Published:Updated:

அமேசானுக்குப் போட்டியாகக் களமிறங்கும் ரிலையன்ஸ்! -இறுதிக் கட்டத்தில் புதிய ஒப்பந்தம்?

ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி

அமேசான் நிறுவனத்தின் இந்திய பாட்னர் நிறுவனமான ப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் கையொப்பமிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் ப்யூச்சர் குரூப் இடையே இதுதொடர்பாக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும், அதற்கான தொகை இறுதி செய்யப்படாமல் இருப்பதால் ஒப்பந்தம் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னர், அடுத்த மாதத் தொடக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் குறித்து பொதுவெளியில் அறிவிக்கப்படாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத ரிலையன்ஸ் நிறுவன முக்கிய அதிகாரி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதி செய்திருக்கிறார்.

ப்யூச்சர் குரூப் நிறுவனங்கள்
ப்யூச்சர் குரூப் நிறுவனங்கள்
₹43,574 கோடிக்கு ஒப்பந்தம்... மிகப்பெரிய முதலீடு... ``ஜியோவுடன் இணையும் ஃபேஸ்புக்"!

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிஷோர் பியானியின் ப்யூச்சர் குரூப் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் கடன் ரூ.100 பில்லியன் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க ப்யூச்சர் குரூப் நிறுவனம், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை கடந்த சில மாதங்களாக நடத்தி வருகிறது. ப்யூச்சர் குரூப்ஸ் நிறுவனத்தின் கீழ் 5 முக்கிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. உணவு, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவைகள் விற்கும் ப்யூச்சர் கன்ஸ்யூமர் லிமிடெட், ஆடைகள், ஃபேஷன் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிராண்ட் ஃபேக்டரி உள்ளிட்டவைகளை நடத்தி வரும் ப்யூச்சர் ஃலைப்ஸ்டைல் ஃபேஷன்ஸ் லிமிடெட் உள்ளிட்டவைகள் இந்தப் பட்டியலில் அடங்கும்.

இ-காமர்ஸ் சந்தையில் முன்னணி நிறுவனமான அமேசான், ப்யூச்சர் குரூப் நிறுவனத்தோடு ஏற்கெனவே ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ப்யூச்சர் குரூப் கடந்த ஆகஸ்டில் கைகோத்தது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.

ப்யூச்சர் குரூப் நிறுவனங்கள்
ப்யூச்சர் குரூப் நிறுவனங்கள்

வால்மார்ட் - அமேசானோடு போட்டிபோடும் ரிலையன்ஸ்

ப்யூச்சர் குரூப் நிறுவனத்தோடு ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யும்பட்சத்தில் அது உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களான வால்மார்ட், அமேசான் உள்ளிட்டவைகளோடு போட்டியில் களமிறங்கும். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மார்ட் என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இ-காமர்ஸ் வணிகத்தைத் தொடங்கியது. நாட்டின் ஒருசில பகுதிகளில் மட்டுமே தற்போது இயங்கிவரும் ஜியோ மார்ட்டுக்கு ப்யூச்சர் குரூப்புடனான ஒப்பந்தம் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் கனவுத் திட்டமான ஜியோ மார்ட்ஸுக்காக ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் ஃபேஸ்புக்குடன் கைகோத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஜியோ மார்ட்டுக்காக ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீட்டை முகேஷ் அம்பானி திரட்டியிருக்கிறார்.

அதேநேரம், நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் நிறுவனம் பெரும் தொகைக்கு கடந்த 2018-ல் கையகப்படுத்தியது. இதற்காக 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்த நிறுவனம் செலவழித்ததாகத் தெரிகிறது.

ஃப்ளிப்கார்ட், அமேசான்
ஃப்ளிப்கார்ட், அமேசான்

அதேபோல், இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களுக்காக இந்தியாவில் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அமேசான் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் ப்யூச்சர் குரூப், அமேசானுடனான ஒப்பந்தத்தை இழக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு