Published:Updated:

“வைராக்கியம் என்னை ஜெயிக்க வைத்தது!’’ மக்கும் பைகள் தயாரிக்கும் பன்னீர்செல்வம்!

எஸ்.டி.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.டி.பன்னீர்செல்வம்

சக்சஸ் ஸ்டோரி

"அணையாத ஜூவாலையைப்போல, நம் இலக்கானது ஆழ்மனதில் எப்போதும் நம்மைத் தூங்கவிடாமல் செய்ய வேண்டும் என்பார்கள். அதுபோலவே, ‘பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என்ற இலக்கு, விவரம் தெரிந்த காலத்திலிருந்து என் மனதில் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. அதற்காக நான் கொடுத்த உழைப்புதான், என் இலக்கை நிறைவேற்றி, என்னை ஒரு தொழில்முனைவோராகவும் அமர வைத்திருக்கிறது” – நம்பிக்கைத் ததும்ப பேசுகிறார், சென்னையிலுள்ள ‘பவானி பிளாஸ்டிக்ஸ்’ நிறுவன உரிமையாளரான எஸ்.டி.பன்னீர்செல்வம்.

எஸ்.டி.பன்னீர்செல்வம்
எஸ்.டி.பன்னீர்செல்வம்

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, எளிதில் மக்கக்கூடிய பலவிதமான பைகளைத் தயாரிக்கும் இவர், முன்னணி ஜவுளிக்கடைகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் பலவற்றுக்குமான பைகளை விற்பனை செய்வதுடன், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் செய்கிறார். இவரின் வெற்றி அனுபவத்தைத் தெரிந்துகொள்ள, கொளத்தூரிலுள்ள நிறுவனத்தில் பன்னீர்செல்வத்தைச் சந்தித்தோம்.

உசிலம்பட்டி டு சென்னை...

“மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் இருக்கும் எழுமலை கிராமம் என் பூர்வீகம். என் அப்பா விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அதைப் பார்த்து வளர்ந்த தாக்கத்தில், பிற்காலத்தில் பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் பிசினஸ் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கல்லூரிப் படிப்புக்காக, சென்னை வந்தேன். ஆனால், அந்தப் படிப்பை என்னால் முடிக்க முடியவில்லை.

பிறகு, என் மாமாவுடன் இணைந்து விவசாயக் கிணறு களுக்கான கட்டுமானப் பணி களைச் செய்துகொடுக்கும் வேலையில் சேர்ந்தேன். ஒரு கட்டத்தில், அந்தத் தொழிலில் சறுக்கல் ஏற்படவே, அதன்பிறகு, என் சகோதரியின் கணவருடன் இணைந்து பிளாஸ்டிக் பயன் பாட்டுப் பொருள்கள் விற்பனை யில் இறங்கினேன்.

“வைராக்கியம் என்னை ஜெயிக்க வைத்தது!’’ மக்கும் பைகள் தயாரிக்கும் பன்னீர்செல்வம்!

மனைவியுடன் பிசினஸ் தொடங்கினேன்...

எனக்குத் திருமணமானதும், என் மனைவி தமயந்தியுடன் இணைந்து 1980-களில் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்புக் கான நிறுவனத்தைத் தனியாக ஆரம்பித்தேன்.

முதலீடு, செலவினங்கள், தொழில் விரிவாக்கம் என ஒவ்வோர் அடியையும் நிதானமாகவும் கவனமாகவும் எடுத்து வைத்ததால், பெரிதாகச் சிக்கல்கள் இன்றி, சீரான வளர்ச்சியைப் பெற்றோம். மளிகைக்கடை, மருந்துக் கடைகள், உற்பத்தி நிறுவனங் களுக்குத் தேவையான பல விதமான பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலித்தீன் பைகளைத் தயாரித்து விற்பனை செய்தோம். நம்பிக்கை யான வாடிக்கையாளர்கள் மூலமாகவே புதுப்புது ஆர்டர் களும் எங்களுக்குக் கிடைக்க ஆரம்பித்தன.

பொறியியல் படிப்பை முடித்த தும் எங்கள் மகன் எழில்ராஜும் இதே தொழிலில் இணைந்தார். பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கவே, இந்தத் துறையில் எங்களுக்கான இருப்பை உறுதி செய்தோம்” என்று தொழிலில் காலூன்றிய விதம் குறித்துக் கூறிய பன்னீர்செல்வம், சில ஆண்டு களுக்கு முன் பிளாஸ்டிக் பயன் பாட்டுக்கான தடை வந்தபோது, மாற்றுத் தொழில் வாய்ப்புகள் குறித்து சமயோஜிதமாக முடி வெடுத்து, சிக்கலான தருணத்தை லாகவமாக எதிர்கொண்ட தன்னுடைய ‘மாத்தி யோசி’ அனுபவத்தையும் பகிர்ந்தார்.

“வைராக்கியம் என்னை ஜெயிக்க வைத்தது!’’ மக்கும் பைகள் தயாரிக்கும் பன்னீர்செல்வம்!

பிளாஸ்ட்டிக் டு மக்கும் குப்பை...

“தமிழகத்தில் 2018-ல் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு வந்ததும், ‘அடுத்து என்ன செய்வது?’ எனப் புரியாமல் சற்றுத் தடுமாறினோம். மகன் எழில்ராஜ், மக்கும் பைகள் தயாரிப்பு குறித்த அனுபவங் களைத் தெரிந்துகொண்டு எங்களிடம் கூறினார்.

பின்னர், ஏற்கெனவே பிளாஸ் டிக் பைகளைத் தயாரித்து வந்த எங்கள் இயந்திரங்களில் சில மாற்றங்களைச் செய்து, அரசு அறிவித்த காலக்கெடு முடிவதற் குள்ளாகவே எளிதில் மக்கக்கூடிய (Compostable Bags) பைகளைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம். இந்தப் பைகள் குறித்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களுக்கான பைகளைத் தொடர்ந்து தயாரித்துக் கொடுக்கிறோம்.

தற்போதைய எங்கள் தயாரிப்பு களுக்கு மக்காச்சோள மாவுதான் பிரதான மூலப்பொருள். இதை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்கிறோம். நாங்கள் தயாரிக்கும் பைகள் 135 நாள்களுக்குள் மக்கிவிடும்.

உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான நிறுவனங்களுக்குப் பல்வேறு வடிவங்களில் பைகளைத் தயாரித்துக் கொடுக்கிறோம். பிளாஸ்டிக் பைகளைப் போலவே, மக்கக்கூடிய இந்தப் பைகளிலும் பிரின்டிங் முதல் டிசைன்கள் வரை தேவைக்கேற்ற எல்லா வடிவமைப்புகளையும் உருவாக்க முடியும். தவிர, கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்படும் எளிதில் மக்கக்கூடிய உணவுத் தட்டுகள், ஸ்ட்ரா, டம்பளர்கள் போன்றவற்றையும் உற்பத்தியாளர் களிடமிருந்து வாங்கி விற்பனை செய்கிறோம்.

நாற்பதுக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் எங்கள் நிறுவனத்தில், மாதம்தோறும் 50 டன்னுக்கும் அதிகமாக உற்பத்தி நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இலக்கில் வெற்றி கண்ட சந்தோஷம் மட்டுமே எனக்கு இருந்தது. இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காத பொருள்களைத் தயாரிப்பதுடன், மக்களுக்கு நல்ல பொருளை விற்பனை செய்யும் பெரும் மனநிறைவு தற்போதுதான் கிடைத்திருக்கிறது” என்று உவகையுடன் முடித்தார் பன்னீர்செல்வம்.

‘மாத்தி யோசி’ உத்தி சிக்கலான தருணங்களில் ஜெயிக்க வைக்கும் என்பதற்கு இவர் சரியான உதாரணம்!