Published:Updated:

பணியாளர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் மேனேஜரா நீங்கள்?

எம்.பி.ஏ புக்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் திறமையை மிகச் சிறப்பாக வெளிக்கொண்டுவரும் சாதூர்யம் சிலருக்கு மட்டுமே இருக்கும். அந்தத் திறமை உள்ள மேனேஜர்களையே ‘மல்ட்டிபிளையர்கள்’ என்று இந்தப் புத்தகத்தின் ஆசிரியை அழைக்கிறார்.

இந்த மல்ட்டிபிளையர்கள் யார் யார், அவர்கள் எப்படிச் செயல்பட்டு, நிறுவனத்தை முன்னேற்றுவார்கள், இந்தத் திறமையை நாம் வளர்த்துக்கொள்வது எப்படி என்பன போன்ற சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லும் ‘மல்ட்டிபிளையர்ஸ்’ என்ற புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

புத்தகத்தின் பெயர்:
Multipliers
ஆசிரியர்:
Liz Wiseman
பதிப்பாளர்:
 Harper Collins; 
International ed. edition
புத்தகத்தின் பெயர்: Multipliers ஆசிரியர்: Liz Wiseman பதிப்பாளர்: Harper Collins; International ed. edition

பணியாளர்கள் திறமையை சரியாகப் பயன் படுத்தினால்...

ஒரு நிறுவனத்தில் திறமையான பணியாளர் களை வேலைக்கு அமர்த்தினால் மட்டும் போதாது. அவர்களுடைய திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் திறன் அந்த நிறுவனத்துக்கும் நிறுவனத்தின் மேனேஜர் களுக்கும் இருக்க வேண்டும். இது இல்லாததால் தான் பெரும்பாலான பணியாளர்கள், ‘என்னை இந்த நிறுவனம் சரியாகப் பயன் படுத்திக்கொள்வதில்லை’ என்று புலம்பித் திரிகின்றனர். பணியாளர்களின் மத்தியில் புதைந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால், எந்த நிறுவனமாக இருந்தாலும், போட்டி நிறுவனங்களை சுலபத்தில் வெல்ல முடியும்.

திறமையை ஒழித்துக்கட்டும் மேனேஜர்கள்...

ஒரு சில நிறுவனங்களில் இருக்கும் சில மேனேஜர்கள் அவர்களைச் சுற்றியிருக்கும் நபர்களின் திறமையை ஒட்டுமொத்தமாகக் காலிசெய்துவிடும் பண்பைக் கொண்டிருப் பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களே முழுப் புத்திசாலியாக இருக்கும் அளவுக்கான சூழலை உருவாக்கி வைத்திருப் பார்கள்.

இந்த மாதிரியான சூழல் உருவாக்கப் படுவதால், ஏனையேர் ‘நமக்கேன் வம்பு...’ என்கிற பாணியில் திறமைகளை ஒளித்து வைக்க ஆரம்பிப்பார்கள். இதனால் பாதிக்கப்படுவது, அனைவருக்கும் சம்பளம் தரும் நிறுவனம்தான். இதனால் பலனடைவது (அதிகாரத்தைக் குவித்து வைத்துக்கொண்டு) சம்பளம் வாங்கும் மேனேஜர்தான்.

இது போன்ற மேனேஜர்கள் ஒரு மீட்டிங் ரூமுக்குள் நுழைந்தால், பகிர்வதனால் உயரும் ஐ.க்யூ-வின் (shared IQ) அளவு, சட்டென்று கீழே போய்விடும்.

இந்த வகை மேனேஜர்களை ‘டிமினிஷர்ஸ்’ (dimisers) என்று அழைக்கலாம். இந்தக் குணம் கொண்டிருக்கும் மேனேஜர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கையாள எத்தனை பேரை புதியதாகப் பணிக்கு அமர்த்தினாலுமே போதாது என்கிற சூழ்நிலையே தொடர்ந்து இருந்துவரும். ஏனென்றால், எத்தனை புதிய மனிதர்கள் வந்தாலுமே அவர்களுடைய புத்திசாலித்தனத்தை மட்டுப்படுத்தும் செயலை சுலபத்தில் இந்தக் குணம் கொண்ட மேனேஜர் செய்துவிடுவார்.

பணியாளர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் மேனேஜரா நீங்கள்?

திறமையை வெளிக்கொண்டுவரும் மேனேஜர்கள்...

இன்னும் சில மேனேஜர்கள் இருப்பார்கள். அவர்களுடைய புத்திசாலித்தனம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். தன்னுடன் பணிபுரியும் நபர்களை மேலும் மேலும் ஸ்மார்ட்டான ஒரு நபராக மாற்றும் விதத்தில் அவர்களுடைய நடவடிக்கைகள் இருக்கும். ஒரு மீட்டிங்கில் அவர் இருந்தால், மீட்டிங்கில் இருப்பவர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட்டாக இருக்க முயல்வார்கள். அவர் ஒரு மீட்டிங் ரூமுக்குள் நுழைந்தால், அனைவரின் தலைக்குள்ளும் பல்ப் எரிய ஆரம்பிக்கும். இந்த மாதிரியான நிர்வாகிகள் உடன் பணிபுரிபவர்களை மேலும் மேலும் திறன் வாய்ந்த நபர்களாக உருவாக்கும் திறமையைக் கொண்டிருப்பார்கள். இதனால் இவருடன் இருப்பவர்களுக்கு நாளுக்கு நாள் ஸ்மார்ட்னஸ் அதிகரித்துக்கொண்டேபோகும். இந்த வகை மேனேஜர்களை ‘மல்ட்டிபிளையர்ஸ்’ என்று அழைக்கலாம்.

எந்த மேனேஜர் எப்படிச் செயல்படுவார்?

பின்வரும் கேள்விகளுக்கு என்ன மாதிரியான பதிலைக் கூறுகிறார்கள் என்பதில் இருந்தே டிமினிஷர்களும், மல்ட்டி பிளையர்களும் தங்களுடன் பணிபுரிபவர்கள் குறித்து எந்த மாதிரியான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிந்துவிடலாம்.

உங்களிடம் பணிபுரிபவர்களின் திறமை எப்படி, தவறுகளைக் கண்டுபிடிப்பதில் உங்களுடைய பணியாளர்கள் எப்படி, சரியான திசையை நிர்ணயித்து செல்வதிலும், முடிவெடுப்பதிலும், காரியங்களை செய்துமுடிப்பதிலும் உங்களுடைய பணியாளர்கள் எப்படி என்பது போன்ற கேள்விகள் அனைத்துக்கும் டிமினிஷர்கள், ‘நான் இல்லையெனில், இவர்களால் (பணியாளர்களால்) எதையும் செய்ய முடியாது’ என்ற தொனியிலான விடையையும், மல்ட்டிபிளையர்கள் ‘எங்க ஆளுங்க படுவிவரமானவர்கள். எந்த பிரச்னை என்றாலும் சட்டென தீர்வைக் கண்டுபிடித்து செயலாற்றிவிடுவார்கள்’ என்ற தொனியிலான விடையையுமே சொல்வார்கள்.

இன்டெல் விக்ரத்தின் அனுபவம்...

இது போன்ற மேனேஜர்கள் உண்டுபண்ணும் இடைஞ்சலை இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்த விக்ரத்தின் அனுபவம் நமக்கு நன்கு புரியவைக்கும்.

‘‘என் முதல் மேனேஜர், ஏதோ மேஜிக் செய்து என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் சிறப்பாகச் செயல்பட வைத்தார். மீட்டிங்குகளின்போது, எதற்காகக் கூடியிருக்கிறோம் என்பதை மட்டும் அவர் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, எங்களை விவாதிக்கச் சொல்வார்.

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு கருத்துகளைச் சொல்வோம். போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவோம். எங்களால் எப்படி சாதனை செய்ய முடிகிறது என்கிற சந்தேகம் எங்களுக்கே வரும் அளவுக்கு இருந்தது அந்தக் காலகட்டம்.

15 வருடம் கழித்து நான் புதிய நிர்வாகியின்கீழ் பணிபுரிய மாற்றப்பட்டேன். இந்த நிர்வாகி மிகச் சிறந்ததொரு சயின்டிஸ்ட். ஆனால், இவருடன் இணைந்து பணியாற்றும்போது நிறையவே திக்கித் திணற வேண்டியிருந்தது. மீட்டிங்குகளில் 30% நேரம் அவரே பேசுவார். அதுவும் நாங்கள் சொல்லும் ஐடியாக் களில் என்னென்ன குறைகள் இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்த மட்டுமே. அவர் ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டு, அதை அத்தனை பேரையும் ஏற்றுக்கொள்ள வைக்க அவருடைய திறமை அனைத்தையும் பயன்படுத்து வார்.

நாளடைவில், ‘இந்த ஆளிடம் எதையாவது சொன்னால் நம்மை முட்டாளாக்கிக் காண்பிப்பதில் குறியாக இருப்பார். எதற்கு வம்பு...’ என அனைவருமே மெளனம் காக்க ஆரம்பித்துவிட்டோம். ஒரே நரக வேதனை. அவர் என்னு டைய திறமையில் 50% அளவே நிறுவனத்திற்காக உபயோகித் தார். அவருக்குக் கீழ் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள், கொஞ்ச காலம் இருந்துவிட்டு, இவர் லாயக்குப்படமாட்டார் என்பதை உணர்ந்து, பணியில் இருந்து விலகினார்கள். என்னைப் பொறுத்தவரை, இன்னொரு முறை அந்த ஆளின் கீழ் நான் வேலை பார்க்கவே மாட்டேன்’’ என்று கூறியுள்ளார் விக்ரம்.

மல்ட்டிபிளையர்களின் நம்பிக்கைகள்...

மல்ட்டிபிளையர்கள் மூன்று முக்கிய விஷயங்களை அடிப்படை யாக நம்புவபர்கள்.

1. நிறுவனத்தில் ஏற்கெனவே பணியிலிருக்கும் பலருடைய திறனும் முழுமையாக நிறுவனத்தால் உபயோகித்துக் கொள்ளப்படவில்லை.

2. தலைமையின் தனிப்பட்ட திறமை மற்றும் முயற்சியால் மட்டுமே நிறுவனப் பணியாளர் களின் திறன் அதிகரிக்கப்பட்டு, நிறுவனத்தின் நலனுக்காகப் பயன்படுத்த முடியும்.

3. மேலே சொன்ன இரண்டு காரணங்களால் பெரிய அளவிலான மனிதவள முதலீடுகள் எதுவும் செய்யப்படாமலேயே நிறுவனத்தின் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் பெரிய அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு எப்போதுமே எல்லா நிறுவனங்களிலுமே இருக்கவே செய்கிறது.

இரு வகை மேனேஜர்களுக்கு இடையேயான ஐந்து வித்தியாசங்கள்...

இந்த இரண்டு வகை மேனேஜர் களும் ஐந்து வகை வேறுபட்ட பண்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். டிமினஷர்கள், அவர்களுக்கான ராஜ்ஜியத்தை கட்டமைக்கின்றனர். மல்ட்டி பிளையர்களோ, திறமையைத் தன்னோக்கி இழுத்து உபயோகிக் கும் காந்தங்களாக இருப்பார்கள். டிமினிஷர்கள், கொடுங் கோலர்களாக இருப்பார்கள். மல்ட்டிபிளையர்கள், சுதந்திரத்தை வழங்குபவராக இருப்பார்கள்.

டிமினிஷர்களுக்கு எல்லாக் கேள்விகளுக்கான விடையும் தனக்கு மட்டுமே தெரியும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். மல்ட்டிபிளையர்கள், விடைகளைக் கண்டுபிடியுங்கள் என்ற சவாலைத் தன்னுடன் பணிபுரிபவர்களின் முன் வைப்பவராக இருப்பார்கள்.

டிமினிஷர்கள், முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள். மல்ட்டிபிளையர்கள், முடிவெடுப்பதற்கான சரியான விவாதங்களை ஊக்குவிப்பவராக இருப்பார்கள். டிமினிஷர்கள் சின்னச் சின்ன விஷயங்களையும் உன்னிப்பாகப் பார்த்து நிர்வகிப்பவர்களாக இருப்பார்கள். மல்ட்டிபிளையர்களோ, ஒரு முதலீட்டாளரைப் போல், முதலீடு செய்துவிட்டு, தொழிலை ஆகச்சிறந்த பொறுப்புடன் சிறப்பாக நிர்வகிக்க ஊக்குவிப்பவர்களாக இருப்பார்கள்.

ஒருவர் எப்படி மல்ட்டிபிளையர் ஆவது, அதற்கான குணநலன்களைப் பெறுவது, அதை வளர்த்தெடுப்பது என்பது குறித்த பல்வேறு தகவல்களை (நிஜவாழ்க்கை உதாரணங்களுடன்) விளக்குகிறது இந்தப் புத்தகம். இறுதியாக, நீங்கள் எந்த மாதிரியான நிர்வாகியாக இருக்க விரும்புகிறீர்கள், டிமினிஷாரா, மல்ட்டிபிளையரா என்ற கேள்வியுடன் புத்தகத்தை நிறைவு செய்துள்ளார் ஆசிரியை.

நிறுவனங்களில் பணிபுரியும் மேனேஜர்களும் சரி, தொழில்முனைவோர்களானாலும் சரி, இந்தப் புத்தகத்தைப் படித்து, மல்ட்டிபிளையர் ஆகி, பயன்பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு