Published:Updated:

சூடுபிடிக்கும் GST கவுன்சில் விவகாரம்: தமிழக நிதியமைச்சரின் கோரிக்கைக்கு மத்திய அரசின் பதில் என்ன?

மோடி
மோடி

தமிழகத்தின் நிதி அமைச்சரின் ஜி.எஸ்.டி உரை குறித்தும், அவர் சொல்லியிருக்கும் விஷயங்களின் நியாயம் இருக்கிறதா, அவை நடைமுறைக்கு சாத்தியமா என்பதைத் தெரிந்துகொள்ள பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் அண்மையில் நடைபெற்றது.

வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்தக் கூட்டம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாகக் கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் எட்டு மாதங்களுக்குப்பின் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது, ``ஜி.எஸ்.டி வரிக்கான சிஸ்டம் அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது. ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு. வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு இருக்க வேண்டும்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

மாநில அரசுகளிடம் வரிப் பணத்தைப் பெற்று அதையே மத்திய அரசு திரும்பத் தருகிறது. அந்த அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தைப் பொறுத்தவரை சொந்த நிதி ஆதாரத்தில்தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது. சிறிய மாநிலங்களின் வரி வருவாய் குறைவாக இருக்கும் நிலையில், பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. வரி வருவாய் உயர்வு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி விதிப்போருக்கு வரிச் செலுத்துவதில் எளிமை என எந்தக் காரணங்களுக்கான ஜி.எஸ்.டி வரி கொண்டுவரப்பட்டதோ, அவை எதுவுமே நடைபெறவில்லை.

மாறாக, ஜி.எஸ்.டி வரி முறை அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஆட்டம் கண்டுள்ளது. முழு ஆய்வு இல்லாமல் கொண்டுவரப்பட்ட வரி அமைப்பு என்பதால், ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் கொண்டுவந்தால்தான் அது நீடிக்க முடியும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியங்கள் இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்" என்று, ஜி.எஸ்.டி விவகாரம் குறித்து சற்றே காட்டமாகப் பேசியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தமிழகத்தின் நிதி அமைச்சரின் ஜி.எஸ்.டி உரை குறித்தும், அவர் சொல்லியிருக்கும் விஷயங்களின் நியாயம் இருக்கிறதா, அவை நடைமுறைக்கு சாத்தியமா என்பதைத் தெரிந்துகொள்ள பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம்.

``புதிதாகப் பதிவியேற்றிருக்கும் பழனிவேல் தியாகராஜனுக்கு, ஜி.எஸ்.டி விவகாரத்தின் மீது புரிதல் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இதனால், அண்மையில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், தெளிவாகவும், அதே சமயம் மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாகவும் பேசி இருக்கிறார்.

மத்திய அரசு, ஜூலை 2017-ம் ஆண்டு, ஜி.எஸ்.டி அறிமுகம் செய்த போது, மாநிலங்களின் வரி வருவாய் உயர்வு ஆண்டுதோறும் (குறைந்தபட்சம்) 14 சதவிகிதமாக இருக்கும்; அவ்வாறு அதிகரிக்காவிடில், வரி இழப்பீட்டுத் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என தெரிவித்தது. ஆனால் இழப்பீட்டை தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு முறையாக கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கெஞ்சி கெஞ்சி கேட்ட பிறகே மாநிலங்களுக்கு, மத்திய அரசு இழப்பீட்டை வழங்கியிருக்கிறது. வழங்க வேண்டிய இன்னும் பல்லாயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. ஜூலை 2022-ம் ஆண்டு வரையில்தான், அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மசோதா நடைமுறையில் இருக்கும்.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

இதற்கிடையில் மாநிலங்களுக்கான இழப்பீட்டு நிதியைத் திரட்டுவதற்காக, சரக்கு மற்றும் சேவைகள் மீது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செஸ் (Compensation Cess) எனப்படும் கூடுதல் வரி விதிக்கவும் புதிய சட்டத்தை மத்திய அரசு வழிவகுத்துள்ளது. ஆனால், ஜி,எஸ்.டி வரி விதிப்பு நடைமுறையில் இருக்கின்ற வரை, மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை தருவது குறித்த தகவலை மத்திய அரசாங்கம் வெளியிடவில்லை. இதனால்தான் நிதி அமைச்சர், ஜி.எஸ்.டி விவகாரத்தில் கொடுத்த வாக்கை மீறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஜி.எஸ்.டி வேண்டவே வேண்டாம்!

மாநில அரசாங்கங்களின் வருவாய் குறையும் என்பதற்காகவே கடந்த காலத்தில் பல மாநில அரசாங்கங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மாநில அரசுகள் எதிர்பார்த்ததுபோல, இப்போது பல்வேறு நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியுள்ளன. இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் சொல்வதைக் கேட்டு கொதிப்படைந்திருக்கும் மகாராஷ்டிரா முதல்வர், `இனி ஜி.எஸ்.டி-யே வேண்டாம்; பழைய வரிமுறையையே கொண்டு வருவோம்’ என்று பேசும் அளவுக்குச் சென்றிருக்கிறார்.

`மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை!’ - ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன்

கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சரிவு மத்திய அரசின் வருவாயைப் பெரிதும் பாதித்திருப்பது உண்மைதான். அதே சமயத்தில், மாநில அரசாங்கங்களின் வருமானத்தின் அச்சாணி முறிந்து போயிருப்பதை மத்திய அரசாங்கம் கவனித்தே ஆக வேண்டும்.

தமிழகத்துக்கு ஏன் ஒரு வாக்கு?!

ஜி.எஸ்.டி.சி என்றழைக்கப்படும் ஜி.எஸ்.டி கவுன்சில்தான் ஜி.எஸ்.டி வரி சதவிகிதங்களை நிர்ணயிப்பது, வரி வசூலிப்பதற்கான சட்டங்களைக் கொண்டு வருவது, சட்டங்களை அமல்படுத்துவது, நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக வசதிகளைச் செய்துகொடுப்பது என ஜி.எஸ்.டி தொடர்பான அனைத்து விஷயங்களையும் செய்யும்.

இது ஒரு ஃபெடரல் கான்ஸ்டிடியூஷனல் பாடியாக (Federal Constitutional Body) கொண்டு வரப்பட்டிருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை போன்ற பாடிகளை நாம் லெஜிஸ்லேசன் பாடி என்று அழைக்கிறோம். லெஜிஸ்லேசன் பாடிகள் சட்டங்களைக் கொண்டு வரலாம், சட்டங்களை அனுமதிக்கலாம், சட்டத்தின் மீது விவாதிக்கலாம்... ஆனால், அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது எக்ஸிக்யூட்டிவ் பாடிகளால்தான்.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கவுன்சிலுக்கு லெஜிஸ்லேஷன் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் பாடியாக இயங்கச் சட்டத்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது எனில், அது ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு மட்டுமே.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

இந்த கவுன்சிலில், மத்திய நிதி அமைச்சர் மற்றும் மத்திய நிதி இணை அமைச்சர் என மத்திய உறுப்பினர்கள் இரண்டு பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். மாநில உறுப்பினர்கள் - 31 , டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர் அல்லது அம்மாநில அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களில் யாராவது ஒருவர். ஆக, ஜி.எஸ்.டி கவுன்சிலின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 33

ஒரு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50 சதவிகித உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும், ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 75 சதவிகித ஆதரவு ஓட்டுக்களுடன்தான் கொண்டுவர முடியும்.

மத்திய அரசின் இரு உறுப்பினர்களின் ஓட்டுகளையும் சேர்த்து 33.33% மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது. 31 மாநில உறுப்பினர்களின் ஓட்டுக்களுக்குத் தலா 2.15% ஓட்டு மதிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆக ஒரு மாற்றைத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால்கூட, குறைந்தபட்சமாக இரு மத்திய உறுப்பினர்கள் மற்றும் 20 மாநில உறுப்பினர்களின் ஓட்டுகள் அவசியம். அப்போதுதான் 75% ஓட்டுடன் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இதற்காகத்தான் ஜி.எஸ்.டி கவுன்சில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்கிற நடைமுறை பொருந்தாது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

மக்கள் தொகை அளவின்படி வாக்குகளைக் கொடுத்தால், உத்தரப்பிரதேசம் வாக்கு எண்ணிக்கையை அதிகம் பெறும். அதனால், உற்பத்தி மற்றும் வரி வசூல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையை பிரிப்பது நல்லது. அது நியாயமானதும் கூட. ஆனால், இதை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதாகத் தெரியவில்லை. மேலுல், பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் கவுன்சில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியது, அதை அடுத்த கவுன்சில் கூட்டத்தில் பேசிக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

பி.ஜே.பி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாகத்தான் நடந்துகொள்கிறார்கள். மேலைநாடுகளில், அரசின் அதிகாரமானது மேலிருந்து கீழாக பரவலாக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் மட்டும்தான். அனைத்து அதிகாரமும் மத்தியில் குவிக்கப்பட்டிருக்கிறது.

ரூ1.41 லட்சம் கோடி என்னும் உச்சம் தொட்ட ஜி.எஸ்.டி வசூல்... உண்மை நிலை என்ன?

இது வளர்ச்சியின் போக்குக்கு சரியானது கிடையாது. மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இயங்க முடியாது என்பதை நினைவில் கொண்டு, மாநில அரசுகளுக்கான உரிமையை மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்" என்றார் தெளிவாக.

அடுத்த கட்டுரைக்கு