Published:Updated:

கறுப்பு மிளகில் இருந்து வெள்ளை மிளகு... அசத்தும் கோவை ஸ்டார்ட்அப்! மாத்தி யோசித்து ஜெயித்த நிறுவனம்!

லிபின் தேவ், தங்கவேலு
பிரீமியம் ஸ்டோரி
லிபின் தேவ், தங்கவேலு

B U S I N E S S

கறுப்பு மிளகில் இருந்து வெள்ளை மிளகு... அசத்தும் கோவை ஸ்டார்ட்அப்! மாத்தி யோசித்து ஜெயித்த நிறுவனம்!

B U S I N E S S

Published:Updated:
லிபின் தேவ், தங்கவேலு
பிரீமியம் ஸ்டோரி
லிபின் தேவ், தங்கவேலு

புதுமையான ஐடியா, வித்தியாசமான அணுகுமுறை யுடன் எந்தவொரு பிசினஸை செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக இருக் கிறார்கள், கோவையைச் சேர்ந்த லிபின் தேவ் மற்றும் தங்கவேலு. கறுப்பு மிளகை, இயற்கையான முறையில் வெள்ளை மிளகாக மாற்றி ஆன்லைனிலும், நேரடியாகக் கடைகளிலும் விற்று வருகின்றனர்.

இவர்கள் உருவாக்கியுள்ள இந்த முறையை அங்கீகரித்து, மத்திய அரசின் பயோ டெக்னாலஜி துறை ரூ.49 லட்சம் கொடுத்துள்ளது. இதனால், கொரோனா காலத்திலும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் இந்த இருவரையும் சந்திக்க அவர்களின் நடத்திவரும் ‘வி.டி. ஈக்கோக்ரீன் (VT Ecogreen Technologies)’ நிறுவனத்துக்குச் சென்றோம்.

இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இயக்குநர்களான லிபின் தேவும் தங்கவேலுவும் பயோ டெக்னாலஜி துறையில் ஆராய்ச்சி செய்து, டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்பதுடன் இருவரும் கல்லூரி ஒன்றில் ஆசிரிய ராகப் பணி செய்துகொண்டிருந் தவர்கள். இதில் தங்கவேலுக்கு 25 ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு.

மக்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கக்கூடிய தரமான பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தபோது அவர்களின் கண்ணில்பட்டது வெள்ளை மிளகு.

லிபின் தேவ்
லிபின் தேவ்

சொந்தத் தொழில் தொடங்கியது பற்றிப் பேச ஆரம்பித்தார் லிபின் தேவ். ‘‘மிளகைக் ‘காரத்தின் ராஜா’ என்பார்கள். சுமார் 4,000 ஆண்டு களுக்கு மேலாக உலகம் முழுவதும் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மாம்பழத்தில் தோல் எடுத்தால், எப்படி இனிப்பாக இருக்கிறதோ, அப்படித்தான் வெள்ளை மிளகும். கறுப்பு மிளகின் காரத்தன்மை மக்களால் தாங்க முடியாது. காரத்தைக் குறைக்கவே வெள்ளை மிளகு வந்தது. ஆனால், சந்தைக்கு வரும் பெரும்பாலான வெள்ளை மிளகு பெரும்பாலும் ப்ளீச் செய்யப்பட்டு பல நாள்கள் கழித்துதான் வருகிறது. இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட வெள்ளை மிளகு கிடைப்பதில்லை. அதற்குப் பல ஆண்டு ஆராய்ச்சி செய்துதான் இந்தத் தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்தோம்.

ரூ.6 லட்சம் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கினோம். எங்களது தொழில்நுட்பத்துக்கு, நல்ல பெரிய மிளகு தேவை. அதற்காக ஊட்டி, கூடலூர், குடகு என்ற பல்வேறு இடங்களிலிருந்து நேரடியாகக் கறுப்பு மிளகை வாங்கி வருகிறோம். இந்தத் தொழிலில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக சவால்கள் இருந்தன. ஒரு தொழில்முனை வோருக்கு பிரச்னையை நேரடியாகச் சந்திக்கும்போதுதான் அதில் தீர்வு கிடைத்து, அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியும். ஒருகட்டத்தில் கறுப்பு மிளகு வாங்குவதற்குக்கூட காசு இல்லாத சூழ்நிலை வந்தது. பல நேரங்களில் பழையபடி கல்லூரி வேலைக்குச் சென்றுவிடலாமா என்றுகூட நினைத்தோம். ஆனாலும் நம்பிக்கையுடன் இயங்கினோம். குறு சிறு நிறுவனங்களுக்கான அரசு உதவித் தொகைக்கு முயற்சி செய்தோம். ரூ.5 லட்சம் அப்ரூவ் ஆகிவிட்டது என்று மெயில் எல்லாம் வந்தது. ஆனால், கடைசி வரை பணம் வரவில்லை.

அதன்பிறகுதான் மத்திய அரசின் பயோ டெக்னாலஜி துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி கொடுப்பது குறித்து கேள்விப்பட்டு விண்ணப்பித்தோம். நாடு முழுவதும் எங்களைப்போல, பலர் விண்ணப் பித்தனர். பல சுற்றுகளுக்குப் பிறகு, எங்களது தொழில்நுட்பத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு அங்கீகரித்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதை விரிவாக்கம் செய்ய ரூ.49 லட்சம் கொடுத்தனர். இந்தப் பணத்தை வைத்துதான் இப்போது எங்கள் பிசினஸை வேகமாக வளர்த்து வருகிறோம்’’ என்றார் லிபின் தேவ்.

கறுப்பு மிளகை வெள்ளை மிளகாக மாற்றும் தொழில்நுட்பத்தை நேரடியாகக் காண்பித்து விவரித்தார் தங்கவேலு.

கறுப்பு மிளகில் இருந்து வெள்ளை மிளகு... அசத்தும் கோவை ஸ்டார்ட்அப்! மாத்தி யோசித்து ஜெயித்த நிறுவனம்!

‘‘கறுப்பு மிளகில் இருந்து தோலை எடுத்துவிட்டால் வெள்ளை மிளகு ஆகிவிடும். ஆனால், பலரும் மிளகு பச்சையாக இருக்கும்போது தோலை எடுத்துவிடுகின்றனர். ஒரு மிளகு நன்கு வளர்ந்து திரண்டுவரும்போது தோலை எடுத்தால்தான் சரியாக இருக்கும். அதற்கு முந்தைய நிலையில் எடுப்பதால், தரம் குறைந்து அதன் பயன்பாடும் இல்லாமல் போகிறது.

முக்கியமாக, தோலை எடுக்க ஒரு சாக்கில் மிளகைப் போட்டு ஒரு மாதத்துக்கு ஊற வைத்துவிடுகின்றனர். அப்படிச் செய்யும்போது தோலுடன் சேர்ந்து அதிலுள்ள சத்துகளும் போய்விடும். மக்கள் அதைப் பயன்படுத்த வரும்போது அது வெறும் சக்கையாகத் தான் வருகிறது. ஆனால், நாங்கள் தயாரிக்கும் முறையில் வெள்ளை மிளகுக்கு நறுமணம், சுவை, ஆரோக்கியம் எல்லாமே இருக் கிறது. அதை மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறோம். எங்களது தொழில் நுட்பப்படி, இயற்கையிலேயே மூன்று நாள்களில் தோலை எடுத்துவிடுவோம்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நாங்கள் உற்பத்தி செய்யும் வெள்ளை மிளகில் பாக்டீரியாக்கள் மிகக் குறைவாகவும், சத்து பல மடங்கு அதிகமாகவும் உள்ளது. இதனால் மத்திய அரசு தொழில்நுட்பத்தை அங்கீகரித்து நிதி அளித்துள்ளது’’ என்றவர் தொடர்ந்து பேசினார்.

கறுப்பு மிளகில் இருந்து வெள்ளை மிளகு... அசத்தும் கோவை ஸ்டார்ட்அப்! மாத்தி யோசித்து ஜெயித்த நிறுவனம்!

“இரண்டு கிலோ தரமான கறுப்பு மிளகை எடுத்தால், அதிலிருந்து ஒரு கிலோ தரமான வெள்ளை மிளகு கிடைக்கும். கறுப்பு மிளகிலிருந்து, வெள்ளை மிளகை எடுத்தாலும் இரண்டுக்குமான உபயோகம் வேறு. பாலும் தயிறும் எப்படியோ, அப்படித்தான் இதுவும். கறுப்பில் இருந்து வெள்ளை மிளகாக மாறும்போது இயல்பிலேயே வாசனைப் பொருளாக மாறி சுவையும் ஊட்டச்சத்தும் கூடுகிறது’’ என்று தான் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தில் உள்ள சூட்சுமங்களை எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘உலகத்திலேயே சிறந்த கறுப்பு மிளகுகள் விளைவது தென் இந்தியாவில்தான். ஆனால், வெள்ளை மிளகில் நாம் பின்தங்கி இருக்கிறோம். அதை மாற்று வதற்கான முயற்சியில் இருக்கிறோம். இப்போது எங்கள் வெள்ளை மிளகு ஆன்லைனிலும் கோவையில் சில முக்கியக் கடை களிலும் கிடைக்கிறது.

சராசரியாக ஒரு மாதத்துக்கு 2 - 3 டன் விற்பனையாகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. அடுத்த கட்டமாக, பிக்பாஸ்கட்டுடன் ஒப்பந்தம் போட உள்ளோம். அதில் இருந்தும் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன’’ என்று மனநிறைவுடன் பேசி முடித்தார் கள் தங்கவேலுவும் லிபின் தேவும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப் பொருள் என்பதால், இவர்களின் தொழில் நிச்சயம் ஜெயிக்கும்!