நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வெற்றிகரமான மேனேஜராக இருப்பது எப்படி? சிறந்த தலைமைக்கான வழிகாட்டல்...

மேனேஜர்
பிரீமியம் ஸ்டோரி
News
மேனேஜர்

M B A B O O K S

"என்னுள்ளே இருக்கும் மற்றும் என்னால் என்னைச் சுற்றி எப்போதும் உருவாக்கப்படும் குழப்பங்கள் எக்கச்சக்க மானது. நான் எப்போதுமே முன்னுக்குப் பின் முரணாகவே செயல்படுகிறேன். ஏன் என்றே தெரியவில்லை. ஒரு சமயம் ஜென்டில் மேனாகவும் மற்றொரு சமயம் தெருச்சண்டை போடும் ஆளாகவும் இருந்துவிடுகிறேன். நானெல்லாம் தலைமைப் பதவிக்கு (மேனேஜர்) சரிப்பட்டு வரமாட்டேன். என்னமோ எனக்கு தலைமைப் பதவி கிடைத்து விட்டது. இதில் மேலும் முன்னேற்றம் அடைவது என்பதெல்லாம் சாத்தியமா என்று எனக்கே தெரிய வில்லை. போகிற வரைக்கும் போகட்டும் பார்ப்போம்’’ என்று நினைக்கும் மனிதரா நீங்கள்? உங்களுக்கான புத்தகம்தான் இது என்ற நச்சென்ற நம்பிக்கை வார்த்தை களுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

சூப்பர் வெற்றியும் படுதோல்வியும்...

‘‘ஒரு நிர்வாகியான என்னை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு இழிவான புத்திகொண்ட, அற்பமான, அதீத சுயநலம் கொண்ட ஒரு மனிதனாக இருந்திருக்கிறேன். பணியிடத்தில் என்னுடைய நடவடிக்கைகளால் திறமையான வர்களைக் கதறவிட்டிருக்கிறேன்; சிறுமைப்படுத்தியிருக்கிறேன், கீழ்த்தரமாக நடந்துகொண்டிருக் கிறேன், அடுத்தவர் செய்த சிறப்பான வேலையை சற்றும் லட்சியம் செய்யாமல். ‘என்ன பெரிசா கிழிச் சிட்டீங்க’ என்று கேட்டிருக்கிறேன். ஆனாலும், என்னுடன் பணிபுரிந்தால் ஒருவருடைய கேரியர் சூப்பராக இருக்கும் என்று நிறுவனத்தில் அறியப்பட்டவனாக இருந்தேன்.

சுருக்கமாக, நான் ஒரு சராசரியான மனிதன். ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான குணாதிசயங்களையும் (திறமை மற்றும் கீழ்த்தரமான புத்தி போன்ற எதிரெதிரான விஷயங்கள்), சூப்பர் வெற்றி மற்றும் படுதோல்வி என்பது போன்ற நிகழ்வுகளையும் கொண்ட ஒரு நிர்வாகியாக இருந்து வந்திருக்கிறேன். நீங்களும் ஒரு மேனேஜராக என்னைப் போலவே வாழ்ந்து வருகிறீர்கள் எனில், உங்களுக்கான புத்தகம்தான் இது’’ என்கிறார் ஆசிரியர்.

மேனேஜர்
மேனேஜர்

30 சவால்கள்...

ஒரு மேனேஜராக அதீத குழப்பங் களும் அளப்பரிய வெற்றிகளும் கொண்டதுதான் என்னுடைய வாழ்க்கை. முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, இந்த விதக் குழப்பங்கள் நிறைந்ததுதான் எல்லா நிர்வாகிகளின் வாழ்க்கையும். எந்த ஒரு மேனேஜரும் முழுக்க முழுக்க லீடர்ஷிப் குணாதிசயம் மட்டுமே கொண்டவராக இருப்பதில்லை. அதே போல, எந்த ஒரு மேனேஜருமே நிர்வாக ரீதியாகக் கெட்ட குணங்களை மட்டுமே கொண்டு இருப்பதில்லை. இந்த இரண்டும் கலந்த கலவையாகத்தான் இருக்கின்றனர். இந்த இரண்டும் கலந்த சூழலைத்தான் குழப்பம் என்கிறோம். இந்தக் குழப்பத்தி னுடனேயே மேனேஜர்கள் அன்றாடப் பணிகளைச் செய்து வருகின்றனர்; முடிவுகளை எடுக்கின்றனர். இந்தக் குழப்பத்தால் அவர்களுடைய மனதில் பயம் எப்போதுமே தெளிவற்ற ரூபத்தில் குடிகொண்டிருக்கிறது.

இவற்றைச் சரிசெய்துகொள்ள 30 சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். 30 நாள்களில் இந்த சவால்கள் ஒவ்வொன்றாக நீங்கள் எதிர்கொள்ளலாம். மூன்று பெரும் பிரிவுகளாக இந்த சவால்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

உங்களை நீங்கள் வழிநடத்து வதற்கான சவால்கள் (எட்டு சவால்கள்), மற்றவர்களை வழிநடத்து வதற்கான சவால்கள் (13 சவால்கள்), மற்றும் வெற்றிகரமாக காரியங்களைச் செய்து முடித்து சிறந்த முடிவுகளை அடைவது எப்படி என்பதற்கான சவால்கள் (ஒன்பது சவால்கள்) என்ற மூன்று பெரும் பிரிவுகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. இந்த சவால்களை நீங்கள் புரிந்துகொண்டு செயல்பட்டீர்கள் என்றால், நிர்வாகி என்ற இடத்தில் இருந்து லீடர் என்ற (தலைவர்) என்ற இடத்தை நோக்கிய உங்களுடைய பயணம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் பெயர்:
Management Mess to Leadership Success
ஆசிரியர்:
Scott Jeffrey Miller
 பதிப்பாளர்:
 Mango Media
புத்தகத்தின் பெயர்: Management Mess to Leadership Success ஆசிரியர்: Scott Jeffrey Miller பதிப்பாளர்: Mango Media

ஏராள - தாராள மனநிலை (Abundance Mentality)

‘‘தலைவனாக இருக்க விரும்பும் நபர் பணிவுடன் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். உங்களுடைய பணிவின்மை நீங்கள் நல்ல தலைவனாக உருவெடுப்பதற் கும்/அறியப்படுவதற்கும் தடையாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்களா’’ என்ற கேள்வியை முதல் சவாலாகக் கேட்கிறார் ஆசிரியர். நீங்கள் செய்துகொண்டிருக்கும் காரியங்களில் ஏதாவது ஒரு காரியத்தைக் கையில் எடுங்கள். அதில், உங்கள் குழுவில் இருக்கும் நேரெதிர் கருத்துகொண்ட நபரை அழைத்து அவருடைய கருத்தைத் திறந்த மனதுடன் காதுகொடுத்து கேளுங்கள். இதன்மூலம் மற்றவர் சொல்வதை எந்த அசெளகர்யமும் இல்லாமல் கேட்டுக்கொள்ளப் பழகுவீர்கள்.

எல்லாக் கேள்விகளுக்கும் விடையும், போக வேண்டிய எல்லா இடங்களுக்கு வழியும் ஒரு மேனேஜராக உங்களுக்கு மட்டுமே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அப்படித் தெரியாமல் இருந்தால், அதில் அசிங்கம் என்பது ஒன்றில்லை. உங்களைவிட அந்த விஷயம் குறித்து சூப்பராக வழிதெரிந்த ஒருவர் உங்களுடைய குழுவில் இருக்கலாம். அதனால் கருத்தைக் கேட்பதில் தவறில்லை. அப்படிக் கேட்பது உங்களுக்கு பலமாக இருக்குமே தவிர, பலகீனமாக இருக்காது.

நிர்வாகியாகவும் தலைவராகவும் இருக்கும்போது நம்முடைய செயல்பாடு குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது மிக மிக அவசியம். இரண்டு மனநிலைகளில் நீங்கள் சிந்திக்கலாம். ஒன்று உலகத்தில் வாய்ப்பு என்று இருப்பது கொஞ்சமே. அதை நாமே முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பற்றாக்குறை மனநிலை. இரண்டாவது, உலகத்தில் வாய்ப்புகள் எக்கச்சக்கம். அதிலும் என்னைப் போன்ற திறமைசாலிக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கைகூடி வரவே செய்யும் என்ற ஏராள-தாராள மனநிலை. வெற்றிகரமாக நடந்த எந்தவொரு விஷயத்துக்கும் நாமே காரணம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்/வெளிக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை எல்லா நிர்வாகி களுக்கும் இருக்கவே செய்யும். கொஞ்சம் நிதானித்து யோசித் தால், நாம் நம்முடைய கேரியரில் எத்தனை இடங்களில் இது போன்ற வெற்றிகளில் நம்முடைய மேனேஜரால் முன்நிறுத்தப் பட்டிருக்கிறோம். ஏன் அப்படி நிறுத்தப்பட்டோம், அந்த மேனேஜர் நம்மை முன்நிறுத்திய பின்னாலும் கேரியரில் சிறப்பாகத் தானே இருந்தார் என்பது நமக்குத் தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும். ஏராள-தாராள மனநிலை அப்போது நமக்கு வசப்படும்’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘ஒரு லீடராக நீங்கள் போர்க் களத்தில் செயல்படப் போவதில்லை. எனவே, ஒரு லீடராக உங்களுடைய நோக்கம் என்ன என்பதை மற்றவர்களுக்கு தெளிவுபடச் சொல்லிப் பழகுங்கள். எதிலும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீர்கள். போரில் மட்டுமே தாக்குதல் முடியும் வரை என்ன நோக்கத்தில் சில விஷயங்களைச் செய்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். அலுவல கத்தைப் போர்க்களமாக்க இது போன்ற உள்ளதைச் சொல்லாத நிலை மட்டுமே போதுமானதாக இருக்கும்’’ என்று கிண்டலாகச் சொல்கிறார் ஆசிரியர்.

‘‘சொன்னதைச் செய்யுங்கள். இதை மாற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு தலைவனாகச் செய்ய முடிந்ததை மட்டுமே சொல்லுங்கள். இதுதான் ரியலிஸ்டிக்காக உங்கள் குழுவினருடன் உங்களை ஒத்துப் போகச் செய்யும். அதேபோல், சொன்னவற்றைச் செய்ய தாமத மாகும்போது தாமதமாகிறது எனச் சொல்லுங்கள் . சொன்னது நினைவிருக்கிறது என்பதைத் தெளிவாக ஒப்புக்கொள்ளவும் பழகுங்கள். நடைமுறையில் இது பெரியதொரு சவாலாக இருக்கும்’’ என்று எச்சரிக்கவும் செய்கிறார் ஆசிரியர்.

‘‘நம்பிக்கை என்ற வார்த்தை இன்றைய பிசினஸ் உலகில் அதிகம் எழுதப்படும் மற்றும் பேசப்படும் ஒரு விஷயம். நீங்கள் மற்றவர் மீது நம்பிக்கை வைக்க மறுக்கும்முன் உங்கள் மீது நம்பிக்கை வைத்த மேனேஜர்களை முதலில் நினைவு கூறுங்கள். அந்த நம்பிக்கையே உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி யுள்ளது இல்லையா? அதே போன்ற ஒரு நம்பிக்கையின் தாக்கத்தை நீங்கள் உங்களுக்குக் கீழே பணி புரிபவர்களிடம் ஏற்படுத்த வேண்டாமா?’’ என்றும் கேட்கிறார்.

சரியான ஆட்களை சரியான விஷயத் துக்கு ஈடுபடுத்துவது, உடன் பணிபுரிபவர் களிடத்தில் நன்கு பழகுவது, கடினமான விஷயங்களைக்கூட சுலபத்தில் மற்றவர் களிடத்தில் சொல்வது எப்படி என்று தெரிந்துகொள்வது, உண்மை பளிச் சென்று புரியும்படி சொல்லத் தெரிந்து கொள்வது, துணிச்சலையும் அக்கறை யையும் சரியான அளவில் வைத்து எடைபோட்டு நடப்பது, உடன் பணிபுரிபவர்களிடத்தில் விசுவாசமாக இருப்பது, உண்மையை தைரியமாக உங்களிடம் வந்து சொல்லலாம் என்ற நிலையை நிலைநாட்டுவது, அயராமல் உடன் இருப்பவர்களுக்கு பயிற்சியளிப்பது, உடனடியாகச் செய்ய வேண்டும் என்று குழுவில் இருப்பவர்களை அவசரப் படுத்துவதற்கு அடிக்கடி காரணமாக இல்லாமல் இருப்பது, மற்றவர்களையும் ஸ்மார்ட்டாகச் செயல்பட அனுமதி யளிப்பது, நீங்கள் நிறுவியிருக்கும் நடைமுறைகள் நீங்கள் எதிர்பார்க்கும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்வது போன்ற பல்வேறு சவால் களையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். இந்த சவால்கள் அனைத் தையும் உங்களுடைய சூழலுக்கு ஏற்ப வரிசைப் படுத்தி நடைமுறைப் படுத்தினால் நிர்வாகி என்ற இடத்தில் இருந்து தலைவன் என்ற இடத்துக்கு நீங்கள் பயணிக்கும் பாதை மிகவும் மென்மையானதாக இருக்கும் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

தலைவனாக நினைக்கும் அத்தனை நிர்வாகிகளும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

பிட்ஸ்

டந்த ஆண்டு நாட்டின் முக்கிய வங்கிகள் இணைக்கப் பட்டதைத் தொடர்ந்து, இந்த இணைப்பு குறித்து 20 ஆயிரம் வங்கி ஊழியர்களிடம் சர்வே நடத்தத் திட்டமிடப் பட்டிருக்கிறது. தமிழகம் உள்பட இந்த சர்வேயில் 22 கேள்விகள் கேட்கப் படுமாம்!