Published:Updated:

குறைந்த செலவில் அதிக லாபம் பெறும் பிசினஸ் உத்திகள்! கைகொடுக்கும் மதிப்புக்கூட்டும் கலை

M B A B O O K S

பிரீமியம் ஸ்டோரி

எக்கச்சக்கமான செலவுகளைச் செய்யாமலேயே பிசினஸை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பது குறித்த பிராக்டிக்கலான விஷயங்கள் அனைத்தையும் ஒருவரால் கற்றுக் கொள்ள முடியும். இந்தப் புத்தகம் உங்களையும் உங்களுடைய குழுவின் அங்கத்தினர்களையும் மதிப்புக் கூட்டுதல் என்பதில் திறன்மிக்க ஒரு புரொஃபஷனலாக ஆக்குவதற்கு உதவும் வகையிலேயே வடிவமைத்து எழுதப்பட்டுள்ளது.

60 நாள்களில் சாத்தியம்...

முழுமனதுடன் செயல்பட்டால் 60 நாள்களில் இந்தக் கலையை உங்களால் கற்றுக்கொள்ள முடியும் எனச் சொல்லி ஆரம்பிக்கிறார் இந்தப் புத்தகத்தின ஆசிரியர். இங்கே மதிப்புக்கூட்டுதல் என்று குறிப்பிடப் படுவது குறைந்த நேரத்தில் அதிக காரியங்களைச் செய்து முடிப்பது.

நீங்கள் உங்களுக்காக உழைக்கிறீர் களோ, ஒரு நிறுவனத்துக்காக உழைக்கிறீர்களோ எதுவானாலும் சரி ‘ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட் மென்டை’ (தொழிலில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகைக்கு எதிராகக் கிடைக்கிற லாப விகிதம்) எந்த அளவுக்கு அதிகமாக்கு கிறீர்களோ, அந்த அளவுக்கே உங்களுடைய வசதிவாய்ப்புகள் பெருகும். மதிப்புக் கூட்டுதல் என்பதே மூச்சும்பேச்சுமாக இருக்கும்போது மட்டுமே எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

காலை எழுந்தது முதல் நமக்கு தரப்படும் பணத்துக்கான உச்சபட்ச மதிப்புக் கூட்டுதலை நாம் செய்து தர முயல வேண்டும். இதுவே வெற்றிக்கான ரகசியம்.

தலைமை (பண்பு), உற்பத்தித்திறன், பிசினஸ் ஸ்ட்ராட்டஜி, கொள்கை விளக்கம், மார்க்கெட்டிங், தகவல் பகிர்தல், விற்பனை, பேச்சுவார்த்தை நடத்துதல், நிர்வாகம், திட்டத்தைச் செயல்படுத்துதல் போன்ற பிசினஸ் சார்ந்த அனைத்து விஷயங்களையும் மிகமிக எளிதான முறையில் புதிய கோணங்களில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.

60 நாள் பயிற்சி முறையை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டுள்ள இந்தப் புத்தகம், ஆரம்பத்தில் முதல் இரண்டு வாரத்தில் உங்களை எப்படி அடிப்படையில் வேகமான முறையில் இந்தப் பயிற்சிக்காக மாற்றியமைத்துக் கொள்வது என்பதைச் சொல்கிறது. நீங்கள் ஒரு மோசமான கேரக்டர் கொண்ட நபராக இருந்தால் என்ன தான் நீங்கள் திறமையானவராக இருந்தபோதிலும், நீங்கள் பிசினஸ் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என்ற இரண்டிலும் தோற்றுப்போவதைத் தவிர வேறு வழியேயில்லை. நேர்மை யானவராகவும் பணியிடத்துக்குத் தேவைப்படும் நன்னெறி முறைகள் கொண்டவராகவும் இருந்தால், மட்டுமே உங்களால் வாழ்க்கையில் வெற்றியைப் பெற்று அதைத் தக்க வைத்துக்கொள்ளவும் முடியும்.

பிசினஸ்
பிசினஸ்

வெற்றிக்கு அவசியமான குணங்கள்...

மதிப்புக் கூட்டும் புரொஃபஷன லாகத் திகழ நினைப்பவருக்கு பின்வரும் குணாதிசங்கள் அவசியமானவை.

1. சந்தையில் தன்னையும் ஒரு விற்பனைப் பொருளாகவே பார்ப்பார். தன்னால் மற்றவர்களுக்கு அதிகபட்ச மதிப்புக்கூட்டிய உபயோகம் இல்லாவிட்டால் தன்னை ஒருவரும் சீண்டக்கூட மாட்டார்கள் என்பதை அவர் முழுமையாக உணர்ந்திருப்பார். பணியிட வாழ்க்கைக்கு இதைப் பொருத்திப்பாருங்கள். உங்களுக்கு சரியான தெளிவு கிடைக்கும்.

உதாரணமாக, ஒருவருக்கு நிறுவனம் ரூ.50,000 சம்பளம் கொடுக்கிறது என்றால், அவர் ரூ.2.5 லட்சம் அளவுக்கான மதிப்பை (ஐந்து மடங்கு ரிட்டர்ன்) அந்த நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டும். அப்போது மட்டுமே செலவினங்களை எல்லாம் தாண்டி அந்த நிறுவனத்தால் சிறிதளவு லாபம் பார்க்க முடியும் என்பதே நடைமுறையில் இருக்கும் நிஜம். இந்தக் குறைந்தபட்ச ஐந்துமடங்கு ரிட்டர்னைக் கொடுக்காத ஒவ்வொரு நபருமே நிறுவனத்துக்கான பைனான்ஷியல் ரிஸ்க் என்றே சொல்லலாம். இந்த அளவுக்கான ரிட்டர்னை நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றால், உங்களை நோக்கி பிசினஸ், பொறுப்புகள், பதவிகள் மற்றும் அதிக சம்பளம் என்பதெல்லாம் தேடிவரும் என்கிறார் ஆசிரியர்.

2. மதிப்புக்கூட்டும் புரொஃபஷனல் நிறுவனத்தில் தன்னை ஹீரோவாகப் பாவிப்பாரே ஒழிய, நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவராகப் பார்க்கமாட்டார். மதிப்புக்கூட்டும் புரொஃபஷனல்கள் அலுவலகத்தில் டிராமா போடும் நபர்களாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால், தொழில்ரீதியாக இருக்கிற பெரும் பிரச்னைகளுக்கு இடையே அந்த டிராமாவைப் பார்ப்பதில் நேரம் செலவிடுதல் என்பது நிறுவனத்துக்கு மிகப்பெரிய கேடாக ஆகிவிடும்.

3. மதிப்புக்கூட்டும் புரொஃபஷனல் பின்னூட்டம் (feedback) என்பதை ஒரு பரிசாகவே பாவிப்பார். மதிப்புக் கூட்டும் புரொஃபஷனல் ஒரு பிரச்னையை எப்படி சுமுகமாகக் கையாண்டு தீர்ப்பது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்.

4. மதிப்புக் கூட்டும் புரொஃபஷனல் தன்னைப் பலருக்கும் பிடிப்பதைவிட பலரும் தன்மீது நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருப்பதையே விரும்புவார். அதே போல் அவர் செயல் செயல் என்பதைச் சார்ந்தே இயங்கிக்கொண்டிருப்பார்.

5. குழப்பம் என்ற வார்த்தையே அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. மேலும், அவர் இடைவிடாத நம்பிக்கை கொண்டவராக இருப்பார்.

6. வளர்ச்சி என்பதை எப்படியும் அடைவதில் குறியாகவும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து இயங்குவார்.

7. பிசினஸில் வெற்றிபெற அதில் ஈடுபடும் அனைவரும் இருக்கும் (பணியில்) பிசினஸ் எதற்காக இருக்கிறது, எதை நோக்கிச் செல்கிறது என்பதைத் தெளிவாக உணர்திருக்க வேண்டும். இந்த பிசினஸில் வெற்றி பெற இந்தக் குணாதிசயமும் இந்தக் கொள்கைகளும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை நிறுவனத்தில் இருக்கும் அனைவருக்கும் புரியும்படி சொல்லப்பட வேண்டும். மேலும், அன்றாடம் செய்யும் விஷயங் களில் இந்த அடிப்படையான விஷயங்கள் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் பணியாளர் களுக்குத் தெளிவு படுத்தப்பட வேண்டும்.

8. பிசினஸில் வெற்றி பெற அனைத்துத் தரப்பினருக்கும் அந்த பிசினஸ் குறித்த கதை தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். கதை என்பது நீங்கள் என்ன செய்கிறீர்கள், எப்படிச் செய்கிறீர்கள், எங்கே செல்ல நினைக்கிறீர்கள், எங்கணம் அங்கே செல்ல முடியும் என்று உறுதிபட நினைக்கிறீர்கள், எப்படி உங்களுடன் வருபவர் களை நீங்கள் போக நினைக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வீர்கள் என்பதுதான்.

9. பிசினஸில் வெற்றிபெற அது எப்படி இயங்குகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தயாரிப்பு (அல்லது சேவை), மார்க்கெட்டிங், சேல்ஸ், செலவுகள் என்பவையே ஒரு பிசினஸில் நீங்கள் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். விற்பனையையும் லாபத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றால், முதலில் உங்களுடைய தயாரிப்பு களுக்கான டிமாண்ட் இருக்கிறதா என்பதை அறிய முயல வேண்டும். இதை அறிந்துகொள்ளாமல் விற்பனையையும் லாபத்தையும் உங்களால் அதிகரிக்கவே முடியாது. பிசினஸைப் பொறுத்த வரை, நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அது எப்படி உங்களுடைய கேஷ் ஃப்ளோவை பாதிக்கும் என்று பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, இந்தப் பொருளைத் தயாரித்து அறிமுகப்படுத்த எவ்வளவு செலவாகும், லாப சதவிகிதம் எவ்வளவு, எந்த அளவு விற்பனை ஆகும்போது லாபம் கிடைக்கும், இந்தத் தயாரிப்பை அறிமுகப் படுத்துவதால், ஏற்கெனவே பிசினஸுக்கு வரும் கேஷ்ஃப்ளோ எந்த அளவுக்கு பாதிப்படையும், இந்தத் தயாரிப்பில் நஷ்டப் பட்டாலும், அது நமக்கு வேறு ஏதாவது தயாரிப்பை விற்பனை செய்வதில் உதவி செய்யுமா, அப்படிச் செய்தால் அதன் மூலம் எவ்வளவு லாபம் வர வாய்ப்பு உள்ளது, எப்படி இந்த தயாரிப்பின் மூலம் வரக்கூடிய லாபத்தை அதிகரிப்பது என்பது போன்ற கேள்விகளுக் கெல்லாம் தயாரிப்பை உருவாக்கும் முன்னரே பதிலைக் கண்டறிந்து கொள்ள வேண்டும்.

புத்தகத்தின் பெயர்:
  Business Made Simple
ஆசிரியர் 
 Donald Miller

பதிப்பாளர்:
HarperCollins Leadership
புத்தகத்தின் பெயர்: Business Made Simple ஆசிரியர் Donald Miller பதிப்பாளர்: HarperCollins Leadership

மூன்று முக்கிய விஷயங்கள்...

வெற்றிகரமான நிறுவனத்தை நடத்த பின்வரும் விஷயங் களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் அளவீடு செய்யப்பட முடிந்ததாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு ரெஸ்டாரன்டை நடத்துகிறீர்கள் எனில், ஒரு குறிப்பிட்ட உணவைத் தயாரிக்க எவ்வளவு நேரமாகிறது என்பதைக் கணக்கீடு செய்ய முடிவதாகும். அடுத்து, உங்கள் நிறுவனத்தின் எந்தப் பிரிவு உற்பத்தி செய்யும் பொருளானாலும் சரி, எந்த அளவுக்கு நிறுவனத்தின் லாபத்துக்கு அது வழிவகை செய்கிறது (profitable) என்பதாகும். உங்கள் நிறுவனம் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் எண்ணிக்கை ரீதியாக அதிகரிக்கப்பட்டு லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் விற்பனை செய்ய முடியாத தயாரிப்புகளைச் செய்யும் பட்சத்தில் உங்களுடைய லாபத்தின் அதிகபட்ச அளவு நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகிவிடும் என்கிறார் ஆசிரியர்.

ஐடியாக்களை நாள் முழுவதும் மீட்டிங் போட்டு பேசிக்கொண்டேயிருக்கலாம். ஐடியாக்களைத் தயாரிப்பு களாக மாற்றி அவற்றை வாடிக்கையாளர்களிடம் வெற்றிகரமாகக் கொண்டு சேர்ப்பது என்பதே மிக முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறப்பான, திறன் மிகுந்த நடைமுறைகளை உருவாக்கி அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை எப்படித் தொடர்ந்து கண்காணிப்பது என்பதைச் சொல்லி இந்தப் புத்தகத்தை முடித் துள்ளார் ஆசிரியர்.

பிசினஸ் குறித்த பல விஷயங்களைப் புதிய கோணத்தில் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படித்துப் பயன்பெறலாம்.

பிட்ஸ்

ந்திய ராணுவ வீரர்களுக்கு 2017-18-ல் ரூ.92,000 கோடி பென்ஷன் வழங்கப் பட்டது. இது கடந்த 2020-21-ல் ரூ.125 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு