Published:Updated:

உற்பத்தித் திறனை வளர்த்து முன்னேறிச் செல்லும் வழிகள்!

முன்னேறும் வழிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
முன்னேறும் வழிகள்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

இந்த வாரம் நாம் பார்க்க இருக்கும் புத்தகத்தை எழுதிய ஆசிரியை மெடெலிலைன் டோர் 2014 முதல் ‘எக்ஸ்ட்ராடினரி ரொட்டீன்ஸ்’ என்ற பிளாக்கையும், ‘ரொட்டீன்ஸ் & ரட்ஸ்’ எனும் பாட்காஸ்ட்டை நடத்தியும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்தவர் ஆவார்.

புத்தகத்தின் பெயர்:
 I Didn’t Do The Thing Today: On letting go of productivity guilt
ஆசிரியை:
Madeleine Dore
பதிப்பாளர்:
Murdoch Books
புத்தகத்தின் பெயர்: I Didn’t Do The Thing Today: On letting go of productivity guilt ஆசிரியை: Madeleine Dore பதிப்பாளர்: Murdoch Books

‘‘நம்முடைய உற்பத்தித் திறனை அதிகரிக்க நம்மிடம் இருக்கும் குணாதிசயங்களை மாற்ற முயற்சி செய்வதற்குப் பதிலாக அன்றாட வாழ்வில் நாம் பல விதமான மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்பது போன்ற நிச்சய வெற்றிக்கான அறிவுரை களாகச் சொல்லாமல் பலரின் அன்றாட வாழ்க்கை முறை குறித்த கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட விஷயங்களைக் கொண்டு இந்தப் புத்தகத்தை வடிவமைத்துள்ளேன்’’ என்கிறார், இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

ஒரே நாளில் பல வேலைகளைச் செய்வது...

ஒரு நாளில் நாம் பல வேலைகளைச் செய்கிறோம். செய்தேயாக வேண்டிய விஷயம், செய்ய விரும்பாத விஷயம் மற்றும் முக்கியமான ஒரு காரியத்தை ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிப்போடுவது என அந்த விஷயங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். நம்முடைய வாழ்வில் ஒரு சில நாள்களில் மிகக் குறைந்த காரியங்களையும் ஒரு சில நாள்களில் மிக அதிக அளவிலான காரியங்களையும் செய்து முடிப்போம். இதுதான் நிதர்சனம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளத் தவறுவதாலேயே நாம் பலவிதமான மனக்குழப்பத்துக்கு ஆளாகிறோம்.

ஒரு நாளில் நாம் எக்கச்சக்கமான வேலை களை செய்யத் திட்டமிடுவது, பரிபூரண நிலையில் நம்முடைய செயல்பாடுகளை நம்மால் வைத்திருக்க முடியும் என நினைப்பதால்தான். இப்படி நினைப்பதாலேயே இதையெல்லாம் நீங்கள் செய்தால் அதிக அளவிலான உற்பத்தித்திறனுடன் இருக்க முடியும் என்று சொல்லப்படும் அறிவுரைகளையும் நாம் நம்புகிறோம். இதைச் செய்தால் உங்கள் உற்பத்தித்திறன் அதிகரிக்கும், அதைச் செய்தால் உங்கள் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்று யார் எதைச் சொன்னாலும் அதை உண்மை என்று நம்புகிறோம்.

இந்த மாதிரியான பரிந்துரைகளும் / தீர்வு களும் ஒருபோதும் நம் பிரச்னைகளைச் சரிசெய்யாது. முன்னேற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகப் புதிதாக ஒரு நடைமுறையைப் பின்பற்றும்போது வரும் ஒரு திருப்தி மட்டுமே கொஞ்ச காலத்துக்கு நமக்கு கிடைக்கும். ஒரு சில விஷயங்கள் நம்மிடம் மாற்றங்களைக் கொண்டு வரவும் செய்யும். ஆனாலும், ஒரு சில நாள்களில் இந்தப் புதிய நடைமுறையானது புதியதாகப் பல முட்டுக்கட்டைகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். நாளடைவில் இந்தப் புதிய விஷயங்கள் நம்முடைய பிரச்னைகளைச் சரிசெய்யவில்லை என்பதை நாம் உணர்வோம். அல்லது, புதிய நடைமுறையை நாம் முழுமையாகப் பின்பற்றவில்லை என்பதைக் (கற்பனை செய்துகொள்வோம்) கண்டுபிடிப்போம். அப்புறம் என்ன, மறுபடியும் அப்படி இருந்தால், இப்படி இருந்தால் என்று சொல்கிற மனநிலைக்குச் சென்றுவிடுவோம். இப்படி மீண்டும் மீண்டும் எதையாவது செய்வோமே தவிர, நம் உற்பத்தித்திறன் மட்டும் உயரவே உயராது.

உற்பத்தித் திறனை வளர்த்து
முன்னேறிச் செல்லும் வழிகள்!

பரிபூரணத்தை நோக்கிச் செல்லுதல்...

இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? நாம் நம்முடைய நாளை பரிபூரணமான நாளாக மாற்ற நினைப்பது தான். ஆங்கிலத்தில் உள்ள ‘perfect’ என்னும் வார்த்தை லத்தீன் வார்த்தையான ‘perficere’ என்ற வார்த்தையை மூலமாகக் கொண்டது. இந்த லத்தீன் வார்த்தைக்கான பொருள் முடித்தல், பூரணமாக்குதல், நிறைவேற்றுதல் மற்றும் சாதித்தல் போன்றவையாகும். நம்முடைய நாளை நகர்த்தும்போது நாம் நிறைவேற்ற சாத்தியமே இல்லாத ஒரு செயல்பாட்டு இலக்கையே நிர்ணயிக்கிறோம். இப்படி ஓர் இலக்கை நிர்ணயித்துவிட்டு, அதை அடைய முடியாத நிலையில், நம்மிடம் ஏதோ குறையிருக்கிறது. நாம்தான் சரியில்லை என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். இந்தத் தவறான எண்ணத்துக்கு ஒரு தீர்வையும் தேட ஆரம்பித்து மேலும் மேலும் தவறு செய்கிறோம்.

மனிதர்கள் அனைவருமே குறைபாடுகள் கொண்டவர்கள் என்பதுதான் பொது விதி. இதை மறந்துவிட்டு, ஏதோ நம்மிடம் மட்டுமே குறைபாடு இருக்கிறது என்ற மாயத் தோற்றத்தை நமக்கு நாமே நாம் உருவாக்கிக்கொள்கிறோம். அந்த நிலையிலிருந்து நம்மை மேம்படுத்துவதற்குப் பதிலாக உற்பத்தித்திறன் குறித்த நம்முடைய இத்தகைய பேரார்வம் நம்மை திகைப்பும் திகிலும் அடைய வைத்து, சோர்வுக்கும் அழுத்தத்துக்கும் ஆட்படுத்தி, மன உளைச்சலை அதிகரிப்பதன் மூலம் நம்மை எதற்கும் பிரயோஜனப்படாத நபராகவே ஆக்கிவிடுகிறது. ஏனென்றால், உற்பத்தித்திறன் மிகுந்தவராக நீங்கள் இருக்க இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று சுலபத்தில் கண்டறிந்துவிடலாம். ஆனால், அவற்றைச் செய்வதே கடினமான காரியமாக இருக்கும்.

உற்பத்தித் திறனுடன்கூடிய நாள் என்பது...

‘‘ஒவ்வொரு நாளும் நீங்கள் உச்சபட்ச உற்பத்தித் திறனுடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாறாக, செய்யும் காரியங்களை மகிழ்வுடன் செய்தும், தேவையானவற்றைக் கவனித்தும் இருந்தாலே அது நல்லதொரு நாள்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் ஒரே மாதிரியான அளவுகோல் கொண்டு அளக்க முயலாதீர்கள். ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொருவகை குணாதிசயத்தைக் கொண்டிருக்கும் என்பதாலேயே இப்படி நான் சொல்கிறேன்.

ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்குப் பணத்தைக் கொண்டு வந்து சேர்க்கவோ, கேரியரில் முன்னேற்றம் தரும் படிப்பினைகளைக் கொண்டு வந்து சேர்க்கவோ செய்யாது. சிந்தனை செய்ய, நண்பர் ஒருவருடன் ஜாலியாக அரட்டை அடிக்க, புதிய ரெசிப்பியை சமைக்க முயன்று பார்க்க, ரிலாக்ஸ்டாக ஒரு வாக் போக, குட்டித் தூக்கம் போட, முன்பின் தெரியாதவருடன் உரையாட எனப் பல்வேறு விதமாக உங்களுடைய நாள் கட்டமைக்கப் பட வாய்ப்புள்ளது. ஒரு சில நாள்கள் இதிலேயே கழிந்து விடலாம். அதே போல, ஒரு சில நாள்களில் இதற்கான நேரமே இல்லாதும் போகலாம். இதனால் தான், ஒரே மாதிரியான அளவு கோலைக் கொண்டு நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் அளக்க முயலாதீர்கள்’’ என்கிறார் ஆசிரியை.

மற்றவர்களைப் பார்த்து பதறாதீர்கள்...

‘‘என்னவோ போங்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் எப்படிச் செலவிடுகிறோமோ, அதைப் பொறுத்தே நம்முடைய வாழ்க்கையின் பாதையும் இருக்கப்போகிறது என்பது தானே நிஜம்... என்று நீங்கள் ஆதங்கப்படலாம். இந்தக் கருத்துக்கு ஆதரவாக மற்றவர் களைப் பாருங்கள். அவர் அதைச் செய்கிறார், இவர் இதைச் செய்கிறார் என்ற மேற்கோள்களையும் நீங்கள் காட்டலாம். இதனாலேயே என்னால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை என்று நீங்கள் வருத்தமும் படலாம். என்னுடைய ஆராய்ச்சியில் நான் இது குறித்து கண்டறிந்த ஒரே ஒரு விஷயம் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு என்று தலைசிறந்த நடைமுறை என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான்’’ என்கிறார் ஆசிரியை.

‘‘ஒவ்வொரு நாளையும் எந்த விதத்தில் சிறப்பான உற்பத்தித் திறனுடன் நடத்திச் செல்வது என்பதற்கான நடைமுறையைத் தேடி காலத்தை வீணாக்காதீர்கள். அதே போல, இவ்வளவு காலம் /நேரம் வீணாகிப் போய்விட்டதே என்று வருத்தப்படுவதற்கு நேரத்தைச் செலவழிக்காதீர்கள். உங்களுடைய இலக்குகளை மாற்றிக்கொண்டே இருப்பதைத் தவிருங்கள். உங்களை எந்தப் புறமும் நகர விடாமல் தடுக்கும் எதிலும் முடிவே எடுக்காத குணத்தை ஒருபோதும் பெற்று விடாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதன் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட அதனால் வரும் வருத்தமே அதிகம் என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுங்கள். இது இப்படி இருக்க வேண்டும், அது இப்படி இருக்க வேண்டும் என்று புறக்காரணிகள் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு களை வளர்க்காதீர்கள்’’ என்பவை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஒவ்வோர் அத்தியாயமாக நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் ஆசிரியை விளக்கியுள்ளார்.

அனுபவித்து செயல்படுங்கள்...

இறுதியாக, ‘‘எந்த ஒரு நாளிலும் அந்த நாளில் நீங்கள் திட்ட மிட்டவற்றைச் செய்து முடிக்கா விட்டாலுமே அந்த நாள் குறித்து பின்வரும் விஷயங்களை நினைத்து மகிழ்ச்சி அடையப் பழகிக்கொள்ளுங்கள்” என்கிறார் ஆசிரியை. “அந்த நாளில் சந்தித்த தோல்விகள் செய்த தவறுகள் குறித்து சந்தோஷப்படுங்கள். ஏனென்றால், அவை உங்களுடைய முயற்சியைக் காட்டுகிறது. அன்றைய நாளில் உங்களுக்குத் தெரியாதது எது என்று நீங்கள் தெரிந்து கொண்ட விஷயம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால், அது உங்களுடைய தேடுதலைக் காட்டுகிறது. ஓய்வெடுத்தல், வேலையே செய்யாமல் இருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால், அது போன்ற சூழ்நிலைகளிலேயே உங்களுக்கு நுட்பமான உள்பார்வை கிடைக்க வாய்ப்புள்ளது.

எதிர்பார்ப்புக்கும் நடப்புக்கும் அதிக வித்தியாசம் இருக்கும் நாள்கள் குறித்து கவலைப்படாதீர்கள்; மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால், அதுவே உங்களுக்கு எந்த அளவுக்கு நீங்கள் ஈடுபடும் விஷயங்களில் மாறுபாடான விளைவுகள் தோன்றலாம் என்பதைக் காட்டும். எல்லா வற்றுக்கும் மேலாக, நீங்கள் செயல்படும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவியுங்கள். ஏனென்றால், நாம் மனிதராகப் பிறந்ததே அதற்காகத்தான்’’ என்று கூறி முடிக்கிறார் ஆசிரியை.

எளிய நடையில் உற்பத்தித்திறன் மற்றும் அது குறித்த பொதுவான அறிவுரைகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளைப் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்கலாம்!