Published:Updated:

`சிட் ஃபண்ட் சட்ட திருத்த மசோதா!' - அதிகரிக்கும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துமா?

சிட் ஃபண்டுகளில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன.

சிட் ஃபண்டு முறைகேடுகள்
சிட் ஃபண்டு முறைகேடுகள்

சீட்டு போட்டு பணத்தை சேமிக்கும் பழக்கம் மக்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் இருக்கிறது. ஆனால் முறைப்படுத்தப்படாத இந்தச் சேமிப்புத் திட்டத்தில், முறைகேடுகளும், பித்தலாட்டங்களும் அதிகரித்து வருகின்றன.

சாரதா சீட்டு நிறுவன மோசடி
சாரதா சீட்டு நிறுவன மோசடி

உதாரணத்துக்கு, இவ்வாண்டின் பிப்ரவரியில் மேற்கு வங்காளத்தில் நடந்த சாரதா சீட்டு நிறுவன மோசடி, அந்த மாநிலத்தையே அதிரச்செய்தது. பாதிக்கப்பட்டவர்கள், நிறுவனம் மீது புகார் கொடுக்க, பிரச்னை பூதாகரமாகி சி.பி.ஐ விசாரணை வரை சென்றது நாடறிந்ததே.

`16 மாதங்கள்; இறுகும் சாரதா சிட் பண்ட் முறைகேடு வழக்கு?’ - மோடியைச் சந்திக்கும் மம்தா

அதேபோல, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட, `திரிபுரா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தைச் சேர்ந்த, கிளை நிறுவனம் சேலம், பள்ளப்பட்டியில் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் ஒருவருக்கு, சீட்டு முதிர்வு நாள் முடிந்தும் அந்நிறுவனம் பணம் கொடுக்காமல் இருந்ததால், அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இவரைப்போல அந்நிறுவனம் பலருக்கும் சீட்டுப் பணத்தை திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மக்களிடம் சீட்டு சேமிக்கும் ஆர்வத்தாலும், சிட் ஃபண்டுகளில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தவண்ணமிருப்பதாலும் இதற்கான சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக, சிட் ஃபண்ட் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிட் ஃபண்ட் திருத்த மசோதா
சிட் ஃபண்ட் திருத்த மசோதா

விதிமுறைகள்:

* தனி நபராலும், 4 பேரைவிடக் குறைவான பங்குதாரர்களாலும் நிர்வகிக்கப்படும் சீட்டு நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்துவதற்கு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

* 4 பேருக்கும் அதிகமான பங்குதாரர்களைக் கொண்ட சீட்டு நிதி நிறுவனம் வசூலிக்கும் தொகை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.18 லட்சமாக உயர்த்துவதற்கு இந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது. இதுமட்டுமன்றி, நிதி நிறுவனத்தின் முகவருக்கான கமிஷன் தொகையை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக உயர்த்துவதற்கும் பரிந்துரைத்தது.

மாநிலங்களவையில் மசோதா மீது கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குா், ``நிதி நிறுவனங்கள் சீட்டு நடத்துவது சட்ட விரோதமான நடவடிக்கை அல்ல. முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களிலிருந்து இவை வேறுபட்டவை.

இந்த மசோதாவில் `மொத்த சீட்டுத் தொகை’, ‘வட்டித் தொகை பங்கு’, ‘நிகர சீட்டுத் தொகை’ போன்ற வார்த்தைகளுக்குப் பதிலாக முறையே, ‘சீட்டுத் தொகை’, ‘ஈவுத் தொகை’, ‘பரிசுத் தொகை’ என்ற வார்த்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்மூலம் சட்டவிரோத சீட்டு நிறுவனங்கள் தொடர்பான குழப்பத்தைக் களையலாம். நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தற்போதைய சட்டத் திருத்த மசோதாவில் ‘கடன் வழங்கும் நிறுவனம்’, ‘கூட்டு நிதி’ போன்ற வார்த்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நிதி நிறுவனங்களில் இணைபவர்கள், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்களிலும் இணைலாம். அதை மத்திய அரசு கட்டாயப்படுத்தாது" என்றார்.

சீட்டு சேமிப்பு
சீட்டு சேமிப்பு

நிதிநிறுவன சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், மசோதா சட்டவடிவு பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.