Published:Updated:

Freshworks: கிரிஷ் மாத்ருபூதம் - சிங்கநடை போட்டு சிகரமேறிய வெற்றித் தமிழனின் கதை!

உங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் பங்கு தருகிறீர்களே, ஏன் என்று கேட்டால், ``நான் மட்டும் முன்னேறினால் போதாது; என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் முன்னேற வேண்டும்’’ என்று பதில் சொல்கிறார் கிரிஷ் மாத்ருபூதம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகத்தின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர். அமெரிக்காவின் ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் இந்தத் தமிழன் நடத்தும் பங்கை வாங்கப் போட்டி போட, அது உலகச் செய்தியாக மாறியிருக்கிறது! அவர்தான் கிரிஷ் மாத்ருபூதம். அவருடைய ஃப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பட்டியல் இடப்பட, அந்தப் பங்கு விலை முதல் நாளன்றே 32% உயர்ந்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. யார் இந்த கிரிஷ்..?

Girish Mathrubootham
Girish Mathrubootham
Photo: Mrgirish / Twitter

தமிழகத்தின் ஶ்ரீரங்கத்தில் பிறந்தவர்தான் கிரிஷ். பிள்ளைப் பருவத்திலேயே பெரும் கஷ்டத்தை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இருவரும் பிரிய, கிரிஷ் அவருடைய அத்தை வீட்டில்தான் வளர்ந்தார்.

கிரிஷின் குடும்பம் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழேதான். அவருடைய அப்பா சாதாரண நிலையில் இருந்தவர். பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்தவர், 12-ம் வகுப்பு படித்து முடித்தவுடன், இன்ஜினீயரிங் படிக்க விரும்பினார். 12-ம் வகுப்பில் அவர் நல்ல மார்க் வாங்கியிருந்ததால், தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், படிப்புச் செலவுக்கான கட்டணத்தைக் கட்ட அவருடைய அப்பாவிடம் பணம் இல்லை. பணத்தைத் திரட்ட அங்கும் இங்கும் அலைந்தார். கடன் வாங்கியாவது மகன் விரும்பும் படிப்பைப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவர் ஆசை. எங்கும் பணம் கிடைக்காத நிலையில், அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவரிடம் கடன் கேட்க, அவர் பணம் தர மறுத்ததுடன், ``மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதே’’ என்றும் அறிவுரை சொன்னார். (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே `சாஸ் பூமி’ கருத்தரங்கில் அவர் இதைச் சொல்லி, அடக்க முடியாமல் அழுதார்!) இதைக் கேட்டு கிரிஷ் மட்டுமல்ல, அவருடைய தந்தையும் மனமொடிந்து போனார். அந்தப் பேச்சு, கிரிஷின் தந்தையை ஆழமாகக் காயப்படுத்த, யார் யாரிடமெல்லாமோ கடன் கேட்டு, கல்லூரியில் பணம் கட்டி, கிரிஷை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார்.

Girish Mathrubootham
Girish Mathrubootham
Facebook Page of Girish Mathrubootham

வேலையிலிருந்து தப்பிக்க எம்.பி.ஏ

கல்லூரியில் படித்துமுடித்த கிரிஷுக்கு கேம்பஸில் வேலை கிடைக்கவில்லை. படித்து முடித்தவுடன் வேலைக்குப் போகவில்லை என்றாலே, நம்மூரில் நாலு பேர் நாலு விதமாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள் இல்லையா... ஊர் வாயை அடைக்க சென்னையில் எம்.பி.ஏ படிக்க ஆரம்பித்தார். எம்.பி.ஏ படித்துமுடிக்கிற அதே நேரத்தில், ஜாவாவைக் கற்றுத் தருவதில் கில்லாடியாகவும் இருந்தார் கிரிஷ். ஆசிரியர் வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. சிஸ்கோ நிறுவனத்தின் ஆப்ஷோர் சென்டரை அப்போது ஹெச்.சி.எல் நிறுவனம் நடத்திவர, அதில் அவருக்கு ட்ரைனர் வேலை கிடைத்தது. ``நான் அடிப்படையில் ஓர் ஆசிரியர்’’ என்று ஸ்டைலாகச் சொல்வார் கிரிஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஶ்ரீதர் வேம்பு கேட்ட கேள்வி

2001-ம் ஆண்டில் அவருக்கு ஶ்ரீதர் வேம்பு நடத்திவந்த ஜோஹோ நிறுவனத்தில் ப்ரீசேல்ஸ் என்ஜினீயராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலைக்குச் சேர்ந்த 18 மாதங்கள் வரை மற்றவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர் வேலையைத் திருப்தியாகச் செய்துகொண்டிருந்தார். அதன் பிறகுதான் அவருக்குள் புராடக்ட் டெவலப்மென்ட் குறித்த வேட்கை இருப்பதைக் கண்டுபிடித்தார். கிரிஷிடம் இருந்த அந்த ஆர்வத்தைப் பார்த்த ஶ்ரீதர் வேம்பு, ``நீ ஏன் ஒரு புராடக்ட் மேனேஜராக ஆகக் கூடாது?’’ என்று கேட்க, அது கிரிஷுக்கு சரியான ஆலோசனையாகவே பட்டது. ஆனால், அந்த நேரத்தில் புராடக்ட் மேனேஜரின் வேலை பற்றி கிரிஷூக்கு முழுமையாகத் தெரியவில்லை. என்றாலும் பலப்பல தவறுகளை செய்துதான் அந்த வேலையைக் கற்றுக்கொண்டார் கிரிஷ். ஆனால், வேலையில் அவர் காட்டிய ஆர்வம் காரணமாக 2006 முதல் 2010 வரையிலான காலத்தில் ஜோஹோ நிறுவனத்துக்கு மிகப் பெரிய அளவில் வருமானத்தைக் கொண்டுவந்து சேர்த்தார். 2010-ம் ஆண்டு ஜோஹோ நிறுவனத்தில் வைஸ் பிரசிடென்ட் என்கிற அளவுக்கு வளர்ந்தார்.

Girish Mathrubootham
Girish Mathrubootham
Facebook Page of Girish Mathrubootham

ஆறு பேருடன் தொடங்கப்பட்ட ஃபிரெஷ் டெஸ்க்

நல்ல சம்பளம், நல்ல வேலை, அன்பான மனைவி, குழந்தைகள் என நிம்மதியாக போய்க்கொண்டிருந்தது கிரிஷின் வாழ்க்கை. அந்த நிம்மதியை அனுபவித்தபடி வாழ்க்கையை ஓட்டிமுடித்துவிட கிரிஷுக்கு விருப்பமில்லை. அவரிடம் இருந்த தொழில்முனைவு அவரை சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வலியுறுத்திக்கொண்டிருந்தது. 2010-ல் ஜோஹோ நிறுவனத்தில் இருந்து விலகினார். அவருடன் வேலை பார்த்துவந்த சான் கிருஷ்ணசாமி மற்றும் நான்கு பேருடன் சேர்ந்து, ஃப்ரெஷ் டெஸ்க் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஹெச்.ஆர், ஃபைனான்ஸ் எனப் பல துறைகள் பற்றி முழுக்க தெரியாது என்றாலும் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க அதிக ஆர்வம் இருந்ததால் துணிந்து ஆரம்பித்துவிட்டார். எதையும் தொடர்ந்து செய்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும் (Learning by Doing) என்பதே அவரது அணுகுமுறை. ஒரு விஷயத்தை ஒன்றுக்கு இரண்டுமுறை செய்தால், அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்று நினைப்பவர். அந்தக் கலாசாரத்தை தன்னுடைய அலுவலகத்தில் எல்லோருக்கும் பழக்கப்படுத்தினார்.

ஆறு பேரும் இரவு பகல் என்று பார்க்காமல் உழைக்க, நிறுவனம் தொடங்கிய ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் புராடக்ட்டை வெளியிட்டார்கள். சரியாக மூன்று நாள் கழித்து, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு போன்கால் வந்தது. அவர்களுடைய புராடக்ட்டை இரண்டரை மணி நேரம் பயன்படுத்திப் பார்த்தார்கள். உடனே கிரெடிட் கார்டில் பணம் கட்டிவிட்டார்கள். (அந்த முதல் கஸ்டமர் இன்றும் வாடிக்கையாளராக இருக்கிறாராம்!) அடுத்த சில வாரங்களில் நான்கு கண்டங்களிலிருந்து ஆறு கஸ்டமர்கள் இருந்தார்கள். முதல் 100 நாள்களில் 100 கஸ்டமர்களாகக் கிடைத்தார்கள். 200 நாள்களில் இது 200-ஆக உயர்ந்தது. இன்றைக்கு கிரிஷின் நிறுவனத்தின் மொத்த கஸ்டமர்களின் எண்ணிக்கை 50,000-த்துக்கும்மேல். ஏறக்குறைய 4,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்.

Girish Mathrubootham
Girish Mathrubootham
Facebook Page of Girish Mathrubootham

தேடிவந்த வென்ச்சர் கேப்பிடல் ஃபண்ட்

நல்ல வளர்ச்சியும் நல்ல லாபமும் கிடைக்க வாய்ப்புள்ள தொழில்களில் முதலீடு செய்து, அந்த வளர்ச்சியையும் லாபத்தையும் அதிவேகத்தில் பெற நினைப்பதுதான் வென்ச்சர் கேப்பிடல் ஃபண்டுகளின் நோக்கம். `சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா இந்த வென்ச்சர் கேப்பிடல் ஃபண்டுகளைப் பற்றி பேசுவதைப் பார்த்திருப்பீர்கள். சூர்யாவைப் போலவே, இந்த வென்ச்சர் கேப்பிடல் ஃபண்டுகள் எல்லாம் தங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றுதான் கிரிஷ் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், கிரிஷின் நிறுவனம் வளரும் வேகத்தைப் பார்த்து ஆக்சல் பார்ட்னர்ஸும், டைகர் குளோபல் நிறுவனமும் தேடிவந்து முதலீடு செய்ய பேசியது.

``கடன் வாங்கியோ, வென்ச்சர் கேப்பிடல் போன்ற நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைப் பெற்றோ தொழில் செய்யக் கூடாது. நம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு மட்டுமே தொழில் செய்ய வேண்டும்’’ என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பவர் ஶ்ரீதர் வேம்பு. ஆனால், ``தொழிலைப் பெரிதாக வளர்க்க வேண்டுமெனில், வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைப் பெறுவதில் தப்பில்லை. அவர்களுக்கும் நமக்கும் சரியான புரிந்துகொள்ளல் இருந்தால் அதைத் தாராளமாகச் செய்யலாம்’’ என்று நினைப்பதுடன், ``தொழில் நன்றாக நடக்கும்போதும், முதலீட்டைப் பெற வேண்டும்; தொழில் அவ்வளவு நன்றாக நடக்கவில்லை என்றாலும் முதலீட்டைப் பெற வேண்டும்’’ என்று சொல்பவர் கிரிஷ். எனவே, வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைப் பெற்றார். இதுவரை பல்வேறு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து அவர் திரட்டி நிதி சுமார் 300 மில்லியன் டாலருக்குமேல்!

Freshdesk
Freshdesk
Facebook Page of Girish Mathrubootham

சாஸ் (SaaS) மூலம் உலகம் முழுக்க...

இத்தனை பெரிய வளர்ச்சியை கிரிஷின் ஃப்ரெஷ் வொர்க்ஸ் நிறுவனம் அடைந்திருந்தாலும், ஆரம்ப காலத்தில் சென்னையில் இருந்தபடியே பல ஆயிரம் வாடிக்கையாளர்களைப் பெற்றார் கிரிஷ். இதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது, சாஸ் (Software as a Service - SaaS) தொழில்நுட்பம். அதாவது, ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரைத் தயார் செய்து, அதை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடுவது பழைய நடைமுறை. ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரை முழுத் தொகை கொடுத்து வாங்காமல், மாதம்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறோமோ, அதற்குரிய பணத்தை மட்டும் கட்டி பயன்பெறுவது சாஸ். இந்தத் தொழில்நுட்பம் வந்தபிறகு, உலகின் எந்த நிறுவனத்துக்கு வேண்டுமானால் சாஃப்ட்வேர் சர்வீஸைத் தந்து பணம் சம்பாதிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டபிறகு, அதை முழுமையாகப் பயன்படுத்தி வளர ஆரம்பித்தார் கிரிஷ். பிற்பாடு நிர்வாகக் காரணங்களுக்காக வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்க உலகின் முக்கியமான சில நாடுகளில் சின்னச் சின்னதாக அலுவலகங்களை அமைத்தார். இன்றைக்கு இந்த நிறுவனத்தில் சுமார் 4,000 வேலைபார்க்கிறார்கள்.

கிரிஷின் நிறுவனம் அதிவேகமாக வளர்ந்த அதே நேரத்தில், அவர் தயார் செய்து அளிக்கும் புராடக்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆரம்பத்தில் சி.ஆர்.எம் என அடிப்படையான சில சேவைகளைத் தந்த அவரது நிறுவனம், பிற்பாடு பலப்பல சேவைகளை அளிக்கத் தொடங்கியதால், நிறுவனத்தின் பெயரை ஃப்ரெஷ் டெஸ்க் என்றிருந்ததை ஃப்ரெஷ் வொர்க்ஸ் என்று மாற்றினார்.

Girish Mathrubootham with Rajinikanth
Girish Mathrubootham with Rajinikanth

முதல் நாளன்று ரஜினி படம்...

உலகின் மிகப் பெரும் நிறுவனங்களுக்கு தன் சேவையை அளிக்கும் கிரிஷ் மாத்ருபூதத்துக்கு ஆதர்ஷமான மாடலாக இருப்பவர் சூப்பர் ஸ்டார். பள்ளிநாள் தொடங்கி ரஜினி நடித்த படங்கள் அனைத்தையும் பார்த்தவர். இன்பமோ, துன்பமோ ரஜினியின் வசனங்களும் பாடல்களும்தான் அவரை வழிநடத்தி இருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாணயம் விகடன் சார்பில் அவருக்கு `ஸ்டார்ட் அப் சாம்பியன்’ விருது அளிக்கப் பட்டபோது, உங்கள் லட்சியம் என்று கேட்டார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். ``சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு; சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு’’ என்கிற படையப்பா ரஜினி பாட்டைத்தான் அதற்குப் பதிலாகத் தந்தார்.

ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற அவரது நீண்ட நாள் ஆசை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தகவல் ரஜினியைச் சென்று சேர, அப்பாயின்மென்ட் கிடைத்தது. முதல் சந்திப்பு மறக்க முடியாதபடிக்கு அமைந்திருந்தது கிரிஷுக்கு. என்றாலும் ஆசை தீரவில்லை. இன்னொரு முறையும் ரஜினியைச் சந்திக்க நினைத்தார் கிரிஷ். இந்த முறை மனைவி, குழந்தைகள் சகிதம் அவர் முன்நிற்க, அமர்க்களமாய் முடிந்தது அந்த சந்திப்பு.

இப்போதுகூட ரஜினி படம் வெளியாகும் முதல் நாளன்றே அந்த தியேட்டருக்கு ஒரு ஷோவை புக் செய்துவிடுவார் கிரிஷ். தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து, அவர்களுடன் உட்கார்ந்து படத்தைப் பார்த்து ரசிப்பார்.

Girish Mathrubootham with Nanayam Business Star award
Girish Mathrubootham with Nanayam Business Star award
ரஜினிக்கு இமயமலை; ஶ்ரீதர் வேம்புவுக்குப் பொதிகை மலை; ஜோஹோ சி.இ.ஓ-வின் மறுபக்கம்!

நாஸ்டாக் லிஸ்ட்டிங்

ஒரு பில்லியன் அளவுக்கு முதலீட்டைத் திரட்ட நாஸ்டாக்கில் தன் பங்கை ஐ.பி.ஒ மூலம் வெளியிட்டிருக்கிறார் கிரிஷ். காரணம், அவரது நிறுவனம் உலக நிறுவனம். உலகம் முழுக்க உள்ள முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். நாஸ்டாக்கில் பங்கை வெளியிடுவதன்மூலம் உலகின் அனைவருக்கும் அவரது நிறுவனம் தெரியும் என்பது கூடுதல் நன்மை.

இந்த ஐ.பி.ஓ மூலம் ஏறக்குறைய ஒரு பில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டுவதுதான் கிரிஷின் திட்டம். ஒரு பங்கின் விலை 36 டாலர் என்கிற கணக்கில் ஐ.பி.ஓ வந்தது ஃப்ரெஷ் வொர்க். ஆனால், இந்த நிறுவனப் பங்கு வர்த்தகமாகத் தொடங்கிய முதல் நாளன்றே 32% விலை உயர்ந்து, 47 வரை போனது. சமீபத்தில் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் முதல் நாளன்றே இத்தனை பெரிய லாபத்தை எந்தப் பங்கும் தரவில்லை என்பது முக்கியமான விஷயம்.

Girish Mathrubootham
Girish Mathrubootham
Photo: Nasdaq / Twitter
FreshWorks: அமெரிக்க நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்ட சென்னையின் முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனம்!

500 கோடீஸ்வரர்களை உருவாக்கிய கிரிஷ்

இந்த ஐ.பி.ஓ மூலம் ஃப்ரெஷ் வொர்க் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் பங்கு மதிப்பு உயர்ந்ததுடன், இந்த நிறுவனத்தின் 500 பணியாளர்கள் கோடீஸ்வரர்களாக உயர்ந்திருக்கிறார்கள். இதில் 70 பேர் 30 வயதுக்குக்கீழ் இருக்கிறார்கள். முன்பு இந்த நிறுவனத்தின் 90% ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்கு அளிக்கப்பட்டது. ஆனால், சமீப காலத்தில் இந்த நிறுவனத்தில் பலரும் வேலைக்குச் சேர்ந்தததில் தற்போது 76% பேரிடம் மட்டும் பங்கு இருக்கிறது. உங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் பங்கு தருகிறீர்களே, ஏன் என்று கேட்டால், ``நான் மட்டும் முன்னேறினால் போதாது; என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் முன்னேற வேண்டும்’’ என்று பதில் சொல்கிறார் கிரிஷ் மாத்ருபூதம்.

இந்திய ஸ்டார்ட் அப் உலகின் சூப்பர் ஸ்டார்தான் கிரிஷ் மாத்ருபூதம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு