Published:Updated:

காரைக்குடி to கொல்லேகால்... அருண் முத்துவின் அசத்தல் தொழில் பயணம்!

பிசினஸ்

பிரீமியம் ஸ்டோரி

ஜூன் மாதம் 1989-ம் ஆண்டு 11-ம் தேதி காலை 5.30 மணி... பதினெட்டரை வயது நிரம்பிய, காரைக்குடியைச் சேர்ந்த அருணாசலம் என்கிற அருண் முத்து, செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் முடித்தகையுடன், பெங்களூருக்கு ஒரு சாதாரண இளைஞனாக வந்தார். இன்றைக்கு அவர் இரண்டு பொறியியல் நிறுவனங்களின் அதிபர், 68 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் இயற்கை விவசாயி எனப் பெரும் வளர்ச்சி கண்டிருக் கிறார். அன்று பி.எஸ்.ஏ சைக்கிளில் பயணித்த அவர், இன்றைக்கு பென்ஸிலும் ஃபார்ச்சுனரி லும் பயணிக்கிறார். இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் முயற்சியையும் நம்மிடம் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

அருண் முத்து
அருண் முத்து

மொழி படுத்திய பாடு...

‘‘பொறியியல் டிப்ளோமா முடித்த கையோடு பெங்களூர் மண்ணை மிதித்த என்னை ஒரு பெட்டிக்கடைக்காரர் `எஸ்டு’ (என்ன) எனக் கேட்டபோது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆம்ப்ட்ரானிக்ஸ் (Amphetronix) என்கிற நிறுவனத்தின் இன்டர்வியூவுக்காக பெங்களூருக்கு வந்தேன். வேலை கிடைத்தது. சம்பளம் மாதம் ரூ.1,200. எனக்குத் தமிழும், ஓரளவு ஆங்கிலமும் தெரியும். ஆனால், என் மேலதிகாரிக்கு மராத்தியும் இந்தியும், ஆங்கிலமும் தெரியும். எனவே, நான் சொல்ல வந்ததை அவருக்கு ஆங்கிலத்தில் சொல்லிப் புரியவைப்பதில் பல சிரமங்கள். மொழியின் அவசியத்தை அப்போதுதான் நான் முழுமை யாகப் புரிந்துகொண்டேன்.

காரைக்குடி to  கொல்லேகால்... அருண் முத்துவின் அசத்தல் தொழில் பயணம்!

திறமை அதிகரிக்க, கற்றுக்கொள்...

என் திறமையை மேம்படுத்தும் விஷயங் களைக் கற்றுக்கொள்ள நினைக்கும் பழக்கம் என்னிடம் சிறுவயது முதலே இருந்தது. ஏழாம் வகுப்பில் புத்தக பைண்டிங் செய்யக் கற்றுக் கொண்டு, அதன்மூலம் சிறு வருமானம் பார்த்தேன்; அதன்பின் டெய்லர் கடையில் சேர்ந்து துணி தைக்கக் கற்றுக்கொண்டேன். இதனால் தையல் செலவு மிச்சம் என்பதுடன், சிறு தொகையும் வருமானமாகக் கிடைத்தது.

பெங்களூரில் நான் செய்த வேலைக்கு கேம் (CAM) டிசைனிங் தெரிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அது தொடர்பாக மேலதி காரியைச் சந்தித்து அனுமதி கேட்க, ‘‘இதற்கு ஏன் என்னிடம் அனுமதி கேட்கிறாய்’’ என்று அவர் சொல்ல, மறுநாளே ஹெச்.எம்.டி தொழிற்சாலைக்குச் சென்று ‘கேம்’ டிசைனிங்க் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

படி, படித்ததைச் செய்துபார்...

அப்போது நான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பூனாவில் இருந்தது. அங்கிருந்து ஒரு நாள், ‘வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துவருகிற உதிரிபாகத்தை நாம் இங்கே தயாரிக்க வேண்டும்’ எனச் செய்தி வர, அதற்கான ஆட்டோமேடிக் லேத் மெஷினைத் தயாரித்து வந்த ஹெச்.எம்.டி நிறுவனம் அந்த நேரத்தில் அதைச் செய்து தர முடியாது என்று கைவிரிக்க, நாமே ஏன் அதைச் செய்யக்கூடாது என்று நினைத்து, கச்சிதமாகச் செயல்பட்டதில், வெற்றியும் கிடைத்தது. உடனே உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்; புரொமோஷன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 1994-ல் எனக்குத் திருமணமும் ஆனது.

அடுத்து, தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு மெஷினை பெங்களூருக்கு அனுப்பும்படி நாங்கள் கேட்டோம். அவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். வழக்கம் போல, அந்த மெஷினை நாங்களே அசெம்பிள் செய்துகொள் கிறோம் என்று சொல்லிவிட்டு, காரியத்தில் இறங்கினேன். ஒரு மாதம் இரவு, பகல் பார்க்காமல் உழைத்ததன் விளைவு, அதை ரெடி பண்ணி வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்ததில், அனைவருக்கும் மகிழ்ச்சி. அந்த ஆண்டும் பதவி உயர்வு, தவிர, மாதச் சம்பளம் ரூ.7,350-ஆக உயர்ந்தது.

காரைக்குடி to  கொல்லேகால்... அருண் முத்துவின் அசத்தல் தொழில் பயணம்!

தொழில்முனைவோர் ஆக்கிய பொறி...

அந்த நேரத்தில், நான் வேலைபார்த்து வந்த நிறுவனத்துக்கு ஒரு பெரிய டிஃபென்ஸ் ஆர்டர் கிடைத்தது. அதற்காக சப்-கான்ட்ராக்டர்களைத் தேடி அலைந்தோம். யாரும் கிடைக்கவில்லை. அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை. ‘பேசாமல் இந்த ஆர்டரை நாமே எடுத்துச் செய்துதந்தால் என்ன’ என்கிற பொறி என் மூளையில் தெறித்தது. பணியாளராக இருந்த என்னை ஒரு தொழில்முனைவோராக மாற்றத் தூண்டிய பொறி அது. நான் வேலைபார்த்த நிறுவனத்திடம் நம்பிக்கையோடு கேட்டேன். அவர்கள் பெரியமனதுடன் அந்த ஆர்டரை எனக்குக் கொடுத்தது என் அதிர்ஷ்டம். அவ்வளவுதான், ஒரு டிரில்லிங் மெஷின், ஒரு ஆபரேட்டர், என்னிடம் இருந்த கொஞ்சம் பணத்துடன் (என் ஐயா (தாத்தா) கொடுத்தது) ‘டர்போ இந்தியா (Turbo India’) நிறுவனத்தைத் தொடங்கினேன். பல முக்கியமான இயந்திரங்களுக்கு இண்டஸ்ட் டிரியல் கனெக்டர்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையைச் செய்துதருவதுதான் எங்கள் வேலை.

பிரச்னைகளுக்குத் தீர்வு...

நிறுவனத்தை ஆரம்பித்த சில ஆண்டுகளில் பல பிரச்னைகள். தொழிலில் நஷ்டம், இடமாற்றம், வேலை செய்ய சரியான ஆட்கள் கிடைக்காத நிலை, 1998-ம் ஆண்டு ஆசிய அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் விளைவாக உண்டான ஆர்டர் இழப்பு... இப்படி பல பிரச்னை கள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால், நான் எடுத்த முடிவில் பின்வாங்க நினைக்கவே இல்லை. தோல்விக்கானக் காரணங்களைத் தெரிந்து கொண்டு, அதைச் சமாளிக்கவும், நிறுவனத்தை நடத்துவதற்கான நிதி நிர்வாகத்தையும் நன்கு தெரிந்துகொண்டோம். முன்பு வேலைபார்த்து வந்த நிறுவனத் திலிருந்து பல ஆர்டர்களுடன், வேறு நிறுவனங்களிடம் இருந்தும் ஆர்டர்களைப் பெற்று, அவற்றை சிறப்பாகச் செய்து தந்ததில் நஷ்டம் ஒழிந்தது. அதன்பின் தொழிலை மெதுவாக விரிவாக்கம் செய்தேன்.

என் வாடிக்கையாளர்கள் தயாரித்துத் தரச் சொல்லும் பொருளை உலகத்தரத்துடன் செய்து தருவதுதான் எங்கள் நோக்கம். இன்றைக்கு எனது நிறுவனத்தில் சுமார் 140 பேர் வேலைபார்க்கிறார்கள்’’ என்று பெருமை பொங்கப் பேசினார் அருண் முத்து.

செட்டிநாடு வீடு கட்டணும்...

இவருக்கு நீண்ட நாள்களாகவே ஓர் ஆசை. அது, செட்டி நாட்டில் உள்ள தனது மூதாதையர் வீட்டைப்போல, ஒரு வீடு கட்ட வேண்டும் என்று. இதற்குத் தேவையான பொருள்களை வாங்கி, பெங்களூரிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் கொல்லேகாலில் 68 ஏக்கர் நிலம் வாங்கி, அங்கு கட்டினார். வார இறுதி நாள்கள், பண்ணை வேலை என அடிக்கடி அங்கு சென்று புத்துணர்ச்சி அடைவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.

குடும்பத்தினருடன் அருண் முத்து
குடும்பத்தினருடன் அருண் முத்து

நம்மாழ்வார் வழியில்...

அருண் முத்து, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழியைப் பின்பற்றுபவர். அவரது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அதன்படி இயற்கை விவசாயமும் செய்துவருகிறார். கொல்லேகால் பண்ணையில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன. இவற்றில் விளையும் பலவிதமான பழங்கள், காய்கறிகள், கடலை ஆகியவற்று டன் செக்கில் ஆட்டித் தயாராகும் கடலை எண்ணெய், எள் எண்ணெய், வற்றல் வகைகள் எனப் பலவிதமான பொருள்களை ‘அருணா ஃபார்ம்ஸ்’ என்கிற நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். இதை எம்.பி.ஏ படித்திருக்கும் அவரின் மகள் மீனாள் நிர்வகித்து வருகிறார்.

பொறியியல் படித்து முடித்த மூத்த மகன் முத்துராமனையும் தான் செய்யும் தொழிலில் ஈடுபடச் செய்ததுடன், அவருக்கென்று இன்னொரு பிசினஸை (Turbo India – Interconnect Solutions) 2019-ல் ஆரம்பித்துத் தந்தார். அந்த நிறுவனம் ஏற்றுமதித் துறையில் கவனத்தையும் செலுத்தி வருகிறது. இவருடைய இளைய மகன் ராமசாமி, மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

இளைஞர்களுக்கான வழிகாட்டல்...

ஒரு பிசினஸ்மேனாகப் புதிதாகத் தொழில் தொடங்க நினைக்கும் ஸ்டார்ட்அப்களுக்கு இவர் தரும் ஆலோசனை...

“1. இன்றைய இளைஞர்கள் வேலையில் சேமித்த பணத்தில் வீடு, கார் வாங்கி, கடனாளியாக்கிக்கொண்டு மாதத் தவணை கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதனால் ரிஸ்க் எடுக்க வேண்டிய வயதில் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்கள். இது மாற வேண்டும்.

2. தொழில் ஆரம்பித்த ஓரிரு வருடங்களிலேயே ‘இது நமக்கு சரியாக வராது’ என விலகுவதைத் தவிர்க்க வேண்டும். புதுத் தொழில் ஆரம்பித்தால் அதன் பலனை அனுபவிக்க நான்கு, ஐந்து ஆண்டுகள் பொறுமையோடு கடும் உழைப்பைச் செலுத்த வேண்டும்.

3. தொழில் சம்பந்தமாக வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டால், `தொழில் எல்லாம் வேண்டாம். பேசாம, ஒரு கம்பெனில வேலைக்குச் சேர்ந்து, காலத்தை ஓட்டு’ என்பார்கள். அவர்களைத் தவிர்த்து, தொழில் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். தொழில் முனைவு தொடர்பான நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலம் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்...”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு