ஃபியூச்சர் குழும பங்குகள் விவகாரம்... ரிலையன்ஸூக்கு செபி மூலம் செக் வைக்கும் அமேசான்... ஏன்?

ஃப்யூச்சர் குரூப், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தமது 30 சதவிகித பங்குகளை விற்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என்று இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபிக்கு அமேசான் நிறுவனம் தற்போது கடிதம் எழுதியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிஷோர் பியானியை தலைவராகக் கொண்ட ஃப்யூச்சர் குழும நிறுவனத்தின் 30 சதவிகித பங்குகளை 24,713 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இ-காமர்ஸ் துறையின் பெரு நிறுவனமான அமேசான் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. இதன் ஒரு பகுதியாக ஃப்யூச்சர் குரூப், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தமது 30 சதவிகித பங்குகளை விற்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என்று இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபிக்கு அமேசான் நிறுவனம் தற்போது கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக ஃப்யூச்சர் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்யூச்சர் கூப்பன் என்ற நிறுவனத்தின் 49 சதவிகிதப் பங்குகளை ரூ. 1,500 கோடி கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனம் ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் 7.3 சதவீத பங்குகளைக் கொண்டிருந்தது. அமேசான் நிறுவனம் ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை வாங்கியதன் மூலம் ஃப்யூச்சர் குழுமத்தின் 3.64 சதவிகித பங்குகள் அமேசான் நிறுவனத்துக்குச் சென்றன.
இடைப்பட்ட காலத்தில்தான் ஃப்யூச்சர் குழுமம் தமது 30 சதவிகித பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பதற்கு முற்பட்டது. தொலைத்தொடர்பு துறையில் ஜியோவை வெற்றிகரமாக இயக்கிவரும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய சில்லறை வர்த்தகத்தில் கால் பதிப்பதற்கு இந்த ஒப்பந்தம் பெருமளவில் உதவும் என்று கருதப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனமும் ஜியோ மார்ட் என்ற பெயரில் இ-காமர்ஸ் சேவையில் அமேசானுக்குப் போட்டியாகப் பொருள்களை விற்கத் தொடங்கியது. இதன் காரணமாக ரிலையன்ஸ் பங்கு உச்ச விலைக்கு செல்லத் தொடங்கியது.
இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் சர்வதேச நடுநிலை குழுவிடம் (Singapore International Arbitration Committee - சுருக்கமாக SIAC) முறையீடு செய்தது. இதன் காரணமாக விண்ணை முட்ட உயர்ந்து இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை சற்று குறையத் தொடங்கியது.
அமேசான் நிறுவனம் ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தை வாங்கும் பொழுது அதன் ஒப்பந்த ஷரத்தாக ஃப்யூச்சர் குரூப் பங்குகளை அமேசான் நிறுவனத்தின் போட்டியாளர்களுக்கு விற்கக் கூடாது என்ற தடை நிபந்தனையாக உள்ளது. அதை மீறி அமேசான் நிறுவனத்தின் போட்டியாளரான ரிலையன்ஸ் நிறுவனம் ஃப்யூச்சர் குரூப் நிறுவனப் பங்குகளை விற்பது முறையற்ற செயல். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதே அமேசானின் கோரிக்கையாகும்.
இந்த வழக்கு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் இறுதிக் கட்ட தீர்ப்பை வழங்குவதற்கு மைகேல் வாங்க் (Michael Hwang) என்பவரைத் தலைவராகக் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை SIAC அமைத்துள்ளது. மைகேல் வாங்க் சிங்கப்பூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமேசான் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஃப்யூச்சர் குரூப்பின் இந்த பரிவர்த்தனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் அமேசான் நிறுவனம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி வாதாடினார். இதில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதில் உள்ள முரண்களை முன் வைத்து அவர் வாதாடினார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம், ஃப்யூச்சர் குரூப் தமது விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக அமேசான் நிறுவனம் தற்போது செபிக்கு கடிதம் எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இந்த ஒப்பந்தத்துக்கான தடையில்லா சான்றிதழை ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்துக்கு வழங்கக் கூடாது என்று செபியை அமேசான் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக ஃப்யூச்சர் குரூப் கடுமையான கடன் நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்தியாவில் ஹெரிடேஜ், பிக் பஜார் போன்ற பல பிராண்டுகளில் தமது சில்லறை வர்த்தகத்தைப் பல நகரங்களில் அந்த நிறுவனம் செய்துகொண்டிருந்தது. இந்த நிறுவனம் பல வங்கிகளில் 12,800 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி இருந்தது. இந்தக் கடனைத் திரும்ப செலுத்துவதற்குப் பல வகைகளில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி, தமது நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு ரிலையன்ஸ்தான் முன் வந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முழுமை பெற்றால்தான் தமது நிறுவனத்தை மறுசீரமைக்க முடியும். அதுதான் தமது நிறுவனத்தில் பணியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் வேலையைக் காப்பாற்றும். ரிலையன்ஸ் நிறுவனத்துடனான பரிவர்த்தனைகளை தமது நிறுவனம் அமேசான் நிறுவனத்துக்குப் பலமுறை தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்துக்குத் தெரியாமல் எந்த ஒப்பந்தமும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அமேசான் நிறுவனம் தமக்கு ஃப்யூச்சர் குரூப் ஒப்பந்தம் நடப்பது மட்டும்தான் தெரியும். ஆனால், அதன் உள் விவரங்கள் எதையும் அந்த நிறுவனம் தம்மிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் செபி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே இந்த ஒப்பந்தம் நடைபெறும். மேலும், இந்திய நீதிமன்றத்திலும், சிங்கப்பூர் நீதிமன்றத்திலும் வழங்கப்படும் தீர்ப்பானது இதில் முக்கிய பங்கு வகிக்கும்.
நமது நாட்டில் மக்கள், அருகிலிருந்த அண்ணாச்சி கடையில் பொருள் வாங்கிக்கொண்டு இருந்தனர். இப்போது அண்ணாச்சி கடையின் இடத்தைப் பிடிப்பதற்கு பெரு நிறுவனங்களுக்கிடையே போட்டி உச்சக்கட்டத்தில் நடந்து வருகிறது.

நமது நாட்டில் இ-காமர்ஸ் துறை ஆண்டுக்கு சுமார் 25 சதவிகிதம் வளர்ச்சி அடையும் துறையாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள மக்கள் தொகை காரணமாக இந்திய சந்தை உலக அளவில் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. உலகளவில் இ-காமர்ஸ் துறையில் இந்தியா 9-வது இடத்தில் தற்போது இருக்கிறது. நமது மக்களும் இப்போது மொபைல் போன் முதல் பல் குத்தும் குச்சி வரை இப்போது இ-காமர்ஸ் நிறுவனங்களின் மூலம் வாங்கத் தொடங்கிவிட்டனர்
இந்நிலையில், அந்தச் சந்தையில் யார் ஆதிக்கம் செலுத்தப்போகிறார் என்ற போட்டிக்கான விடை காலத்தின் கையில்தான் இருக்கிறது.