Published:Updated:

அதிக லாபம் தரும் இயற்கை எரிபொருள் தயாரிப்பு!

இயற்கை எரிபொருள்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை எரிபொருள்

தொழில் பழகுவோம் வாங்க! - 10

அதிக லாபம் தரும் இயற்கை எரிபொருள் தயாரிப்பு!

தொழில் பழகுவோம் வாங்க! - 10

Published:Updated:
இயற்கை எரிபொருள்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை எரிபொருள்

'டெல்லியில் காற்று மாசு அதிக அளவில் இருக்கிறது. தண்ணீரைப் போலவே சுவாசிக்கும் காற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே...’ என்று சில வருடங்களுக்கு முன்பு வரை நம்மில் பலரும் ஆதங்கப்பட்டிருப்போம். ஆனால், டெல்லி மக்களின் நிலை நமக்கும் ஏற்படக்கூடும் எனச் சில காலத்துக்கு முன்பு வரை நினைத்திருக்க மாட்டோம். தாவரக்கழிவுகளைத் தீயிட்டு அழிப்பதால் ஏற்படும் இத்தகைய பாதிப்பு, பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதேபோல உற்பத்தி நிறுவனங்களின் பெருக்கத்தால் எரிபொருள் பயன்பாடு அத்தியாவசியத் தேவையாக இருந்தாலும், செலவுகளைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும், எளிதான முறையில் இயற்கை எரிபொருள் (Bio-Mass Fuel) தயாரித்துப் பயன்பெற முடியும்.

அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

அதிக லாபம் தரும் இயற்கை எரிபொருள் தயாரிப்பு!

மாற்று எரிபொருளுக்கான தேவை என்ன?

வட மாநிலங்களில் பயிர் அறுவடை முடிந்ததும் கதிர்கள் உள்ளிட்ட எஞ்சிய தாவரக்கழிவுகளைத் தீயிட்டுக் கொளுத்தும் வழக்கம் அதிகம் நடைபெறுகிறது. இதனால் புகைமண்டலம் சூழ்ந்து காற்று மாசின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது. விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கும் நம் நாட்டில், வட மாநிலங்களில் மட்டுமல்லாமல், தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களிலும் தாவரக்கழிவுகளைத் தீயிட்டு அழிப்பது அல்லது குப்பையில் கொட்டும் வழக்கம் அதிகமாகவே நடைபெறுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஒருபக்கம் என்றாலும், இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் எரிபொருள் ஆற்றலை நாம் தெரிந்தோ, தெரியாமலோ வீணடிக்கிறோம்.

எரிபொருள் பயன்பாட்டுக்கு உதவும் விறகுக்காக மரங்கள் அழிப்பதால், பருவநிலை மாற்றத்துக்கு நாமும் காரணமாகிறோம். பல நேரத்தில் விறகு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவது, எரிபொருள் பயன்பாட்டுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படுவது, ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணத்தால் தக்க சமயத்தில் எரிபொருளைப் பயன்படுத்துவதில் தடங்கல்கள் ஏற்படுவது போன்ற சிக்கல்களும் தொடர்கின்றன. எனவேதான், இயற்கையாகவே கிடைக்கும் பயிர்க் கழிவுகளை முறையே சேமித்து எரிபொருளாகத் தயாரித்துப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பும் தேவையும் ஏற்படுகிறது.

அதிக லாபம் தரும் இயற்கை எரிபொருள் தயாரிப்பு!

எவை எல்லாம் பயன்படும்?

நெல் வைக்கோல், மரச் சருகுகள், கரும்புச்சக்கை, நிலக்கடலை, பருத்தி, ஆமணக்கு, காபி ஆகியவற்றின் மேற்புற ஓடுகள், வாழை மரக்கழிவுகள், மரத்தூள், கருவேலமரம் போன்றவற்றை இயற்கை எரிபொருளுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். இந்த எரிபொருள்களை எல்லாம் தனித்தனியாகவோ அல்லது இதுபோன்ற கழிவுகள் பலவற்றையும் ஒன்றாகச் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

அதிக லாபம் தரும் இயற்கை எரிபொருள் தயாரிப்பு!

மாற்று எரிபொருளை எப்படித் தயாரிப்பது?

இந்தத் தயாரிப்புக்கு மூன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தூளாக்கும் இயந்திரத்தில் மூலப்பொருள்களை முதலில் அரைத்து, பின்னர் காயவைக்கும் இயந்திரத்தில் உலர்த்தி, கட்டியாக மாற்றும் இயந்திரத்தில் அதிக அழுத்தம் கொடுத்து விறகு அல்லது கட்டி வடிவத்துக்கு மாற்றி, பேக் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். மூலப்பொருள் பவுடர் வடிவில் இருந்தால், நேரடியாக காயவைக்கும் இயந்திரத்தில் உலர்த்தி, கட்டிகளாக மாற்றலாம்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

பேக்கரி, உணவகங்கள், செங்கல் சூளைகள், தேயிலைத் தொழிற்சாலைகள், எண்ணெய் உற்பத்தித் தொழிற்சாலை, பேப்பர் மில் போன்று விறகுகள் பயன்பாடு அதிகம் தேவைப்படும் இடங் களிலும், பாய்லர் தேவைக்காக விறகுகள் பயன்படுத்தப்படும் இடங்களிலும் பயன்படுத்தலாம்.

அதிக லாபம் தரும் இயற்கை எரிபொருள் தயாரிப்பு!

சாதகமான விஷயங்களே அதிகம்...

மாற்று எரிபொருள் தயாரிப் புக்கு, மூலப்பொருள்களை அதிகமாகச் சேகரிப்பதற்கு ஏற்ப, உற்பத்தியை அதிகரித்து, கூடுதலான வருமானம் ஈட்ட முடியும்.

பெரும்பாலும் கிராமப் புறங்களில் பயிர்க்கழிவு / தாவரக் கழிவுகளைப் பயன்படுத்த யாருமே ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதுபோன்ற சூழலைப் பயன் படுத்தி, வீணாகக் கிடக்கும் எரிபொருளுக்கான மூலப் பொருள்களை முறையாகச் சேகரித்துப் பயன்பெறலாம். ஒரு டன் 2,000 ரூபாய் என்ற குறைவான விலையில் மூலப்பொருள்களை வாங்கலாம்.

மாற்று எரிபொருளானது விறகை விடவும் கூடுதலான நேரம் எரியும். புகையும் அதிகம் வராது. மேலும், மாற்று எரிபொருள் தயாரிப்புக்குக் குறைவான பணியாளர்களே போதும்.

வங்கிக் கடனுதவி...

இந்தத் தொழிலுக்குத் திட்ட மதிப்பீடாக 62 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதில், ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் 58.90 லட்சம் ரூபாய் வங்கிக் கடனும், அதில் 25% மானியமும் பெறலாம்.

மாத வருமானம் 13,75,000 ரூபாய்!

தினமும் பத்து டன் வீதம், ஒரு மாதத்தில் 25 தினங்களுக்கு 250 டன் எரிபொருளைத் தயாரிக்கலாம். சராசரியாக ஒரு டன் 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் கொண்டால், 250 டன்னுக்கு 13,75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இந்தத் தொழிலைத் தொடங்கும் முன் இதிலுள்ள வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து அறிந்து தெரிந்துகொள்வது அவசியம்!

(தொழில் பழகலாம்)

தர்மராஜன்
தர்மராஜன்

“சரியான முறையில் டெலிவரி செய்தால் வளர்ச்சி உறுதி!”

திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்திலுள்ள ‘Saravana Agro Fuels’ நிறுவனத்தின் உரிமையாளரான தர்மராஜன், இயற்கை எரிபொருள் தயாரிப்புத் தொழிலில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அவரிடம் பேசுகையில், “இந்தத் தொழிலில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கான வர்த்தக வாய்ப்பை உறுதி செய்து அவர்களுக்குத் தொடர்ந்து நம் தயாரிப்பைக் கொடுத்து வந்தால், எந்தச் சிக்கலுமின்றி தொழிலை நடத்தலாம். மழைக்காலத்தில் விறகுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் கூடுதலான வருமானம் ஈட்டலாம். டன் கணக்கில் மூலப்பொருள் தேவைப்படுவதால், கேரளாவிலிருந்து மரத்தூளையும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கடலை ஓட்டையும், உள்ளூரில் மரங்களையும் கொள்முதல் செய்கிறோம். அனுபவம் கூடுதலாக இருப்பதால், தற்போது மாதம் 750 டன் உற்பத்தியை மேற்கொள்கிறோம். மூலப்பொருளைத் தட்டுப்பாடின்றி பெற வேண்டும். வாடிக்கையாளர்களுக்குச் சரியான முறையில் நம் உற்பத்திப் பொருளை டெலிவரி செய்தால் வளர்ச்சியை உறுதிசெய்யலாம்” என்று சாதகமாக வழிகாட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism