Published:Updated:

கோடைக்கு இதமளிக்கும் பாதாம் பால்... குறைந்த செலவில் சிறப்பான லாபம்!

பாதாம் பால்
பிரீமியம் ஸ்டோரி
பாதாம் பால்

தொழில் பழகுவோம் வாங்க! 16

கோடைக்கு இதமளிக்கும் பாதாம் பால்... குறைந்த செலவில் சிறப்பான லாபம்!

தொழில் பழகுவோம் வாங்க! 16

Published:Updated:
பாதாம் பால்
பிரீமியம் ஸ்டோரி
பாதாம் பால்

பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும், நறுமணமூட்டிய பாதாம் பாலின் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்வதால், இது சிறப்பான லாபம் தரக்கூடிய தொழிலாகவும் திகழ்கிறது. கோடைக்காலத்துக்கு இதமளிக்கும் பாதாம் பால் விற்பனை, சாலையோர டீக்கடை, பேக்கரி, குளிர்பானக்கடை, உணவகங்கள் எனப் பல்வேறு இடங் களிலும் ஜோராக நடப்பதால், இதன் மூலம் வர்த்தக வாய்ப்பு உறுதி செய்யப் படுகிறது. பாதாம் பால் தயாரிப்புக்கான வாய்ப்புகள் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகர் ராமசாமி தேசாய்.

கோடைக்கு இதமளிக்கும் பாதாம் பால்... குறைந்த செலவில் சிறப்பான லாபம்!

உடலுக்கு ஊக்கம் தரும்!

பாதாம் பாலைச் சூடாகவும் குளிர்ச்சியான நிலையிலும் பருகலாம். குளிர்பானங்கள் என்றாலே உடல்நலனுக்குக் கெடுதலானவை. அவற்றில் ரசாயனங்கள் சேர்க்கப் பட்டிருக்கும் என்ற பேச்சு பரவலாக உள்ள நிலையில், பாதாம் பாலானது பசும்பாலில் இருந்துத் தயாரிக்கப் படுவதாலும், ரசாயனம் மிகுதியாகச் சேர்க்கப்படாததாலும், இது உடல்நலனுக்கு ஊக்கமளிப்பதாகவே அமைகிறது.

செலவுகளைக் குறைக்கப் பழைய பாட்டில்கள்!

பாதாம் பால் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் எல்லா பகுதிகளிலும் எளிதாகக் கிடைக்கின்றன. இதன் தயாரிப்பு மிகவும் எளிமையானதுதான். பாலுடன் சர்க்கரையும் பாதாம் எசன்ஸும் குறைவான அளவிலேயே சேர்க்கப் படுவதால் உடல்நலனுக்குச் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. பாதாம் பால் தயாரிப்புடன், இதே உற்பத்தி முறையில் ரோஸ் மில்க், சாக்லேட் மில்க் உள்ளிட்ட மற்ற குளிர்பானங்களையும் தயாரிக்கலாம். குறிப்பாக, Sterilization எனப்படும் பதப்படுத்துதல் செயல்பாட்டுக்கு உட்படுத்த கண்ணாடி பாட்டில்கள் சிறந்தவை என்பதால், பாதாம் பால் தயாரிப்புக்கு இவ்வகை பாட்டில்களைப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பாட்டிலை தலா ஒரு ரூபாய் விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம். இதனால், செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம்.

இரட்டிப்பு வருமானம்!

பாக்கெட் பால், விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்த மாட்டுப்பால் அல்லது எருமைப்பால் ஆகியவற்றிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாலில் இருந்து க்ரீம் பிரித்தெடுத்து தனியாக விற்பனை செய்யலாம். பின்னர், அந்தப் பாலில் இருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். எனவே, இந்த இரண்டு விதமான விற்பனையிலும் வருமானம் கிடைக்கும். ஐஸ்க்ரீம், வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் தயாரிக்க இந்த க்ரீம் பயன்படும். கால மாற்றத்துக்கு ஏற்ப எல்லாத் தரப்பினரும் விரும்பும் வகையில் தரத்தை அதிகரிப்பது, பலவித ஃபிளேவர்களில் நறுமண மூட்டிய பால் தயாரிப்பது, பேக்கேஜிங் முறையில் புதுமை யான மாற்றங்களைச் செய்து, கட்டுப்படியான விலையிலேயே விற்பனை செய்வது போன்ற உத்திகளை மேற்கொண்டால், இந்தத் தொழிலில் சிறப்பான வளர்ச்சியை அடையலாம்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

தயாரிப்பு முறை!

கொள்முதல் செய்யப்பட்ட பாலை, Homogenization முறையில் பதப்படுத்தப்படுத்த வேண்டும். பின்னர், க்ரீம் பிரித்தெடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி பாலில் இருந்து க்ரீம் பிரித்தெடுக்க வேண்டும். க்ரீம் பிரித்தெடுக்கப் பட்ட பாலில், 7 - 8% சர்க்கரை மற்றும் 1.6% பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். ஒரு பாட்டிலுக்கு 200 மில்லி லிட்டர் வீதம் பாலை நிரப்பி, Crown cork மூடி கொண்டு மூட வேண்டும். ஒவ்வொரு முறையும் 500 பாட்டில்கள் வரை, Sterilization Tank-ல் வைத்து 120 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் 30 நிமிடங்களுக்கு வெப்பப்படுத்தி, பின்னர், பாட்டில்களைக் குளிர்விக்க வேண்டும். பாதாம் பால் தயாரிப் பானது, உணவு உற்பத்தித் துறை யில் வருவதால், FSSAI விதிகளின் படி முக்கியமான விவரங்களுடன் கூடிய லேபிளை ஒட்டி, அடுத்த 24 மணி நேரத்துக்கு அறையில் வைத்திருந்த பின்னர், பாட்டில் களை விற்பனைக்கு அனுப்பலாம்.

சிறப்பம்சங்கள்

பாட்டிலில் அடைக்கப்பட்ட பாதாம் பாலை, சில மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். அதிக ஆர்டர்கள் வந்தாலும், விரைவாகவே பாதாம் பாலைத் தயாரிக்கலாம். எல்லா காலமும் வரவேற்புள்ள தொழில் இது. மூலப்பொருள்கள் தங்கு தடையின்றிக் கிடைக்கும்.

விற்பனை வாய்ப்பு

200 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதாம் பால் தயாரிக்க, பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி, லேபிள் என அனைத்து மூலப் பொருள்களும் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ.12 அடக்கவிலை. அதை 16 - 18 ரூபாய்க்கு நாம் விற்பனை செய்யலாம். கடைக் காரர்கள் ஒரு பாட்டிலை 22 ரூபாய்க்கு விற்பனை செய்து, ரூ.4 - 6 லாபம் எடுப்பார்கள். சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய குளிர்பானக் கடை வரை உணவுப் பொருள்கள் விற்பனை நிலையங் களிலும் ஆர்டர் எடுத்து விற்பனையை மேற்கொள்ளலாம்.

கோடைக்கு இதமளிக்கும் பாதாம் பால்... குறைந்த செலவில் சிறப்பான லாபம்!

வங்கிக் கடனுதவி!

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (PMEGP) ரூ.14.25 லட்சம் கடனுடன் (Term Loan), 25% (ரூ.3.75 லட்சம்) மானியமும் பெறலாம்.

மாதம் ரூ.11 லட்சம் டேர்ன் ஓவர்!

25 லிட்டர் பாலில் ஒரு கிலோ க்ரீம் கிடைக்கும். இந்த புராஜெக்ட் அடிப்படையில் தினமும் 500 லிட்டர் பால் பயன்படுத்தும் போது அதிலிருந்து 20 கிலோ க்ரீம் எடுக்கலாம். மாதத்தில் 25 தினங்களுக்கு உற்பத்தி நடைபெறும்போது, 500 கிலோ க்ரீம் கிடைக்கும். ஒரு கிலோ க்ரீம் 200 - 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தோராயமாக ரூ.200 எனக் கணக்கிட்டால், க்ரீம் விற்பனையில் மாதத்துக்கு ரூ.1,00,000 வருமானம் ஈட்டலாம். தினமும் 500 கிலோ பாலிலிருந்து 2,500 பாட்டில்கள் பாதாம் பாலை விற்பனை செய்யலாம். ஒரு பாட்டிலை ரூ.16 வீதம் ஒரு மாதத்துக்கு 62,500 பாட்டில்கள் விற்பனை மூலம் ரூ.10,00,000 வருமானம் பெறலாம். பாதாம் பால் மற்றும் க்ரீம் விற்பனை இரண்டிலும் சேர்த்து மாதத்துக்கு ரூ.11,00,000 வருமானம் ஈட்டலாம்.

(தொழில் பழகுவோம்)