Published:Updated:

மூச்சுத் திணறவைக்கும் அலுவலக வேலை... என்னதான் தீர்வு? பிரஷரிலிருந்து தப்பிக்கும் வழிகள்!

அலுவலக வேலை...
பிரீமியம் ஸ்டோரி
அலுவலக வேலை...

M B A B O O K S

மூச்சுத் திணறவைக்கும் அலுவலக வேலை... என்னதான் தீர்வு? பிரஷரிலிருந்து தப்பிக்கும் வழிகள்!

M B A B O O K S

Published:Updated:
அலுவலக வேலை...
பிரீமியம் ஸ்டோரி
அலுவலக வேலை...

அலுவலகத்தில் தரப்படும் ஏகப்பட்ட வேலைகள் காரணமாக நமக்குள் ஏற்படும் வேதனை, திகில், குமுறல், ஆத்திரம், விரக்தி, வலி ஆகிய உணர்வுகள் உச்சக்கட்டத்தை அடையும்போது நமக்குள் ஏற்படும் உணர்வைக் குறிக்க ‘Argh’ என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. இந்தத் திணறடிக்கும் உணர்விலிருந்து வெளியேறுவது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

புத்தகத்தின் பெயர்: Argh! ஆசிரியர்: Lynne Cazalyபதிப்பாளர்:  Cazaly Communications (Cazcom)
புத்தகத்தின் பெயர்: Argh! ஆசிரியர்: Lynne Cazalyபதிப்பாளர்: Cazaly Communications (Cazcom)

பல பாதிப்புகளை ஏற்படுத்தும்...

எக்கச்சக்கமான வேலைகளுக்கு இடையே சிக்கித் திணறுதல் என்பது வெறுமனே நம் வாழ்வில் கடந்து போகக்கூடிய ஒரு விஷயம் இல்லை. தலைவலி, மோசமான மனநிலை மற்றும் தூக்கமில்லா இரவுகள் என நம்மை ஒட்டுமொத்தமாகப் பாதிக்க வல்லது இது. அடுத்தவரிடம் எரிந்து விழுதல், எதிலுமே முழுக் கவனம் செலுத்தாமல் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவுதல், எந்த ஒரு விஷயத்தையுமே முடிக்காமல் இழுத்தடித்தல் எனப் பல்வேறு எதிர்வினைகளையும் இது தூண்டவல்லது.

திணறடிக்கும் சூழல் என்பது வெள்ளப்பெருக்கு போன்ற அலுவலக மற்றும் தனிமனித நெருக்கடி சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதாலேயே ஏற்படுகிறது. இந்தத் திணறடிக்கும் சூழலைப் புரிந்துகொண்டு செயல்படுவதில் உள்ள ஆறு படிநிலைகளை ஒரு வரைபடத்தின் மூலம் ஆசிரியை விளக்கியுள்ளார். (பார்க்க, கீழே உள்ள படம்) இதைப் புரிந்துகொண்டு பயணித்தால் குழப்பமான மனநிலையில் இருந்து அமைதியான மனநிலைக்கு உறுதியாக நாம் சென்று சேர்ந்துவிடுவோம் என்கிறார் ஆசிரியை.

மூச்சுத் திணறவைக்கும் அலுவலக வேலை... என்னதான் தீர்வு? பிரஷரிலிருந்து தப்பிக்கும் வழிகள்!

எப்படிக் கண்டுபிடிப்பது?

‘‘நான் திணறடிக்கப்படும் சூழ்நிலையில் இருக்கிறேன் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்கிறீர் களா? ‘எனக்கு வேலை இருக்கு, எனக்கு வேலை இருக்கு’ என்று வேலையோ வேலையாகத் திரிதல், எவ்வளவு வேலை பார்த்தாலும், ‘ஒன்றையும் உருப்படியாக முடிக்க முடியவில்லையே’ என்ற அவமான உணர்ச்சி தோன்றுதல், சிரிப்போ, சிரித்தலுக்கான சூழலிலோ இல்லாது இருத்தல், ரியாலிட்டியில் இருந்து வெகுதூரம் சென்று எதையும் மிகைப்படுத்தி (கற்பனையாக) நடந்துகொள்ளுதல், முன்னேற்றத்துக் கான எதையும் செய்ய நேரமேயில்லை என்று அங்கலாய்த்தல், எதையும் எப்போதும் தள்ளிப்போட்டு தள்ளிப் போட்டு அந்தக் காரியத்தை முழுமையாக முடிக்காமலேயே போதல், முடிவுகள் எடுக்காமல் பலவற்றையும் யோசித்துக்கொண்டே இருத்தல், எதையும் புதியதாக செய்ய இயலாமல் நேரமின்மையைக் காரணம் காட்டிக்கொண்டே இருத்தல், சின்னச் சின்ன வேலைகளை செய்துமுடிக்கும் போதே அயர்ச்சியடைதல், தூக்கமின்மை, எரிச்சலுடன் திகழ்தல் (அட்ரினலின் உருவாக்கும் வேகத்தில்), எதற்கும் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளுதல், என்ன செய்து என்ன பிரயோஜனம் என்கிற வெறுப்புணர்வில் அனைவரிடமும் புலம்பி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளுதல், சின்னச் சின்ன விஷயங்களையுமே மலைபோல் நினைத்தல், தப்பும் தவறுமாகத் தொடர்ந்து வேலைகளைச் செய்தல் (ஏற்கெனவே சரியாகச் செய்து கொண்டி ருந்தவற்றை) போன்றவற்றில் எது இருந்தாலும் நீங்கள் திணறடிக்கும் சூழலில்தான் வாழ்ந்து வருகிறீர்கள் என்று அர்த்தம்’’ என்கிறார் ஆசிரியை.

“திணறடிக்கப்படுதல் என்பது அலுவலக வாழ்வின் தவிர்க்க முடியாததொரு விஷயமாக இருந்தாலும் நம்முடைய உணர்ச்சிகள் அதனுடன் சேரும்போது அதனுடைய விளைவு எதிர்பாராத அளவுக்கு எக்கச்சக்கமாக ஆகிவிடுகிறது. இதனாலேயே நாம் இதில் மூழ்கடிக் கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டு விடுகிறோம். எனவேதான், திணறுதல் என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு உணர்ச்சிகளின் பிரவாகத்தை அடக்குவதன் மூலம் நாம் அதில் மூழ்கி அடித்துச் செல்லப்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்’’ என்கிறார் ஆசிரியை.

மூச்சுத் திணறவைக்கும் அலுவலக வேலை... என்னதான் தீர்வு? பிரஷரிலிருந்து தப்பிக்கும் வழிகள்!

எப்படி மீள்வது?

“வெறுமனே வேலையால் திணறடிக்கப் படுகிறேன் என்று நினைக்காமல், ‘நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது. அதனாலேயே நான் திணறுதலுக்கு ஆளாகிறேன்’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து, இந்த உணர்வைப் பிரித்துப் பார்த்து பழக வேண்டும். ‘அலுவலக வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஊழியர் களுக்கு இல்லை.

ஆனால், மக்களின் பிறந்த நாள் பார்ட்டிகூட கலந்துகொள்ள முடியாதபடி வேலை இருக்கிறது. இதில் எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்று பிரித்துப் பார்க்க வேண்டும். ஏன் ஒரு வேலைக்காக மட்டும் என் மனதில் அதிக பிரஷர் உருவாகிறது? இந்த விஷயம் இப்படித்தான் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று (good, ideal, perfect என) நான் ஏன் நினைக்கிறேன் என்கிற கேள்விகளை நமக்கு நாமே கேட்க வேண்டும்’’ என்று சொல்கிறார் ஆசிரியை.

எப்படிச் செயல்பட வேண்டும்?

‘‘வேலைப்பளு என்பதில் முக்கிய அங்கம் வகிப்பது, நாம் எந்த அளவுக்கு திறமையாகச் செயல்பட வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் என்பதிலேயே இருக்கிறது. இது வெளிப் படையாகத் தெரியாத தனிநபராக நம்முடைய அர்ப்பணிப்பு சார்ந்த விஷயம். தேவையான அளவு, மத்திம அளவு, ரொம்பவும் சூப்பராக என்று நாம் பல அளவுகோல்களைக் கொண்டு இயங்குகிறோம்.

இந்த அளவுகோல்களில் நம்முடைய அர்ப்பணிப்பு எண்ணம் உச்சத்துக்குச் செல்லச் செல்ல திணறுதல் என்பது மிகச் சுலபமாக நமக்குத் தோன்றி விடுகிறது. செய்ய வேண்டிய விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் வெளியே எடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டங்களை மட்டுமே தீட்டிப் பழக வேண்டும்.

இப்படித் திட்டத்தைத் தீட்டும்போது அந்த விஷயத்தை தேவையான அளவுக்கு நல்லபடியாக (good) செய்யப் போகிறோமா, பரிபூரணமாகச் (perfect) செய்து முடிக்கப் போகிறோமா அல்லது சீராகச் (ideal) செய்துமுடிக்கப் போகிறோமா என்ற திட்டமிடு தலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாலன்டரியாக மாட்டாதீர்கள்...

மேலும், ஏற்கெனவே எக்கச் சக்கமான வேலைகள் கையில் இருக்கும்போதும் எந்த ஒரு விஷயத்திலும் ‘நான் இருக்கிறேன், என்னை செலக்ட் செய்யுங்கள், நான் பார்த்துக்குவேன் என்று நாமே போய் வாலன்டரியாக மாட்டக் கூடாது. வேலைக்கான திட்டங்களைத் தீட்டும்போது அதில் கொஞ்சம் ஸ்பேர்டைமை வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.

அலுவலகம் அழுத்தம் தந்தாலுமே ஓப்பனிங்கிலேயே இந்த அளவுக்கு டைம் வேண்டும் என்று சொல்லிப் பழகுவதே மிகவும் நல்லது. ஏனென்றால், வேலையை முடிக்காமல் வரும் கெட்ட பெயரைவிட முன்னாலேயே சொல்வதால், வர வாய்ப்புள்ள கெட்ட பெயருக்கான வீரியம் மிக மிகக் குறைவு என்பதை மனதில் கொள்ளுங்கள் என்கிறார்” ஆசிரியை.

நாம் எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு வேலையிலும் எங்கே நாம் தேவையான எல்லையைத் தாண்டிச் செல்கிறோம் (distraction) என்பதையும், இந்த நேரத்துக்குள் என்ன (good, perfect, ideal என்ற ரீதியாக) முடிகிறதோ, அதை முடித்துவிட வேண்டும் என்பதையும், கையில் இருக்கும் நேரம், பொறுப்பு, உடனிருப்பவர் களின் நடத்தை (பிஹேவியர்), நிர்வாகம் மற்றும் குழுவில் நம்முடன் இருப்பவர்கள் என்ற இருவரின் எதிர்பார்ப்புகள் போன்றவற்றையும், எந்த இடத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் நிதர்சன உண்மையை மறந்து (Reality) நாம் செயல்பட (திட்டமிட) எத்தனிக்கிறோம் என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை பல்வேறு உதாரணங்களுடன் ஆசிரியை விளக்கியுள்ளார். இவற்றை மனதில் கொண்டு செயல்பட்டால் பணி அழுத்தத்தால் திணறும் சூழல் உங்களுக்கு உருவாகும் வாய்ப்பு குறையும் என்கிறார் அவர்.

தீர்வு உங்கள் கையில்...

இறுதியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதையும், நீங்கள் சரி என்று நினைக்கும் விஷயம் அனைத்தையும் நம்பி செயல்படக் கூடாது என்பதற்கான காரணங்களையும் விளக்குகிறார் ஆசிரியை.

‘‘நீங்கள் நிறுவனத்தின் ஓர் அங்கமாக இருந்தாலும் திணறுதல் (overwhelm) என்பது முழுக்க முழுக்க தனிநபர் சார்ந்த ஒருவிஷயம். வேலையை மனக்கண்முன் தோற்றுவித்து (visualize), கொடுக்க வேண்டியவற்றுக்கு சரியான அளவு முன்னுரிமைகளைத் தந்து, தேவைப்படும் விஷயங்களின் மீது மட்டுமே கவனத்தைப் பதித்து செயல்பட்டால் திணறுதல் என்ற நிலைக்குச் செல்லாமல் அலுவலகத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும்’’ என்று சொல்லி முடிகிறது இந்தப் புத்தகம்.

அலுவலக வேலையில் திணறடிக்கும் சூழலில் மூழ்கிவிடாமல், முன்னேற்றம் காண்பதற் கான வழிவகைகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism