Published:Updated:

`ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் தொடரும் வேலைநீக்கம்!' - அதிர்ச்சியில் உறைந்த பணியாளர்கள்

ஏர்லைன்ஸ்
ஏர்லைன்ஸ்

நடுத்தர தங்கும் ஹோட்டல்களில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களுக்கு மொத்த சம்பளமும் தரப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கடந்த இரண்டு மாதகாலமாக விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. இந்த முடக்கம் இன்னும் ஓரிரு மாதங்கள் தொடரக்கூடும் என்று தெரிகிறது. இதன்காரணமாக, சர்வதேச அளவில் பல ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதில் ஈடுபட்டுள்ளன.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
vikatan

உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது ஊழியர்களில் 30,000 பேர் வரை பணிநீக்கம் செய்யப் பரிசீலித்து வருகிறது. ஆனால், இதுகுறித்து வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. எமிரேட்ஸ் நிறுவனத்தில் 1,00,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். கடந்த மார்ச் மாதத் தொடக்கத்திலேயே, கொரோனா பரவல் காரணமாகச் சில நாடுகளுக்கான விமானப்போக்குவரத்தை ரத்து செய்தது. அந்த விமானங்களில் பணியாற்றும் ஊழியர்களை, சம்பளமில்லாத விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியது. மேலும் பலருக்கு 25% முதல் 50% வரை சம்பளக்குறைப்பு செய்தது. அதையடுத்து தற்போது முற்றிலும் விமானப்போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில், பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.

எமிரேட்ஸ் நிறுவனத்தைப்போலவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் கடந்த மாதத்தில் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஐரோப்பாவின் மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ரியான்ஏர் நிறுவனம், தனது ஊழியர்களில் 3,000 பேர் வரை பணிநீக்கம் செய்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் (IATA), உலகம் முழுவதுமுள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் மொத்தம் 29 லட்சம் ஊழியர்கள் வரை வேலையிழப்புக்கு உள்ளாகக்கூடும் என்று கணித்துள்ளது.

ஏர்லைன்ஸ்
ஏர்லைன்ஸ்
vikatan

ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் முடக்கப்பட்டதால், அதோடு தொடர்புடைய ஹோட்டல்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள் என அனைத்தும் பெரிய இழப்பைச் சந்தித்து வருகின்றன. இந்திய அரசு, அறிவித்துள்ள 20 லட்சம் கோடி மதிப்பிலான 'சுயச்சார்பு இந்தியா' திட்டத்தில், விமான மற்றும் விமான நிலையங்களுக்கான நீண்டகாலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், உடனடியாகப் பலன் தரக்கூடிய எந்தத் திட்டத்தையும் அறிவிக்காததால், ஏர்லைன்ஸ், ஹோட்டல்கள் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளன.

இந்திய விமானப் போக்குவரத்துத்துறை, நடப்பு காலாண்டில் சுமார் ரூ.24,000 - 25,000 கோடி அளவுக்கு வருமான இழப்பைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு 70% அளவுக்கு இழப்பு ஏற்படக்கூடும். விமான நிலையங்களில் வணிகம் செய்பவர்களுக்கு ரூ.5,000 - 5,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படக்கூடும். இந்த இழப்பு மேலும் பல மாத காலத்துக்குத் தொடரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தைத் தடுமாற வைக்கும் திவான் ஹவுஸிங், இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கல்!

இதன்காரணமாக ஹோட்டல்கள், ஏர்லைன்ஸ், டிராவல்ஸ் நிறுவன ஊழியர்கள், சம்பளக்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடுத்தர தங்கும் ஹோட்டல்களில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களுக்கு மொத்த சம்பளமும் தரப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோக்கு இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால் ஊழியர்கள் பெரிய அளவிலான வாழ்வாதாரச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, இந்த நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நிதித்திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு