Published:Updated:

உங்களை உயர்த்தும் மென்ட்டார்கள்..! அடையாளம் கண்டு ஜெயிக்கும் உத்திகள்!

எம்.பி.ஏ புக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.பி.ஏ புக்ஸ்

M B A B O O K S

பணியிடத்தில் மென்ட்டார் (Mentor – நம்பிக்கைக்குரிய/நம்மீது நம்பிக்கைகொண்ட ஒரு வழிகாட்டி) என்பவர் நம்மை வழிநடத்த உதகிறவர். அவரிடமிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். அதைப்போலவே, பணியிடத்தில் நாம் பார்க்கும்/பழகும் எல்லோரிடம் இருந்தும் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வது எப்படி என்பதைச் சொல்வதுதான் 5½ - மென்ட்டார் எனும் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

நம்மில் பலரும் மோட்டிவேஷன் (செயல்நோக்கம்/முயற்சி) என்பது முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று என்ற கருத்தைக் கொண்டிருக் கிறோம். இந்த மோட்டிவேஷன் என்பது ஒழுக்கத்தில் இருந்து பிறக்கும் ஒரு துணைத் தயாரிப்பு (by-product) ஆகும். வெறும் மோட்டிவேஷன் மட்டும் இருந்தால் காலையில் எழுந்துகொள்ள முடியாது.அதிகாலை 5 மணிக்கு சரியாக எழுந்துகொள்ள நம்மிடம் ஒழுங்கு வேண்டும். நம்மை 5 மணிக்கு எழ வைப்பது ஒழுக்கம். அதன் பின்னால் வொர்க்-அவுட் செய்ய வைப்பது மோட்டிவேஷன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் ஒழுக்கம் வர வேண்டும். அதன் பின்னால்தான் மோட்டிவேஷன் வேலை செய்யும். எனவே, ஒழுங்கு என்பதே வாழ்க்கைக்கு அவசிய மாகிறது.

தொடர்ந்து ஒழுங்காக முன்னேற் றத்துக்கான விஷயங்களைச் செய்து வந்தால் நிச்சயமாக அது ஒரு நாள் பலனைத் தரும். ரேஸுக்கு போகும் குதிரைகளுக்குத் தொடர்ந்து அதற்கான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். என்றைக்காவது ஒருநாள் அதற்குப் பிடித்த வகை உணவுகளைக் கொடுக்கலாம். அதை விட்டுவிட்டு, எல்லா நாளும் அதற்குப் பிடித்த அதே சமயம், அதன் உடலுக்கு வலுசேர்க்காத உணவைக் கொடுத்தால் ரேஸில் ஜெயிக்காது. அதேபோல்தான், மனித வாழ்வும். என்றைக்காவது ஒரு நாள் ஜாலியாக பொழுதைப்போக்கலாம். எல்லா நாளும் ஜாலியாகப்போனால், முன்னேற்றம் என்பது எள்ளவும் நடக்காது.

பொதுவாக, மனிதர்களின் கிரியேட்டிவிட்டி (படைப்பாற்றல்) அவர்களை மேன்மையான நிலைக்குக் கொண்டு செல்லும் என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால், கிரியேட்டிவிட்டி என்பது நம் முன்னேற்றத்துக்கு எதிராகச் செயல்பட்டு நம்மை முடக்கிப் போடவும் செய்துவிடும். எப்படி என்கிறீர்களா?

புத்தகம்
புத்தகம்

நீங்கள் புதிதாக ஒரு தொழில் தொடங்க முடிவெடுக்கிறீர்கள். என்ன தொழில், அதற்கான முதலீடு எவ்வளவு, வாடிக்கையாளர்களை எப்படிப் பிடிப்பது, லாபம் எப்படிச் சம்பாதிப்பது என எல்லா விஷயங் களையும் தீர விசாரித்து, தொழிலைத் தொடங்கும்போது உங்கள் மனம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறது. ‘இந்த பிசினஸ் ஜெயிக்கும் என்பதற்கு என்ன நிச்சயம்... ஒருவேளை தோற்று விட்டால்...’ என்ற கேள்வி வந்தவுடன், புதிய தொழிலில் நீங்கள் போட்ட அனைத்து முதலீடுகளையும் இழந்து, நீங்கள் உங்கள் குழந்தை குட்டிகளுடன் நடுத்தெருவில் நிற்கும் காட்சி உங்கள் மனக்கண்ணில் தெரிகிறது. அதைப் பார்த்த நீங்கள், ‘அய்யோ, பிசினஸே வேண்டாம்’ என அந்த யோசனை யையே கைகழுவிவிடுகிறீர்கள்.

பார்த்தீர்களா, கிரியேட்டிவிட்டி என்பது மனிதனை எப்படித் தலைகீழாகக் கவிழ்த்துவிடுகிறது என்று. இதுதான் கிரியேட்டிவிட்டி உங்களுக்கு எதிராகச் செயல்படும் நிலை.

இந்த நிலையில் இருந்து நீங்கள் மீண்டுவருவதற்கு உங்களுக்கு ஒரு மென்ட்டார் தேவை. நீங்கள் பயந்து துவளும்போது ஊக்கப்படுத்த, வளர்ச்சிக்கான வித்துக்களை உங்களிடம் உருவாக்க, சரியான திசையில் உங்களைப் பயணிக்க வைக்க, கடினமான விஷயங்களைக் கையாளுவது எப்படி என்பதற்கான அறிவுரைகளைச் சொல்ல, உங்கள் சிந்தனையை ஒழுங்குபடுத்த, உலகம் பற்றிய உங்களுடைய பார்வையை மாற்றியமைக்க ஒரு மென்ட்டார் தேவை என்பதுதான் உலகத்தின் இன்றைய புரிந்துகொள்ளலாக இருக்கிறது.

நமக்கு கிடைக்கிற மென்ட்டார்கள் பின்வரும் 5½ வகைப்படுவார்கள் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். அது என்ன 5½..? ஆன்ட்டி மென்ட்டார் (அரை மென்ட்டார்கள்), மைக்ரோ மென்ட்டார், டிஜிட்டல் மென்ட்டார், கேட்டகாரிக்கல் மென்ட்டார், ஸ்ட்ரீட்வ்யூ மென்ட்டார், வேர்ல்டு வியூ மென்ட்டார் என்பவர்களே இந்த 5½ வகை மென்ட்டார்கள் ஆவார்கள்.

உங்களைக் கோபப்படுத்தும் நபர்கள் உங்களுக்குப் பொறுமையைச் சொல்லித் தருகின்றனர், உங்களிடம் கோபப்படும் நபர்கள் உங்களுக்கு மன்னிக்கும் குணம் குறித்து கற்றுத் தருகின்றனர், முக்கியமான தருணங்களில் கைகழுவிவிடும் நபர்கள் உங்களுக்கு எதிர்நீச்சல் அடிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தருகின்றனர். தேவையற்ற கேள்விகளால் துளைத் தெடுக்கும் நபர்கள் உங்களுக்குச் சிந்திப்பது எப்படி என்று கற்றுத் தருகின்றனர். எப்போது பார்த்தாலும் உங்களை எரிச்சலடையச் செய்யும் நபர்களோ உங்களுக்கு பல்வேறு நல்ல விஷயங்களைச் சொல்லித் தருபவர் களாக இருக்கின்றனர். இவர்களை மென்ட்டார்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், அவர்கள் உங்களுக்கு நன்மை பல செய்வதால், அவர்களை அரை மென்ட்டார்கள் (ஆன்ட்டி மென்ட்டார்கள்) என்று சொல்கிறேன் என்கிறார் ஆசிரியர்.

மென்ட்டார் என்ற வார்த்தையே ஏதோ ஃபார்ச்சூன் 500 கம்பெனி களுக்கானது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அதில்தான் மென்ட்டார்கள் மற்றும் மென்டாரிங் என்பது சிறப்பாக நடக்கும் என்ற எண்ணம் நம்மிடம் உள்ளது. அது உண்மையல்ல. மென்ட்டார்ஷிப்புக்கான வாய்ப்பு எல்லா வகையான நிறுவனங்களிலும் இருக்கவே செய்கிறது. நாம் எதிர்கொள்ளும் அனைவரிடமுமே (மைக்ரோ மென்ட்டார்கள் - மனிதர்கள், புத்தகங்கள் என) ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கவே செய்கிறது. இதை நாம் கூர்ந்து கவனிப்பதேயில்லை. மனிதனின் முதல் எதிரியே அமைதியாக அவனால் சிந்திக்க முடியாதது தான். இந்தக் கூர்ந்து கவனித்து சிந்திக்கும் கலையை வளர்த்துக் கொண்டால் மைக்ரோ மென்ட்டார்கள் பலரிடமிருந்து பல அரிய விஷயங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.

டிஜிட்டல் மென்ட்டார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுவது இன்டர்நெட்டை. முட்டையின் வெள்ளைக்கருவை சமைப்பது எப்படி என்பதிலிருந்து பல்வேறு முக்கிய கருத்துகள் கொட்டிக் கிடக்கும் இந்த இடத்தை வேறு எப்படிக் குறிப்பிடுவது என்று கேட்கிறார் அவர். டெக்னாலஜியை உபயோகித்து கற்றுக்கொண்டு வளர்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை தனியானதொரு அத்தியாயத்தில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.

மென்ட்டார் என்பவரிடம் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். எப்பேர்ப்பட்ட ஆளாக அவர் இருந்தாலும் சரி, நமக்குத் தேவையானது அவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரை முழுமையாக நாம் பின்தொடர வேண்டாம் என்ற முடிவை எடுக்க வேண்டியதில்லை. ஒரு பெரிய பிசினஸ்மேனிடம் சில வேண்டத்தகாத குணங்கள் இருக்கலாம். நமக்கு எது தேவையோ, அதை நாம் எடுத்துக் கொண்டு மீதமிருக்கும் விஷயத்தை நாம் விட்டுவிட வேண்டும். இதையே கேட்டகாரிக்கல் மென்ட்டார்கள் என்னும் பிரிவில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

போகிறபோக்கில் நாம் எதிர்கொள்கிற நபர்கள் பலரும் நம்முடைய வாழ்க்கையில் மூக்கை நுழைக்கவே செய்வார்கள். இவர்களை ஸ்ட்ரீட்வ்யூ மென்ட்டார் என்கிறார் ஆசிரியர். இவர்கள் ஐடியாக்களை வேறு வாரி வழங்குவார்கள். இவர் பித்தலாட்டக்காரரா, நம்மைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளாமல் நாம் சொல்வதைக் கேட்கும் நபரா, அவருடைய மெச்சூரிட்டி லெவல் நமக்கு உதவியாய் இருக்குமா, இந்த சூழ்நிலைக்கு இவரால் உதவ முடியுமா, கருத்து உதவியாய் இருக்குமா, இவர் சொல்லும் விஷயங்கள் அவருக்கு லாபம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லப்படுவதா என்ற இந்த ஐந்து கேள்விகளைக் கேட்டுவிட்டு, அந்த ஐந்து கேள்விகளுக்கும் எதிர்மறையான பதிலையே நாம் கூறுவோம் என்றால், இது போன்ற ஸ்ட்ரீட் வ்யூ மென்ட்டார்கள் சொல்வதைக் கேட்டு நாம் நடக்கலாம் என்கிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் பெயர்:
5 1/2 Mentors: How to Learn, Grow, and Develop from Everyone and Everything

ஆசிரியர் 
 Doug Stewart

பதிப்பாளர்:
Lioncres t 
Publishing
புத்தகத்தின் பெயர்: 5 1/2 Mentors: How to Learn, Grow, and Develop from Everyone and Everything ஆசிரியர் Doug Stewart பதிப்பாளர்: Lioncres t Publishing

வேர்ல்டு-வியூ மென்ட்டார்கள் நமக்கு எப்படி உதவுவார்கள் என்றால், அவர்கள் நம்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பதை வெளிக் காட்டுதலின் மூலம் மட்டுமே. அவர்கள் நம்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொன்னால், நமக்கு புரமோஷன் கிடைக்கும் (அவரை இந்த உலகம்/நிர்வாகம் மலைபோல் நம்பும்). இவர்கள் நம் கையில் விதையைத் தருவார்கள். நாம்தான் அந்த விதையை விதைத்து அறுவடையைச் செய்து கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.

உங்களுக்குத் தொழில் சொல்லிக் கொடுத்தவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால், அந்த விசுவாசத்தின் காரணமாக அவர் உங்களை முழுமையாக நம்புவதாக மற்றவர்களிடம் சொல்வார். நீங்கள் சொல்லிக் கொடுத்ததை உபயோகித்து நான் இந்த விஷயத்தைச் செய்தேன் என்று நீங்கள் அவரிடம் சொல்வதுமே விசுவாசத்தாலேயே அடங்குவதாகும். விசுவாசத்தால் உருவாகும் அந்த நம்பிக்கையும் அதன் மூலம் கிடைக்கும் ஏற்பிசைவும் (endorsement) உங்களுக்கு பல கதவுகளைத் திறக்க உதவும் என்கிறார் ஆசிரியர்.

நல்ல மென்ட்டாரைப் பெற அதிர்ஷடம் வேண்டும். அது நம்மைத் தேடி வர வேண்டும் என்ற எண்ணம் கொள்ளா தீர்கள். நல்ல மென்ட்டார் களைப் பெறுவது என்பது உங்கள் கையிலேயே இருக்கிறது என்று சொல்லி புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

இளநிலை நிர்வாகிகள் தங்களுடைய கேரியரில் வேகமான வளர்ச்சியைச் சந்திக்க உதவும் மென்ட்டாரிங் குறித்த மாற்றுக்கருத்தை மிகவும் விளக்கமாகச் சொல்லும் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை கட்டாயம் படித்துப் பயன் பெறலாம்.

பிட்ஸ்

ந்தியாவில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனை யில் 90% போன் பே மற்றும் கூகுள் பே மூலமே நடக்கிறது. கடந்த ஜனவரியில் போன் பே மூலம் ரூ.1.91 லட்சம் கோடியும் கூகுள் பே மூலம் ரூ.1.77 லட்சம் கோடியும் பணம் பரிவர்த்தனை ஆகியுள்ளது!