பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

‘‘சோஷியல் மீடியாதான் என் பார்ட்னர்...’’ தஞ்சையில் கலக்கும் அபிராமி!

அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
News
அபிராமி

பிசினஸ்

சோஷியல் மீடியாவை மற்றவர்கள் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தி வரும் வேளையில், தஞ்சையைச் சேர்ந்த அபிராமி அதை பிசினஸுக்குப் பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறார். நாஞ்சிக் கோட்டை சாலையில் உள்ள பிலோமினா நகர் பகுதியில், சேயோன் பயோடெக் என்ற பெயரில் விவசாயம் சார்ந்த இயற்கை இடு பொருள்கள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார் அபிராமி. பயோ டெக்னாலஜியில் பிஹெச்.டி பட்டம் பெற்ற அபிராமி, விவசாயம் சார்ந்த தொழிலைத் தேர்ந்தெடுத்தது எப்படி என்று கேட்டோம். அவரது பிசினஸ் அனுபவங்களை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார்.

‘‘நான் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துல பயோடெக் படிச்சிட்டு, பி.ஹெச்.டி-யும் முடிச்சேன். சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துல எட்டு வருஷம் வேலை பார்த்தேன். அது என்சைம் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலை. அங்க நான் ஆராய்ச்சிப் பிரிவுல வேலைபார்த்தேன். கைநிறைய சம்பளம் கிடைச்சாலும்கூட, என்னோட குடும்ப சூழ்நிலை காரணமா சொந்த ஊரான தஞ்சாவூருக்கே நிரந்தரமா வர வேண்டிய தாயிடுச்சு.

என்னோட படிப்புக்கு கண்டிப்பா, ஏதாவது ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்துலோ பேராசிரியர் பணி ஈஸியா கிடைச்சிருக்கும்.ஆனா, சொந்தமா ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கணுங்கறதுதான் என்னோட பெரும் கனவா இருந்துச்சு. பயோடெக் படிச்சவங்க பெரும்பாலும், மருத்துவம் சார்ந்த துறைகள்ல ஈடுபடுறதுதான் வழக்கம். ஆனா, நான் விவசாயம் சார்ந்த தொழில்லதான் இறங்கணுங் கறதுல உறுதியா இருந்தேன்.

பொதுவாக, நாம இருக்கக்கூடிய இடத்துக்கும் சூழலுக்கும் ஏத்த ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்தாதான் அதுல வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும். நான் பிஹெச்.டி செஞ்சதும்கூட விவசாயம் சார்ந்த நுண்ணுயிரிகள் தொடர்பானதுதான். சொந்தக்காரங்க, நண்பர்கள்னு எங்களைச் சுத்தியிருக்கக்கூடியவங்க எல்லாருமே விவசாயிங்கதான்.

அபிராமி
அபிராமி

சுற்றுச்சூழலைப் பாதிக்காத இயற்கை வேளாண் இடுபொருள்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி இருக்குறதுனாலதான். இதைத் தேர்ந்தெடுத்தேன். ஆனா, முதலீட்டுக்கு என்கிட்ட பணம் இல்லை. என் கணவராலயும் எனக்கு உதவி செய்ய முடியலை. புதுசா வீடு கட்டியிருந்ததால, அந்தக் கடனை அடைக்கவும், குடும்பச் செலவுகளைக் கவனிக்கவுமே அவரோட வருமானம் சரியா இருந்துச்சு.

சொந்தத் தொழில் தொடங்க, எங்கே குறைச்ச வட்டிக்கு கடன் கிடைக்கும்னு தேட ஆரம்பிச்சேன். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) பத்தி தெரிய வந்துச்சு. மூணு லட்சம் ரூபாய் கடன் கேட்டு, அவங்களுக்கு விண்ணப்பம் அனுப்பினேன். அங்க இருந்து உடனடியா பதில் வரும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. மூணு லட்சம் ரூபாய் மிகவும் குறைவான தொகை. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைன்னா, விண்ணப்பம் செய்யுங்கன்னு அங்க இருந்து எனக்குக் கடிதம் வந்துச்சு. அங்க நேர்ல போயி விசாரிச்சேன். மாவட்டத் தொழில் மையத்துக்கு போகச் சொன்னாங்க. என்னோட படிப்புக்கும் இந்தத் துறையில எனக்கு உள்ள அனுபவத்தையும் ஆர்வத்தையும் பார்த்துட்டு, 25 லட்சம் ரூபாய் வரை கடன் தரத் தயாராக இருந்தாங்க. தவிர, இந்தத் தொழிலுக்கான என்னோட தெளிவான திட்டமிடலும் அதுக்கு ஒரு முக்கிய காரணம்.

ஆனா, புதுசா இறங்கக்கூடிய ஒரு தொழில்ல, ஆரம்பத்துலயே அகலக்கால் வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அது மட்டுமல்லாம, கடன் கிடைக்குதேங்கறதுக்காக அதிகமா கடன் வாங்கினா, அதைச் சரியா திரும்பக் கட்ட வேண்டியதிருக்கும். அந்தளவுக்கு வியாபாரம் நடக்கலைனா, பெரிய நெருக்கடியா ஆயிடும். மார்க்கெட்டிங்க்ல கவனம் செலுத்த முடியாது. இந்த எச்சரிக்கை உணர்வுனால, பத்து லட்சம் ரூபாய் மட்டும் கடன் வாங்கி முதலீடு செஞ்சு, படிப்படியா தொழிலை விரிவுபடுத்தலாம்ங்கறதுல தெளிவா இருந்தேன்.

மாவட்டத் தொழில் மையத்துல இருந்து, பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு பரிந்துரைக் கடிதம் கொடுத்தாங்க. ஆனா, எனக்கு கடன் கொடுக்க பேங்க் மேனேஜர் உடனே ஓகே சொல்லிடலை. என்மேல நம்பிக்கை ஏற்படுற வரைக்கும் மனம் தளராமல், விடாமுயற்சி செஞ்சேன். எந்த ஒரு சொத்து ஆவணமும் இல்லாமலே பத்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்தாங்க. தொழில்முனைவோருக்கான பயிற்சி கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு, வாடகைக்கு இடம் புடிச்சு, உற்பத்தி இயந்திரங்கள், ஆய்வுக்கூடம் எல்லாம் அமைச்சு, 2018-ம் வருஷம் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்.

நாங்க உற்பத்தி செய்யக்கூடிய இடுபொருள்களை எங்களோட ஆய்வுக்கூடத்துல மட்டுமே சோதிச்சுப் பார்த்தா போதாது. அனுபவபூர்வமா பரிசோதனை செஞ்சு பார்க்க எங்ககிட்ட சொந்த நிலம் கிடையாது. விவசாயிகளோட எண்ணங்களைத் தெரிஞ்சக்கவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும், இலவச மாதிரிகளை விவசாயிகள் கிட்ட கொடுத்தோம். அவங்க கிட்ட நல்ல வரவேற்பு இருந்துச்சு.

நாங்க தயாரிச்ச இடுபொருள் களை டீலர்கள் இருந்தாதான் தமிழ்நாடு முழுக்க விற்பனை செய்ய முடியும்ங்கறதுனால, நாளிதழ்கள்ல விளம்பரம் கொடுத்தோம். பலர் ஆர்வமா வந்தாங்க. ஆனாலும்கூட ஆரம்பத்துல விற்பனை மந்த மாகத்தான் இருந்துச்சு.

எங்களோட இடுபொருள் களை எப்படி விவசாயிகள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கலாம்னு யோசிச்சேன். கிராமங்கள்ல எல்லாருமே ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பார்க்குறாங்க. சேயோன் பயோடெக் பேர்ல ஃபேஸ்புக் பக்கம் ஓப்பன் பண்ணி, எங்களோட இடுபொருள்களை பத்தி விளம்பரப்படுத்திக்கிட்டே இருப்போம். எந்த சீஸனுக்கு எந்த இடுபொருள் விவசாயி களுக்குத் தேவையோ, அதைப் பத்தி தகவல் போடுவோம். சோஷியல் மீடியாதான் என் பிசினஸ் அம்பாசிடர், பார்ட்னர்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட் டங்கள்ல தக்காளி சாகுபடி அதிகம். டெல்டாவுல நெல் சாகுபடி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகள்ல காய்கறிச் சாகுபடி அதிகம். சில மாவட்டங்கள்ல கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் அதிகமா பயிர் செய்வாங்க. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பணம் செலுத்தி பூஸ்ட் போஸ்ட் மூலம் அந்தந்தப் பகுதிக்கு எந்த இடுபொருள் தேவையோ, அதை விளம்பரப் படுத்தி, ஆயிரக்கணக்கான விவசாயிகள்கிட்ட போய்ச் சேர்ந்தோம்.

அந்தந்த மாவட்ட விவசாயி களை ஒருங்கிணைச்சு, வாட்ஸ் அப் குரூப்களை உருவாக்கி அது மூலமாகவும் எங்களோட பொருள் களை விளம்பரப்படுத்திக்கிட்டு இருக்கோம். விவசாயத்துக்கான எந்தவொரு இடுபொருளை கூகுள்ல விவசாயிங்க தேடினாலும், அவங்களோட விவரங்கள் இண்டியாமார்ட்டுக்குக் கிடைச்சிடும்; அதை அவங்க எங்களுக்கு அனுப்பிடுவாங்க; நாங்க அந்த விவசாயிகளை தொடர்புகொண்டு எங்களோட இடுபொருள்களைப் பத்தி எடுத்து சொல்லி விற்பனை செய்றோம்.

‘‘சோஷியல் மீடியாதான் என் பார்ட்னர்...’’ தஞ்சையில் கலக்கும் அபிராமி!

அமேசான், ஃபிலிப்கார்ட், ஜஸ்ட் டயல் மூலமாகவும் எங்களோட பொருள்களை விற்பனை செய்றோம். கடந்த சில வருஷமா, சென்னை, பெங்களூரு மாதிரியான நகர்புறங்கள்ல மாடித்தோட்டம் அதிகமாகிக் கிட்டே இருக்கு. அவங்களுக்கு ஏத்த மாதிரி, மண்புழு உரம், உயிர் உரங்களை, சின்னச் சின்ன பேக்கிங்காகவும் விற்பனை செய்றோம். எங்களோட இணைய தளம், செல்போன் செயலி மூலமாகவும் பலர் எங்ககிட்ட இடுபொருள் வாங்குறாங்க.

எங்க நிறுவனம் மூலமா மண் புழு உரம், கடல் பாசி உரம், உயிர் உரம், இயற்கை பூச்சிவிரட்டி, பயிர் வளர்ச்சி ஊக்கினு பல வகையான பொருள்களை உற்பத்தி செஞ்சு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செஞ்சு வர்றோம். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்துக்குமேலயும், மாசத்துக்கு 70,000 - 80,000 ரூபாய் லாபம் கிடைக்குது.

தரத்துல எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்குறோமோ, அதுக்கு நிகரா, பேக்கிங்க் வசீகரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்குறோம். பெரிய நிறுவனங்களுக்கு நிகரா பேக்கிங் இருந்தால்தான் ஈர்க்க முடியும்.

பொதுவா, மண்புழு உரம், உயிர் உரங்கள் எல்லாம் சாதாரண பால் பாக்கெட்டு மாதிரியான பாலீத்தின் பேக்கிங்லதான் பெரும்பாலும் விற்பனை செய்யப்படுது, ஆனா, நாங்க அலுமினிய ஃபாயில் பவுச்லதான் பேக்கிங் செஞ்சு விற்பனை செய்றோம். குறைவான அளவுல இருந்து அதிக அளவு உள்ள பேக்கிங்காக விற்பனை செய்றோம். இதனால பலதரப்பட்ட விவசாயிங்க எங்களோட இடுபொருள்களை வாங்குறாங்க.

இப்ப வட இந்திய மாநிலங்கள்ல உள்ள விவசாயிங்க எங்களோட பொருள்களை வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. இதை இன்னும் விரிவுபடுத்தணுங்கறதுதான் என்னோட அடுத்தகட்ட இலக்கு’’ என உற்சாகமாகப் பேசி முடித்தார் அபிராமி.

இவரது திட்டமிட்ட உழைப்பு நிச்சயம் வெற்றி தரும்!