Published:Updated:

`20 மாதங்கள்; ரூ.22 லட்சம் செலவு!' - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இன்ஃபோசிஸ் அதிகாரி

மும்பையில் இருந்துகொண்டு பெங்களூருவிலிருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அவர் வழிநடத்துவதால் இரு நகரங்களுக்குமிடையே பயணிப்பதற்காக மட்டுமே இதுவரை 22 லட்சம் ரூபாய்வரை செலவிடப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு மாறான செயல்பாடு

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் ( vikatan )

சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பரேக் மற்றும் சி.எஃப்.ஓ ஆகியோர்மீது புகாரளித்து, அதே நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் பரபரப்பான கடிதத்தை அனுப்பியிருந்தார்கள். அதையடுத்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 16.2% இறக்கம் கண்டது. பின்னர், மெல்ல மெல்ல இறக்கத்திலிருந்து மீண்டுவரும் நிலையில் தற்போது மீண்டும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இம்முறையும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவரேதான் இந்தச் சூறாவளியைக் கிளப்பியுள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பரேக்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பரேக்

'இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பரேக், நிறுவனத்தின் பொறுப்புக்கு வந்து 20 மாதங்கள் ஆனபோதும், பெங்களூரு அலுவலகத்திலிருந்து பணியாற்றாமல், மும்பையிலிருந்தபடியே பணியாற்றுகிறார். இது நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு மாறானது. அவரை பெங்களூருவுக்கு வரும்படி இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு வலியுறுத்தாமலிருப்பதன் காரணம் என்ன?' என்று அந்தப் பணியாளர் தனது புகார் கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இறங்கிய இன்ஃபோசிஸ் பங்கு விலை... திகில் கிளப்பிய விசில்புளோயர்கள்!

மும்பையிலிருந்துகொண்டு பெங்களூருவிலிருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அவர் வழிநடத்துவதால் இரு நகரங்களுக்குமிடையே பயணிப்பதற்காக மட்டுமே இதுவரை 22 லட்சம் ரூபாய்வரை செலவிடப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு மாறான செயல்பாடு என்றும் தனது புகார் கடிதத்தில் கூறியுள்ளார். இந்தப் புகாரை எழுப்பியிருப்பவர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் துறையில் பணியாற்றுவதாகக் குறிப்பிட்டாலும், தான் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை. தான் யார் என்பதை வெளிக்காட்டினால் தன்மீது பதில் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதால் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி
இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி

ஏற்கெனவே எழுப்பப்பட்ட புகார்களின்மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அதன்மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றும் இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் எழுப்பப்பட்டுள்ள இந்தப் புகாரின்மீது விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.