Published:Updated:

தடுப்பூசி விலையில் ஏன் இவ்வளவு மாறுபாடு? ‘பாரத் பயோடெக்’ தலைவர் கிருஷ்ணா எல்லா Exclusive பேட்டி

கிருஷ்ணா எல்லா
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ணா எல்லா

I N T E R V I E W

தடுப்பூசி விலையில் ஏன் இவ்வளவு மாறுபாடு? ‘பாரத் பயோடெக்’ தலைவர் கிருஷ்ணா எல்லா Exclusive பேட்டி

I N T E R V I E W

Published:Updated:
கிருஷ்ணா எல்லா
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ணா எல்லா

கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிக வேகமாகவும் கோரமாகவும் இருக்கிறது. முதல் அலையில் நமக்கு தடுப்பூசி இல்லை என்பதே குறையாக இருந்தது. ஆனால், தற்போது தடுப்பூசி இருக்கிறது. ஆனால், போதிய அளவு இல்லாமல் இருக்கிறது. மேலும், கொரோனாவின் தாக்கம் முன்பை விட மிக அதிகமாக இருக்கிறது. முதல் அலையில் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால், இரண்டாம் அலையில் கிடைத்த வர்களை எல்லாம் வாரிச் சுருட்டுகிறது கொரோனா.

இந்தச் சூழலில் இந்தியாவின் முக்கியமான தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா நமக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்...

கிருஷ்ணா எல்லா
கிருஷ்ணா எல்லா

நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்தவரா..?

‘‘தமிழ்நாட்டில் திருத்தணி அருகே நெமிலி என்னும் ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். விவசாயம் சார்ந்த இளங்கலை படிப்பு முடித்தேன். அதைத் தொடர்ந்து மேற்படிப்புக்காக (மாலிகுலார் பயாலஜி) அமெரிக்கா சென்றேன். விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு, அங்கேயே வேலைக்குச் சேர்ந்தேன். அதன் பிறகு, என் அம்மா மற்றும் என் மனைவி சுசித்ரா கொடுத்த ஊக்கத்தில் 1995-ம் ஆண்டு இந்தியா திரும்பி, பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தொடங்கினேன். அமெரிக்கக் குடிமகனாக இருந்த நான் அனைத்தையும் உதறிவிட்டு இந்தியாவுக்கு வந்துவிட்டேன்.’’

தடுப்பூசி நிறுவனம் தொடங்குவதற்கு காரணம் என்ன?

“அமெரிக்காவில் மாலிகுலார் பயாலஜி படிக்கும்போது அதுவரை யிலான என்னுடைய சிந்தனை முற்றிலும் மாறியிருந்தது. நோபல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல சிந்தனையாளர்களின் உரைகளைக் கேட்கும்போது நான் சிந்திக்கும் முறையே மாறியது.

நான் படித்த படிப்பை வைத்து பொது சுகாதாரத்துறையில் பல மாற்றங்களைச் செய்ய முடியும் என நினைத்தேன். பெரிய நிறுவனங்கள் கண்டுகொள்ளாத, மண்டல வாரியாக இருக்கும் பல நோய்கள் உள்ளன. அந்த நோய்களைத் தடுப்பூசி மூலம் எளிதாகத் தடுக்க முடியும். சிக்குன்குனியா, டைபாய்டு, மலேரியா, சண்டிபுரா வைரஸ் உள்ளிட்டவற்றைத் தடுப்பூசி மூலம் தடுக்க முடியும்.

அதனால் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பலாம் என 1995-ம் ஆண்டு முடிவெடுத்தேன். முதலில் ஹெப்பாடிட்டீஸ் பி (Hepatitis B) தடுப்பூசியைக் கண்டுபிடித்தோம். அப்போது அந்தத் தடுப்பூசிக்கு இந்தியாவில் தேவையும் இருந்தது. 1998-ம் ஆண்டு முதல் புராடக்டை நாங்கள் அறிமுகம் செய்தோம். அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். தேசியத் திட்டத்துக்காக 10 ரூபாயில் 3.5 கோடி தடுப்பூசிகள் வழங்கினோம். தற்போது ஹெப்பாடிட்டீஸ் பி தடுப்பூசி தயாரிப்பதில் நாங்கள் முன்னணி நிறுவனமாக இருக்கிறோம். பாகிஸ்தான், யுனிசெப் மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

இதைத் தொடர்ந்து ரொடவாக் (ROTAVAC) மற்றும் டைபாய்டு தடுப்பூசியைத் தயாரிக்கத் தொடங்கினோம். கடந்த 25 ஆண்டுகளில் 400 கோடி தடுப்பூசிகளைத் தயாரித்திருக்கிறோம்.”

கோவாக்சின் பயணம் எப்படித் தொடங்கியது?

“பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் அடிப்படையில் கோவாக்சின் தயாரிக்கத் தொடங்கினோம். பாரத் பயோடெக், ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.வி (National institute of virology) ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து தடுப்பூசி தயாரிக்கும் பணியைத் தொடங்கினோம்.

என்.ஐ.வி நிறுவனம் கொரோனா தொற்று பாதித்தவரிடமிருந்து வைரஸைப் பிரித்துக் கொடுத்தார்கள். கடந்த ஆண்டு மே மாதம் இது நடந்தது. அந்தச் சமயத்தில் முழுமையான லாக்டெளன் இருந்ததால், எங்களுடைய ஆராய்ச்சி யாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து புனேவுக்கு சாலை மார்க்கமாகச் சென்று, அந்த வைரஸ் சாம்பிளை வாங்கி வந்தார்கள். அதைத் தொடர்ந்து இரவு பகலாக நடந்த ஆராய்ச்சியில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு தேவையான கிளினிக்கல் டிரையல் முடிந்த பிறகு, அரசின் அனுமதி கிடைத்தது.”

தடுப்பூசி வந்த சமயத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போது தேவை அதிகரித்திருக்கிறதே, ஏன்?

“75 ஆண்டுகளாகப் பயன்படுத்தப் பட்ட முறையில்தான் இந்தத் தடுப்பூசியைத் தயாரித்திருக்கிறோம். புரியும்படி சொல்ல வேண்டுமெனில், இறந்த வைரஸ் மூலம் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத்தான் இந்தத் தடுப்பூசி.

தற்போது வெற்றிகரமாக உள்ள பல தடுப்பூசிகள் இந்த முறையில் உருவாக்கப்பட்டவைதான். இன்புளுயன்ஸா, போலியோ, ராபிஸ் உள்ளிட்ட பல நோய் களுக்கு இந்த முறையில் வெற்றிகர மாகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டு வெற்றி அடைந்திருக்கிறோம்.

இந்தியா முழுவதும் பல இடங்களில் உள்ள மக்களுக்கும் சோதனை செய்தோம். இந்தத் தடுப்பூசி தீவிர பாதிப்புகளை 100% தடுக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறோம். எங்களுடைய தடுப்பூசியை சர்வதேச அளவில் எட்டு ஜர்னல்கள் ஆய்வு செய்தி ருக்கின்றன. மக்களுக்கு எது சரி, எது தவறு எனத் தெரியும். அவர்களுக்கு உண்மை புரியும்.”

வைரஸ்கள் உருமாறிக்கொண்டே இருக்கின்றன. இதற்கேற்ப தடுப்பூசி வேலை செய்யுமா?

“யு.கே வேரியன்ட்டை கோவாக்சின் தடுப்பதாக என்.ஐ.வி அறிவித்திருக்கிறது. இரட்டை மாறுபடும் வைரஸில் இருந்து கோவாக்சின் பாதுகாக் கிறது என ஐ.சி.எம்.ஆர் நடத்தியது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பிரேசில் உள்ளிட்ட சில வேரியன்ட்டுகளில் இருந்தும் கோவாக்சின் சிறப்பாகச் செயல் பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.”

சுசித்ரா
சுசித்ரா

இரண்டாம் அலை பெரிய அளவில் இருக்கும்போது மூன்றாம் அலை, நான்காம் அலை வீசும் எனச் செய்திகள் வெளியாகின்றனவே?

“வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்துகொண்டே இருக்கிறது. முதல் அலையில் வயதானவர்கள் மட்டுமே பாதிப்படைந்தனர். இரண்டாம் ஆலையில் இளைய வயதினரும் பாதிப்படைந்து வருகின்றனர்.

வைரஸ் மாறுபடுதல் மற்றும் செயல்பாட்டைக் கணிக்க முடியவில்லை. இந்த நிலையில், அனைவரும் தடுப்பூசி எடுப்பது மிக அவசியம். அதேபோல, கோவிட் விதிமுறைகளை நாம் அனைவரும் பின்பற்றும்போது தான் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும். ஒரு சமூக மாகச் சேர்ந்து போராடினால் மட்டுமே இதிலிருந்து நாம் விடுபட முடியும். அப்போதுதான் அடுத்தடுத்த அலைகளிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.”

ஒருவர் இரண்டு டோஸ் வேக்ஸின் போட்டால் அவரின் ஆயுளுக்கும் போதுமா?

“தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பிட்ட காலத்துக்கு இந்த ஆராய்ச்சியை செய்தால்தான் நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும். நீண்ட காலத்துக்கு இந்தத் தடுப்பூசி பலனைக் கொடுக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. புதிய வைரஸின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை நன்கு ஆராய்ந்த பின்னர்தான் முடிவுக்கு வரமுடியும். இப்போதைக்கு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. தற்போதைய நிலைமையில் பூஸ்டர் டோஸ்கள் போட வேண்டியிருக்கும்.”

18 வயதுக்குக்கீழ் இருப்பவர்களை எப்படி நாம் பாதுகாப்பது? குறிப்பாக, 12 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள். எதேனும் சோதனை நடந்துவருகிறதா?

“இரண்டாம் கட்ட சோதனை யில் 12 வயதைச் சேர்ந்தவர் களையும் இணைத்தோம். இந்த வயதைச் சேர்ந்தவர்களுக்கு கோவாக்சின் சிறந்த எதிர்ப்பாற்றலை வழங்குவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதனுடைய அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் நடந்துவருகின்றன. ஆய்வு முடிவுகளை ஒழுங்குமுறை ஆணையங் களிடம் சமர்பித்த பிறகு, முடிவுகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.”

தடுப்பூசி விலைகளில் ஏன் இவ்வளவு மாறுபாடு?

“விலைகளைப் பொறுத்தவரை, வெளிப்படையான அனுகுமுறையையே நாங்கள் கையாண்டு வருகிறோம். எங்களுடைய மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதத்தை மத்திய அரசு முன்பதிவு (ரூ.150) செய்திருக்கிறது. ஏற்கெனவே முன்பதிவு செய்திருப்பதால், குறைந்த விலையில் வழங்குகிறோம். மீதமுள்ளவற்றைத் தற்போது நேரடியாக மாநில அரசு கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப் பதால், ரூ.400-க்கு வழங்கு கிறோம். இதுவரை சில மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்கியிருக்கிறோம். இதற்கு அடுத்து இருக்கும் தடுப்பூசி களைத்தான் தனியார் மருத்துவ மனைக்கு கூடுதல் விலைக்கு வழங்குகிறோம்.

கடந்த 25 ஆண்டுகளாகக் குறைந்த விலையில் தடுப்பூசி தயாரிப்பதுதான் எங்களுடைய நோக்கம். ஆனால், முதலீடு செய்த தொகையை மீண்டும் எடுக்கும் பட்சத்தில்தான் அடுத்தகட்ட மற்றும் எதிர்கால ஆராய்ச்சியை நிறுவனம் செய்ய முடியும்.”

ஆண்டுக்கு எவ்வளவு தடுப்பூசி தயாரிக்கிறீர்கள்?

“சில மாதங்களுக்கு முன்பு ஆண்டுக்கு 20 கோடி தடுப்பூசி தயாரிக்கும் நிலையில் இருந்ததோம். தற்போது தேவை உயர்ந்ததை அடுத்து உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 70 கோடியாக உயர்த்தி இருக்கிறோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism