Published:Updated:

“அடிமையாக இருக்க முடியாது!” வெளியேறும் பாரத்பே நிறுவனர்

 குரோவர்
பிரீமியம் ஸ்டோரி
குரோவர்

சர்ச்சை

“அடிமையாக இருக்க முடியாது!” வெளியேறும் பாரத்பே நிறுவனர்

சர்ச்சை

Published:Updated:
 குரோவர்
பிரீமியம் ஸ்டோரி
குரோவர்

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைக்கு சமீபத்திய உதாரணம், பாரத்பே நிறுவனர் குரோவர்தான். கோட்டக் மஹிந்திரா பணியாளர்களுடன் நடத்திய உரையாடல் வெளியானது, இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ஒருவருடன் பல மாதங்களுக்கு முன்பு நடந்த மெயில் பரிவர்த்தனை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இவர் மனைவி மாதுரி ஜெயின் மீது மோசடி புகார்கள் வெளியானது. இதனால் தம்பதியர் இருவரும் மார்ச் மாதம் வரை விடுமுறையில் செல்வதாக அறிவித்தனர். விடுமுறை முடிந்து குரோவர் மீண்டும் வேலைக்கு வந்து சேருவார் என்று பார்த்தால், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஜி.எஸ்.டி-யில் குளறுபடி...

ஜி.எஸ்.டி செலுத்துவதில் உள்ள குளறுபடி களால் பாரத்பே நிறுவனம் ரூ.11 கோடி செலுத்த வேண்டியிருந்தது. அதனால் அந்தப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் உள்ள குரோவரின் மனைவி மாதுரி ஜெயின் நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்த இயக்குநர் குழு முடிவெடுத்து. பிரைஸ்வாட்டர் கூப்பர் நிறுவனத்தை ஆடிட் செய்ய நியமித்தது இயக்குநர் குழு. இவரை விசாரிக்கக் கூடாது என சிங்கப்பூர் சர்வதேசத் தீர்ப்பாயத்திடம் (எஸ்.ஐ.ஏ.சி) முறையீடு செய்தார் குரோவர். ஆனால், எஸ்.ஐ.ஏ.சி குரோவரின் முறையீட்டை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பு வந்த அடுத்த நாளே குரோவர் ராஜினாமா செய்திருக்கிறார். இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறுவதாகவும் ஆனால், ஒரு பங்குதாரராகத் தொடர்ந்து நீடிப்பதாகவும் நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

பாரத்பே நிறுவனத்தின் 9.5% பங்குகள் குரோவரிடம் உள்ளன. ரூ.4,000 கோடி தந்தால், இந்தப் பங்குகளை விற்கத் தயார் என குரோவர் சொன்னதாகத் தகவல் வெளியானது. ஆனால், கடைசியாக நிதி திரட்டும்போது உள்ள சந்தை மதிப்பின்படி பார்த்தால், இந்தப் பங்குகளின் மதிப்பு ரூ.1,800 கோடி மட்டுமே; ரூ.4,000 கோடி இல்லை எனத் தெரிய வந்திருக்கிறது.

குரோவர்
குரோவர்

ராஜினாமா கடிதம்...

``என் மீதும் என்னுடைய குடும்பம் மீதும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சில தனிநபர்கள் கூறிவருகின்றனர். இது எனக்கு மட்டுமல்லாமல், நிறுவனத்தின் நல்ல பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகிறது. இந்த சண்டையில் போட்டியிட நான் விரும்ப வில்லை. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, ஐ.ஐ.டி டெல்லி மற்றும் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் படித்து என்னுடைய உழைப்பு, நேர்மையால் வளர்ந்திருக்கிறேன். ஒரு புரொஃபஷனலாகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். இதன் காரணமாகவே இரண்டு (குரோபர் மற்றும் பாரத்பே) யுனிகார்ன் (100 கோடி டாலர் சந்தை மதிப்பு) நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறேன்.

பாரத்பே என்னுடைய குழந்தை; ஃபின்டெக் துறையில் உள்ள முக்கியமான நிறுவனமாக மாறியிருக்கிறது. இதன் காரணமாகவே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிக்கான உரிமத்தை வாங்கியிருக்கிறோம். பாரத்பே வெற்றிக்கதை முக்கியமானது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.20,000 கோடி எனக் கடந்த முறை மதிப்பிடப்பட்டது. தற்போது 40,000 கோடி ரூபாயாக நிறுவனத்தின் மதிப்பு இருக்கும். இவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்க ரூ.1,000 கோடிக்கும் குறைவாகவே நாங்கள் செலவழித்திருக்கிறோம்.

சில தனிப்பட்ட நபர்களின் ஈகோ காரணமாகவே நிர்வாகத்தில் சில பிரச்னைகளை உருவாக்கியிருக்கிறார்கள். முதலீட்டாளர்கள் வெளியில் இருந்து ஜூம் மூலமாகவே நிறுவனத்தை மதிப்பீடு செய்கிறார்கள். நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்றே முதலீட்டாளர்களுக்குத் தெரியவில்லை. தற்போது வதந்திகளையும் கிசுகிசுகளையும் நம்பி இயக்குநர் குழு மற்றும் முதலீட்டாளர்கள் முடிவெடுக்கிறார்கள். தற்போதைய சூழலில் நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்.

பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய நிறுவனர்களை முதலீட்டாளர்கள் அடிமைகள் போல நடத்துகிறார்கள். இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கும் நிறுவனர்களுக்கும் அரசன், அடிமை என்னும் சூழலிலே இருக்கிறது. நான் போராடக்கூடிய அடிமை. அதனால் நிறுவனத்தை உருவாக்கிய என்னை வெளியேற்ற விரும்புகிறீர்கள்.

நான் இல்லாமல் நிறுவனத்தை நடத்த முடியும் என நீங்கள் நினைத்ததால், அந்த சவாலை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். பாரத்பே என்னும் நிறுவனத்தை நான்தான் என்னும் அடையாளத்தை என்னிடம் இருந்து உங்களால் எடுத்துக்கொள்ள முடியாது’’ என ராஜினாமா கடிதத்தில் குரோவர் கூறியிருக்கிறார்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன என்பதை இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. ஆனால், முதலீட்டாளர்களின் அடிமையாக மட்டும் இருக்க மாட்டேன். 100% என் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனத்தை நடத்துவேன். முதலீட்டு நிறுவனமான செக்யோயா என்ன செய்தது என்பதை வெளியே சொன்னால், அவர்களால் இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது. இவர்களால் என்னுடைய கண்ணைப் பார்த்து பேச முடியாது. அவர்களுடைய கருணை எனக்குத் தேவை இல்லை. என்னுடைய கருணைதான் அவர்களுக்குத் தேவை. முதலீட்டாளர்களுக்குதான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேவை. எனக்கு முதலீட்டாளர் கள் தேவையில்லை.

நான் உருவாக்கிய நிறுவனத்தை என்னிடமிருந்து பறித்துக்கொண்டார்கள். பாரத் பே குறித்து தினமும் செய்திகளில் படிப்பது வேதனையாக இருக் கிறது. நான் எனது நிறுவனத் தைக் காப்பாற்றத் திட்ட மிடுகிறேன். ஆனால், அவர்கள் பணத்துக்காக என் நிறுவனத்தின் பெயரை அழிக்க திட்டமிடு கின்றனர்.

நான் இந்த நிறுவனத்தை விட்டுப் போனாலும் இன்னொரு புதிய நிறுவனத்தை உருவாக்க முடியும். இப்போது நிறுவனத் தைத் தொடங்கினாலும் என்னால் ரூ.1,000 கோடி திரட்ட முடியும். நான் நிறுவனர்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றுதான். முதலீட்டாளர்களிடம் அடிமை யாக இருக்காதீர்கள்’’ என்று கார சாரமாகப் பேசி இருக்கிறார் குரோவர்.

குரோவரின் இந்தப் பேச்சு கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், முதலீட்டாளர்களின் முதலீடு இல்லாமல், எந்த ஸ்டார்ட்அப் நிறுவனமும் பெரிய நிறுவனமாக வளர்ந்துவிட முடியாது. அதே சமயம், தொழில் முனைவோர்களின் சிந்தனையும், உழைப்பும் முக்கியம். எனவே, இந்த இரு தரப்பினரும் ஈகோ மோதலில் ஈடுபடாமல், மனம் விட்டுப் பேசி, பிரச்னைக்குத் தீர்வு கண்டால்தான் இரு தரப்பினரும் லாபம் பார்க்க முடியும்!