Published:Updated:

ராக்கெட் துறையில் சென்னையில் ஒரு ஸ்டார்ட்அப்! கலக்கும் அக்னிகுல்...

ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார்ட்அப்

S T A R T U P

சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனம், சில நாள்களுக்கு முன்பு 3டி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ராக்கெட் இன்ஜினைத் தயாரித்து அதை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்திருக்கிறது. இது உலகளவில் யாரும் செய்யாத சாதனை. இதைச் செய்த அக்னிகுல் நிறுவனத்தின் நிறுவனர்கள் ஶ்ரீநாத் ரவிச்சந்திரன் மற்றும் மொயினை சென்னை ஐ.ஐ.டி-யில் சந்தித்துப் பேசினோம். முதலில் ஶ்ரீநாத் பேசத் தொடங்கினார்.

ஶ்ரீநாத், மொயின்
ஶ்ரீநாத், மொயின்

அக்னிகுல் உருவான கதை...

‘‘சிறுவயதில் இருந்தே ஏரோ ஸ்பேஸ் துறையில் ஆர்வம் என்றாலும் என்னால் இதுசம்பந்தமாக இன்ஜினீயரிங் படிக்க முடியவில்லை. நான் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் இ.இ.இ படித்தேன். 2006-ம் ஆண்டு படித்து முடித்த பிறகு, ஏ.பி.பி நிறுவனத்தில் இரு ஆண்டுகள் பணியாற்றினேன். ஆர் அண்ட் டிக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக கருதினேன். அதே சமயம் என் நண்பர்கள் பலர் நிதி சார்ந்த துறை களில் முக்கியமான பொறுப்புகளில் இருந்தார்கள். அதனால் ஃபைனான்ஷியல் இன்ஜினீயரிங் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். அந்தச் சமயத்தில்தான் சப்பிரைம் கிரைஸிஸ் நடந்தது. அதனால் வங்கி சார்ந்த பணி கிடைக்கவில்லை. ஆனால், காப்பீட்டுத் துறையில் வேலை கிடைத்தது.

வேலையில் இருக்கும்போது ஏரோஸ்பேஸ் மீது மீண்டும் ஆர்வம் வந்தது. அதனால் வேலை செய்து கொண்டே பகுதி நேரமாக ஏரோஸ்பேஸ் (எம்.எஸ்) படித்தேன். அப்போதுதான் இந்தத் துறை நாம் நினைக்கிற மாதிரி இல்லாமல், வேறு மாதிரி இருப்பது புரிந்தது. இங்கு இருக்கும்போதுதான் அக்னிகுல் நிறுவனத்துக்கான ஐடியா பிறந்தது.

பொதுவாக, சாட்டிலைட் என்பது ஆர்பிட்டில் சுற்றிவருவது. ராக்கெட் என்பது சாட்டிலைட்டை மேலே கொண்டுசெல்வதற்கான ஒரு சாதனம். ஒரே ராக்கெட்டில் பல நிறுவனங்களின் சாட்டிலைட்டை எடுத்துச் செல்ல முடியும்.

நான் படித்துக்கொண்டிருக்கும்போது அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பல நிறுவனங்களின் சாட்டிலைட்டைப் பார்த்திருக்கிறேன். ஒரு சில சாட்டிலைட்டுகள் சில கிலோ எடை மட்டுமே கொண்டதாக இருக்கும். போதுமான ராக்கெட் வசதி இல்லாததால், இந்த சாட்டிலைட்டுகள் விண்ணுக்குப் போகாமல் அப்படியே இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு சில நூறு கிலோ எடையில் இருந்த சாட்டிலைட்டுகளை இப்போது சில கிலோவில் உருவாக்க முடியும். தவிர, முன்பு பல ஆண்டுகள் கழித்து ஒரு சாட்டிலைட்டை உருவாக்கினார்கள் என்றால், இப்போது ஆறே மாதங்களில் உருவாக்க முடியும். ஆனால், அதை விண்ணில் ஏவுவதற்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஒரே ராக்கெட்டில் சில சாட்டிலைட்களைக் கொண்டு செல்ல முடியும் என்றாலும், ஒரு முக்கியமான சாட்டிலைட்டைக் கொண்டுசெல்லும் நிறுவனம் அனுமதித்தால்தான் மற்ற சாட்டிலைட்டுகளை ஏற்றிச் செல்ல முடியும்.

இந்தச் சமயத்தில்தான் சிறிய சாட்டிலைட்களை ஏவுவதற்கேற்ப சிறிய ராக்கெட்டுகளை ஏன் தயாரிக்கக் கூடாது என்கிற யோசனை உருவானது. இதன் பிறகுதான் அக்னிகுல் பிறந்தது’’ என தனது ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கப்பட்டதன் பின்னணியை எடுத்துச் சொன்னார் ஶ்ரீநாத். இதன் பிறகு, இந்த நிறுவனத்தின் இன்னொரு நிறுவனரான மொயின் தொடர்ந்தார்.

சென்னை ஐ.ஐ.டி-யில் தொடங்கினோம்...

‘‘நானும் ஶ்ரீநாத்தும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடுவோம். அப்போது முதலே நாங்கள் நண்பர்கள். நான் ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படித்து முடித்தேன். சில காலம் ஆஸ்திரேலியாவில் குவாண்டாஸ் விமான நிறுவனத்தில் வேலை செய்தேன். அதன்பிறகு இந்தியா திரும்பி ஒரு கான்ட்ராக்ட் உற்பத்தி நிறுவனம் நடத்தினேன். அப்போதுதான் அக்னிகுல் தொடர்பாக நாங்கள் இருவரும் பேசத் தொடங்கினோம்.

ஒரு விமானம் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்துக்கு செல்வதுபோலத்தான் ராக்கெட்டும். இதை சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் பெரிய கல்வி நிறுவனத்தின் உதவி மற்றும் முதலீடு தேவைப்படும். அதனால் இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி பேராசியர்களிடம் பேசினோம். அதிர்ஷ்டவசமாக எங்களுடைய ஐடியாவை ஐ.ஐ.டி சென்னை பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தி வரவேற்றார். உடனே அமெரிக்கா செய்துவந்த வேலையை விட்டு விட்டு சென்னை வந்தார் ஶ்ரீநாத்.

2017-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். 2018-ம் ஆண்டு வரை சொந்த முதலீட்டில்தான் நிறுவனத்தை நடத்தினோம். அதன்பிறகு ரூ.2.5 கோடி அளவுக்கு முதலீடு திரட்டினோம். தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். பணியாளர்களின் எண்ணிக்கை யைச் சீராக உயர்த்தினோம். கோவிட்டுக்கு முன்பாக ரூ.23.4 கோடி முதலீட்டைப் பெற்றோம். இதில் ஆனந்த மஹிந்திராவும் முதலீடு செய்தார்’’ என்றார் மொயின்.

3டி மூலம் ராக்கெட் இன்ஜின்...

அடுத்து பேச ஆரம்பித்தார் ஶ்ரீநாத். ‘‘ராக்கெட்டுகளை வடிவமைத்தில் பல நிலைகள் உள்ளன. முதலில் இன்ஜினை வடிமைக்க வேண்டும். இதை ஏன் 3டி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கக் கூடாது என்று நினைத்து, அதில் உருவாக்கினோம். பல உதிரி பாகங்களை ஒன்றாக இணைப்பதைவிட சரியான டிசைன் மூலம் மொத்தமான இன்ஜினை உருவாக்குவது நல்லது என்பதால், 3டி பிரின்டிங் மூலம் இன்ஜினை உருவாக்கினோம். சமீபத்தில் இந்த இன்ஜினை சோதனை செய்து முடித்திருக்கிறோம். இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றவும் அனுமதி பெற்றிருக்கிறோம்.

பொதுவாக, ராக்கெட்டைப் பொறுத்தவரை, தரையிலிருந்து நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. அனைத்தும் ஆட்டோ பைலட்தான். ராக்கெட் நம்மை விட்டு சென்ற பின்னர் நம்மால் செய்ய முடிந்தது, அந்த ராக்கெட்டை செயல் இழக்க வைப்பது மட்டும்தான் முடியும். இதைச் சொல்லக் காரணம், இன்ஜின் வடிவமைப்பது மட்டுமல்லாமல் சாஃப்ட்வேர். ஹார்டுவேர் எனச் செய்வதற்கு பல பணிகள் இருக்கின்றன.

தற்போது அனைத்துக் குழுவும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பிரிவும் வெற்றியடைந்த பிறகு, இதை ஒருங்கிணைக்க வேண்டும். அதன் பிறகு, சோதனை செய்த பிறகுதான் இதை வியாபார ரீதியாக நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்.

மொயின், ஶ்ரீநாத்
மொயின், ஶ்ரீநாத்

ராக்கெட் சேவை பல நிறுவனங்களுக்குத் தேவை...

சர்வதேச அளவில் பல நிறுவனங்களுக்கு சாட்டிலைட் தேவைப்படுகிறது. தவிர, பல பல்கலைக்கழகங்களும் சாட்டிலைட் தயாரித்து வருகின்றன. அதனால் எங்களுடைய ராக்கெட்டுக்குத் தேவை இருக்கும். தற்போதைய திட்டமிடுதலின் படி, 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு, ராக்கெட் சோதனை இருக்கும். இப்போது முதலே பல நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். சோதனைக்குப் பிறகே இது தொடர்பாக முழுமையாகத் தெரியும்.

இந்தத் துறையில் கட்டணம் என்பது ஒரு கிலோவுக்குதான். ஒரு கிலோ சாட்டிலைட்டை மேலே கொண்டு செல்வதற்கு 50,000 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இஸ்ரோ ராக்கெட் 43 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால், எங்களுடைய சாட்டிலைட் 18 மீட்டர் உயரம் கொண்டது. அதிகபட்சம் 100 கிலோ எடையுள்ள சாட்டிலைட்டை விண்ணுக்குக் கொண்டு செல்ல முடியும். முதல் சில சோதனை முயற்சிகளுக்கு பிறகே, வர்த்தகரீதியிலான பணிகளை நாங்கள் மேற்கொள்ள முடியும். வாடிக்கை யாளர்களைப் பொறுத்தவரை, டெக்னாலஜி, சர்வர், ஐ.ஓ.டி போன்ற நிறுவனங்களுக்கு சாட்டிலைட் செலுத்த வேண்டி இருக்கிறது.

இந்தத் பணியாளர்கள்தாம் முக்கியம். இப்போதைக்கு 60 நபர்கள் பணியாற்று கிறார்கள். இவர்கள் அனைவரும் ஐ.ஐ.டி-யில் எம்.டெக் படித்தவர்கள். அடுத்த ஆண்டுக்குள் இன்னும் 20 நபர்கள் தேவை. பணியாளர்களைத் தக்கவைக்க பங்குகளைக் கொடுக்கிறோம்’’ என்று முடித்தார் ஶ்ரீநாத்.

சர்வதேச அளவில் ராக்கெட் பிரிவில் சில தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பிரிவில் சென்னையிலுள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் செயல்பட்டுவருவது மகிழ்ச்சியே. அவர்கள் வெற்றியடைய வாழ்த்துகள்.