Published:Updated:

எந்த ரிஸ்க்கையும் எடுக்காமலே வெற்றிக்கனியை சுவைக்க முடியுமா?

எம்.பி.ஏ புக்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

அமெரிக்காவின் சிறப்பான கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, பள்ளியின் கூடைப்பந்து விளையாட்டுக் குழுவிலிருந்து சரியாக விளையாடாத காரணத்தால் நீக்கப்பட்டவர். பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்த வால்ட் டிஸ்னி, சிறந்த புதிய ஐடியாக்கள் எதையும் சொல்ல வில்லை என்ற காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவர். அவர் ஆரம்பித்த கார்ட்டூன் படம் தயாரிக்கும் முதல் நிறுவனம் திவாலாகிப் போனது. லூசி பால் எனும் மிகவும் பிரபலமான அமெரிக்க நடிகைக்கு நடிப்பே வரவில்லை என்று நடிப்புச் சொல்லித்தரும் பள்ளி வெளியேற்றியது. இவர்களைப்போல எக்கச் சக்கமான வெற்றியைக் குவித்த பலரும், படுதோல்வியைச் சந்தித்த பின்னரே மிகப்பெரும் வெற்றியை அடைந்துள்ளனர் என்ற பட்டியலுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்:
Chasing Failure
ஆசிரியர்:
Ryan Leak
பதிப்பாளர்:
Thomas Nelson 
Publishers
புத்தகத்தின் பெயர்: Chasing Failure ஆசிரியர்: Ryan Leak பதிப்பாளர்: Thomas Nelson Publishers

தோல்வியைக் கண்டு பயப்படுகிறவர்கள்...

எல்லோரும் வாழ்வில் தோல்வியைச் சந்திக்கவே செய்கிறார்கள். யாரெல்லாம் தோல்வியைக் கண்டுத் துவண்டுவிடாமல் அதிலிருந்து அவர்கள் செய்த தவறுகள் என்னென்ன என்று பார்த்து அவற்றைச் சரிசெய்து கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறும் பாக்கியத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். தோல்வியே மனிதனைப் புரட்டிப்போடும் நிகழ்வாக இருக்கிறது. தைரியம், விடாமுயற்சி, வைராக்கியம், அர்ப்பணிப்பு போன்ற வெற்றி யாளர்களுக்குத் தேவைப்படும் அத்தனை விஷயங்களையும் ஒருவர் பெறுவதற்குத் தோல்விகளே சிறந்த காரணியாக இருக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது.

‘‘நீங்கள் தோல்வியைச் சந்தித்தவுடன் ‘அதெல்லாம் நமக்கு சரிப்படாதுங்க, பயமாக இருக்கு’ என்று பாசாங்கு காட்டி ஒதுங்கும் நபரா அல்லது இரண்டில் ஒன்று பார்த்துவிடு வோம் என்று வரிந்துகட்டிக்கொண்டு இறங்கும் நபரா என்பதிலேயே நீங்கள் வெற்றிபெறுபவரா, தோல்வியால் துவண்டுபோகும் நபரா என்பது முடிவாகிறது. நீங்கள் ஒரு விஷயத்தை எவ்வளவு வைராக்கியமாக, நிஜமாகவே செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கும் ஓர் அளவீடாக இருக்கிறது. தோல்வியை ஒரு சாபமாக நினைக்காமல் வரமாக நினைக்கும் மனநிலையைக் கொண்டிருக்கும்போது மட்டுமே வெற்றி என்கிற பரிசு உங்களுக்குக் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

எந்த ரிஸ்க்கையும் எடுக்காமலே 
வெற்றிக்கனியை சுவைக்க முடியுமா?

கனவு வாழ்க்கை டு சராசரி வாழ்க்கை...

பலரும் நம்மிடம் பெரியதாகக் கனவு காணுங்கள் என்கின்றனர். ஆனால், யாருமே நீங்கள் உங்கள் கனவை நனவாக்கும் முயற்சியில் தோல்விகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்று சொல்வதில்லை. சிறு குழந்தைகளாக நாம் கனவுகளைத் தொடர்ந்து காண்பதற்கான செளகரியத்தைக் கொண்டிருந்தோம். ஏனென்றால், அந்த வயதில் பெரிய தோல்வி எதையுமே நாம் சந்தித்ததில்லை. எனவே, தோல்வி குறித்த பயம் நமக்கு அந்த வயதில் கொஞ்சமும் இருப்பதில்லை. எனவே, கனவுகளும் பெரியதாக இருக்கிறது. நாம் வளர வளர நம்முடைய தோல்வி குறித்த பயமும் வளர ஆரம்பிக்கிறது. இதனாலேயே தோல்வி (தோல்வி வரக்கூடும் என்ற பயத்தின் மூலமாக) என்பது நம்மை மறைமுகமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது. கனவுகள் தேய்ந்து காணாமல் போய்விடுவதற்கு காரணமாகவும் ஆகிவிடுகிறது. அதன் பிறகு, கனவு என்றாலே வெறுத்து ஒதுக்கவும், ஒதுங்கவும் தொடங்கிவிடுகிறோம்.

கனவுடன் வாழ்க்கையை ஆரம்பிக்கும் குழந்தை என்ற நிலையில் இருந்து பிழைத்துக் கிடந்தாலே போதுமானது என்ற ‘சர்வைவல்’ மனநிலை கொண்ட முழுமனிதனாக/மனுஷியாக நாம் உருவெடுத்துவிடுகிறோம். இந்த நிலையில், சமூகத்தில் ஒரு முழு மனிதனாக நாம் உருவெடுத்தவுடன் நம்மிடம் வந்துசேரும் பொறுப்புகளே நம்மை ‘status quo’ எனும் இருக்கும் நிலையில் இருந்து மாறவிரும்பாத ஒரு சூழ்நிலையில் கட்டிவைத்துவிடுகிறது. இதுவே நாம் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ்வது எவ்வளவு நியாயமானது என்பதற்கான வாதங்களைச் செய்யவும், ரிஸ்க் எடுத்து எதையாவது செய்து தோல்வி அடைந்தால் எவ்வளவு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறித்து தத்ரூபமாக விவரிக்கவும் வைக்கிறது.

நம்முடைய கனவை நாம் ஏன் நனவாக்க முயலவில்லை என்று நிதானமாக, நியாயமாகச் சிந்தித்தால் என்ன பதில் கிடைக்கும்? என்னுடைய கனவு சரியா, இது வெற்றி பெறுமா, நான் வெற்றி பெறுவேனா, என்னால் எப்படி இதைச் செய்ய முடியும், இதற்குத் தேவையான கல்வித்தகுதி, பணம் என்னிடம் இருக்கிறதா, திருமணமாகி குழந்தை வேறு பெற்றாகிவிட்டது... எனப் பல்வேறு நிஜமான மற்றும் போலியான காரணங்களைப் பட்டியலிட்டு நம்முடைய முயற்சியின்மைக்கான சப்பைக்கட்டு கட்டுவோம். இப்படி வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?’’ என்று கேட்கிறார் ஆசிரியர். சராசரி வாழ்க்கை வாழ்வதே சரி என்று சொல்லிவிட்டு, சராசரிக்கும் கீழான வாழ்க்கையையே நாம் வாழ்ந்து வருகிறோம் என்கிற உண்மையைப் புரிந்து கொள்ளும்போது நமக்கு ஷாக் அடிக்கிறது!

தோல்வி இல்லாத வரம்...

‘‘ஒரு வாதத்துக்காக நீங்கள் செய்யும் எதிலும் தோல்வியே வராது என்ற வரம் உங்களுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; நீங்கள் அந்த நிலையில் என்ன செய்வீர்கள்? புத்தகம் எழுதுவீர்களா, ஒரு ஆப் டெவலப் செய்வீர்களா ஒரு ஹோட்டலைத் தொடங்குவீர்களா அல்லது இசையமைப்பாளராக மாறுவீர்களா, இல்லை, ஏரோப்ளேன் தயாரிப்பீர்களா, சொல்லுங்கள்’’ என்கிற வித்தியாசமான கேள்வியைக் கேட்டு யோசிக்க வைக்கிறார் ஆசிரியர்.

இந்த வரம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தில் முயன்று பாருங்கள். அதில் எதிர் கொள்ளும் / அதற்குத் தேவை யான விஷயங்களுக்கு நம்மைத் தயார் செய்துகொள்வது எவ்வளவு கடினம் என்று தெரிந்த வுடனேயே நாம் அதிலிருந்து நழுவி வெளியேறிவிடுவோம். இந்த உலகில் வெற்றி மட்டுமே வேண்டும் என்றுதான் பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வெற்றியை ருசித்தவர்கள் அனைவருமே தோல்வி என்ற யாருமே விரும்பாத ஒன்றை ருசித்தவர் களாகத்தான் இருக்கிறார்கள். இதனால்தான் சொல்கிறேன், வெற்றிக்கான நீண்ட வரிசையில் நீங்கள் இஷ்டப்பட்டு நிற்பதை விட யாருமே வேண்டி விரும்பி ஏற்காத தோல்வியைத் துரத்திப் பிடித்தால் வெற்றி என்பது தானாக வந்துசேரும் என்று. ஏனென்றால், வெற்றி பெற்ற அனைவருமே தோல்வியை ஆரத் தழுவிய பின்னாலேயே வெற்றியை அடைந்துள்ளனர் என்பது நமக்கு கண்கூடாகத் தெரிகிறது.

எனவே, தோல்விகளைத் துரத்துவது என்பது எந்த ஒரு காரியத்திலும் நம்மால் இயன்ற அளவுக்கான சிறப்பான முயற்சிகளைச் செய்துவிட்டு, அந்தக் காரியத்தில் வரும் வெற்றி/தோல்வி என்ற எந்தவிதமான முடிவுகளுடனும் வாழப் பழகிக் கொள்வதைத்தான் என்கிறார் ஆசிரியர்.

தோல்வி தரும் அழுத்தம்...

தோல்வி, அதனால் வரும் கஷ்டம் என்ற இரண்டையும் குறித்த பயத்தினாலேயே நாம் எதையும் செய்ய முயலாமல் நழுவுகிறோம். தோல்வியும் அதனால் வரும் அழுத்தமும் குறித்த ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் குறித்து ஆராய்ச்சி யாளர் செய்த ஆராய்ச்சி ஒன்றில், பறக்கும் விமானத்தில் இருந்து கீழே குதித்து அது போன்று குதிப்பதில் நம்முடைய மனம் எந்த அளவுக்கு அழுத்தத்தை சந்திக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்.

முதல்முறை விமானத்தில் இருந்து குதித்தபோது உச்சத்தில் இருந்த மன அழுத்தம், மூன்றாவது முறை குதித்தபோது அலுவலகத்துக்கு லேட்டாகப் போகும்போது எந்த அளவு மன அழுத்தம் இருக்குமோ, அந்த அளவுக்குக் குறைந்துபோனதாம். ‘‘இந்தப் புத்தகம் உங்களை விமானத்தில் இருந்து குதிக்க வைக்கும் நோக்கத்துடன்தான் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் வெற்றி கரமாகக் கடைப்பிடித்தால் தோல்வி (வரக்கூடும் என்ற பயமும் அந்த எண்ணம் தரும் அழுத்தமும்) என்பதன் கட்டுக்குள் இருந்து உங்களை விடுவித்து வெற்றிகர மாக வெளியே கொண்டு வந்துவிடும். இந்தப் புத்தகம் உங்களைத் தோல்வி அடை வதற்கான முயற்சிகளை எடுப் பதை ஊக்குவிப்பதற்காக எழுதப் பட்டதல்ல. தோல்வி அடைய விரும்புவதற்கான எண்ணத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் எழுதப்பட்டது’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘ஒரு மனிதருடைய வாழ்க்கையில் அவர் ஒரு விஷயத்தை முடிக்க முடியாது போதல், எல்லையைத் தொட முடியாது போதல் அல்லது ரிஸ்க் எடுத்தல் போன்றவை நடக்காமல்போனால் அதுபோன்ற நிகழ்வுகளுக்கான மரபுகள் அவருடைய வாழ்வில் கட்டமைக்கப்படாமலேயே போய்விடுகிறது. எனவே, நீங்கள் விரும்பும் எதையும் ஏதாவது காரணங்களைச் சொல்லித் தள்ளிப்போடாமல், அதில் உடனடியாக ஈடுபட்டு, வெற்றி காண்பதற்கான கட்டமைப்பை உருவாக்குங்கள்.

நாளைக்கு நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாக இன்றைக்கே மாறுங்கள். வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொண்டிருக்கும் நீங்கள், எது நடந்தால், அந்த மாற்றத்துக் கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள், அப்படி ஏதாவது ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று நினைக்காமல் உங்கள் எண்ணத்தை மாற்றி வெற்றிக்கான முதல்படியான தோல்வியைச் சந்திப்பதற்கான பயணத்தை பொய்யான காரணங்கள் ஏதும் சொல்லாமல் இன்றே தொடங்குங்கள்’’ என்று கூறி புத்தகத்தை நிறைவு செய்கிறார்.

தோல்வி குறித்த நம் எண்ணத்தை முழுமையாக மாற்ற உதவும் கருத்துகளை எளிய நடையில் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு