Published:Updated:

அலுவலகப் பணியில் உச்சத்தைத் தொட நீங்கள் தயாரா?

அலுவலகப் பணியில்...
பிரீமியம் ஸ்டோரி
அலுவலகப் பணியில்...

எம்.பி.ஏ புக்ஸ்

அலுவலகப் பணியில் உச்சத்தைத் தொட நீங்கள் தயாரா?

எம்.பி.ஏ புக்ஸ்

Published:Updated:
அலுவலகப் பணியில்...
பிரீமியம் ஸ்டோரி
அலுவலகப் பணியில்...

ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதில் நிறைய சவால்கள் இருக்கும். அதிலும் பதவி உயர்வுகளைப் பெற்று வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் நிறைய சிக்கல்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

வெற்றிகரமான வழிகாட்டல்...

‘‘இந்தவித சவால்களை எதிர்கொள்வதில் ஒருவருடன் எக்ஸிக்யூட்டிவ் கோச் இருந்தால் எந்தவிதமான பயிற்சிகளையும் ஐடியாக்களையும் அவர் தருவாரோ, அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வதுதான் ‘If You Only Had Time’ என்ற புத்தகத்தின் நோக்கம்.

புத்தகத்தின் பெயர்:
  If You Only Had Time: What You’d Learn from an Executive Coach
 ஆசிரியர்:
 Duncan Aldred
பதிப்பாளர்:
Aus tin Macauley Publishers
புத்தகத்தின் பெயர்: If You Only Had Time: What You’d Learn from an Executive Coach ஆசிரியர்: Duncan Aldred பதிப்பாளர்: Aus tin Macauley Publishers

சரியானதொரு எக்ஸிக்யூட்டிவ் கோச்சுடன் இணைந்து நேரத்தைச் செலவிட்டு கற்றுக்கொண்டால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால், பலருக்கும் பணியிட அழுத்தங்களாலும் நிர்வாக காரணங்களாலும் இந்த வசதியும் நேரமும் இருப்பதேயில்லை. அந்த பிரச்னைக்கான தீர்வாகத்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது’’ என்கிறார் ஆசிரியர்.

பர்சனாலிட்டியைத் தெரிந்துகொள்ளுங்கள்...

முதலில் உங்களுடைய பர்சனாலிட்டி எப்படிப்பட்டது என்பது குறித்து நியாயமான ஒரு எடை போடுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், இதற்கான சில டெஸ்ட்களையும் தந்துள்ளார்.

‘‘இந்த டெஸ்ட்களை எழுதிய பின்னால் எடுத்த மதிப்பெண்களை வைத்துக்கொண்டு உங்களைப் பற்றி எடை போட ஆரம்பித்துவிடாதீர்கள். ஏனென்றால், அலுவலகத்தில் ஒவ்வொருவரும் ஒரு பர்சனாலிட்டி டைப்பில்தான் இருப்பார்கள். ஒவ்வொரு பர்சனாலிட்டியிலும் ஒரு சில நன்மை களும் தீமைகளும் இருக்கவே செய்கிறது. இதைத் தெரிந்துகொள்வதன் மூலம் ‘நாம் இந்த மாதிரியான ஆள்தான்’ என்பதைப் பரிபூரணமாக உணர்ந்து கொள்வது என்பதுதான் பலனே தவிர, இந்த பர்சனாலிட்டியில் இருந்து அந்த பர்சனாலிட்டியாக மாறுவதற்கு முயற்சி செய்ய அல்ல.

நான் ஒரு ‘இன்ட்ரோவர்ட்’, நான் ஒரு ‘எக்ஸ்ட்ரோவர்ட்’ என்று கழுத்தில் பேட்ஜ் எழுதி வாழ்நாள் முழுவதும் தொங்க விட்டுக்கொண்டு திரிவதற்காக அல்ல இந்த டெஸ்ட். இந்த விதமான செயல்பாடுகள்தான் என்னுடைய இயல்பு என்பதைத் தெரிந்து கொண்டால், அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட முயற்சி செய்யத்தான்’’ என்கிறார் ஆசிரியர்.

உங்கள் ஆளுமை எப்படி?

அடுத்தபடியாக ஆசிரியர் சொல்வது, உங்களைப் பற்றிய நேர்மையான ஆளுமைக் குறிப்பு ஒன்றை (பயோடேட்டா) எழுதுங்கள் என்பதைத்தான். ‘‘நான் எதில் சிறந்தவன், நான் எந்த விஷயத்துக்கு லாயக்குப்படாதவன், நான் பார்க்கும் வேலையில் எதையெல்லாம் மகிழ்ச்சியுடன் கேட்டு வாங்கிச்செய்கிறேன், நான் பார்க்கும் வேலையில் எதையெல்லாம் வெறுத்து ஒதுக்கி அதீத எரிச்சலுடன் செய்கிறேன், அடுத்தவர்கள் - குறிப்பாக, என்னுடன் பணிபுரிபவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கின்றனர் என்பது போன்றவற்றுக்கு விடை அளிப்பதாக இருக்க வேண்டும் அந்த பயோடேட்டா.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் சரிதான் என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை உங்கள் நடவடிக்கைகளில் இருந்து திரட்டுங்கள். அவற்றைப் பட்டிய லிடுங்கள். பின்னர், உங்கள் குணாதிசயத்தில் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் (ஒரு கதையில் சொல்லப்பட்டிருக்கும் கதாபாத்திர நபரைப்போல்) என்பதை வெளியேயிருந்து பாருங்கள்.

அப்படிப் பார்த்த பின்னர், அந்த நபர் வெற்றி பெற நீங்கள் என்னென்ன உபாயங்களைச் சொல்வீர்கள் மற்றும் எந்த மாதிரியான வழிநடத்துதலைச் செய்வீர்கள் என்று சிந்தியுங்கள்’’ என்று சொல்லும் ஆசிரியர், ஒரு நபரை பயிற்றுவிற்பதில் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பதையும் விளக்கமாகச் சொல்லியுள்ளார்.

அலுவலகப் பணியில் உச்சத்தைத் தொட நீங்கள் தயாரா?

எதிர்காலத்தில் எப்படி இருப்பீர்கள்..?

‘‘இந்த கோச் வேலையை ஆரம்பித்த உடனேயே நீங்கள் இது நாள் வரை எப்படி பொழுதைப் போக்கியிருக்கிறீர்கள் என்பதையும், என்னவாக மாற வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தீர்கள் என்பதையும் முழுமையாக உணர ஆரம்பிப்பீர்கள். இதை உணர்ந்தவுடன் பல விஷயங்கள் உங்களுக்கு கைகூடி வர ஆரம்பிக்கும்.

சரி. இதுவரை போனது போகட்டும். எதிர்காலத்தில் (மூன்று வருடம், ஐந்து வருடம் கழித்து) இதே போன்ற ஒரு எடைபோடுதலைச் செய்தால் எப்படிப் பொழுதைப் போக்கினோம் என்ற கேள்விக்கு நாம் என்ன மாதிரியான பதிலைத் தருவோம் என்று திட்டமிட ஆரம்பியுங்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

“இது கடையில் சென்று ஒரு ஷூ வாங்குவதைப் போன்றது. சைஸை முடிவு செய்துவிட்டு ஒவ்வொரு மாடலிலும் எந்த சைஸ் நமக்கு நடப்பதற்கு செளகரியமாக இருக்கிறது என்பதை நாம் தீர்மானிப்பதைப் போன்றது.

பிராக்டிக்கலாகச் சொன்னால், ஐந்து வருடங்கள் கழித்து நான் எந்தப் பதவியில் இருப்பேன், எப்படி ஃபீல் பண்ணுவேன், ரிடையராகும்போது நான் எந்த மாதிரியான கேரியரைக் கொண்டிருந்தேன் என்று வருந்துவேனா, சந்தோஷப் படுவேனா, வருந்துவதைத் தவிர்க்க நான் இப்போது என்ன செய்ய வேண்டும், எதிர்காலம் என்பதைக் கணிக்க முடியாது என்பதால் நான் சரியான பாதையில்தான் போகிறேனா என்பதை அவ்வப்போது எப்படி ஓரளவுக்காவது சரிபார்த்துக்கொள்வது? என்பது போன்ற கேள்விகளைக் கேட்க வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.

எல்லாம் நன்றாகச் செல்லும் வரை...

“சரி, இப்போது நாம் என்னவாகி இருக்கிறோம் என்பது தெரிந்துவிட்டது. மாற வேண்டும் என்பதும் புரிகிறது. எப்படி மாறுவது” என்று கேட்கும் ஆசிரியர், அதற்கு ஒரு கதையைச் சொல்கிறார்.

“ஒரு வீட்டில் பிறந்த குழந்தை ஐந்து வயது வரை ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம். பெற்றோர்கள் மிகுந்த கவலை கொண்டிருக்கும் வேளையில், ஒரு நாள் சாப்பாட்டு மேசையில் அந்தப் பையன் ‘சூப் சூடாக இல்லை’ என்று சொன்னானாம்.

பெற்றோர்கள் அடப்பாவி! ஐந்து வருடமாக ஏன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்று கேட்க, இன்றுவரை எல்லாம் நல்லாத் தான் போய்க்கொண்டிருந்தது. அதனால் பேசத் தேவை இல்லாமல் போனது என்றானாம். அதே போல்தான் உங்களுடைய சூழலும். இப்போது நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் மற்றும் எதெல்லாம் சரியில்லை என்று தெரிந்துவிட்டது. அதனாலேயே மாற்றம் குறித்த நடவடிக்கை களை நீங்கள் எடுத்தேயாக வேண்டியுள்ளது’’ என்கிறார்.

உங்களை நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள்...

‘‘உங்கள் உள்மனது சொல்வதைக் கேளுங்கள். கொஞ்சம் சீரியஸாக மாறி பேச்சைக் குறைத்து, அதே சமயம் தெளிவாகப் பேசி, மற்றவர்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டு, நான், நான் என்று தற்பெருமை பேசுவதைத் தவிர்த்து எனப் பல்வேறு விஷயங்களை நீங்கள் உங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். இது தவிர, தனிநபராக உங்களுடைய பிராண்டையும் நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்களை எப்படிப் பார்க்கின்றனர், என்னுடைய கேரியரின் இலக்கு தான் என்ன, யார் எனக்கான கேரியர் முடிவுகளை எடுப்பார்கள், எப்படி என்னிடம் இருக்கும் குணங்களை மற்றவர்கள் பார்க்கச் செய்வது போன்ற கேள்விகளை பிராண்டை நிர்வகிக்க நீங்கள் கேட்க வேண்டியிருக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

தலைமைப் பண்பின் குணங்கள்...

ஒரு தலைவனாக உருவெடுக்க நம்முடைய அலுவலகத்துக்கு எந்த மாதிரியான தலைமைப் பண்பு தேவைப்படுகிறது, ‘‘இதுவரை என்னைத் தலைமை யேற்று நடத்தியவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டிய தலைமைப் பண்புகள் என்னென்ன, உடன் பணிபுரிப வர்களை தலைமையேற்று நடத்த எனக்கு நேரமும் தகுதியும் இருக்கிறதா, என்னுடைய குழு என்னை ஒரு தலைவனாகப் பார்க்குமா, என்ன நினைக்கும், இது சரிப்பட்டுவராது எனில், என்னுடைய குழு உறுப்பினர்கள் என்னிடம் வெளிப்படையாகப் பேசுவார்களா என்பது போன்ற கேள்விகளை நீங்கள் உங்களிடம் கேட்க வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.

வேலைகளைப் பிரித்துக் கொடுத்து வேலை வாங்கப் பழகுவது, நம்முடைய மேனேஜரை சாதுரியமாக நிர்வகிப்பது, வேலை மற்றும் வாழ்க்கையை சமச்சீராகக் கொண்டுசெல்வது, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, அதிர்ஷ்டக்காரராக இருப்பதற் கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது போன்ற பல்வேறு விஷயங்களுக்கான அறிவுரைகளையும் இந்தப் புத்தகம் ஒரு கோச் நேரிடையாக சொல்லித் தருவதைப்போல் சொல்லித் தருகிறது.

அரவணைத்து செல்ல பழக வேண்டும்...

இறுதியாக இந்த அறிவுரைகளை வைத்துக்கொண்டு எப்படிச் சவால்களை எதிர்கொள்வது என்பதைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லியிருக்கும் இந்தப் புத்தகம், என்னதான் லேசர்-ஃபோகஸுடன் செயல்பட்டாலும் உடனிருக்கும் அனைவரையும் அரவணைத்து செல்ல பழக வேண்டும்.

அதை விட்டுவிட்டு ஃபோகஸ், ஃபோகஸ் என்று சொல்லி அனைவரையும் மனிதநேயம் இன்றி நசுக்கி செயல்பட்டால் அது திமிர் என்றே சக பணியாளர்களால் பார்க்கப்படும். அந்த நிலை வந்துவிட்டால் சறுக்குவதற்கான முகாந்திரங்கள் தோன்றிவிடும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் (இதற்கான பாசிட்டிவ் உதாரணமாக பென் ஹண்ட் டேவிஸ் எனும் ஒலிம்பிக் வீரரையும் நெகட்டிவ் உதாரணமாக ப்ரெட் குட்வின் எனும் ஒரு வங்கியின் சி.இ.ஓ-வையும் உதாரணமாக) எனச் சொல்லி முடிகிறது இந்தப் புத்தகம்.

அலுவலக வாழ்க்கையில் உச்சத்தைத் தொட நினைக்கும் அனைவரும் கட்டாயம் படித்து பயன்பெறக்கூடிய புத்தகம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism