Published:Updated:

அடுத்த சில ஆண்டுகளில் ரூ.6,000 கோடி..! ‘அனிகட் கேப்பிடல்’ பாலமுருகன்

பாலமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
பாலமுருகன்

முதலீடு

அடுத்த சில ஆண்டுகளில் ரூ.6,000 கோடி..! ‘அனிகட் கேப்பிடல்’ பாலமுருகன்

முதலீடு

Published:Updated:
பாலமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
பாலமுருகன்

வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் என்றாலே பெங்களூரு, மும்பையில் மட்டுமே இருக்கும் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனிகட் கேப்பிடல் என்னும் முதலீட்டு நிறுவனம், சென்னையில் இருந்தபடி வெற்றிகரமாகச் செயல்படுவதுடன், பல முக்கியமான முதலீடுகளைச் செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஐஏஎஸ் பாலமுருகனுடன் பேசினோம். அனிகட் கேப்பிடல் நிறுவனத்தின் முதலீட்டு முறை, தற்போதைய சந்தை நிலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார். இதோ அவர் நமக்களித்த பேட்டி...

நீங்கள் வென்ச்சர் கேப்பிடல் துறையைத் தேர்வு செய்ய என்ன காரணம்?

“தூத்துகுடி மாவட்டம் கழுகுமலை என்னுடைய சொந்த ஊர். மதுரையில் பொறியியல் படித்தேன். அதைத் தொடர்ந்து எம்.பி.ஏ-வும் படித்தேன். படித்து முடித்த பிறகு, நாங்கள் நண்பர்கள் மூன்றுபேர் டெல்லிக்குச் சென்றோம். அங்கு டி.சி.எம் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினியாகச் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து சோழமண்டலம், சிட்டி பேங்கில் பணியாற்றினேன். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் பல ஆண்டுகள் வேலை பார்த்து, இணை பொது மேலாளர் (மும்பை) என்கிற அளவுக்கு உயர்ந்தேன், 39 வயதில் (2010) இது போதும் என சென்னைக்கு வந்துவிட்டேன்.”

பாலமுருகன்
பாலமுருகன்

சென்னை வந்ததே வென்ச்சர் கேப்பிடல் நிறுவனம் தொடங்கவா?

“இல்லை. மெட்டிஸ் (metis) என்னும் ஆலோசனை நிறுவனம் தொடங்கினோம். இந்த நிறுவனம் நிதி ஆலோசனையை வழங்கியது. அப்போது கடன் மூலதனம் (structure debt financing) என்பது பிரபலமாக இல்லை. கடன் முதலீடு என்பது 90% கடன் மற்றும் 10% பங்கு என்னும் அளவில் முதலீடு செய்வது. இந்தப் பிரிவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால், இதில் கவனம் செலுத்தத் தொடங்கினோம். நானும் என்னுடைய இணை நிறுவனரும் சேர்ந்து பல நிறுவனங்களுக்கு இதுபோன்ற முதலீட்டைச் செய்தோம். சில ஆண்டுகளில் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு முதலீடு செய்திருந்தோம். அப்போதுதான் இதை நாம் ஏன் முறையாக செய்யக் கூடாது என முடிவெடுத்து அனிகட் கேப்பிடலைத் தொடங்கினோம்.

தமிழ்நாட்டில் எத்தனையோ முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. அதில் நான் முக்கியமாகக் கருதுவது கல்லணை. அதன் காரணமாகத்தான் டெல்டா மாவட்டங் களில் பசுமை நிலவுகிறது. கல்லணை கட்டியவுடன் அந்த மாற்றம் நடந்திருக்காது. அதை ஒருவர் முன்கூட்டியே கணித் திருக்க வேண்டும். கிட்டத்தட்ட வென்ச்சர் கேப்பிடலும் இதே போலதான் முன்கூட்டியே கணித்தால்தான் முதலீடு செய்ய முடியும் என்பதால், அனிகட் கேப்பிடல் எனப் பெயர் வைத்தோம். 2016-ம் ஆண்டு ஜனவரியில் எங்களுக்கு செபியின் அனுமதி கிடைத்தது.”

நீங்கள் செய்த முதலீடுகள் குறித்து சொல்ல முடியுமா?

“இதுவரை structure debt financing பிரிவில் இரு ஃபண்டுகள் உள்ளன. சுமார் 35 நிறுவனங்களில் முதலீடு செய்திருப்போம். சுமார் ரூ.865 கோடி அளவுக்கு நிதி திரட்டியிருப்போம். இது தவிர, 54 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சுமார் ரூ.220 கோடி அளவுக்கு முதலீடு செய்திருப்போம். தற்போது அடுத்த ஃபண்ட் வெளியிட்டிருக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே முதலீடு செய்து சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களில் மேலும் முதலீடு செய்ய இருக்கிறோம். மொத்தம் ரூ.500 கோடி இலக்கு. இதில் ரூ.110 கோடியை ஏற்கெனவே திரட்டிவிட்டோம்.”

பெரும்பாலான வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் பெங்களூருவில் இருக்கும்போது, நீங்கள் சென்னையில் இருப்பது சாதகமா, பாதகமா?

“பாதகம் என எதுவும் இல்லை. எங்களுக்காக பெங்களூரு விலும் நாங்கள் இருக்கிறோம். டெல்லியில் சிறிய அலுவலகம் இருக்கிறது. முதலீட்டைப் பொறுத்தவரை, ஒரு துறையுடன் நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நாங்கள் எல்லாத் துறையுடனும் நெருங்கிய தொடர்புடன் இருப்பதால், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பிரச்னை இல்லை. தவிர, கோவிட்டுக்குப் பிறகு, இருக்கும் இடம் என்கிற பிரச்னை இல்லவே இல்லை.”

நீங்கள் பெங்களூருவில் இருந்தால், டெக்னாலஜி நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருக்குமே..?

“டெக்னாலஜி நிறுவனங்களில் நாங்கள் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கிறோம். தவிர, எங்களுக்கு விருப்பமான மற்றும் நம்பிக்கை இருக்கும் துறைகளில் மட்டுமே முதலீடு செய்வோம். மற்ற துறைகளில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் சென்னையில் இருந்தபடியே இந்தியாவில் எந்த ஊரில் உள்ள நிறுவனத்திலும் / எந்தத் துறையிலும் முதலீடு செய்ய முடியும்.”

உங்களுக்கும் நிறுவனர்களுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கிறது?

“நாங்கள் முதலீடு செய்யும்போதே தெளிவான புரிந்து கொள்ளலுடன்தான் முதலீடு செய்கிறோம். அதையும் தாண்டி சிக்கல் வரும். அப்போது பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு. இதுவரை நாங்கள் முதலீடு செய்த நிறுவனங்களில் பொருளாதார இலக்குகளை அடைய முடியாமல் போன நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அரசின் சட்ட விதி களைப் பின்பற்றத் தவறும் ‘கவர்னன்ஸ்’ பிரச்னை உள்ள நிறுவனங்கள் கிடையாது. பொருளாதாரச் சிக்கலைக் கஷ்டப்பட்டால் சரிசெய்ய முடியும். ஆனால், கவர்னன்ஸில் எந்த சமரசமும் கிடையாது. நாங்கள் அனைவரும் நல்ல வர்கள் என்ற முடிவுடனே உறவைத் தொடங்குகிறோம். ஆனால், எதிரில் இருப்பவர் `தான் கெட்டவர்’ என நிரூபிக்க வேண்டும். இதுதான் எங்கள் கொள்கை.”

தமிழகத்தில் உள்ள நிறுவனங்களிடம் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டும் பழக்கம் குறைவாக இருக்கிறதே?

“இது நிறுவனர்களின் இலக்கு மற்றும் முதலீடு சார்ந்த சிக்கல். நிறுவனர்களுக்கு இலக்குதான் முக்கியம். ஏற்கெனவே இருக்கும் முதலீட் டுக்கேற்ப இலக்கை வைத்திருந் தால், அவர்களுக்கு முதலீடு தேவைப்படாது. இலக்கு அதிக மாக இருக்கும்போதுதான் முதலீடு தேவைப்படும். தற்போது இந்தச் சூழல் மாறி வருகிறது. பெரிய இலக்கு களுடன் நிறுவனர்கள் செயல் படத் தொடங்கியுள்ளனர்.”

அடுத்த இலக்கு என்ன?

“இப்போதைக்கு சுமார் ரூ.1,200 கோடி வரையில் முதலீடு செய்திருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் ரூ.6,000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்கிற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.”