Published:Updated:

பிசினஸ் என்னும் போர்க்களத்தில் வெல்லும் சூட்சுமங்கள்! வெற்றியைத் தக்கவைக்கும் வியூகங்கள்...

பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ்

M B A B O O K S

பிசினஸ் என்னும் போர்க்களத்தில் வெல்லும் சூட்சுமங்கள்! வெற்றியைத் தக்கவைக்கும் வியூகங்கள்...

M B A B O O K S

Published:Updated:
பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ்

பிசினஸ் என்பது ஒரு போரைப் போன்றது. நீங்கள் என்னதான் லாபம் சம்பாதித் தாலும் யாராவது ஒருவர் நீங்கள் தயாரிக்கும் பொருளை உங்களைவிட சிறப்பாகவும், குறைந்த விலையிலும் வேகமாகவும் உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். இந்தப் போரில் உங்களுக்கு அனுகூலம் ஏதும் இல்லை எனில், படையை நகர்த்தாதீர்கள், ஆள்களைக் களத்தில் இறக்காதீர்கள், சண்டையிட்டேயாக வேண்டும் என்ற நெருக்கடி இல்லாத வரை சண்டை போடாதீர்கள் என்று பண்டைய சீனாவின் ராணுவ ஜெனரலாகிய சன் ட்சூ சொல்லி யிருக்கிறார். எப்போது சண்டை போட வேண்டும், எப்போது சண்டை போடக் கூடாது என்று தெரிந்து வைத்திருப்பவரே வெற்றியடைவார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ராணுவ ஜெனரலின் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வெற்றி/தோல்வி பெற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை அதனுடன் ஒப்பிட்டு எழுதப் பட்டுள்ள புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

புத்தகத்தின் பெயர்:
The Art of Business Wars
ஆசிரியர்:
David Brown
 பதிப்பாளர்:
 John Murray Learning
புத்தகத்தின் பெயர்: The Art of Business Wars ஆசிரியர்: David Brown பதிப்பாளர்: John Murray Learning

கடைசி வரை போராட வேண்டும்...

‘‘எல்லா பிசினஸ்களுமே ஒன்றுமே இல்லாத வெற்றிடத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுபவைதான். ஒரு ஐடியா, அதை நிறைவேற்றுவதற்கான சரியானதொரு ஸ்கெட்ச் என்ற இரண்டிலும் இருந்தேதான் பிசினஸ்கள் பெரும்பாலும் ஆரம்பிக் கப்படுகின்றன. என்னதான் நூதனமான பெரும்வெற்றியுடன் ஜெயிக்கக்கூடிய ஐடியாவாகவே இருந்தாலும் அதைக் கண்டு பயந்தோ, அதைப் பாராட்டும் விதமாகவோ ஏற்கெனவே அதே பிசினஸில் இருக்கும் நிறுவனங்கள் ஒன்றும் வெற்றியை உங்களுக்கு பெரிய மனதுடன் விட்டுக் கொடுத்துவிட்டு சென்றுவிடாது. இயன்றவரை போராடிப் பார்க்கும் இல்லையா? அதனால்தான் எப்பேர்ப்பட்ட ஐடியாவானலும் பிசினஸில் போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது’’ என்கிறார் ஆசிரியர்.

வாட்ச் மெக்கானிக் டு கார் தயாரிப்பு...

‘‘மெக்கானிக்கல் விஷயங்களில் அலாதிப்பிரியம் கொண்ட ஹென்றி ஃபோர்டு அறுவடை செய்த பொருள்களை வயலில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல நீராவி இயந்திரங் களை விவசாயி ஒருவர் பயன்படுத்து வதைப் பார்த்தவுடன் இதேபோன்று மனிதர்கள் பயணிக்கவும் தானாக இயங்கும் ஒரு போக்குவரத்து வாகனம் வேண்டும் என்று ஆசைப் பட்டார்.

பிறவி மெக்கானிக்காக இருந்த அவர் கைக்கடிகாரங்களை ரிப்பேர் செய்ய ஆரம்பித்து, கப்பல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து இன்ஜின்களின் மத்தியில் மூன்று ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்து பின்னர் விவசாயத்துக்கு உதவும் நீராவி இயந்திரங்களை ரிப்பேர் செய்யும் பணியைச் செய்து கடைசியில் தன்னுடைய தீராத ஆவலினால் முதன்முதலாக மணிக்கு 20 கி.மீட்டர்கள் ஓடக்கூடிய குவாட்ரி சைக்கிளை (நான்கு சைக்கிள் சக்கரங் களுடன்கூடிய மெக்கானிக்கல் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனம்) தயாரித்தார். அதன் பின்னர், அடுத்த மாடலை செய்து (30 மைல்கள் செல்லும் அளவிலான) முடித்தார். இந்த மாடலை செய்வதற்கு அவருக்கு நிதிஉதவி செய்த ஒரு தொழில் நிறுவனம் திவாலகிவிட, பிற முதலீட் டாளர்களுடன் சண்டை ஏற்பட்டு கார் தயாரிக்கும் பணி நின்றுபோனது.

பின்னர் 1903-ம் ஆண்டில் அவர் ஃபோர்டு மோட்டார் கம்பெனியைத் தொடங்கினார். ஆரம்பத்தில் பல்வேறு உதிரிபாகங்களைப் பல்வேறு உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கியபோது, அவை அளவில் ஒன்றுபோல இல்லாததால், எக்கச்சக்கமான பிரச்னைகள். கார்கள் ரிப்பேருக்கு வரும்போது ஏற்கெனவே அதில் இருக்கும் அதே அளவிலான உதிரிபாகத்தைப் பெற படாதபாடு படவேண்டியிருந்தது. இதனால் காரின் விலையும் ரிப்பேருக்கான செலவும் மிக அதிகமாக இருந்தது. ஏனென்றால், ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸையும் தனித்தனியாகச் செய்ய வேண்டி யிருந்தது. அதே போல, ஒவ்வொரு காரையும் தனித்தனியாக இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ்களை அளவெடுத்து செய்ய வேண்டியிருந்தது (அசெம்ப்ளி லைன் என்பது அப்போது கிடையாது).

ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த நிலக்கரி டீலர் ஒருவர், இந்த மாதிரியான நிலை சரிப்பட்டு வராது. அதிக கார்களை விற்க முடியாது என்ற மனநிலையில் இருந்தார். அந்தச் சூழலில் ஹென்றி ஃபோர்டு தன்னுடைய சொந்த உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ஸ்டாண்டர்டைஸ்டு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து ஃபோர்டு `மாடல்-என்’ என்ற மாடலைத் தயார் செய்து வெற்றி பெறச் செய்தார். அதில் வந்த லாபத்தைக் கொண்டு நிலக்கரி டீலரின் பங்குகளை வாங்கி நிறுவனத்தை முழுவதுமாக தன்னுடைய தாக ஆக்கிக்கொண்டார்.

ஒரு வாட்ச் மெக்கானிக்காக அனுபவம் கொண்டிருந்த ஃபோர்டு எப்படி ஒரு வாட்ச்சில் பல்வேறு பாகங்கள் சீராக இயங்கி நேரத்தை நகர்த்துகிறதோ, அதே போல் ஒரு கார் தயாரிப்பும் சீரானதொரு தொடராக இயங்க முடியும் என்ற கற்பனையைச் செய்து அதற்கு உயிரும் கொடுத்தார் ஃபோர்டு.

பிசினஸ்
பிசினஸ்

எள்ளி நகையாடல்தான் முதல் அங்கீகாரம்...

ஆரம்ப காலத்தில் அவர் நள்ளிரவுக்கு மேல் நகரத்தின் சாலைகளில் குவாட்ரி சைக்கிளை சோதனை ஓட்டம் செய்து பார்த்தபோது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஒரு லூசுத்தனமான இரும்புத் தகர வேலை செய்பவர் என்றே பார்த்தனர். ஆனால், அவருக்கோ தாம் ஏற்கெனவே இல்லாத புதிய விஷயம் ஒன்றைச் செய்யப்போகிறோம் என்பதும் அதில் இந்தவிதமான இடர்பாடுகளும் வரும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது.

அதேபோல்தான், அமேசான் நிறுவனத்தின் செயல்பாட்டிலும். அமேசான் நிறுவனத்தின் தலைவர், ஜெஃப் பெசோஸ் அமேசான் குறித்து சொல்லும் போது, நீண்ட நாள்களுக்கு அமேசான் குறித்து மக்கள் மத்தியில் சரியான புரிந்து கொள்ளல் இல்லாமல் இருப்பதே சிறந்தது என்று சொன்னார். ஃபோர்டு மற்றும் அமேசான் என்ற இந்த இரண்டுக்கும் இருக்கும் இந்த வித ஒற்றுமையை ஆசிரியர் இங்கே குறிப்பிட்டுச் சொல்கிறார். ‘‘ஃபோர்டு மற்றும் அமேசானின் வெற்றி என்பது அந்த நிறுவனத்தின் தலைவர்கள் தாங்கள் வாழும் காலத்தில் இருக்கும் சூழலை கொஞ்சமும் கருத்தில்கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக மாற்றத்துடன் வரவிருக்கும் எதிர்காலத்தை யூகித்தனர் என்பதாகும். பார்பி, மேட்டில், ப்ளாக் பஸ்டர், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற அனைத்து நிறுவனங்களுமே இதேபோன்ற நிறுவனர்களின் எண்ணத்தினாலேயே நடை முறைக்கு வந்தது’’ என்று சொல்கிறார் ஆசிரியர்.

அதிரடி ஆட்டமே ஜெயிக்கும்...

‘‘பிசினஸில் ஸ்லோ அண்ட் ஸ்டெடி என்பது ஒருபோதும் ஜெயிக்காது. தைரியமாக அடித்து நகர்த்தும் நபர்களையே சந்தை வரவேற்றுப் பரிசளிக்கிறது. ஆரம்பகால கார் உற்பத்தியாளர் களான ஃபோர்டு, ரான்சம் ஓல்ட்ஸ், டாட்ஜ் பிரதர்ஸ் போன்றவர்கள் அனைவருமே வேகமாகத் தங்களுடைய செயல்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தே வெற்றிகண்டனர்.

நெட்ஃப்ளிக்ஸின் ரான் டோல்ஃப் மற்றும் ஹேஸ்டிங்ஸ் தங்களுடைய ஐடியாவை சோதனை செய்து வெற்றி கண்டவுடனேயே எந்தவித மாற்று யோசனையும் இல்லாமல் அதை நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டனர். கம்பெனிகள் துணிச்சலாகச் செயல் படுவதில்லை. அதன் தலைவர்களே துணிச்சலாக இயங்குகிறார்கள். அவர்களே வாய்ப்புகளை அறிந்து வேகமாக அதை உபயோகித்துக் கொள் வதற்கான ஸ்ட்ராட்டஜிகளைக் கண்டுபிடித்து போருக்கு தயாராகின்றனர். முதலில், இதைச் செய்யும் நிறுவனங்கள் பெருமளவிலான அனுகூலங் களைப் பெறுகின்றன. பல சமயங்களில் முதலில் நடை முறைக்கு வரும் தயாரிப்பே அந்தப் பொருளுக்கான ஓர் அடையாளமாக மாறியும் விடுகிறது. இதனால் வாடிக்கை யாளர்கள் அந்தத் தயாரிப்புகளை விட்டு வேறு தயாரிப்புகளுக்கு மாற மிகவும் யோசிக்கின்றனர். இதுவே முதலில் துணிச்சலுடன் இறங்குவதால், கிடைக்கும் மிகப் பெரிய அனுகூலம்’’ என்கிறார் ஆசிரியர்.

ஐ.பி.எம், யுனிவேக், நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்ட், போன்ற பல நிறுவனங்களின் வெற்றி, தோல்வி களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாக இந்தப் புத்தகம் சொல்கிறது.

‘‘பெரும்பாலான போர்களில் முக்கால் பங்கு விஷயங்கள் தெளிவாக இல்லா மலேயே இருக்கும். தலைசிறந்த தள பதிகள் அவர்களைத் தோல்வி அடையச் செய்வது என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கான நிலையில் அவர்களை இருத்திக் கொள்வார்கள். இதனாலேயே ஒரு போர் நடந்துகொண்டு இருக்கும்போது களத்தில் என்ன நடக்கிறது என்பது ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருக்கும். அந்த சூழ்நிலையில் அதிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாது. எல்லா பிசினஸ்போர்களும் ஒரு நாள் முடிவுக்கு வரவே செய்யும். அப்போதுதான் என்னென்ன முடிவுகள் எடுத்தார்கள், அதனால் என்ன மாதிரியான விளைவுகள் வந்தன என்பது புரியவரும். எதிராளி தயாராக இல்லாத காலகட்டத்தை நமக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு எதிர்பாராத வழிகளிலும் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கும் இடத்திலும் தாக்குதலைச் செய்ய வேண்டும்’’ என்று சொல்லும் ஆசிரியர், ‘‘இறங்கும் காரியத்தில் மமதை கொள்ளாமல் அதே நேரம் உறுதியோடும், ஈடுபாட்டோடும் அன்றைய சூழல் தரும் சவால்களை எதிர்கொள்ளும் நடைமுறைகளோடும் செயல்பட்டால் மட்டுமே இந்த பிசினஸ் போரில் வெற்றி பெற முடியும். எப்போதுமே போரில் ஸ்ட்ராங்கான விஷயங்களை விட்டுவிட்டு, வீக்கான விஷயங்களையே தாக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், பிசினஸ் போரிலும் சூழ்நிலைக்கு ஏற்ப வியூகங்களை மாற்றிக் கொண்டால் மட்டுமே பெரிய அளவிலான வெற்றி யைப் பெற முடியும்’’ என்று சொல்லி புத்தகத்தை முடித்துள்ளார் ஆசிரியர்.

தொழில்கள் எவ்வாறு செதுக்கப்பட்டு வெற்றிக்கு வழிவகுக்கிறது என்பதைச் சொல்லும் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்து பலன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism