Published:Updated:

20 லட்சம் முதலீடு... 500 கோடி வர்த்தகம்... கலக்கும் பெங்களூரு தொழிலதிபர்!

பிசினஸ்

பிரீமியம் ஸ்டோரி

சூப்பர் ஐடியா, அதைச் செயல்படுத்து வதற்கான உத்தி, திறமையான குழுவினர், விடாமுயற்சி, ஓரளவுக்கு முதலீடு... இந்தப் படிநிலைகள்தான் பிசினஸில் ஜெயிக்க அவசியமானவை. இதே ஃபார்முலாவைக் கடைப்பிடித்து ஜெயித்தவர்தான் பெங்க ளூரைச் சேர்ந்த ராஜேந்திரன். பொறியியல் பட்டதாரியான இவர், தன் நண்பர்களுடன் இணைந்து 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஸ்டார்ட்அப் நிறுவனம், பெரிய ஸ்தாபனமாக வளர்ந்துள்ளது.

அரிசி ஆலைகளுக்கான இயந்திரங்களை வடிவமைக்கும் ‘மில்டெக் மெஷினரி’ என்ற இவரது நிறுவனத்தின் தயாரிப்புகள், இந்தியா விலுள்ள பெரும்பாலான ஆலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடக்கிறது. ஆச்சர்யமான இந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்திய விதம் மற்றும் இலக்கில் வெற்றி கண்ட அனுபவம் குறித்து ராஜேந்திரனிடம் பேசினோம்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

அரசுப் பள்ளியில் படிப்பு...

“என் பூர்வீகம் நீலகிரி மாவட்டம். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். பிறகு, கோவையில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தேன். அப்போதே பிசினஸ் கனவு என் மனதில் வேரூன்றியிருந்தது. ஆனால், முதலில் குடும்பத் தைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. படிப்பு முடிந்ததும் சில இடங்களில் வேலை செய்ததுடன், தொழில்முனைவோராகச் சில முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி கிடைக்கவில்லை. இருப்பினும், எனக்குள் இருந்த பிசினஸ் ஆர்வம் குறையவே இல்லை.

அரிசி ஆலை தந்த வாய்ப்பு...

அப்போதெல்லாம் அரிசி ஆலைகளுக்கான இயந்திரங்கள் வெளிநாடுகளிலிருந்துதான் பெருமளவில் இறக்குமதியாகின. அந்த இயந்திரங்களால் அரிசியில் அதிக சேதாரம் (குருணை அரிசி) ஏற்பட்டதுடன், அந்த இயந்திரங்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய சிக்கலும் ஏற்பட்டன. இதனால், செலவு மற்றும் மனித உழைப்பு அதிகம் தேவைப்பட்டது.

இந்தப் பிரச்னைகளுக்கு இயன்ற தீர்வுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். எங்களுக்கு இயந்திர வடிவமைப்புத் துறையில் அனுபவமும் ஆர்வமும் இருந்ததால், பெரும் நம்பிக்கையுடன், 1998-ல் நான்கு நண்பர்கள் சேர்ந்து சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினோம். நாங்கள் நான்கு பேருமே தலா 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். அந்த ஆரம்பக்காலம் மிகக் கடினமாக இருந்தது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வருமானமும் வரவில்லை. சில பணியாளர்களுடன், எல்லா வேலைகளையும் நாங்களே பகிர்ந்து செய்தோம்.

அரிசி தயாரிப்பில் 12 படிநிலைகள்...

ஆலைக்கு வரும் நெல்மணிகள், கிளினீங், ட்ரையிங், மில்லிங் உட்பட 12 படிநிலை களைக் கடந்துதான் விற்பனைக்கு ஏற்ற பாலீஷ் செய்யப்பட்ட அரிசியாகத் தயாராகும். இந்த ஒவ்வொரு நிலை யிலும் குறிப்பிட்ட அளவிலான அரிசி உடைந்து (குருணை அரிசி) சேதாரமாகும். 1960-களில் ஜப்பானியத் தொழில்நுட்பத்திலான அரிசி தயாரிப்புக்கான இயந்திரங்கள் இந்தியாவில் அறிமுக மாகி, அடுத்த 40 ஆண்டு களுக்கு அவை பிரபலமாக இருந்தன. அந்த இயந்திரங்களால் அரிசி தயாரிப்பில் ஆயிரம் கிலோ நெல்லிலிருந்து 60 கிலோ வரை குருணை அரிசி உருவாகின. இந்தச் சேதாரத்தில் 2 சதவிகிதத்தைக் குறைப்பதுதான் எங்கள் முதல் இலக்காக இருந்தது.

அரிசி தயாரிப்பில் மேற்சொன்ன 12 படிநிலைகளுக்கும் தனித்தனி இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அவற்றில், அரிசி அதிக அளவில் சேதாரமாகும் வொயிட்னர் (பாலீஷிங் செய்வது), ஷெல்லர் (உமியை நீக்குவது) இயந்திரங்களில் மட்டும் மறுவடிவமைப்பை முதலில் மேற்கொண்டோம்.

சோதனை முயற்சிகளில் பல்வேறு சறுக்கல்கள் ஏற்பட்டன. தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்ந்து சரிசெய்தோம். இயந்திரங்களில் கிடைமட்டமாக (Horizontal) அரிசி செல்வதற்குப் பதிலாக, செங்குத்தாக அவை பயணிக்கும்படி (Vertical) செய்ததுடன், வழக்கத்தைவிடக் குறைவான அழுத்தம் கொடுத்து, வேகம் மற்றும் வெப்பநிலை உட்பட பல காரணிகளையும் மாற்றியமைத்தோம். திட்டமிட்டபடியே அந்த இரண்டு இயந்திரங்களிலும் சேதாரமாகும் அரிசியின் அளவைக் குறைத்தோம்” என்று சொன்னவர், விற்பனையில் பெரும் சவால் காத்திருக்க, அதிலும் சாமர்த்தியமாக வெற்றி கண்டதைச் சொல்ல ஆரம்பித்தார்.

சேதாரத்தைக் குறைப்பதே நோக்கம்...

“ஆரம்பத்தில் நாங்கள் மறுவடிவமைப்பு செய்த இயந்திரங்களை, கொங்கு மண்டலம் மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளிலுள்ள ஆலையினருக்கு விற்பனை செய்தோம். அங்கேயே நாள்கணக்கில் தூங்காமல் சோதனை ஓட்டங்களை மேற்கொண்டோம். புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியிலும் ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டன. நடுத்தர அளவிலான அரிசி ஆலை ஒன்றில், அப்போதெல்லாம் ஒரு மணி நேரத்துக்குச் சராசரியாக 2,000 கிலோ அரிசி தயாராகும். நாங்கள் வடிவமைத்த இயந்திரங்களால், இந்த அளவில் 2% குருணை அரிசியின் சேதாரத்தைக் குறைத்து, 60 கிலோ அரிசியைக் கூடுதலாகத் தயாரிக்கும்படி செய்தோம். ‘இந்த இயந்திரங்களால் அரிசி உற்பத்தியைக் கணிசமாக உயர்த்தி, மின்சாரம், இயந்திரத்திறன், பணியாளர்களின் உழைப்பைப் பெருமளவில் சேமிக்கலாம் என்று நாடு முழுக்கவுள்ள பல்வேறு அரிசி ஆலைகளுக்கும் சென்று புரிய வைத்தோம். வாய்வழி விளம்பரமாக எங்களுக்கு வரவேற்பு கிடைத்து, ஆர்டர்கள் அதிகரித்தன.

பின்னர், வொயிட்னர் மற்றும் ஷெல்லர் இயந்திரங்களைப் போலவே, மற்ற பத்து இயந்திரங் களிலும் தலா 2% சேதாரத்தைக் குறைக்கும் முறையில் மறு தயாரிப்புகளை மேற் கொண்டோம். இதனால், எங்கள் நிறுவனத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்தது. வரும் வருமானத்தை அப்படியே தொழிலில் முதலீடு செய்து வந்தோம். தொழில் தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிலையான வருமான வாய்ப்புகள் உருவான பிறகு தான், நான்கு பார்ட்னர்களும் எங்களுக்கான ஊதியத்தை எடுக்க ஆரம்பித்தோம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுபவர், 2004-ல் பெங்களூரில் பெரிய தொழிற்சாலையைத் தொடங்கி யிருக்கிறார். அதன் பிறகு, மேற்கொண்ட புது முயற்சி ஒன்று, இந்த நிறுவனத்தை இந்தியா முழுக்க அடையாளப் படுத்தியிருக்கிறது.

பார்ட்னர் ரவீந்திரநாத் 
மற்றும் ஊழியர்களுடன் ராஜேந்திரன்
பார்ட்னர் ரவீந்திரநாத் மற்றும் ஊழியர்களுடன் ராஜேந்திரன்

ஒரு மணி நேரத்தில் 2 டன் அரிசி...

“நெல்மணிகள் ஆலைக்குள் வந்ததும், முதல் இயந்திரத் திலிருந்து பன்னிரண்டாவது இயந்திரத்தைக் கடந்து பாலீஷ் செய்யப்பட்ட அரிசியாக அவை மாறுவதற்கு ஓரிரு மணி நேரமாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மணி நேரத்தில் 2 டன் அரிசியைத்தான் தயாரிக்க முடியும். ஆனால், இந்த அளவை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கினோம். ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் ஜப்பானியத் தொழில்நுட்பத் திலான இயந்திரங்களில், குருணை அரிசியின் சேதாரங்களைக் குறைத்து, உற்பத்தி அளவை உயர்த்துவதற்கு ஏற்ப மறு வடிவமைப்பு செய்வது மட்டும்தான் எங்களின் பிரதான பணியாக இருந்தது. எங்கள் வருகைக்கு முன்பு, 100 கிலோ அரிசி உற்பத்தியில், உமி, குருணை, சேதாரம் அனைத்தும் போக, சராசரியாக 55 கிலோ அளவு அரிசி தயாரிக்கப்பட்டன. நாங்கள் வடிவமைத்த இயந்திரங் களின் மூலம், கூடுதலாக 2% சேர்த்து, 57 கிலோ வரை அரிசியைத் தயாரிக்க முடியும். இதையே ஓராண்டுக்குக் கணக்கிட்டால், ஓர் ஆலையில் பல லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.

பெரிய ஆலைகளில் ஒரு மணி நேரத்தில் இரண்டு டன் அளவில் நடைபெற்று வந்த உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஒரு மணி நேரத்தில் இரண்டு டன் முதல் அதிகபட்சமாக 20 டன் அரிசியை உற்பத்தி செய்யும் வகையிலான இயந்திரங்களை வடிவமைக்கிறோம். அரிசி ஆலையில் அதிக அளவில் தூசு உருவாவதுடன், இயந்திரங்களின் செயல்பாட்டால் இரைச்சலும் அதிகம் இருக்கும். இதைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியிலும் வெற்றி கண்டோம்.

பழுதான இயந்திரங்களை சரி செய்ய தனி குழு...

அரிசி ஆலையில் இயந்திரங்கள் பழுதானால் உடனடியாக சர்வீஸ் செய்துகொடுக்க, இந்தியா முழுக்கவே பயணிக்கும் வகையில் தனி குழுவையும் வைத்திருக் கிறோம். இந்தத் தொழில் வளர்ச்சிக்கு நடுவே, பிசினஸ் பார்ட்னர்கள் இருவர் விலகி விட்டனர். மற்றொரு பார்ட்னர் ரவீந்திரநாத்துடன் இணைந்து நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்படாத வகையில் வளர்ச்சியை உறுதி செய்தேன்” என்கிறார் பெருமிதத்துடன்.

இந்தியாவில் ஏறத்தாழ 35,000 அரிசி ஆலைகள் இருக்கின்றன. அவற்றில், சரிபாதி ஆலைகளில் இவரின் நிறுவன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜெர்மனி, வங்காளதேசம், நைஜீரியா உள்ளிட்ட பன்னிரண்டு நாடுகளுக்கு ஏற்றுமதி நடக்கும் நிலையில், இருநூற்றுக்கும் அதிகமான பொறியாளர்கள் உட்பட 850 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கிறார்.

சரியான திட்டமிடல் வேண்டும்...

“பல்வேறு ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டபோதும், எந்தச் சூழலிலும் எங்களின் இலக்கில் சமரசம் செய்து கொள்ளவில்லை. புது முயற்சிகளுக்கான திட்டமிடல், கற்றுக்கொள்ளும் ஆர்வம், கடின உழைப்பு... இந்தக் குணங்கள்தான் எங்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்கள். வாடிக்கையாளர்களின் உற்பத்திச் செலவு களைக் குறைத்து, அவர்களின் வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். என் முன்னேற்றத்தில் எனது குடும்பத்தினரின் பங்களிப்பு முக்கியமானது. முறையான திட்டமிடலுடன், சரியான பாதையில் பயணித்தால், எந்தத் தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்” என்று நம்பிக்கையூட்டி முடிக்கிறார் ராஜேந்திரன்.

அரிசி உற்பத்தியில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி வெற்றி பெற்ற இவர், வித்தியாசமான தொழிலதிபர்தான்!“

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு