Published:Updated:

ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கிய சென்னை ஸ்டார்ட்அப் அஸெட் ப்ளஸ்..!

விஷ்ராந்த் சுரேஷ், அவனிஷ் ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
விஷ்ராந்த் சுரேஷ், அவனிஷ் ராஜ்

ஸ்டார்ட்அப்

ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கிய சென்னை ஸ்டார்ட்அப் அஸெட் ப்ளஸ்..!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
விஷ்ராந்த் சுரேஷ், அவனிஷ் ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
விஷ்ராந்த் சுரேஷ், அவனிஷ் ராஜ்

சென்னையைப் பொறுத்தவரை, ஃபைனான்ஷியல் டெக்னாலஜி பிரிவில் புதுப்புது நிறுவனங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. 2018-ம் ஆண்டு அஸெட் ப்ளஸ் என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இணையம் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளை விற்பனை செய்துவந்த இந்த நிறுவனம், தற்போது மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குகிறது.

சென்னை ஐ.ஐ.டி-யில் படித்த விஷ்ராந்த் சுரேஷ் மற்றும் அவனிஷ் ராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த நிறுவனத்தை உருவாக்கியிருக் கிறார்கள். இரு மாதங்களுக்கு முன்பு 3.6 மில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் ரூ.30 கோடி) முதலீட்டை இந்த நிறுவனம் பெற்றது.

இன்கிரிட் நிறுவனத்தின் பூபேந்தர் சிங் மற்றும் ஜெரோதா நிறுவனர் நிதின் காமத் ஆகியோர் இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் விஷ்ராந்த்தை சந்தித்துப் பேசியபோது, நிறுவனத்தின் ஆரம்பகால செயல்பாடு உட்பட பல விஷயங்கள் குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

விஷ்ராந்த் சுரேஷ், அவனிஷ் ராஜ்
விஷ்ராந்த் சுரேஷ், அவனிஷ் ராஜ்

படிக்கும்போதே ஃபண்ட் முதலீடு...

‘‘நானும் அவனிஷும் சென்னை ஐ.ஐ.டி-யில் 2016-ம் ஆண்டு படித்து முடித்தோம். ஆனால், நாங்கள் படிக்கும்போதே ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வகுப்புகளை எடுக்கத் தொடங்கினோம். அப்போது கையில் பணப்புழக்கம் இருந்தது. அதை என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து தெரியவந்தது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தேன். தவிர, பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் குறித்து நிறைய படிக்கத் தொடங்கினேன்.

படித்து முடித்தவுடன் பல பெரிய நிறுவனங்கள் கேம்பஸுக்கு வந்தன. ஆனால், நாங்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. எங்களுடைய சீனியர்கள் தொடங்கிய ஹைப்பர்வெர்ஜ் என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இணைந்தோம். படித்து முடித்தவுடன் சி.எஃப்.ஏவும் (certified financial analyst) படித்து முடித்தேன்.

நாங்கள் வேலை பார்த்த நிறுவனத்தில் பலருடனும் உரை யாடினோம். மிகச் சிலருக்கு மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றித் தெரிந்திருந்தது. அப்போது பெரும்பாலான சேவைகள் `டு இட் யுவர்செல்ஃப்’ ஆக மாறின. அதாவது, யாரையும் எதிர்பார்க்காமல், நாமே முதலீடு செய்வதற்கேற்ற மாதிரி பல முதலீடுகள் மாறி வந்தன.

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே அதிகமான ஆவணங்களைத் தந்து, செய்ய வேண்டிய வேலையாக அப்போது இருந்தது. அதனால் எளிதாக முதலீடு செய்யும் படியான ஒரு சாஃப்ட்வேரை நாங்கள் உருவாக்க விரும்பினோம். 2018-ல் நாங்கள் இருவரும் வேலையை விட்டுவிட்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம்.

நான் சி.எஃப்.ஏ என்பதால், புராடக்ட் எப்படி வர வேண்டும் என்பதைப் பார்த்துக்கொண்டேன்; அவனேஷ், டெக்னாலஜியைப் பார்த்துக்கொண்டார். பல மாதங்களுக்கு நாங்கள் இருவர் மட்டுமே பணியாளர்கள். 100 சதுர அடிக்கும் குறைவான இடம்தான் எங்களுடைய அலுவலகமாக இருந்தது.

இணையம் மூலம் முதலீடு...

நாங்கள் நிறுவனம் தொடங்கிய சில மாதங்களுக்குள் ஒரு செயலியைத் தொடங்கினோம். வழக்கமாக, டிஸ்ட்ரி ப்யூட்டர்கள் வாடிக்கையாளர்களைச் சந்தித்து மியூச்சுவல் ஃபண்ட் விநியோகம் செய்வார்கள். நாங்கள் ஆன்லைன் மூலம் செய்தோம். அவ்வளவுதான், வித்தியாசம். இணையம் மூலம் சில விசாரணைகள் வரும். நான் பேசி அவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன். இப்படித்தான் எங்களுடைய ஆரம்ப நாள்கள் இருந்தன.

ஆனால், எங்களுடைய டெக்னாலஜியை மற்ற டிஸ்ட்ரிப்யூட் டர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்தது. ஆனால், நாங்கள் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே அந்த புராடக்டை அறிமுகம் செய்தோம்.

2018-ம் ஆண்டு இனி முதலீடு செய்யப்படும்போது வழங்கப் படும் அப்ஃப்ரென்ட் கமிஷன் (upfront commission) கிடையாது. ஆண்டுதோறும் வழங்கப்படும் ட்ரெய்ல் கமிஷன் (Trail commission) மட்டுமே தரப்படும் என செபி கூறியது. அதனால் வழக்கத்தைவிட கூடுதல் பிசினஸ் செய்தால்தான் டிஸ்ட்ரிப்யூட் டர்களுக்கு வருமானம் குறையாமல் இருக்கும் என்கிற நிலை உருவானது.

விநியோகஸ்தர்களுக்கு பல வசதிகள்...

ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர் ஒரு வாடிக்கையாளரைப் பார்த்து, அவரிடம் கையெழுத்து வாங்கி, முதலீடு செய்வதற்குள் சில வேலை நாள்களாவது ஆகிவிடும். இதைக் குறைத்தால்தான் அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியும். எங்களுடைய ஆப் மூலம் எளிதாக முதலீடு செய்ய முடியும் என்பதால், டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்கு அதைக் கொடுக்க ஆரம்பித்தோம்.

அதன் பிறகு, நாங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திப்பதை நிறுத்திவிட்டோம். நாங்கள் டிஸ்ட்ரிப்யூட்டர் களுக்குத் தேவையான வசதி யைக் செய்துகொடுத்து விட்டால் அவர்கள் அதிக பிசினஸைக் கொண்டு வருவார் கள். அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் சில சதவிகித பங்குகள் எங்களுக்கு என பிசினஸ் மாடலை மாற்றி அமைத்தோம்.

சிறிய டிஸ்ட்ரிப்யூட்டர் களுக்கு பல சவால்கள் உள்ளன. அவர்களால் தொழில்நுட்பத் துக்கு செலவு செய்ய முடியாது; அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுடனும் இணைய முடியாது, போதுமான ஆராய்ச் சிக்கும் நேரம் இருக்காது. எங்களிடம் இணையும்போது அவர்களுக்கு இந்தச் சிக்கல் களுக்கான தீர்வு கிடைத்தது.

மேலும், எங்களுடன் இணைந்தவுடன் அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளையும் விற்பனை செய்ய முடியும். அதனால் பல மாநிலங்களில் இருந்து பல டிஸ்ட்ரிப்யூட் டர்கள் எங்களுடன் இணையத் தொடங்கினார்கள். தற்போது 1,800-க்கும் மேற்பட்ட டிஸ்ட்ரி ப்யூட்டர்கள் உள்ளனர். ஒருவேளை, ஒரு டிஸ்ட்ரி ப்யூட்டர் எங்களிடம் இருந்து பிரிந்து செல்ல நினைத்தாலும், அவர்களின் வாடிக்கையாளர் கள் குறித்த தகவல்களுடன் எளிதாக வெளியேறலாம்.

நிதி திரட்டியது ஏன்?

அஸெட் ப்ளஸ் நிறுவனத்தின் நிதி நிலை குறித்து கேட்டதற்கு, ‘‘நிதி திரட்ட வேண்டும் என்கிற கட்டாயம் எங்களுக்கு ஆரம்பத் தில் இருந்தே இல்லை. நாங்கள் லாபத்தில்தான் செயல்படு கிறோம். எனினும், புதிய டெக்னாலஜியை மேம்படுத்த, புதிய புராடக்டுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்.

தற்போது மியூச்சுவல் ஃபண்ட் தவிர, கார்ப்பரேட் டெபாசிட் கொண்டு வந்திருக் கிறோம். விரைவில் காப்பீடு, கடன் எனப் பல வகையான புராடக்ட்டுகளைக் கொண்டு வர இருக்கிறோம். இதற்கு நிதி தேவைப்படுகிறது. தற்போது 60 பணியாளர்கள் உள்ளனர். இன்னும் சில மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவை. அதனால் தான் நிதி திரட்டினோம்.

மேலும், எங்களுடைய பிசினஸ் குறித்த புரிந்துகொள்ளல் உள்ள முதலீட்டாளர்களை இணைத்திருக்கிறோம். இது மிக நீண்ட கால பிசினஸ். வழக்கமான முதலீட்டாளர் எனில், அவர்களுக்கு குறுகிய காலத்தில் வெளியேறும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதனால் நீண்ட காலத்துக்கு எங்களுடன் இருப்பவர்களை மட்டும் எங்களுடன் இணைத்துக்கொண்டிருக் கிறோம்.

இலக்கு 10,000 டிஸ்ட்ரிப்யூட்டர்கள்...

தற்போது 1,800 டிஸ்ட்ரிப்யூட்டர்கள் என்னும் நிலையில் இருந்து 10,000 டிஸ்ட்ரி ப்யூட்டர்கள் என்னும் நிலையை விரைவில் அடைய வேண்டும் என்பது எங்கள் இலக்கு. நம் நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. நேரடியாக முதலீடு செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், குறைந்த தொகையை நேரடி முதலீட்டின் மூலம் செய்வதில் பிரச்னை இல்லை. ஆனால், பெரிய தொகையை சரியான ஆலோசனை இல்லாமல் முதலீடு செய்ய மாட்டார்கள் என்பதே எங்கள் கணிப்பு’’ என்று பேசி முடித்தார் விஷ்ராந்த்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இன்னும்கூட பெருவாரியான மக்களை சென்றுசேரவில்லை. அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு, மோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு இழந்து கொண்டிருக்கிறார்கள். இனி அவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கி வருவார்கள் என்பதால், இனி நன்கு வளர வாய்ப்புள்ள துறை என்பதால், இந்த ஸ்டார்ட் அப் நிறுவனமும் நல்ல வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கலாம்!