Published:Updated:

`5 முன்னணி விற்பனையாளர்களின் விவரங்களைக் கொடுங்கள்!'- அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு உத்தரவு

பண்டிகைக்கால தள்ளுபடி விற்பனை விலையை பிராண்டுகள்தான் நிர்ணயிக்கின்றன என்றும், தங்களுக்கு அதில் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும் ஆன்லைன் நிறுவனங்கள் மறுத்துவருகின்றன.

அமேசான், ஃப்ளிப்கார்ட் பண்டிகைக்கால விற்பனை
அமேசான், ஃப்ளிப்கார்ட் பண்டிகைக்கால விற்பனை

அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கைபடி, ஆன்லைன் விற்பனைத்துறையில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்கள், தங்கள் தளத்தில் விற்பனையாகும் பொருள்களின் விலையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தக் கூடாது என்றும் இந்த விதிமுறை கூறுகிறது. அதேபோல, தங்கள் தளத்தில் விற்கப்படும் பொருள்களுக்கான விலையில் தள்ளுபடியை ஆன்லைன் நிறுவனங்கள் நிர்ணயிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறைகளை ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆன்லைன் விற்பனைத்தளங்கள் மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அமேசான், ஃப்ளிப்கார்ட்
அமேசான், ஃப்ளிப்கார்ட்
vikatan

விலை நிர்ணயம் செய்வதில் நெறிமுறைகளைமீறிச் செயல்பட்டு ஆன்லைன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்துவருகிறது. ஆனால், பண்டிகைக்கால தள்ளுபடி விற்பனை விலையை பிராண்டுகள்தான் நிர்ணயிக்கின்றன என்றும் தங்களுக்கு அதில் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும் ஆன்லைன் நிறுவனங்கள் மறுத்துவருகின்றன. நடப்பு பண்டிகைக்கால விற்பனையில் மட்டும் இந்த இரண்டு நிறுவனங்களும் சுமார் ரூ.40,000 கோடி அளவுக்கு விற்பனை செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களிடம் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை (DPIIT) தனிப்பட்ட முறையில் பல்வேறு தகவல்களைக் கேட்டுள்ளது. அந்த நிறுவனங்களின் மூலதன அமைப்பு, பிசினஸ் மாடல் மற்றும் சரக்கு மேலாண்மை உத்திகள் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் விற்பனை மோசடி
ஆன்லைன் விற்பனை மோசடி
vikatan

மேலும், அந்த நிறுவனங்களின் தளத்திலுள்ள விற்பனையாளர்களின் விவரம், அதிக அளவில் விற்பனை செய்துள்ள 5 விற்பனையாளர்களின் பட்டியல், விற்பனையான பொருள்களின் மதிப்பு, விலை நிர்ணய முறை, பேமன்ட் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அளிக்கும்படி கேட்டுள்ளனர். இந்த விவரங்கள் அனைத்தையும் பண்டிகைக்கால விற்பனை நிறைவடைந்து அளித்த பின், அவற்றின்மீது ஆய்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.