Published:Updated:

சரியான முடிவுகளை எடுக்க உதவும் ஒற்றர் மனநிலை..! இது இருந்தால் வெற்றிதான்...

MBA Books

பிரீமியம் ஸ்டோரி

நம்மைச் சுற்றி இருப்பவர்களில் ஒரு சிலர் பல விஷயங்கள் குறித்து மிகவும் துல்லியமாக முடிவு எடுப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணமாக இருக்கும் விஷயங்கள் என்னென்ன? புத்திக்கூர்மை, அறிவு, தைரியம் மற்றும் எல்லாவற்றையும் பொறுமை யாக ஆராய்ந்து அறியும் குணம் போன்றவைதான் என்று நினைக் கிறோம். இதெல்லாம் சரியானவை தான். ஆனாலும், இதை எல்லாம் தாண்டிய ஒன்று இருக்கிறது. அதுதான் ‘ஸ்கெளட் மைண்ட் செட்’ எனப்படும் ஒற்றர்களிடம் இருக்கிற மனநிலை. அது என்ன மனநிலை என்பதைப் பற்றி விளக்கமாகச் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

புத்தகத்தின் பெயர்:
The Scout Mindset
ஆசிரியர்:
Julia Galef
 பதிப்பாளர்:
 Piatkus
புத்தகத்தின் பெயர்: The Scout Mindset ஆசிரியர்: Julia Galef பதிப்பாளர்: Piatkus

இருப்பதை இருக்கிற மாதிரி...

‘‘போர் வீரர்கள் ரிஸ்க் எடுத்து அனுமானம் செய்து களத்தில் செயல்படும் மனநிலைக்கு பழகியிருப் பார்கள். அதே சமயம், ஒற்றர்களின் மனநிலை என்பது, இருக்கிற விஷயங்களை இருக்கிறபடியே பார்த்துச் செயல்படுவார்கள். அதாவது, ஒற்றர் மனநிலை என்பது ஒரு விஷயத்தை நாம் அது எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கி றோமோ அப்படிப் பார்க்காமல், ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ அதே நிலையில், எந்தவிதமான கூடுதல், குறைவு இல்லாமல் பார்ப்பது ஆகும்.

உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்...

இன்றைக்கு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு விஷயம் குறித்து அனுமானம் செய்கிறோம். பல்வேறு சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கிறோம். காலம் போகப்போக அந்த விஷயத்தில் சாதக, பாதகங்கள் மாறிக்கொண்டே யிருக்கும். அவ்வாறு மாறும் சூழலில் நாம் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய முயல்வோம். அந்த முயற்சியின்போது நாம் ஆரம்பத்தில் மனதில்கொண்ட சாதகங்கள் (இன்றைக்கு அதன் அளவு குறைந் திருக்கலாம் அல்லது அது பாதகமாகக் கூட ஆகியிருக்கலாம்) மட்டுமே மேலோங்கி நிற்கும். அந்தச் சூழ்நிலை யில், நம்முடைய மனதை மாற்றிக் கொள்ள நாம் முழுமையாக மறுப்போம். ஏனென்றால், ஆரம்பத்தில் நாம் எல்லாம் சூப்பராய் இருக்கிறது என்று பார்த்தோம் இல்லையா?

மனிதன் என்பவன் அப்படிப்பட்ட ஒரு சிக்கலான ரூபத்தில் வடிவமைக் கப்பட்டவனாக இருக்கிறான் என்பதே நிஜம். இந்தச் சிக்கலான வடிவமைப்பால்தான் நம்மிடம் இருந்து நாமே வெற்றிகரமாக உண்மை நிலைமையை மறைத்துக் கொள்ள வல்லவர்களாக இருக்கிறோம். இந்தப் புத்தகம் எப்படி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதைக் குறைத்துக்கொள்வது என்பது குறித்துச் சொல்கிறது.

இந்தப் புத்தகத்தில் சொல்லி யிருப்பவற்றைத் தெரிந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்று கேட்பீர்கள். இல்லவேயில்லை, இந்த மாதிரியான உடற்பயிற்சி செய்தால் இந்த மாதிரியான பலன் கிடைக்கும் என நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அதை எல்லோரும் செய்கிறோமா என்றால், அதுதான் இல்லை.

அதேபோல்தான் நம்மிடம் இருக்கும் இந்தக் குறைகளை நாம் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. இதெல்லாம் நம்மிடம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டு அவற்றைச் சரிசெய்வதற்கான முயற்சியையும் முழுமனதாகச் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு நம்முடைய அனுமானிக்கும் திறன் நம்முடைய அறிவைச் சார்ந்து இருக்கிறதோ, அதே அளவுக்கு அது குறித்த நம்முடைய அணுகுமுறையைச் (attitude) சார்ந்தும் இருக்கிறது என்பதுதான் ஆசிரியர் சொல்லவரும் முக்கிய விஷயமாகும்.

சரியான முடிவுகளை எடுக்க உதவும் ஒற்றர் மனநிலை..! இது இருந்தால் வெற்றிதான்...

நிஜத்துக்கும் நினைப்பதற்கும் இடையே இருக்கும் இடைவெளி...

சரியான முடிவுகளை எடுக்க நம்மை நாம் எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது பற்றி மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தில் முதலாவதாக ஆசிரியர் சொல்வது, நம்முடைய இலக்குக்கும் (இந்த விஷயத்தைச் செய்து முடித்துவிடலாம் என்று நாம் நினைப்பதற்கும்) கண்முன்னே இருக்கும் நிஜத்துக்கும் (முடிக்கவே முடியாது அல்லது நினைத்தபடி முடிப்பதற்கான சாத்தியம் குறைவு என்ற சூழல் நிலவுவது) இடையே எக்கச்சக்கமான முரண்பாடுகள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது எப்படி என்பதைத்தான்.

‘‘நிஜத்தை நாம் எங்கே கவனிக்கத் தவறுகிறோம், அது தெளிவாகத் தெரிந்தால் கவனிக்கத்தானே செய்வோம்... என்று நீங்கள் கேட்கலாம். இங்கேதான் மனித மூளையின் விந்தை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. மூளை நலமாக இருக்க வேண்டும் எனில், அது நிஜ உலகத்தை உள்ளது உள்ளபடி பார்க்காமல் இருக்கப் பழகியிருக்கிறது. எல்லாம் மாறும், நல்லது நடக்கும் என்ற பாசிட்டிவ் சிந்தனைக்கு நாம் நம் மூளையைப் பழக்கப்படுத்தியே மனச் சோர்வைத் தவிர்க்கிறோம். இப்படி எல்லாம் படுசுமாராக இருக்கும் சூழ்நிலையிலுமே இவையெல்லாம் மாறும். எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்பது போன்ற எண்ண ஓட்டங்களுக்கு நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம். இப்படி பழக்கப் படுத்திக்கொண்டுவிட்டு பின்னர் நம்மால் ஒருபோதும் நம்மெதிரே இருக்கும் உண்மை நிலைமையை அப்படியே நம்முடைய மனதில் கொள்ள முடியாது. நேரடியாகச் சொன்னால், மன ஆரோக்கியம் பேண சுய ஏமாற்றுதல் (கண்ணெதிரே இருப்பது மிக மோசமான ஒன்றாக இருக்கிற போதிலும் எல்லாம் மாறும் என்ற ஏமாற்றுதல்) தேவைப்படவே செய்கிறது. இதைத்தான் உளவியல் நிபுணர்கள் ‘பாசிட்டிவ் திங்கிங்’ என்கின்றனர்.

ஒரு புதிய நிறுவனத்தை நீங்கள் தொடங்குகிறீர்கள். அந்த சமயத்தில் அதீதமன நம்பிக்கை உங்களிடத்தில் புழங்கும் இல்லையா? அந்தச் சமயத்தில் எதையாவது யாராவது நெகட்டிவ்வாகச் சொன்னால் (அது உண்மையாக இருக்கும் போதும்கூட நம் கண்ணைக் கட்டிக்கொண்டதைப்போல்) ‘என்ன இது, ஆரம்பிக்கும்போதே இப்படிச் சொல்கிறீர்கள்’ என்போம்.

ஜெஃப் பெசோஸ் அமேசானை ஆரம்பிக்கும் போதும், எலான் மஸ்க் டெஸ்லாவை ஆரம்பிக்கும் போதும் வெற்றி பெறுவதற்கு முறையே 30 மற்றும் 10% வாய்ப்பே இருப்பதாக எண்ணித்தான் ஆரம்பித்தார்கள். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? நம்மைச் சுற்றி இருக்கும் யதார்த்த நிலையை மனதில்கொண்டு தொழில் செய்தால் அதற்கேற்ற உத்திகளை வகுத்து வெற்றி காண முடியும் என்பதைத்தானே’’ என்று கேட்கிறார் ஆசிரியர். ஒற்றர் மனநிலையை எப்படிக் கொண்டுவருவது?

நாம் நினைப்பது நடக்காமல் போனால்...

இந்தப் புத்தகத்தின் இரண்டா வது பிரிவில் ஒற்றர் மனநிலையைக் கொண்டு வருவது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறார் ஆசிரியர்.

‘‘நான் வெறுமனே ஒரு பக்கம் சார்ந்து (biased) செயல்படுகிறேனா என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொண்டால் மட்டும் போதாது. எதை வைத்து ஒரு விஷயம் நாம் நினைக்கும்படி நடக்கும் என்று அனுமானிக் கிறோம் என்ற கேள்வியைக் கேட்டு ஆராயப் பழகுவது எப்படி (சுயபரிசோதனை வாயிலாக) மற்றும் ஒரு வெளி யாளாக, எதையும் சுலபத்தில் நம்பாத ஒரு ஆளாக கேள்வி களைக் கேட்டு அதற்கான பதில்களைக் கண்டறியும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி என்பதையும் இந்தப் பகுதியில் விளக்குகிறார் ஆசிரியர்.

‘‘இந்தவிதக் கேள்விகள் வெளிப் படையாக நாம் எப்போது நடப் புக்கும் அனுமானத் துக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாத நிலையில் செயல் படுகிறோம்’’ என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று சொல்லும் ஆசிரியர், இதற்கான முக்கியமான ஒரு சோதனையாக சொல்வது ஒரு விஷயத்தில் நம்முடைய அனுமானத்துக்கு எதிராக நம்மிடம் சொல்லப்படும் கருத்தை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதைத்தான்.

நம்முடைய அனுமானத்துக்கு எதிராக ஒருவர் நிஜத்தில் நடக்கும் உண்மையன விஷயங்களை எடுத்துரைக்கும்போது நாம் எரிச்சலும் விரக்தியும் அடைந்தோம் எனில், நம்முடைய அனுமானம் தவறேயன்றி, வேறேதும் இல்லை’’ என்கிறார் ஆசிரியர். இந்த ‘ஸ்கெளட் மைண்ட் செட்’ முறையில் (ஒற்றர்) மேற்கொள்ள வேண்டிய இன்னும் பல நடைமுறைகளையும் ஆசிரியர் தந்துள்ளார்.

நிஜத்தைப் புரிந்துகொண்டால்...

இறுதியாக, ஒற்றர் மனநிலையில் செயல்படுதலின் பலாபலன்களை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை சொல்லும் ஆசிரியர், ‘‘நிஜம் எப்போதுமே சுடவே செய்யும். நிஜத்தை உணர்ந்தால், எதிர்காலம் சூன்யமானதைப் போன்ற தோற்றமே நமக்குக் கிடைக்கும். ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி நிஜத்தை அடைப்படையாகக்கொண்டு அதை எதிர்கொள்ளும் அளவுக் கான திட்டங்களைத் தீட்டி செயலாக்கினால் அதன் மூலம் கிடைக்கும் வெற்றி உணர்வுபூர்வமாக மிகப் பெரிய அளவிலான நற்பயன்களை நமக்கு அளிக்கவல்லது’’ என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

உலகம் இன்றைக்கு இருக்கும் குழப்பமான சூழ்நிலையில் கண்ணெதிரே இருக்கும் நிஜ சூழ்நிலையைப் பரிசீலித்து தெளிவான முடிவுகளை எடுப்பது மிகமிக அவசியம். அதற்கு உதவும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்து பலன் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு