பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’ ஏர் இந்தியாவை வாங்கிய டாடா!

டாடா - ஏர் இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
டாடா - ஏர் இந்தியா

டாடா - ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவனத்தை டாடா நிறுவனம் ரூ.18,000 கோடி தந்து வாங்கியிருக்கிறது. இதன் விளைவாக, 68 ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனம் ஆரம்பித்த நிறுவனம், மீண்டும் டாடாவின் கைகளுக்கே திரும்ப வந்து சேர்ந் திருக்கிறது.

டாடா நிறுவனம் உருவாக்கிய ஏர் இந்தியா...

1930-களில் ஜே.ஆர்.டி டாடாவின் தலைமை யிலான டாடா குழுமம் விமானச் சேவையை ‘டாடா ஏவியேஷன் சர்வீஸ்’ என்கிற பெயரில் ஆரம்பித்தது. அதன்பின் அது ‘டாடா ஏர்லைன்ஸ்’ என அழைக்கப்பட்டது. 1932-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி காலை 6.30 மணியளவில் கராச்சியிலிருந்து பம்பாய்க்கு வந்த விமானத்தில் ஜே.ஆர்.டி டாடாவும் அவரின் நண்பரும் ராயல் ஏர்ஃபோர்ஸில் விமானியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வருமான நெவில் வின்ட்சென்ட்டும் (Nevill Vintcent) பம்பாயில் பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்களுடன் கராச்சியிலிருந்து பயணித்தனர். அவர்களது புஷ் மோத் (Puss Moth) விமானம் மணிக்கு 100 மைல் வேகத்தில் பறந்து, வழியில் அகமதாபாத்தை அடைந்து எரிசக்தியை நிரப்பிக்கொண்டு, அதன் பின் பிற்பகல் 1.50 மணிக்கு பம்பாயில் வெற்றிகர மாகத் தரையிறங்கியது.

அதற்குப் பிறகு, சில ஆண்டுகள் கராச்சியிலிருந்து பம்பாய், பெல்லாரி, சென்னை ஆகிய நகரங்களுக்கு தபால் சேவையை மட்டும் நடத்தி வந்தது. அதன் பின், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் அயல்நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தையும் ஆரம்பித்தது.

‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’
ஏர் இந்தியாவை வாங்கிய டாடா!

அரசுடமையாக்கப்பட்ட டாடா நிறுவனம்...

இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1946-ம் ஆண்டு ‘டாடா ஏர்லைன்ஸ் ஏர்-இந்தியா’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பப்ளிக் லிமிடெட் நிறுவனமானது. 1948-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்த நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்கியது.

தரமான சேவைக்கும், நேரம் தவறாமைக்கும் பிரசித்திபெற்ற விமான சேவையாக ஏர் இந்தியா சிறப்பாகச் செயபட்டு வந்த நேரத்தில், 1953-ம் ஆண்டு இந்திய அரசானது ஏர் கார்ப்பரேஷன்ஸ் சட்டம் இயற்றி, அதன்மூலம் விமானச் சேவை நிறுவனரான ஜே.ஆர்.டி டாடாவின் டாடா சன்ஸ் வைத்திருந்த பங்கு களை எல்லாம் வாங்கி நிறுவனத்தை அரசுடைமையாக்கியது.

நிறுவனம் அரசுடைமை ஆனாலும் ஜே.ஆர்.டி-யின் அனுபவத்தையும் நிர்வாகத் திறமையையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவரை அந்த நிறுவனத்தின் சேர்மனாக அரசு நியமித்தது. அந்தப் பதவியில் அவர் 1977-ம் ஆண்டு வரை இருந்து வந்தார். அதன்பின் மொரார்ஜி தேசாய் பிரதமரானபின், அவர் ஜே.ஆர்.டி-யை அந்தப் பதவியிலிருந்து நீக்கினார். நிறுவனமானது ஏர் இந்தியா இன்டர்நேஷனல் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மறு சீரமைப்பின்போது உள்நாட்டுச் சேவைக்கென்று இண்டியன் ஏர்லைன்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.

நஷ்டப்படத் தொடங்கிய ஏர் இந்தியா...

2007-ம் ஆண்டு ஏர் இந்தியாவும், இண்டியன் ஏர்லைன்ஸும் இணைக்கப்பட்டு ஏர் இந்தியா லிமிடெட் என அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, பல தனியார் விமான நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஏர் இந்தியாவால் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை. அதோடு சேவையின் தரத்தையும் நேரம் தவறாத சேவையையும் ஒழுங்காகக் கடைப் பிடிக்க முடியவில்லை. இதனால் 2009-10-ம் ஆண்டிலிருந்து இதன் பராமரிப்புக்கு இந்திய அரசு தொடர்ந்து நிதியுதவி அளித்து வந்தது. மிக முக்கியமான அரசு நிறுவனம், இதை எப்படியாவது தூக்கி நிறுத்தி விட வேண்டும் என்கிற நோக்கில் மத்திய அரசாங்கம் ஆண்டு தோறும் கணிசமான அளவு மூலதன உதவியைச் செய்து வந்தது. அப்படிச் செய்தும் தினசரி ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்துக்குமேல் பொறுமை காக்க முடியாமல்போன மத்திய அரசாங்கம், இந்த நிறுவனத்தை எப்படியாவது தனியாருக்கு விற்று விட வேண்டும் என நினைத்தது. 2014-க்குப் பிறகு, இந்த நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது மத்திய அரசாங்கம். இதன் காரணமாக, ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பது என அரசு முடிவு செய்தது.

68 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டாடாவின் கையில்...

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த அரசின் முயற்சி கடந்த வாரம் பலனளித்தது. இதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட ரிசர்வ் தொகை சுமார் ரூ.12,000 கோடி. ஆனால், டாடா குழுமத்தைச் சேர்ந்த டாலேஸ் பிரைவேட் லிமிடெட் (Talace Private Ltd) நிறுவனம் இதை ரூ.18,000 கோடி கொடுத்து தன்னகப்படுத்தியிருக்கிறது. இதனால், டாடா ஆரம்பித்த நிறுவனம் 68 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் டாடாவின் வசமே வந்துசேரும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதால், ஜே.ஆர்.டி-யின் ஆத்மா மகிழ்ச்சி அடைந்திருக்கும். அவர் அடைந்த மன உளைச்சலுக்கான மருந்தாக அமையும் என சிலர் சொல்வது மிகையில்லாத வார்த்தைதான்.

விற்பனையின் பின்னணியில் முக்கியமான விஷயங்கள்...

ஏர் இந்தியா விற்பனையில் அரசுக்கும் டாடா குழுமத்துக்குமான உடன்படிக்கையில் இருக்கும் சில முக்கியமான விஷயங்களை இனி பார்ப்போம்.

1. விற்பனைத் தொகை ரூ. 18,000 கோடி... இதில் ரூ.2,700 கோடி அரசுக்கு ரொக்கமாக வழங்கப்படும்.

2. 141 விமானங்களை இயக்குவதுடன், 55 வெளிநாடுகளில் இந்த நிறுவனத்துக்கு 3,000 தரையிறங்கும், பார்க்கிங் வசதி கிடைக்கும்.

3. பணியாளர்களின் நலன் காக்கும் பொருட்டு அடுத்த ஓராண்டுக்குப் பணியாளர்கள் (சுமார் 13,000) எவரையும் புது நிர்வாகம் வேலையைவிட்டு நீக்கக் கூடாது.

4. கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் இறையாண்மை உத்தரவாதத்தால் (Sovereign Gaurantee) பாதுகாக்கப்படும். கடன் தொகையில் ரூ.44,679 கோடியும், நிறுவனத்தின் சொத்தான ரூ.14,718 கோடியும் ‘ஏர் இந்தியா அஸெட் கோல்டிங் கம்பெனி’ என்கிற பிரத்யேக நோக்கத்துக்காக ஆரம்பிக்கப் படும் அமைப்புக்கு (special purpose vehicle) மாற்றப்படும்.

தீர்ந்தது தலைவலி...

கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசின் தலைவலியாக இருந்தது ஏர் இந்தியா நிறுவனம். காரணம், 2010 - 2021 வரையிலான பத்தாண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனம் விழுங்கிய வரிப் பணம் மட்டுமே ரூ.1,57,339 கோடி. இனியாவது மக்களின் வரிப் பணத்தை ஏர் இந்தியா வுக்குத் தந்து காப்பாற்ற வேண்டிய தேவை இருக்காது என்கிற நிம்மதியில் மத்திய அரசாங்கம் இருக்கிறது.

மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்புமா..?

டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது உணர்வுபூர்வமான முடிவாக இருந்தாலும், நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தை எப்படி லாபப் பாதைக்கு கொண்டுவரப் போகிறது என்பது முக்கியமான விஷயம் என்கிறார்கள் பலர். காரணம், அரசு நிறுவனம் என்கிற நினைப்பில் இத்தனை நாளாக வேலைபார்த்த இந்த நிறுவன ஊழியர்கள், இனி தனியார் நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் உட்பட்டுச் செயல்பட வேண்டும். இந்தத் துறையில் இருக்கும் பிற தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் நஷ்டத்தைக் குறைத்து, லாபத்தை நோக்கிச் செல்ல முடியும்.

இதற்கான திட்டத்தைத் தெளிவாக வைத்திருக்காமல் டாடா நிறுவனமும் இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்காது. டாடா நிறுவனம் ஏற்கெனவே இரு விமான நிறுவனங்களில் கணிசமாக முதலீடு செய்திருப்பதால், வாடிக்கையாளருக்குத் தேவையான சேவைகளை அந்த நிறுவனத்தால் சிறப்பாகத் தர முடியும். பல்வேறு நிறுவனங்களை சிறப்பாக நடத்தும் டாடா நிறுவனம், ஏர் இந்தியாவையும் சிறப்பாகவே நடத்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எப்படியோ, இனியாவது ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே!

 ஜவஹர்லால் நேரு,  ஜே.ஆர்.டி டாடா
ஜவஹர்லால் நேரு, ஜே.ஆர்.டி டாடா

மன உளைச்சலுக்கு ஆளான ஜே.ஆர்.டி டாடா..!

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கிய பின்பு பேசிய ரத்தன் டாடா, ‘‘இந்த நேரத்தில் ஜே.ஆர்.டி டாடா உயிரோடு இருந்திருந்தால், இந்தச் செய்தியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்திருப்பார்’’ என்று சொன்னார். அவர் இப்படிச் சொல்லக் காரணம், 68 ஆண்டுகளுக்கு முன்பு டாடா நடத்தி வந்த நிறுவனத்தை மத்திய அரசாங்கம் எடுத்துக்கொண்டபோது அதனால் மிகுந்த கவலைக்கு உள்ளானார் ஜே.ஆர்.டி டாடா. அவர் பிரதமர் நேருவைச் சந்தித்தபோது, அரசுத் தரப்பில் தனது விமானச் சேவை நிறுவனத்துக்கு பல வகையிலும் தொல்லைகள் தரப்படுவதாகவும் தனது விமானச் சேவை நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்கும் வகையில் பல காரியங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், மிகக் குறைந்த மதிப்புக்கு நிறுவனத்தை வாங்க முயற்சிகள் நடப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

அதன் பிறகு பிரதமர் நேரு, ஜே.ஆர்.டி டாடாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். விமானச் சேவை உட்பட போக்குவரத்துச் சேவை தரும் நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கிற முடிவை ஜே.ஆர்.டி டாடாவுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார். நிறுவனத்தின் மதிப்பைக் குறைத்து வாங்கும் எண்ணம் தனது அரசுக்கு இல்லை என்பதையும் டாடாவின் விமானச் சேவை அரசுடைமை ஆக்கப்பட்டு இருந்தாலும், டாடா நிறுவனத்தின் மீது தனக்கும், தனது அரசுக்கும் இருக்கும் மரியாதை மிகப் பெரியது என்றும் அந்தக் கடிதத்தில் நேரு குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வாய்ப்புள்ள நிறுவனம் தன் கைவிட்டுப் போகிறதே என்கிற எண்ணம் ஜே.ஆர்.டி டாடாவுக்கு இல்லாமல் போக வாய்ப்பு குறைவுதான். 68 ஆண்டுகள் ஆனாலும், தாங்கள் தொடங்கிய நிறுவனம் மீண்டும் தங்கள் வசமே வந்து சேர வேண்டும் என்கிற ஆசையில்தான் மற்ற நிறுவனங்களைவிட அதிக தொகை தந்து டாடா நிறுவனம் வாங்கி இருக்கிறது. உணர்வுபூர்வமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், இனி சரியாகச் செயல்பட்டு, ஏர் இந்தியா என்கிற பொக்கிஷத்தை மீண்டும் இழந்துவிடாதபடிக்கு டாடா நிறுவனம் வைத்துக்கொள்ளும் என்று நம்பலாம்!