Published:Updated:

சுருங்கச் சொல்லி மனதில் பதிய வைக்கும் மகத்தான கலை! கற்றுக்கொள்ளும் எளிய வழிகள்!

சுருங்கச் சொல்லுதல்...
பிரீமியம் ஸ்டோரி
சுருங்கச் சொல்லுதல்...

M B A B O O K S

சுருங்கச் சொல்லி மனதில் பதிய வைக்கும் மகத்தான கலை! கற்றுக்கொள்ளும் எளிய வழிகள்!

M B A B O O K S

Published:Updated:
சுருங்கச் சொல்லுதல்...
பிரீமியம் ஸ்டோரி
சுருங்கச் சொல்லுதல்...

எந்தவொரு விஷயத்தையும் சுருக்கமாக எடுத்துச் சொல்வதன் மூலம் மற்றவர் களுக்கு எளிதாகப் புரிய வைப்பது எப்படி என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறது நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் புத்தகமான ‘தி 3 மினிட் ரூல்.’

புத்தகத்தின் பெயர்:
    The 3-Minute Rule 
ஆசிரியர்:
Brant Pinvidic
பதிப்பாளர்:
Portfolio
புத்தகத்தின் பெயர்: The 3-Minute Rule ஆசிரியர்: Brant Pinvidic பதிப்பாளர்: Portfolio

முதல் 3 நிமிடத்துக்குள்...

அலுவலகத்தில் மற்றவர்கள்முன் நாம் பிரசன்டேஷன் செய்யும்போது நாம் சொல்லவரும் திட்டம் தேறுமா, தேறாதா என்பதை முதல் மூன்று நிமிடத்துக்குள் முடிவை எடுத்து விடுகின்றனர். ‘அட, மூன்று நிமிடத்துக்குள் எப்படி முடிவெடுக்க முடியும், அது சரியில்லையே’ என்றெல்லாம் நீங்கள் அங்கலாய்க்கலாம். ஆனால், மனிதர்கள் இப்படித் தான் செயல்படுகிறார்கள் என்பதே நிஜம்.

‘‘கடந்த 20 ஆண்டுகளில் சராசரி மனிதன் எந்தவொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து கேட்கும்/பார்க்கும் கால அவகாசம் என்பது 8.2 விநாடிகள் என்கிற அளவுக்குக் குறைந்துவிட்டது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆய்வொன்றின் முடிவு சொல்கிறது. கோல்டு ஃபிஷ் எனும் மீன்கூட ஒன்பது விநாடிகள் வரை இருக்கிறது. அப்படியானால், மனிதர்கள் இப்படி நடக்கக் காரணம் என்ன?

இன்றைய மனிதர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வல்லவர் களாகவே இருக்கின்றனர். தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக எக்கச்சக்கமான தகவல்களை உடனுக்குடன் மனிதர்களால் பெற முடிகிறது. இப்படி உடனுக்குடன் எக்கச்சக்கமான தகவல்களைப் பெறும் சூழலில் மனிதர்கள் வசிப்ப தால், அவர்கள் மிகவும் புத்திசாலி யானதொரு வாடிக்கையாளராக உருவெடுத்துவிட்டனர். இதனாலேயே நீண்ட விளக்கங்கள், பெரிய உரைகள், வார்த்தை ஜாலங்கள் நிரம்பிய விற்பனைப் பேச்சுகள் போன்றவற்றை அவர்கள் சகித்துக்கொள்வதேயில்லை. 8.2 விநாடிகளில் அவர்களின் கவனத்தை வேறு பக்கங்களில் திருப்பிவிடு கிறார்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

எப்படிப்பட்ட கூட்டமாக இருந் தாலும் உங்கள் பேச்சை எப்படி அமைத்துக்கொண்டால், கேட்பவர் களுக்கு நீங்கள் சொல்லவரும் விஷயத்தை சட்டென்று புரிய வைக்க முடியும் என்பதை விளக்கமாக எடுத்து சொல்கிறார் ஆசிரியர்.

பிரயோஜனமான விஷயங்கள் முதலில்...

உங்கள் பிரசன்டேஷன் எப்படி இருக்க வேண்டும் என்று முதலில் சொல்கிறார். ‘‘உங்களுடைய பேச்சைக் கேட்கும் வாடிக்கை யாளர்கள் உங்களுடைய ஐடியாவைக் கருத்தில்கொண்டு, அது எந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உதவி யாக இருக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவையான சமயத்தில் அதை உபயோகிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்துக்கும் அடித்தளம் அமைப்பது உங்களுடைய பிரசன்டேஷன்.

உங்கள் நிறுவனம், உங்கள் ஐடியா, உங்கள் தயாரிப்பு/சேவைகள் போன்றவை குறித்து சுருக்கமாகவும், தெளிவாகவும் மற்றும் துல்லியமாகவும், மூன்று நிமிடத்திலோ, அதற்குக் குறைவான நேரத்திலோ உங்களால் சொல்ல முடிய வேண்டும். பிரசன்டேஷன் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், முதல் மூன்று நிமிடத்தில் இந்த மூன்றையும் தெளிவாகப் புரியும்படி சொல்லிவிட்டால் மட்டுமே வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்துக்கு நீங்கள் ஈடுகொடுத்துச் செயல்பட்டதாக இருக்கும். இதனாலேயே முதல் மூன்று நிமிடங்களில் நீங்கள் உங்களுடைய பேச்சின் அதிமுக்கிய அம்சங்களைக் கேட்பவர்களுடைய முழுக் கவனத்தையும் பெறுமாறு தெள்ளத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பிரசன்டேஷனிலும் குறைவாகப் பேசி, அதிக பலனைப் பெற முடியும் என்கிறார் ஆசிரியர்.

சுருங்கச் சொல்லி மனதில் பதிய வைக்கும் மகத்தான கலை! கற்றுக்கொள்ளும் எளிய வழிகள்!

இரண்டு படிநிலைகள்...

‘‘உங்களுடைய பேச்சு உங்களை நோக்கி வாடிக்கையாளர் வருவதற்கான மோட்டிவேஷனைத் தருவதாக இருக்க வேண்டும். விற்பனைக்கான பேச்சுகளில் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டைப் பெற அவர்களுடைய கவனத்தைப் பெற வேண்டும். கவனத்தைப் பெற்றால் மட்டுமே அவர்களுடைய விருப்பத்தைப் பெறமுடியும். எளிமையான பேச்சும், தெளிவான கருத்தும், மதிப்புள்ள தகவல்களும் மட்டுமே இந்த மூன்று நிமிடத்துக்குள் சொல்லப்பட வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது.

இந்த மூன்றையும் ஒருங்கே கொண்டு வர வேண்டும் எனில், ஒரு பிரசன் டேஷனில் நீங்கள் எதையெல்லாம் சொல்ல நினைக்கிறீர்கள் என்பதற்கும் எது கட்டாயம் சொல்லப்பட வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள இரண்டு படிநிலைகள் இருக்கின்றன. சொல்ல வேண்டிய தேவையுள்ள, அத்தியாவசியமான, மதிப்புமிக்க தகவல்களை எளிமையாகவும் சுருக்க மாகவும் மாற்றுவது மற்றும் இவை அனைத்தையும் ஒரு நேர்கோட்டில் இணைத்து அந்தப் பேச்சைக் கேட்பவர்கள் உங்களுக்குத் தேவையான முடிவை எடுப்பதற்கு ஏதுவாகச் சொல்லும் வண்ணம் அமைப்பது என்பது முதலாவது படிநிலை யாகும்.

பிரசன்டேஷன் குறித்த தவறான அபிப்பிராயங்கள்...

முதலில், பிரசன்டேஷன்கள் குறித்து நம்மிடையே இருக்கும் தவறான அபிப்பிராயங்களைப் புரிந்துகொள்ளச் சொல்கிறார் ஆசிரியர். ‘‘சூப்பரான டிசைன், அலங்கார வார்த்தைகள், படங்கள் போன்றவையே கேட்பவர்களின் கவனத்தை நிலைநிறுத்தும் என்பது ஒரு தவறான அபிப்பிராயம். ஏனென்றால், நீங்கள் சொல்லும் விஷயங்கள் கேட்பவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்குத்தானே! அப்படி இருக்க, சொல்லும் விஷயங்கள் கடினமாகவும் சொதப்பலாகவும் சொல்லப்பட்டால் என்ன ஆகும்? நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயங்கள் கேட்பவரைச் சென்றடையாது இல்லையா? நம் எண்ணத்தை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதுதான் நம் நோக்கம் எனில், சொல்வதைத் தெளிவாக வும், புரியும் வண்ணமும் சொன்னாலே போதும்’’ என்கிறார் ஆசிரியர்.

இரண்டாவதாக ஆசிரியர் சொல்வது, ‘‘நான் இருக்கும் பிசினஸ் மிகவும் சிக்கலான ஒன்று. இதில் மூன்று நிமிடத்தில் சொல்ல நினைப்பதையெல்லாம் சொல்ல முடியாது’’ என்பதும் தவறான அபிப்பிராயம் குறித்ததாகும். உங்கள் பிசினஸ் எப்படிப்பட்டதாக வேண்டு மானாலும் இருக்கட்டும்.

ஆனால், உங்கள் பேச்சைக் கேட்பவர்களுக்கு மூன்று நிமிடத்துக்குள் தேவையான விஷயங்களைச் சொல்லா விட்டால், அதன்பிறகு நீங்கள் சொல்லும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் கவனிக்கப்படாமலே போகும்” என எச்சரிக்கிறார் ஆசிரியர்.

வாடிக்கையாளர் எந்த அளவுக்கான நம்முடைய தயாரிப்பு அல்லது சேவை குறித்த அறிவைக் கொண்டிருக் கிறார் என்பதை மனதில் கொண்டு செயல்படுவதும் பிரசன்டேஷன்களுக்காகத் திட்டமிடும்போது மிக மிக அவசியம். ஏனென்றால், நம்முடைய பேச்சைக் கேட்ட பின்னால் அவர் நம்முடைய தயாரிப்பு அல்லது சேவை குறித்து கொண்டிருக்கும் அறிவைக்கொண்டே நம்முடைய தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவது குறித்து ஆய்வு செய்ய முற்படுவார்.

பிரசன்டேஷன்களில் புல்லட் பாயின்ட்களின் மகத்துவம் குறித்துச் சொல்லும் ஆசிரியர், ஒரு விஷயம் குறித்து பேசும்போது அது ஏன், எப்படி வேலை செய்கிறது, அது ஒரு சரியான தீர்வா, தேவையானவை அனைத்தையும் செய்ய முடியுமா என்பதை மட்டுமே குறிப்பிட்டு பிரசன்டேஷன்கள் தயார் செய்யப்பட வேண்டும் என்கிறார்.

இப்படி பிரசன் டேஷன்கள் வடிவமைக்கப்படும் போது மட்டுமே கேட்பவர்கள் கருத்தில்கொள்ளும் வண்ணமும், அவர் களுக்குத் தேவை யானவற்றுடன் நீங்கள் சொல்வதைப் பொருத்திப் பார்க்கவும், இவற்றைப் பகுத்தறிந்த பின்னர், அவர்கள் உங்கள் தாயாரிப்புகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஏதுவாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.

இந்த மூன்று நிமிட பேச்சில் பேசும் விஷயம் (தயாரிப்பு அல்லது சேவை) என்ன என்பது ஐம்பது சதவிகிதமும், எப்படி அது வேலை செய்கிறது என்பது முப்பது சதவிகிதமும், அது ஒரு சரியான தீர்வா என்பது பதினைந்து சதவிகிதமும், உங்கள் தயாரிப்பு அதைச் செய்யுமா என்பது ஐந்து சதவிகிதமும் நேரம் எடுத்துக்கொள்ளுமாறு உங்களுடைய பேச்சை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதையும் தெளிவாகத் தனியானதொரு அத்தியாயத்தில் பல்வேறு உதாரணங்களுடன் கூறியுள்ளார்.

பேச்சைத் தாண்டி பவர் பாயின்ட் ஸ்லைடுகளில் எந்தெந்த நுணுக்கங்களை கையாள வேண்டும் என்பதையும் ஒரு தனி அத்தியாயம் மூலம் விளக்கும் ஆசிரியர், நீங்கள் சொல்லும் விஷயங்களின் மீது எந்த அளவுக்கு நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்களோ, அந்த அளவுக்கே அது கேட்பவர் களைச் சென்றடைந்து அவர்களை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்று சொல்லி புத்தகத்தை முடிக்கிறார்.

பரபரப்பான இந்த யுகத்தில், சுருக்கமாக விஷயங்களை எடுத்துச் சொல்லி, மற்றவர்களின் மனதைக் கவர்ந்து சாதிக்க நினைப்பவர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை அவசியம் படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism