கோவையில் இருப்பவர்களுக்கோ அல்லது கோவைக்குச் சென்று வந்தவர்களுக்கோ அன்னப்பூர்ணா உணவகம் குறித்து தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பிரிவுதான், அன்னப்பூர்ணா மசாலா. இந்த நிறுவனத்தை மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த விஜய் பிரசாத் (செயல் இயக்குநர்) நடத்திவருகிறார். இந்த நிறுவனம் வளர்ந்த விதம், படிப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை எனப் பல விஷயங்கள் குறித்துப் பேசினார் விஜய் பிரசாத்.
‘‘என் தாத்தாவால் 1975-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது எங்கள் குடும்பத்தின் ஓட்டலுக்கு மசாலாக்கள் தேவையானதாக இருந்தது. அதனால் ஓட்டலுக்கு வழங்குவதற்காக சிறிய அளவில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேற்கு மண்டலங்களில் மட்டும் மசாலா பொருள்களைச் சிறிய அளவில் விற்பதற்காக இந்த நிறுவனம் நடத்தப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பிரிவு என் தந்தை வசம் வந்தது.

நான் பொறியியல் படித்து சென்னையில் உள்ள நிறுவனத்தில் சில ஆண்டு காலம் பணியாற்றினேன். பின்னர், உணவுப் பிரிவில் படிப்பதற்காக (ஆராய்ச்சி) ஆஸ்திரேலியா சென்றேன். அதன்பிறகு 2012-ம் ஆண்டு நிறுவனத்தில் இணைந்தேன். புதிதாக ஆர் அண்ட் டி பிரிவைத் தொடங்கினேன். 2014-ம் ஆண்டு முதல் முழுமையாக நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.
இதுவரை சந்தையைக் கவனித்து வந்தோம். அன்னப்பூர்ணா மசாலாவுக்காக கடந்த மாதம் புதிய லோகோவினை அறிமுகம் செய்தோம். மேலும், நவம்பர் முதல் வாரத்தில் சில புதிய புராடக்ட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கிறோம்.
சந்தையில் ஏற்கெனவே பல மசாலா நிறுவனங்கள் உள்ளன. நாங்களும் இன்னொரு நிறுவனமாக (Me too) புராடக்டாக இருக்க வேண்டாம் என்பதற்காக சில மாதங்களாக சந்தையை ஆராய்ச்சி செய்தோம். அதில் ஒவ்வொரு நிறுவனத்தில் உள்ள புராடக்டுகள், சாதகங்களை ஆராய்ந்தோம். மற்ற நிறுவனங்களின் சாதகங்களை நம்மால் பின்பற்ற முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உதாரணத்துக்கு, ஒரு மசாலா நிறுவனத்தின் டிஸ்ரிபியூஷன் நெட்வொர்க் பிரமாதமாக இருக்கிறது. அதனால் நாமும் டிஸ்ரிபியூஷனில் பலம் வாய்ந்த நிறுவனமாக மாற முடியாது. நமக்கென பிரத்யேக சாதகங்களை உருவாக்க நினைத்தோம். அதற்காக பிராந்திய அடிப்படையில் உள்ள உணவு வகைகளுக்காக மசாலாவைத் தயாரிக்க திட்டமிட்டோம். (என்னென்ன வகை மசாலா என்பது நவம்பரில் முறைப்படி அறிவிப்போம்!) உதாரணமாக, திண்டுக்கல் பிரியாணிக்கென பிரத்யேக மசாலா என வைத்துக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட பிரிவை மட்டும் கவனம் கொண்டால், வளர்ச்சிக்கான வாய்ப்பு குறைவு எனக் கருத வேண்டாம். இதுபோன்ற பிரத்யேக மசாலாவைக் கொண்டுவரும்போது தமிழகத்தில் இருக்கும் அனைவரும் வாங்குவார்கள் என்பது எங்களது நம்பிக்கை.

2014-ம் ஆண்டு நான் பொறுப்பேற்றுபோது ரூ.6 கோடியாக இருந்த வருமானம் தற்போது சுமார் ரூ.35 கோடியாக இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் ரூ.200 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் இலக்கோடு பயணித்துவருகிறோம்!
தமிழகம் முழுவதும் விற்பனை மையங்கள் இருந்தாலும் பெங்களூரு உள்ளிட்ட சில வெளிமாநிலங்களில் உள்ள சில நகரங்களில் மட்டும் விநியோகம் உள்ளது. தவிர, அமெரிக்காக்காவுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். மொத்த விற்பனையில் ஏற்றுமதியின் பங்கு 5% ஆகும்'' என்றார்.
போட்டிகள் நிறைந்த மசாலா பொருள்கள் விற்பனையைப் பொறுத்தவரை, உலகில் அன்னப்பூர்ணா தனக்கென ஒரு பெயரைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.