்சீவ். ஒன்று, `இண்ட்மார்க்’, மற்றொன்று, `இன்ஃபோ எட்ஜ்.’ நிறுவனங்கள் வழங்கும் சம்பளம் குறித்த சர்வேக்களை நடத்தியது இன்ஃபோ எட்ஜ். இண்ட்மார்க், அவர்களின் தேடலில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ட்ரேட் மார்க்குகளுக்கான டேட்டாபேஸை டெவலப் செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டார்களே தவிர, அதை நடத்த ஓர் அலுவலகக் கட்டடம்கூட இல்லை. சஞ்சீவ், தன் தந்தையின் பணியாள் குடியிருப்பு ஒன்றை அலுவலகமாகப் பயன்படுத்திக் கொண்டார். நிறுவனங்கள் எம்.பி.ஏ படித்தவர்களுக்கும், இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்கும் முதல் சம்பளமாக எவ்வளவு தருகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சேகரிப்பதே இன்ஃபோ எட்ஜின் முக்கியமான பணியாக இருந்தது. தங்கள் பணியாளர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்ய இந்தப் புள்ளிவிவரம் பல நிறுவனங்களுக்குத் தேவையாக இருந்தது. அதை சுமார் 200 நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்கவும் செய்தார் சஞ்சீவ்.

அப்போதெல்லாம் ஒரு டிரேட் மார்க்குகளுக்கு (வர்த்தகச் சின்னம்) அரசு உடனே ஒப்புதல் வழங்குவதில்லை. குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும். ஒருவர் பதிவு செய்திருந்த டிரேட் மார்க்கை இன்னொருவர் அதற்கு முன்பே பதிவு செய்திருந்தால், கிடைக்காமல் போகும். சஞ்சீவ் 20 கல்லூரி மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார். மும்பை லைப்ரரிக்கு அனுப்பினார். பெண்டிங்கில் இருக்கும் மருந்து நிறுவன டிரேட் மார்க்குகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கச் சொன்னார். அந்த விவரங்களை எல்லாம் ஒரு கம்ப்யூட்டரில் சேமித்து ஒரு டேட்டாபேஸை உருவாக்கினார். அதிலிருந்து பிரின்ட்டடு ரிப்போர்ட்டுகளை எடுத்து, ஃபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனங்களுக்கு ஒன்று 350 ரூபாய் என்று விற்றார். இப்படி எத்தனையோ முயற்சிகள், வார இறுதிநாள்களில் சில தனியார் நிறுவனங்களில் மேனேஜ்மென்ட் வகுப்பு எடுப்பது என்று தடுக்கி, விழுந்து, எழுந்து, ஓடிக்கொண்டேயிருந்தார் சஞ்சீவ்.

Job Application / Representational Image
Job Application / Representational Image
மாத்தியோசித்த `மாஸ்டர்'... உலகின் முதல் `ஐஸ் டீ' பிறந்தது இப்படித்தான்! ​#BusinessMasters - 1

1993-ம் ஆண்டு சஞ்சீவும் அவருடன் கைகோத்திருந்த நண்பரும் பிரிந்துவிடுவது என முடிவெடுத்தார்கள். ஆளுக்கொரு கம்பெனியை எடுத்துக்கொண்டார்கள். சஞ்சீவின் பங்காக இன்ஃபோ எட்ஜ் நிறுவனமும் அதன் டேட்டாபேஸும் கிடைத்தன. அடுத்து... அடுத்து... என்ன செய்வது?

இதே சிந்தனைதான் சஞ்சீவுக்கு. பிறகு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தார். உள்ளே ஒரு காட்சி மட்டும் அவருக்குள் அடிக்கடி ஓடிக்கொண்டிருந்தது. அவர் ஹெச்.எம்.எம்-மில் வேலை பார்த்தபோது நிகழ்ந்த காட்சி. அவருடன் பணியாற்றுபவர்கள் அத்தனைபேரும், `பிசினஸ் இந்தியா’ என்ற பிரபல பிசினஸ் பத்திரிகையைப் படிப்பவர்களாக இருந்தார்கள். கிட்டத்தட்ட 35-லிருந்து 40 பக்கங்களுக்கு இருக்கும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அதில் தேடினார்கள். அது, அவர்கள் தற்போது பார்க்கும் வேலை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. இதைவிட நல்ல வேலையாக அமையாதா என்கிற எதிர்பார்ப்பு அது. இது சஞ்சீவ் மனதில் நன்கு பதிந்திருந்தது.

1996-ம் ஆண்டு அக்டோபரில் டெல்லியில் நடந்த `ஐ.டி ஆசியா எக்ஸிபிஷ’னில் கலந்துகொண்டார் சஞ்சீவ். அங்கேதான் `WWW - World Wide Web’ என்ற வார்த்தையை முதன்முதலாக ஒரு ஸ்டாலில் பார்த்தார். இன்டர்நெட், இமெயில், சர்வர்... என அத்தனை தகவல்களையும் அந்த ஸ்டாலில் இருந்தவரிடம் கேட்டறிந்தார். அப்போதெல்லாம் சர்வர்கள் எல்லாமே அமெரிக்காவைச் சார்ந்தவையாகவே இருந்தன. எனவே, அவரிடமே தனக்காக ஓர் இணையதளத்தை உருவாக்கித் தரச் சொன்னார். ஆனால், உடனே அது சாத்தியமாகவில்லை. பிறகு அமெரிக்காவில் பணியாற்றும் தன் சகோதரரின் உதவியோடு சஞ்சீவின் புதிய இணையதளம் உருவானது. அதன் பெயர், `நாக்ரி.காம்.’

அது இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகி வந்த நேரம். பத்திரிகைகளும் இன்டர்நெட் குறித்து விதவிதமான தகவல்களை வெளியிட ஆரம்பித்திருந்தன. நாக்ரி.காமுக்கு அது நல்ல நேரமாகவும் அமைந்தது. தன் சகோதரருக்கு, அவர் உருவாக்கிக்கொடுத்த இணையதளத்துக்காக 5% பங்குகள் கொடுத்தார் சஞ்சீவ். மிகச் சிறப்பாக கம்ப்யூட்டரில் புரோக்ராம் வடிவமைக்கும் தன் இரண்டு நண்பர்களின் உதவியை நாடினார். நாக்ரி.காமுக்கான தகவல்கள் திரட்டப்பட்டன. சில டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை நியமித்தார். நாக்ரி.காம் மெல்ல மெல்ல வேலை தேடுபவர்களுக்கான மையப்புள்ளியாக உருவாக ஆரம்பித்தது.

670 ரூபாய் சம்பளம் டு கம்பெனிக்கே CEO... L&T நாயக்கின் வெற்றிக்கதை! #BusinessMasters - 4

முதல் வருடம் 2.35 லட்ச ரூபாய்க்கு மட்டுமே பிசினஸ். அடுத்த ஆண்டு 18 லட்சம் ரூபாய்க்கு ஆனது. 2004-ம் ஆண்டு நிறுவனத்தின் வருமானம் 8.4 கோடி ரூபாய். 2006-ம் ஆண்டு, `பாம்பே ஸ்டாக் மார்க்கெட்’ பங்குச் சந்தையில் முதன்முதலில் பட்டியலிடப்பட்ட டாட்காம் நிறுவனம் என்ற பெயருடன் பங்குச் சந்தையில் நுழைந்தது. நாக்ரி டாட் காமுக்கு மட்டுமல்ல, 99ஏக்கர்ஸ் டாட் காம், ஜீவன்சாதி டாட் காம், சிக்‌ஷா டாட் காம் உள்ளிட்ட பல இணையதளங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் சஞ்சீவ்.

கடந்த 2020-ம் ஆண்டு வர்த்தகத்தில் அவர் புரிந்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை கௌரவித்தது மத்திய அரசு. இந்தச் சாதனைகளுக்கெல்லாம் அடிப்படை அவர் கண்ட கனவு. அது லட்சியமாக உள்ளேயே ஊறிப்போயிருக்க, இன்று நாக்ரி.காம் என்ற தனித்துவமான இணையதளத்தின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறார் சஞ்சீவ் பிக்சந்தானி!

- பாடம் எடுப்பார்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு